அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 77

தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன் வருகை!! கிட்டுவை யாழிலிருந்து மாற்ற திட்டம் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-77


யாழ்ப்பாணத்திற்கு பிரபாகரன் வருவதற்கிடையில் நடைபெற்ற ஒரு சம்பவம் இது: யாழ்ப்பாணம் பாஷையூரில் ஒரு குடும்ப உறவினர்கள் மத்தியில் தகராறு. அவர்களில் ஒருவர் சென்று புலிகளிடம் முறையீடு செய்தார். அப்போது புலிகள் அமைப்பின் பாசையூர் பொறுப்பாளராக இருந்தவர் மலரவன். அவர் நேரடியாகச் சென்று முறைப்பாட்டை விசாரித்தார். மலரவன் விசாரணை செய்த முறை சிலருக்குப் பிடிக்கவில்லை. ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என்று நினைத்தனர். எட்வேட் என்பவர் மலரவனோடு வாக்குவாதப் பட்டார். மலரவனுக்கு கோபம் வந்துவிட்டது. எட்வேட்டுக்கு ஒரு அடி அடித்துவிட்டார். எட்வேட் கடற்தொழிலாளி. வாட்டசாட்டமானவர். அவரும் திரும்பி மலரவனுக்கு ஒரு அடி கொடுத்துவிட்டார். (தொடர் கட்டுரை)

ஊர் பிரச்சனை:  பொதுமகன் ஒருவரை ‘அயன்பொக்ஸ்’ஸை உடம்பில் சுட்டுகொலை செய்த புலிகள்!!
யாழ்ப்பாணத்திற்கு பிரபாகரன் வருவதற்கிடையில் நடைபெற்ற ஒரு சம்பவம் இது:
யாழ்ப்பாணம் பாஷையூரில் ஒரு குடும்ப உறவினர்கள் மத்தியில் தகராறு. அவர்களில் ஒருவர் சென்று புலிகளிடம் முறையீடு செய்தார்.
அப்போது புலிகள் அமைப்பின் பாசையூர் பொறுப்பாளராக இருந்தவர் மலரவன். அவர் நேரடியாகச் சென்று முறைப்பாட்டை விசாரித்தார்.
மலரவன் விசாரணை செய்த முறை சிலருக்குப் பிடிக்கவில்லை. ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என்று நினைத்தனர்.
எட்வேட் என்பவர் மலரவனோடு வாக்குவாதப் பட்டார். மலரவனுக்கு கோபம் வந்துவிட்டது. எட்வேட்டுக்கு ஒரு அடி அடித்துவிட்டார்.
எட்வேட் கடற்தொழிலாளி. வாட்டசாட்டமானவர். அவரும் திரும்பி மலரவனுக்கு ஒரு அடி கொடுத்துவிட்டார். பின்னர் ஊர் மக்கள் சிலர் இருவரையும் விலக்கி வைத்தனர்.
மலரவன் முகாமுக்குச் சென்றார். தனது ஆட்களை வேனில் அனுப்பி, “எட்வேட்டை பிடித்துத்வாருங்கள்” என்று உத்தரவு போட்டிருந்தார்.
எட்வேட் ஒளிற்துவிட்டார். “உடனடியாக எட்வேட் சரணடையவேண்டும். இல்லாவிட்டால் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுவோம்” என்று புலிகள் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர்.
பாசையூர் அந்தோனியார் கோவில் குருவானவரிடம் சென்று அடைக்கலம் தேடினார் எட்வேட். குருவானவர் புலிகளுடன் தொடர்பு கொண்டார்.
“எட்வேட்டை மக்கள் முன்பாக வைத்து விசாரியுங்கள்.” என்றார் குருவானவர். மலரவன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
“எட்வேட்டை எங்களிடம் ஒப்படையுங்கள். விசாரித்துவிட்டு உங்களிடமே திருப்பி ஒப்படைக்கிறோம்” என்றார் மலரவன்.
குருவானவர் பாசையூர் மக்களிளோடு பேசினார். “எட்வேட்டுக்கு நான் பொறுப்பு. புலிகளிடம் ஒப்படைத்துவிட்டு, விடுதலை செய்து தருகிறேன்” என்றார்.
அரியாலையில் உள்ள புலிகளின் முகாமில் எட்வேட்டை ஒப்படைத்தார் குருவானவர். குருவானவர் திரும்பிச்சென்றதும் எட்வேட்டை கட்டிவைத்து அடித்தார் மலரவன்.
‘அயன்பொக்ஸ்’ஸை உடம்பில் வைத்து தேய்த்தார். துடிதுடித்துப் போனார் எட்வேட். அடி உதை தொடர்ந்தது. இறுதியில் எட்வேட் இறந்துபோனார்.
எட்வேட்டின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த மலரவன், ஒரு நிபந்தனையும் விதித்தார். “இரண்டு மணித்தியாலங்களுக்குள் புதைக்கவேண்டும்” என்பதுதான் நிபந்தனை.
எட்வேட் இறந்த செய்தியறிந்து குருவானவர் வாய்விட்டுக் கதறினார். பாசையூர் மக்கள் கொதித்தனர். குருவானவர் தலைமையில் பாசையூர் அந்தோனியார் கோவில் விறாந்தையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
வீதிக்கு குறுக்கே தடைகளைப்போட்டு மறியல் போராட்டமும் செய்தனர். எட்வேட்டுக்கு இரண்டு பிள்ளைகள். மனைவியும், பிள்ளைகளும் கதறியழுது கொண்டிருந்தனர்.
எட்வேட்டின் உடலில் நெருப்புச் சூட்டுக் காயங்களும், அடி காயங்களும் காணப்பட்டன.
மலரவன்மீது கிட்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மலரவன் கிட்டுவின் தீவிர விசுவாசி.
இச்சம்பவத்தின் பின்னர் நாவற்குழியில் நடைபெற்ற இராணுவத் தாக்குதல் ஒன்றில் கை ஒன்றை இழந்தார் மலரவன். தற்போது இயக்கத்தில் இருந்து வெளியேறி வெளிநாடொன்றில் இருக்கிறார்.
பிரபாகரனுடன் பொன்னம்மான்

தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன் வந்தார்
ஈரோஸ் தவிர ஏனைய இயக்கங்கள் யாவும் தடை செய்யப்பட்ட நிலையில்தான் பிரபாகரன் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.

பிரபாகரனுடன் பொன்னம்மானும் வந்து சேர்ந்தார். தமிழ்நாட்டில் புலிகளின் பயிற்சி முகாம்களுக்கும் பொறுப்பாக இருந்தவர் பொன்னம்மான்.
அவரை குகன் என்றும் அழைப்பார்கள். புலிகள் இயக்கத்தில் ஒரு கட்டத்தில் பிரபலமாக இருந்த யோகரெத்தினம் யோகியின் சகோதரர்தான் பொன்னம்மான்.
யாழ்ப்பாண தளபதியாக பொன்னம்மானை நியமித்துவிட்டு, கிட்டுவை மன்னார் தளபதியாக்கும் திட்டம் பிரபாகரனிடம் இருந்ததாகவும் அப்போது புலிகள் இயக்க உறுப்பினர்கள் பேசிக் கொண்டனர்.
அதனை உறுதிசெய்வதுபோல யாழ்ப்பாணம் நாவற்குழி இராணுவ முகாம் தாக்குதலுக்கு திட்டமிட்டார் பிரபாகரன்.
யாழ் தளபதியாக கிட்டு இருந்தும் நாவற்குழி இராணுவ முகாம் தாக்குதலுக்கான பொறுப்பை பொன்னம்மானிடம் கொடுத்தார் பிரபாகரன்.
அதனால் கிட்டுவுக்கும், அவரது விசுவாசிகளுக்கும் மனக் கசப்புத்தான். அதனை வெளியில் காட்டாமல் நடந்துகொண்டனர்.
பிரபாகரன் வருவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் கிட்டு தலைமையில்தான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்மூலம் கிட்டுவின் பெயரும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகியிருந்தது.
கிட்டு யாழ் தளபதியான பின்னர் அவரது தலைமை இல்லாமல் நடைபெறத் திட்டமிடப்பட்ட முதலாவது தாக்குதல் நாவற்குழி இராணுவமுகாம் தாக்குதல்தான்.
நீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாணம் திரும்பியிருந்தமையால் நாவற்குழி இராணுவ முகாம் தாக்குதலை தனது நேரடி கண்காணிப்பில் நடத்த பிரபாவும் விரும்பினார்.
தான் யாழ் வந்ததும் மிகப் பாரிய தாக்குதல் நடத்தப்படுவதுதான் உறுப்பினர்களுக்கு உற்சாகமும், நம்பிக்கையும் கொடுக்கும் என்று பிரபா நினைத்திருந்தார்.
திட்டம் வகுக்கப்பட்டது
நாவற்குழி இராணுவ முகாமுக்குத் தேவையான குடி தண்ணீர் கைதடியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பவுசரில் எடுத்துச் செல்லப்படும்.
கிணறு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில்தான் இருந்தது. பவுசரும் வெளியாருக்குச் சொந்தமானது.
அந்த பவுசர் வண்டிக்குள் வெடி மருந்தை நிரப்பி அனுப்புவதுதான் திட்டம். பவுசர் சாரதியும் துணிந்து முன்வந்து புலிகளின் திட்டத்துக்கு ஒத்துழைக்க இணங்கினார்.
வெடிமருந்து நிரப்பப்பட்ட பவுசரை வழக்கம்போல முகாமுக்குள் கொண்டுசெல்ல வேண்டும். முகாமுக்குள் சென்றதும் பவுசரை விட்டுவிட்டு சாரதி இறங்கி ஓடிவிட வேண்டும்.
பவுசர் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. கீழ்ப்பகுதியில் வெடிமருந்து நிரப்பப்படும். மேல் பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும்.
முகாம் வாசலில் உள்ளவர்கள் பவுசரின் மேலே ஏறி மூடியைத் திறந்து பார்த்து விட்டுத்தான் உள்ளே அனுமதிப்பார்கள்.
பொன்னம்மான் வெடிமருந்துகளை கையாள்வதில் தேர்ச்சியானவர். பவுசருக்கு வெடிமருந்தை நிரப்பும் வேலையை அவர்தான் செய்தார்.
சாவகச்சேரி பொறுப்பாளராக இருந்த கேடில்ஸ் பொன்னம்மானுக்கு உதவினார். நாவற்குழி இராணுவ முகாம் சாவகச்சேரி பகுதியில் இருந்தமையால் முகாமை வேவு பார்க்கும் வேலைகளை கேடில்ஸின் பொறுப்பில் இருந்தவர்களே கவனித்தனர்.
ரஞ்சன் என்னும் பொறியியலாளரும் புலிகளுக்கு உதவினார்.
புலிகள் முதன் முதலாக விமானமொன்றைத் தயாரிக்க முற்பட்டபோது, அந்த முயற்சியில் ஈடுபட்டவர்களில் ரஞ்சனும் ஒருவர்.
14.2.87 அன்றுதான் நாவற்குழி இராணுவ முகாமை தாக்குவது என்று திட்டமிடப்பட்டது.
பகலில் தாக்குதல் நடத்துவதைவிட இரவில் நடத்துவதே கெரில்லாக்களுக்கு வாய்ப்பு. பகலில் என்றால் விமானத்தாக்குதலுக்கு சுலபமாக இரையாகவேண்டி இருக்கும்.
ஆனாலும் ஒரு சிக்கல். மாலை 6.30 மணிக்குப் பின்னர் இராணுவ முகாமுக்குள் பவுசர் செல்ல அனுமதி கிடையாது. எனவே 6.30 மணிக்கு பவுசர் உள்ளே சென்றாக வேண்டும். அதன்பின்னர் ஒரு மணி நேரத்தில் இருட்டிவிடும் என்பதால் பின்னர் பிரச்சனை இருக்காது.

முகாமை குறிவைத்து தயாரான வெடிகுண்டு பவுசர்
13.2.87 இரவு பவுசருக்கு வெடிமருந்து நிரப்பும் வேலை நடைபெற்றது. பொன்னம்மான், ரஞ்சன், புலிகளது உளவுப்பிரிவு பொறுப்பாளர் வாசு ஆகியோர் இரவிரவாக வெடிமருந்தை நிரப்பினார்கள்.
14.2.87 அதிகாலை வெடிமருந்து நிரப்பப்பட்ட நிலையில் பவுசர் தயாரானது. அசதி காரணமாக பொன்னம்மான் பவுசருக்கு அருகில் தூங்கிவிட்டார்.
மற்றொரு பகுதியில் மூன்று பெரிய லொறிகள் தயார் செய்யப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும், மூன்று லொறிகளும் முகாமுக்குள் பிரவேசிக்க வேண்டும்.
முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவர், வாயில் காவல் அரணை உடைத்தெறிவார்.
சூசை, ஜொனி, கேடில்ஸ் மூவரும் உள்ளே செல்லும் மூன்று குழுக்களுக்கும் தலைமை கொடுக்க வேண்டும். திட்டம் அதுதான்.
யாழ் தளபதி என்றரீதியில் ஆட்களை தெரிவுசெய்து கொடுத்தார் கிட்டு.
சகல ஏற்பாடுகளும் ரெடியாகிக் கொண்டிருந்தன. வெடிமருந்து நிரப்பப்பட்ட பவுசர் பொன்னம்மானின் உத்தரவு கிடைத்ததும் புறப்படவேண்டும்.
நேரம் மாலை ஐந்துமணி. அப்போது பவுசரில் இருந்து தண்ணீர் ஒழுகியதை ஒருவர் கண்டுவிட்டார். அதனை பொன்னம்மானும் கவனித்துவிட்டார். பொறியியலாளர் ரஞ்சனை அழைத்து வந்து, ஒழுகுவதை நிறுத்துமாறு கூறினார் பொன்னம்மான்.
ஒழுகுவதை நிறுத்த வேண்டுமானால் ‘வெல்டிங்’ செய்ய வேண்டும். நேரமோ நெருங்கிக் கொண்டிருந்தது.
அவரச அவசரமாக ‘வெல்டிங்’ செய்து பவுசரில் ஏற்பட்ட துவாரத்தை அடைக்கத் தொடங்கினார் ரஞ்சன்.
பூமி அதிர்ந்தது.
நேரம் 5.15. ‘வெல்டிங்’ நடந்து கொண்டிருந்தது. நேரம் 5.30ஐ நெருங்கியது. இன்னும் கொஞ்ச நேரம்தான். ரஞ்சனின் அவசரம் அதகரித்தது.
நேரம் 5.30 மணி.
யாழ்ப்பாணமே குலுங்கியது.
பாரிய வெடிச்சத்தம்
அப்படி வெடிச்சத்தத்தையும், பூமியதிர்ச்சி போன்ற தாக்கத்தையும் யாழ் மக்கள் அதற்கு முன்னர் சந்தித்ததில்லை.
தாக்குதலுக்கு புறப்பட இருந்த உறுப்பினர்களுக்கு ஒரே குழப்பம்ஃ
தமக்கு அறிவிக்காமலேயே முகாமுக்குள் பவுசரை அனுப்பி வெடிக்கவைத்து விட்டார்களோ? என்று நினைத்தனர்.
கிட்டு தனது ‘வோக்கி டோக்கியில்’ வாசுவை அழைத்தார்-பதில் இல்லை.
கேடில்ஸை கூப்பிட்டார். பதில் வரவேயில்லை. பின்னர் ஜொனியைத் தெடர்பு கொண்டார். பதில் கிடைத்தது. சத்தம் கேட்ட இடத்திற்கு ஜோனியை செல்லுமாறு கூறினார் கிட்டு.
ஜொனி அங்கு விரைந்தார்.
அவர் கண்ட காட்சி பயங்கரமானது.
பவுசர் நின்ற இடத்தில் பெரிய குழி ஒன்று இருந்தது. பவுசரைக் காணவில்லை.
அந்த குழிக்கு அருகில் ஒரு கார் நொறுங்கிக் கிடந்தது. அது கேடில்ஸ் பயன்படுத்திய கார்.
அதற்கு 50 யார் தூரத்தில் லொறி ஒன்று நின்றது. அதற்குள் எட்டிப் பார்த்தார் ஜொனி. உள்ளே புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஐந்துபேர் இறந்து கிடந்தனர்.
பின்னர் கிட்டுவும் அங்கு சென்றார். பொன்னம்மான், வாசு, கேடில்ஸ் ஆகியோர் எங்கே? அவர்களது உடல்களைக் காண முடியவில்லை.
வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கிடைத்தன. கேடில்ஸ் அணிந்திருந்த காற்சட்டையின் ஒரு பகுதி கிடைத்தது.
பொன்னம்மானின் உடலோ, அல்லது அவர் தொடர்பான எந்தத் தடயமோ கிடைக்கவில்லை.
பொதுமக்கள் பலி
பவுசர் வெடித்த இடத்தை சுற்றியிருந்த வீடுகளும் தரைமட்டமாகியிருந்தன.
குறைந்தது 50 பொதுமக்களாவது பலியானார்கள்.
எங்கும் ஒரே மரண ஓலம். சம்பவம் நடைபெற்ற இடத்தின் பக்கம் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை.
புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் 10 பேர் பலியானார்கள்.
லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் (அற்புதன்-குகன்), மேஜர் கேடில்ஸ் (திலீபன்), கப்டன் வாசு (சுதாகர்), லெப்டினன்ட் சித்தார்த் (வசீகரன்), இரண்டாவது லெப்டினன்ட் பரன் (அர்ச்சுனன்), யோஸே; (பாலன்), கவர் (நகுலேஸ்வரன்), அக்பர் (லோகநாதன்), குமணன் (மோகனலிங்கம்), தேவன் (வசந்தகுமார்) ஆகியோரே பலியான புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஆவர்.
பொதுமக்கள் பலியானது தொடர்பான விபரங்கள் பெரியளவில் வெளியே தெரியாமல் தடுத்துவிட்டனர் புலிகள்.
கைதடியில் பவுசர் வெடித்த செய்தியை அறிந்து நாவற்குழி இராணுவ முகாமுக்குள் நிம்மதிப் பெருமூச்சுக்கள்.
கைதடியில் வெடித்திருக்காவிட்டால் தமது கதி என்னாகியிருக்கும் என்பதை அவர்கள் நினைத்துப்பார்த்திருப்பார்கள் தானே!
முதன் முதலில் புலிகள் இயக்கத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்து அதுதான். துவாரத்தை அடைக்க வெல்டிங் செய்தபோது ஏற்பட்ட தவறுதல்தான் விபத்துக்குக் காரணம் என்று நம்பப்பட்டது.
எனினும் சம்பவத்தை நேரில் கண்ட எவருமே உயிருடன் இல்லை. அதனால் விபத்து ஏற்பட்டவிதத்தை உறுதியாகக் கூறக்கூடிய சாட்சியம் கிடைக்கவில்லை.
பொன்னம்மானின் இழப்பு புலிகள் இயக்கத்திற்கு மட்டுமல்லாமல், தனிப்பட்ட ரீதியில் பிரபாகரனுக்கும் பெரும் கவலை கொடுத்த இழப்பாகும்.
பொன்னம்மான் யாழ்-இந்துக் கல்லூரியின் கெட்டிக்கார மாணவன். 1975ம் ஆண்டளவில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார்.
உமையாள்புரம் தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர். திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் பலியான தாக்குதலிலும் பொன்னம்மான் பங்கு கொண்டவர்.
இந்தியா ஆயுதப் பயிற்சி வழங்கிய போது, புலிகளின் அணிக்கு தலைமை தாங்கிச் சென்றவர் பொன்னம்மான்.
அவரது தலைமையில் பயிற்சி பெற்றவர்களில் கிட்டு, விக்ரர், புலேந்திரன், சூசை, பொட்டம்மான், கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் உட்பட முக்கியமானவர்கள் அடங்குவர்.
(தொடர்ந்து வரும்)
எழுதுவது அற்புதன்

கடந்த தொடரில் 76இல் ஒரு தவறு
புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற கைதிகள் பரிமாற்றத்தின்போது அருணா, காமினி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர் அல்லவா?
அருணா, காமினி இருவரும் கடலில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒரு தவறு. அருணா மட்டுமே கடலில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
காமினி குருநகரில் வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார். காமினியும், வாசன் என்பரும் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டபோது வாசன் சயனைட் சாப்பிட்டார். காமினி மட்டுமே உயிருடன் பிடிபட்டார்.
இதேவேளை அருணா புலிகளது தளபதிகள் ஒருவர் அவர் விடுவிக்கப்பட்ட பின்னர்தான் இராணுவத்தினருக்கே தெரியும். முதலில் அவரை ஒரு சாதாரண உறுப்பினர் என்றே நினைத்திருந்தனர்.
அருணா இராணுவத்தினரிடம் இருந்தது புலிகளுக்கும் உறுதியாகத் தெரியாது. ஒரு சந்தேகத்தில் பெயரைக் கொடுத்துப் பார்த்தார் கிட்டு. அதனால் அருணா விடுதலையானார்.
காமினி பின்னர் மட்டக்களப்பில் ஒரு மோதலில் பலியானார்.
அருணா இந்திய இராணுவத்தினரின் தாக்குதலில் யாழ்ப்பாணத்தில் பலியானார்.

No comments:

Post a Comment