அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 90

இலங்கை மீது படையெடுக்க பாரதம் வகுத்த திட்டம் : ‘ஒப்பசேன் பூமாலை’ பாராசூட்டில் இறங்கிய பொதிகள்! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 90)


மூன்று இராணுவ நடவடிக்கைகள்.
1987இல் இந்திய இராணுவத் தளபதியாக இருந்தவர் லெப்டினன்ட் ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி.
சுந்தர்ஜி தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ஒரு தமிழர் இந்திய இராணுவத்தின் தளபதியாக உணர்ந்திருந்தது பெருமைப்படத்தக்க விஷயமும் கூட.
சீக்கிய தீவிவாதிகள் பஞ்சாப் பொற்கோவிலில் மறைந்திருந்த போது  ‘புளூஸ்டார் ஒப்பரேசன்’ என்ற நடவடிக்கையை இந்திய இராணுவத்தினர் மேந்கொண்டனர்.

அப்போது  சுந்தர்ஜி இந்திய  இராணுவ  உப தளபதியாக இருந்தார். புளூஸ்டார் நடவடிக்கைக்கு தலைமை தாங்கியவர் சுந்தர்ஜி.
புளூஸ்டார்  நடவடிக்கைக்கு பின்னர் சீக்கிய தீவிவாதிகளின் கொலைப்பட்டியலில் முக்கிய இடம் வகித்தவர்கள் இந்திரா காந்தி, தளபதி வைத்யா, சுந்தர்ஜி.
இந்திரா காந்தியும், வைத்யாவும் சீக்கிய தீவிரவாதிகளின் குறியில் இருந்து தப்பமுடியவில்லை. சுட்டுக் கொல்லப்பட்டனர். சுந்தர்ஜி மட்டுமே தப்பிக் கொண்டார்.
இந்திய இராணுவத் தளபதியாக சுந்தர்ஜி பொறுப்பேற்ற பின்னர்தான் இந்திய இராணுவத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.
அதன்  பலமும் உயர்த்தப்பட்டது. 1987ல் இந்திய இராணுவம் தனது பலத்தின் உச்சகட்டத்தில் இருந்தது.


இந்திய இராணுவத் தளபதி சுந்தர்ஜி தனது புதுடில்லி அலுவலகத்தில் சும்மாயிருக்கமாட்டார்.
இராணுவ பலத்தை உயர்த்துவது மட்டுமல்ல, அந்தப் பலத்தை போரில் பரிசீலித்துப் பார்ப்பதற்கும் சுந்தர்ஜிக்கு ஆர்வம் அதிகம்.
மூன்று இராணுவ நடவடிக்கைகளுக்கு சுந்தர்ஜி திட்டங்களை வகுத்தங்களை வகுத்திருந்தார்.
மூன்று இராணுவ நடவடிக்கைகளும் மூன்று நாடுகளுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டன.
முதலாவது திட்டம் பாகிஸ்தானுக்கு எதிரானது.
அதற்கு ‘பிராஸ் ராக்ஸ்’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
இரண்டாவது திட்டம் மக்கள் சீனக் குடியரசுக்கு எதிரானது. ‘செக்கர் போர்ட்;’ என்று அதற்கு பெயர் சூட்டப்பட்டது.
மூன்றாவது திட்டம் ஒரு குட்டி நாட்டுக்கு எதிரானது. அந்த நாடு இலங்கை.
இலங்கை மீதான இராணுவ நடவடிக்கைத் திட்டத்துக்கு ‘திரிஷிக்தி’ என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்தத் திட்டமும் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்தமையும் ஒரே வி~யமல்ல. இலங்கை அரசு பணிய மறுத்தால் படையெடுப்பதற்கான திட்டம்தான் ‘திரிஷிக்தி’
ஆயத்தங்கள்

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் நேரடியாக தலையிடமாட்டோம் என்று இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோதே இந்தியா அடிக்கடி கூறிக்கொண்டிருந்தது.
உண்மையில் அந்த வார்த்தைகள் இராஜதந்திர முலாம் பூசப்பட்ட வார்த்தைகளே தவிர உண்மை அதுவல்ல.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதே ஈழப்போராளி அமைப்புக்களுக்கு பயிற்சிகள் வழங்குவதும் ஆரம்பிக்கப்பட்டது.
அதே காலகட்டத்தில் அவசியப்பட்டால் இலங்கை மீது படையெடுப்பதற்கான ஆயத்தங்களும் மெல்ல மெல்லச் செய்யப்பட்டன.
இலங்கையில் உள்ள கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப்பற்றிய விபரங்களை திரட்டுவதில் இந்திய இராணுவ உளவுப்பிரிவு,
‘றோ’ உளவுப்பிரிவு போன்றவை துரிதமாக செயற்பட்டன.
பலவழிகளில் தகவல்கள் திரட்டப்பட்டன. விமானங்கள் மூலமாகவும் தகவல்கள் திரட்டப்பட்டன.
இந்தியாவில் பயிற்சி வழங்கப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மூலமும் தகவல்கள் திரட்டப்பட்டன.
குறிப்பிட்ட கேந்திர நிலைகளை எப்படித்தாக்குவது என்று சொல்லிக் கொடுக்கும் தேவைக்காக விபரம் திரட்டுவது போல நாசூக்காகவும் தகவல் திரட்டப்பட்டது.
இதுதவிர இலங்கை ஆயுதப்படைகளில் முன்னர் பணியாற்றிய, மற்றும் இடைநடுவே விட்டு விலகிய தமிழர்கள் மூலமும் தகவல் பெறப்பட்டது.
‘றோ’ உளவுப் பிரிவின் கீழ் செய்ற்பட்ட விமானவியல் ஆராய்ச்சி மையம் தனக்கு கிடைத்த தகவல்களைக் கொண்டு வரை படங்களைத் தயாரித்தது.
இலங்கை மீது படையெடுத்தால் உடனடியாக கைப்பற்றவேண்டிய கேந்திர நிலைகள், படைகள் நிலைகொள்ள வேண்டிய இடங்கள் போன்ற விபரங்கள் யாவும் திட்டப்பட்ட நிலையில் கோவா மாநிலத்தில் பயிற்சிகள் ஆரம்பமாகின.
விமானங்கள் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் இலங்கைக்குள் தரையிறங்குவதற்கான சிறப்புப் பயிற்சிகள் இந்தியப் படைப்பிரிவுகளுக்கு வழங்கப்பட்டது.


Operation-Vadamarachchi

MS-SL
இந்திரா காந்திக்குப் பின்னர் பிரதமரான ராஜீவ்காந்தி இலங்கை ஜனாதிபதி ஜே.ஆருடன் பேசிக்கொண்டிருந்தபோதும், ‘றோ’ உளவுப்பிரிவு இலங்கை அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தது.
இலங்கை அரசு படைபலத்தை அதிகரிப்பதையும், ஆயுதக் கொள்வனவவில் ஈடுபடுவதையும் அறிந்த ‘றோ’ உளவுப்பிரிவினர் படையெடுப்புக்கான அவசியம் நேரலாம் என்றே கருதியிருந்தனர்.
இந்தியாவின் சமாதான முயற்சிகளை மீறி இலங்கை அரசு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தால் பலப்பிரயோகம் மூலம் அதனைத் தடுக்க வேண்டி நேரலாம் என்று ‘றோ’ மட்டுமல்ல, இந்திய இராணுவமும் தயாராகவே இருந்தது.
1987 ஏப்ரல் மாதம் ராஜீவ்காந்தி முன்னிலையில் இலங்கை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் திட்டமிடல் குழு அமைக்கப்பட்டது.
அப்போது இந்திய வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சராக இருந்த கே.நட்வர்சிங் தலைமையில் அக்குழு அமைக்கப்பட்டது.
அடிப்படைத்திட்டங்களைத் தயாரிக்கும் பொறுப்பு மூவரிடம் வழங்கப்பட்டது.
1. இராணுவத்தளபதி சுந்தர்ஜி
2. தென் பிராந்திய கொமாண்டைச் சேர்ந்த பொது கட்டளையிடும் அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் திபந்தர்சிங்
3. பிராந்திய கொமாண்டர் மேஜர் ஜெனரல் ஹரி கிரத்சிங்
(திபந்தர்சிங்கும், ஹரி கிரத்சிங்கும்தான் பின்னர் இந்திய அமைதிப்படையுடன் வந்தவர்கள்)
இலங்கை மீதான இராணுவ நடவடிக்கைக்காக என்று 1987 ஏப்ரலில் தனிப்பிரிவு ஒன்றும் அமைக்கப்பட்டது.
அதன் பெயர்தான் MS-SL

படைப்பிரிவுகள் தயார்

தரைப்படை
இலங்கைமீது படையெடுப்பதற்காக பின்வரும் படைப்பிரிவுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டன.
36 வது இன்ஃபென்டரி பிரிவு
57 வது இன்ஃபென்டரி பிரிவு
2 கவச வண்டிப்படைப் பிரிவுகள்
340 வது இண்டிபென்டன்
இன்ஃபென்டரி பிரிகேட்
கடற்படை
சரக்கேற்றும் கப்பல்கள் – 5
கப்பலில் சரக்கேற்றும் தாங்கிகள் – 6
நீர் மூழ்கிகள் -2
ரோந்துப்படகுகள் – 12
துணைக்கப்பல்கள் – 2
விமானங்கள் – 2
விமானப்படை
ஜாகுவர் – 27
கான்பெரா – 6
இலு~ன் 76 – 4
அன்டனோ 12 – 6
அன்டனோ 32 – 30
மற்றும் மிக், மிராஜ் போர் விமானங்கள் 14, ஹெலிகொப்டர்கள் 22 ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இலங்கை அரசு ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கையை ஆரம்பிக்க முன்னரே இந்தியா இலங்கை மீதான படையெடுப்புக்கான சகல திட்டங்களையும் தயாரித்து முடித்திருந்தது.
இதன் பின்னர் இலங்கை அரசின் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கையையும், அதன் பின்னர் இலங்கை, இந்திய அரசுகளுக்கிடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்துக்களையும் முன்னரே விபரித்திருந்தேன்.
1987 ஜுன் மூன்றாம் திகதி 19 மீன்பிடிப்படகுகளில் யாழ் குடாநாட்டு மக்களுக்கு இந்தியா அனுப்பிய உணவுப்பொருட்கள் இலங்கை கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. இந்தியப் படகுகள் திரும்பிச் சென்றன. இவை தொடர்பாகவும் விரிவாக சென்றவாரம் விபரித்தாயிற்று.
தாம் அனுப்பிய பொருட்களை இலங்கை திருப்பி அனுப்பியவுடன் இந்தியா அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாரானது.
ராஜீவ்காந்தி தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் யாழ் குடாநாட்டுக்குள் விமானங்கள் மூலமாக உணவுப்பொருட்களை போடுவதற்கான முடிவு செய்யப்பட்டது.
இந்திய இராணுவத் தளபதி சுந்தர்ஜிக்கும் முடிவு தெரிவிக்கப்பட்டது.
இலங்கை வான்பரப்புக்குள் ஊடுருவும் இந்திய விமானங்களை இலங்கை விமானப்படை தாக்குமானால் ஆழு-ளுடு நடவடிக்கையை ஆரம்பிக்க தயார் நிலையில் இருந்தார் சுந்தர்ஜி.
யாழ் குடாநாட்டுக்குள் விமானங்கள் மூலம் உணவுப்பொருட்களைப் போடும் நடவடிக்கைக்கு சூட்டப்பட்ட பெயர் ‘ஒப்பரேசன் பூமாலை’.
மிராஜ் போர் விமானங்கள் வட்டமிட்டு பாதுகாப்பு வழங்க அன்டனோ விமானங்கள் மூலம் உணவுப்பொருட்களைப் போடுவதுதான் திட்டம்.
‘ஒப்பரேசன் பூமாலை’ நடவடிக்கை யாழ் குடாநாட்டு மக்களுக்கு உணவுப்பொருட்களை போடும் நடவடிக்கை மட்டுமல்ல. ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்’ என்று சொல்வார்களே, அது போல வேறொரு நோக்கமும் இருந்தது.
அது, இந்திய விமானப்படை தனது விமானப்படை பலத்தை பரிசீலித்து பார்க்கும் ஒத்திகை.

அண்டனோ விமானம்

அண்டனோ விமானங்களை இந்தியாவுக்கு வழங்கியது சோவியத் யூனியன்.
சோவியத் யூனியனுக்கும், இந்தியாவுக்கும் இடையே நிலவிய பலமான நட்புறவின் காரணமாக இந்தியாவுக்கென்றே விசேடமாக உருவாக்கப்பட்டவைதான் அண்டனோ விமானங்கள்.
வட இந்தியாவின் மலைப்பாங்கான பகுதிகளின் பாவனைக்கு ஏற்ற வகையில் அண்டனோ விமானங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
போர் முனையில் அண்டனோ விமான வேகம், அன்டனோ விமானத்திற்கும், மிராஜ் போர் விமானங்களுக்கும் இடையே தகவல் தொடர்பை மேற்கொள்ளும் சாத்தியங்கள் பற்றியெல்லாம் பரிசீலிக்கக்கூடிய போர் முனை எதுவும் அதுவரை இந்திய விமானப்படைக்கு கிடைக்கவில்லை.
“ஒப்பரேசன் பூமாலை’ நடவடிக்கையை தமது ஒத்திகைக்கான வாய்ப்பாக பயன்படுத்த இந்திய விமானப்படை நனைத்தது அதனால்தான்.
வட இந்தியத் தலைநகரில் இருந்து அன்டனோ விமானங்களும், மிராஜ் போர் விமானங்களும் பெங்க@ருக்கு வரவழைக்கப்பட்டன.
வான் பரப்பில் பறக்கும் விமானங்களுக்கு தரையில் குறிப்பிட்ட பகுதியை அடையாளம் காண அங்குள்ள உயர்ந்த கட்டடங்கள்,
கோபுரங்கள்  அல்லது  உயரமான அன்டனாக்கள் போன்றவை உதவியாக இருப்பதுண்டு. அதனை ‘லான்ட் மார்க்’ என்று அழைப்பர்.
யாழ் குடாநாட்டில் உணவுப்பொருட்களை போடுவதற்கு ‘லான்ட் மார்க்’காக எதனை குறிப்பிடலாம் என்று யோசித்தபோது, புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி நிலையமும் ‘லான்ட் மார்க்’காக தீர்மானிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கொக்குவில் ரயில் நிலையம் அருகே புலிகள் இயக்கத்தினரின் நிதர்சனம் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் இருந்தது. உயரமான அன்டனா ஒன்றை அங்கு புலிகள் நிறுவியிருந்தனர்.
அதுதவிர யாழ்கோட்டை, மற்றும் யாழ்ப்பாண இந்து ஆலயக் கோபுரங்கள் என்பவையும் லான்ட் மார்க்காக குறிப்பிட்டப்பட்டன.

பாராசூட்டில் உணவு
ஜுன் 4ம் திகதி
பெங்களூரில் இருந்து உணவுப்பொருட்களுடன் அன்டனோ விமானங்களும், மிராஜ் விமானங்களும் சீறிக்கொண்டு புறப்பட்டன.
யாழ் குடாநாட்டு வான் பரப்பில் முதலில் மிராஜ் போர் விமானங்கள் வட்டமடித்தன.
இலங்கை போர் விமானங்கள் என்று பீதிகொண்டு மக்கள் பங்கர்களை நோக்கி ஓடத்தொடங்கினார்கள்.
புலிகள் இயக்கத்தினருக்கும் முதலில் விபரம் தெரிந்திருக்கவில்லை. அவர்களும் பதுங்குநிலை எடுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்க,
அன்டனோ விமானங்களின் வாய்கள் அகலத் திறந்தன.
திறந்த வாய்கள் வழியாக பராசூட்டுகள் வெளிப்பட்டு தரைநோக்கி இறங்கத் தொடங்கின.
விமானப்படைதான் குண்டுகளை இறக்குகிறதோ என்ற சந்தேகத்தில் பாராசூட்டைக் கண்டவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
பாரசூட்டுக்கள் தரையில் இறங்கியதும் புலிகள் இயக்கத்தினருக்கும், ஈரோஸ் இயக்கத்தினக்கும் உண்மை புரிந்துவிட்டது.
பாரசூட்டில் வைத்து இறக்கப்பட்ட பொருட்களுக்குள் உணவுப்பொருட்கள் மட்டும் இருக்கவில்லை.
மருந்துகள், ஊசிகள், பஞ்சு, காயத்துக்கு கட்டுப்போடும் துணிகள், குழந்தைகளுக்கான பால்மா பைக்கற்றுக்கள் என்று பல பொருட்கள் அடங்கிய பெட்டிகள்தான் போடப்பட்டன.
மக்களுக்கு வந்திருப்பது இந்திய விமானங்கள்தான் என்று தெரிய வந்துவிட்டது. அப்போது ஏற்பட்ட ஆனந்தத்தை விபரிக்க வார்த்தைகளே கிடையாது.
கடலில் தத்தளிப்பவர்களுக்கு ஒரு துரும்பு கிடைத்தாலே பெரிய விஷயம்.
யாழ்ஷகுடாநாட்டு மக்களுக்கோ கடலில் தத்தளித்த நேரத்தில் கப்பலே கிடைத்தது போன்ற உற்சாகம். பலர் கண்ணீரோடு ‘இந்தியாவே நன்றி’ என்று குரல் கொடுத்தார்கள்.
‘இனிமேல் நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாவே வந்துவிட்டதாம் யார் அசைக்க முடியும்? என்ற தைரியமும் ஏற்பட்டுவிட்டது.
அதுவரை என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டிருந்தவர்களுக்கு மாபெரும் தைரியமும் தோன்றியது.
அதே நேரம் புலிகள் இயக்கத்தினரும் ஒலிபெருக்கிகள் மூலம் இந்திய விமானங்கள் தான் வந்துள்ளன. யாரும் பயப்படத்தேவையில்லை. வந்திருப்பவர்கள் நமது நண்பர்கள்தான் என்று அறிவித்தனர்.

புலிகளின் அறிவிப்பு

மற்றொரு அறிவிப்பையும் புலிகள் இயக்கத்தினர் வெளியிட்டனர்.
“விமானத்தில் இருந்து போடப்பட்ட பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொடவேண்டாம். அவற்றை எடுத்து நாம் விநியோகம் செய்வோம்” என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்புக்கிடையில் சில பகுதிகளில் விழுந்த பொருட்கள் மக்களால் எடுக்கப்பட்டுவிட்டன.
ஈரோஸ் இயக்கத்தினரும் பொருட்களை எடுத்து விநியோகிப்பதில் ஈடுபட்டபோது, புலிகள் இயக்கத்தினர் குறுக்கிட்டனர்.
“இதனை விநியோகிக்கும் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் விலகுங்கள்”என்றுவிட்டனர் புலிகள். எதற்கு வம்பு என்று ஈரோஸ் இயக்கத்தினரும் விலகிக் கொண்டனர்.
இந்திய விமானங்கள் உணவுப்பொருட்களைப் போட்டுவிட்டுச்சென்றதும் புலிகள் இயக்க அலுவலகத்துக்கு படையெடுத்தனர் பத்திரிகையாளர்கள்.
அங்கு பத்திரிகையாளர்கள் சந்தித்தது திலீபனை.
பத்திரிகையாளர்கள் செல்லும் போது அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிக்கொண்டிருந்தார் திலீபன்.
திலீபன் பட்டும் படாமலும் மக்களுக்கு சொன்னது இது. “நாங்கள் சொல்லித்தான் இந்தியா வந்து உணவு போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது”
இந்திய விமானங்கள் வந்து சென்றதும் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கையை நிறுத்துமாறு ஜே.ஆர். உத்தரவிட்டார்.
அதனையடுத்து தாக்குதலை நிறுத்திவிட்டு கைப்பற்றிய இடங்களில் நிலை கொண்டிருந்தனர் படையினர்.
ஜுன் 4ம் திகதியுடன் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ ஓய்ந்தது.
ஜுன் 5ம் திகதி நெல்லியடி மத்திய வித்தியாலயத்தில் கரும்புலித்ததாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதல் குறித்து முன்னரே விபரமாகக் கூறப்பட்டது.
இக்கட்டத்தில் ஒரு ஜோக் சொல்ல வேண்டும். ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கை மூலம் படையினர் அச்சுவேலி வரை முன்னேறியிருந்தனர்.
அந்த நேரத்தில் ஆனைக்கோட்டையில் கள் குடித்துக்கொண்டிருந்தனர் சில குடிமக்கள்
புலிகள் அப்போதெல்லாம் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற பாடலை ஒலிபரப்புவது வழக்கம்.
கள் வெறி உஷாரில் ஒருவர் அந்தப் பாடலை மாற்றி இப்படிப்பாடினார்.
“அச்சமில்லை, அச்சமில்லை, அச்சுவேலி இல்லையே!”
‘ஒப்பரேசன் பூமாலை’க்கு பின்னர் நடைபெற்ற சூடான, சுவாரசியமான நிகழ்வுகளை அடுத்த வாரம் பார்க்கலாம்.

No comments:

Post a Comment