அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 70

கிட்டவுக்குக் கிட்டிய பிரபலம்: கிட்டுவுக்கும் பிரபாகரனுக்கும் பிரச்சனை?? -(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-70)


1986 இன் மத்திய பகுதியில் புலிகளது யாழ்மாவட்ட பொறுப்பாளரும்,   தளபதியுமான கிட்டுவின்  செல்வாக்கு உயரத் தொடங்கியது. ‘கிட்டு மாமா’ என்று அழைக்கப்பட்டார். வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் உள்நாட்டுப் பத்திரிகையாளர்களும் கிட்டுவின் பேட்டிகளை வெளியிட்டனர். கிட்டுவிடம் காணப்பட்ட தனித்தன்மை அவரை ஏனையோரிடம் இருந்து பிரித்துக்காட்டின.  புலிகளது பயிற்சி முகாமில் கிட்டு குறிதவறாமல்  சுட்டுத்தள்ளும் காட்சிகளைக் கொண்ட வீடியோ பிரசார படங்களும் காண்பிக்கப்பட்டன. புலிகள் என்றால் கிட்டு மாமாதான் என்று நினைக்குமளவுக்கு கிட்டுவின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்தது. புலிகள் இயக்க உறுப்பினர்கள் மத்தியில் கிட்டு நிற்கிறார் என்றால் உடனே தெரிந்துவிடும். ஏனையோர் நீண்ட காற்சட்டை போட்டிருந்தால் கிட்டு அரைக் காற்சட்டையுடன்தான் காணப்படுவார்.

யாழ்ப்பாணம் கோட்டை முகாமில் இருந்து அல்லைப்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த இராணுவ அணி மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.
கோட்டை முகாமுக்கு சமீபமாகவுள்ள மதகு ஒன்றின் அருகே போராளிகள் பதுங்கியிருந்தனர். முகாமுக்கு அருகில் மதகு என்பதால், அங்கு போராளிகள் வருவார்கள் என்று படையினர் எதிர்பார்க்கவில்லை.
டிரக் வண்டியில் சென்றுகொண்டிருந்த இராணுவத்தினரை நோக்கி சிலிண்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
தமிழீழ இராணுவம் (TEA ) இத்தாக்குதலை மேற்கொண்டது.
தமிழீழ இராணுவத்தின் யாழ் மாவட்ட பொறுப்பாளராக அப்போதிருந்தவர் நந்தன். சிறிய இயக்கமாக இருந்தபோதும் தமிழீழ இராணுவமும் வரிவிதிப்புக்களில் ஈடுபட்டது.
புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இரண்டும் வரிவிதிக்காத துறைகளாகப் பார்த்து தமிழீழ இராணுவம் வரிவிதிக்கும்.
சுரண்டல் டிக்கெற்

அதிஷ்டலாப சீட்டுகளுக்கு தமிழீழ இராணுவம் வரிஅறவிட்டு வந்தது.
யாழ்ப்பாணத்தில் அப்போது சுரண்டி இலக்கம் பார்க்கும் அதிஷ்டலாபச் சீட்டுகளுக்கு பலத்த கிராக்கி. அந்த ரிக்கெட்டுக்களை சுரண்டல் ரிக்கெட்டுக்கள் என்றுதான் சொல்லுவார்கள்.
சுரண்டல் ரிக்கெட்டுக்களை அனுமதிக்கலாமா? மாக்சிய தத்துவப்படி பிழையாச்சே! என்று நினைத்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
சுரண்டல் ரிக்கெட்டுக்கள் தமிழீழ இராணுவத்திடம் ஓடினார்கள். தமிழீழ இராணுவத்தினர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்தார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புடன் பேசுவது என்றால் மாக்சியம் தெரிந்த ஆளுடன்தான் செல்ல வேண்டும் என்று நந்தன் நினைத்தார். மாக்சியம் தெரிந்த ஆசிரியர் ஒருவரை அழைத்துப் போனார்.
தடையை நீக்கவே முடியாது என்று விட்டனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். சார்பில் பேசிய ரமேசும், டேவிற்சனும்.
அத்தோடு சுரண்டல் ரிக்கெற் விற்பனை வடக்கில்-கிழக்கில் நிறுத்தப்பட்டது.
கிட்டுவின் பிரபலம்

1986 இன் மத்திய பகுதியில் புலிகளது யாழ்மாவட்ட பொறுப்பாளரும், தளபதியுமான கிட்டுவின் செல்வாக்கு உயரத் தொடங்கியது.
‘கிட்டு மாமா’ என்று அழைக்கப்பட்டார். வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் உள்நாட்டுப் பத்திரிகையாளர்களும் கிட்டுவின் பேட்டிகளை வெளியிட்டனர்.
கிட்டுவிடம் காணப்பட்ட தனித்தன்மை அவரை ஏனையோரிடம் இருந்து பிரித்துக்காட்டின.
புலிகளது பயிற்சி முகாமில் கிட்டு குறிதவறாமல் சுட்டுத்தள்ளும் காட்சிகளைக் கொண்ட வீடியோ பிரசார படங்களும் காண்பிக்கப்பட்டன.
புலிகள் என்றால் கிட்டு மாமாதான் என்று நினைக்குமளவுக்கு கிட்டுவின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்தது.
புலிகள் இயக்க உறுப்பினர்கள் மத்தியில் கிட்டு நிற்கிறார் என்றால் உடனே தெரிந்துவிடும்.
ஏனையோர் நீண்ட காற்சட்டை போட்டிருந்தால் கிட்டு அரைக் காற்சட்டையுடன்தான் காணப்படுவார்.
எல்லோரும் நீண்ட காற்சட்டையுடன் நின்று, கிட்டுவும் நீண்டகாற்சட்டையுடன் வந்துவிட்டால், மேலே சட்டைபோடாமல் வெற்றுடம்புடன் காட்சியளிப்பார்.
அதனால் ஏனைய இயக்கங்கள் கிட்டுவை, ‘திரில் காட்டுபவர்’ என்று பட்டம் சூட்டியிருந்தார்கள். தமது வீடுகளுக்கு வந்து விருந்துண்ணுமாறு கிட்டுவை அவரது அபிமானிகள் அழைப்பார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்த ‘சைனிஸ் ரெஸ்டோரண்ட்’ ஒன்றில் தான் கிட்டுவும், அவரது மெய்ப்பாதுகாவலர்களும் சாப்பிடுவார்கள்.
கிட்டுவுக்கு நம்பிக்கையான இடம் அது. வீட்டுக்கு விருந்துண்ண வருமாறு அழைப்பவர்களிடம் குறிப்பிட்ட ரெஸ்ட்ரோரண்ட்டின் பெயரைச் சொல்லி, அங்க “தனக்கும், தனது மெய்ப்பாதுகாவலர்களுக்கும் சேர்த்து பணம் கட்டிவிடுங்கள். நாங்கள் போய் சாப்பிட்டுக்கொள்கிறோம்.” என்று கூறிவிடுவார்.
தனது மெய்ப்பாதுகாவலர்களாக கூட இருந்தவர்களையே யாழ்ப்பாணத்திற்குள் பகுதிப் பொறுப்பாளர்களாக கிட்டு நியமித்தார்.
ஆயினும், கிட்டுவிடம் இருந்த விசேஷம் என்னவென்றால், தனக்கு வேண்டியவர்கள் என்பதால் பிழை செய்பவர்களை தண்டிக்காமல் விடுவது கிடையாது.
ஏனைய இயக்கங்களின் பொறுப்பாளர்கள் பலரிடம் காணப்படாத குணாம்சம் இது.
கிட்டத்தட்ட
கிட்டுவின் பெயர் பிரபலமாகிவந்த அதே நேரத்தில், கிட்டு-மாத்தையா பிரச்சனையும் வளர்ந்து வந்தது.
கிட்டுவோடு பிரபாகரனுக்கும் பிரச்சனை என்று கதைகள் பரவத் தொடங்கின.
பிரபா-கிட்டு பிரச்சனை என்று நகைச்சுவையாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. அது இதுதான்.
பிரபாகரனிடம் ஒருவர் கேட்டாராம், “உங்கள் இயக்கத்திற்குள் பிரச்சனையாமே உண்மையா?” அதற்கு பிரபாகரன் சொன்னாராம் “கிட்டத்தட்ட பிரச்சனை தீர்ந்த மாதிரித்தான்.”
கிட்டத்தட்ட என்பதை “கிட்டைத்தட்ட” என்ற அர்த்தத்தில் பார்த்தால் அந்த நகைச்சுவையின் சாராம்சம் புலப்படும்.
அப்போது பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தார். யாழ்ப்பாணத்தில் கிட்டுவின் பெயர் பிரபலமாகியதால், பிரபாகரனின் பிடி தளர்ந்துவிட்டதைப் போன்ற கருத்து ஏற்பட்டது.
பிரபாவின் ஆதரவு மாத்தையாவுக்கு இருப்பதாகவே நம்பப்பட்டது. ஆனாலும் கிட்டுவை மீறி பிரபாகரன் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார் என்றுதான் ஏனைய இயக்கத்தவர்கள் சொல்லிக்கொண்டனர்.
ஐ.நாவில் இலங்கைப் பிரச்சனை
1986 இல் நடைபெற்ற முக்கியமான அரசியல் நிகழ்வொன்றையும் சொல்ல வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் இனப்பிரச்சனை விவகாரத்தை கிளப்பியது இந்திய அரசு
இந்தியத் தூதுக்குழுவின் தலைவரான டாக்டர் ஜீ.எஸ். திலான் ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முதலாக இலங்கைப் பிரச்சனை தொடர்பாக குரல் எழுப்பினார்.
“சிறீலங்கா அரசின் உயர் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகளைப் படித்தால், அவர்கள் இராணுவத்தீர்வு ஒன்றையே விரும்புவதாகத் தெரிகிறது.” என்றார் டாக்டர். ஜி.திலான். 5.3.86 அன்று திலானின் குரல் ஒலித்தது.
13.3.86 இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இலங்கைப் பிரச்சனை விவாதத்துக்கு எடுத்தக் கொள்ளப்பட்டது. 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் விவாதத்தில் கலந்து கொண்டனர்.
சைப்பிரஸ் நாட்டு பிரதிநிதி மைக்கேல் ஷெரிப்ஸ் பின்வருமாறு சொன்;னார்: “சிறீலங்காவில் உள்ள தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகள், சிவில் உரிமைகள், மற்றும் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்வகையில் திட்டவட்டமான அரசியல் தீர்வு காணப்படவேண்டும்.”
கனடா நாட்டுப் பிரதிநிதி சொன்ன கருத்து இது: “தமிழர்கள் அடர்த்தியாக வாழும் யாழ்ப்பாண கிராமங்களில் விமானம் மூலம் சிறீலங்கா அரசு குண்டுவீசி சாதாரண மக்களை பலியாக்குவது அதிர்ச்சி தருகிறது.
சிறீலங்காவில் நடைபெறும் சண்டையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருவதையிட்டு கனடிய அரசு மிக வேதனை அடைந்துள்ளது.”
இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றது மூலமாக இந்தியா இலங்கை அரசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தது.
இலங்கைப்பிரச்சனையில் இந்தியா தலையிடவேண்டிய தார்மீக காரணத்தை உலகுக்கு உணர்த்தவும் இந்தியா விரும்பியது.
அவசியம் ஏற்பட்டால் இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலையிட இந்தியா தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதையும் ஓரளவு ஊகிக்கக் கூடியதாகவிருந்தது.
திலானின் உரை
இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்ற தமிழ் மக்களும், மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளிமக்களும் இலங்கை விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்குள்ள நியாயமான காரணிகளாக இருந்தனர்.
ஐக்கிய நாடுகளட சபையில் டாக்டர் ஜி. திலான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது:
“இலங்கைப் அரசு அங்குள்ள ஆயுத மேந்திப் போராடும் அமைப்புக்களுக்கும், சாதாரண மக்களுக்கும் இடையே வித்தியாசம் காட்டுவதில்லை.
ஒரு இலட்சத்து 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாக வந்துள்ளனர். சுமார் 45 ஆயிரம் தமிழர்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
தற்போதைய நிலையைப் பார்க்கும் போது, அவர்கள் கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும் தாயகத்திற்கு திரும்பிச் செல்ல முடியாது.
அகதிகளாகவரும் தமிழர் தொகை மேலும் மேலும் கூடி வருகிறதேதவிர குறைவதற்கு வழியே காணவில்லை.
தமிழ் சிறுபான்மையினரின் அடிப்படை மனித உரிமைகள்கூட இலங்கை அரசினால் கடுமையாக மீறப்படுகின்றன.
இலங்கையின் வடக்கு-கிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக கண்மூடித்தனமான வன்முறை இலங்கை அரசினால் ஏவிவிடப்படுதற்கு தெளிவான சாட்சியங்கள் இந்தியாவிடம் இருக்கின்றன.
மனித உரிமைமீது அக்கறை கொண்ட சகல நாடுகளுக்கும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கை ஒரு சவாலாகிவிட்டது.” என்றார் திலான்.
அன்று இந்தியாவின் குரலையும், இன்று இந்தியாவின் மௌனத்தையும் ஒப்பிட்டுப்பார்க்காமல் இருக்க முடியாதல்லவா.

தரையிறங்கிய ஹெலி
யாழ்ப்பாணத்தில் கைதடிப் பாலத்தருகே உள்ள வெளியில் இலங்கை விமானப் படையின் ஹெலிகொப்டர் ஒன்று தரையிறங்கியது.
இயந்திரக் கோளாறு காரணமாகவே ஹெலி தரையிறங்கியது.
செய்தியறிந்து இயக்கங்கள் சென்றன. ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் ஆகிய இரண்டு இயக்கங்களின் உறுப்பினர்களும் ஹெலியை தாக்கவேண்டும் என்று திட்டமிட்டார்கள்.
“நாங்கள் அடிக்கப்போகிறோம். நீங்கள் விட்டுவிடுங்கள்” என்றார்கள் ஈரோஸ் இயக்கத்தினர்.
ஹெலியில் இருந்த இராணுவத்தினரிடம் எல்.எம்.ஜி. ஆயுதம் இருந்தது. அதனால் அவர்களை உடனே நெருங்க முடியவில்லை.
ஆர்.பி.ஜி. ரக ஆயுதத்தால்தான் தூர இருந்து தாக்கவேண்டும். தமது முகாமுக்கு செய்தியனுப்பிவிட்டு ஈரோஸ் இயக்க உறுப்பினர்கள் காத்திருந்தனர்.
அதற்கிடையில் ஹெலி தரையிறங்கிய செய்தியறிந்து விமானப்படை விமானம் ஒன்று வந்து வட்டமிடத் தொடங்கியது.
கைதடிப்பாலமும், அதனையொட்டிய பகுதியும் திறந்தவெளியாக இருக்கும். விமானத்தில் இருந்து ஆள் நடமாட்டத்தைக் கவனித்து தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக இருக்கும்.
அதனால், கைதடி வெளிப்பகுதியில் இருந்து ஹெலியை நோக்கி தாக்குதல் நடத்துவது கஷ்டமாகிவிடும்.
ஈரோஸ் இயக்க முகாமில் இருந்து ஆர்.பி.ஜி. வந்து சேர்வதற்கிடையில் ஹெலியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாற்றைச் சரிசெய்து விட்டார்கள். ஹெலி பறந்துவிட்டார்கள்.
“ஈரோஸ் விட்டிருந்தால் நாம் அடித்திருக்கலாம், கெடுத்துவிட்டார்களே.” என்று சொல்லிக் கொண்டனர்.
ஹெலிமீது தாக்குதல்
7.6.86 அன்று வல்வெட்டித்துறை இராணுவ முகாமில் தரையிறங்கிவிட்டு, மேலெழுந்த ஹெலிக் கொப்டர்மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
விமானி காயமடைந்தார் என்று புலிகள் விடுத்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. எனினும் அரசாங்க செய்தியில் சேத விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஹெலிமீது தாக்குதல் நடத்தப்பட்டதும் வல்வை முகாமிலிருந்து ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதல் நடத்திய புலிகள் சென்றுவிட்டனர். இராணுவத்தினரின் ஷெல் 16 வயதுப் பெண் ஒருவரைத் தாக்கியது.
தலையில் அடிபட்டு, மூளை வெளியே வந்த நிலையில் அப்பெண் உயிரிழந்தார்.
கறுப்புச்சட்டையினர் மீது தாக்குதல்
வல்வெட்டித்துறை இராணுவமுகாமில் பிரிட்டிஷ் சென்று விசேட பயிற்சி பெற்ற இராணுவத்தினர் இருந்தனர். கறுப்பு உடைகளையே அவர்கள் அணிந்திருப்பர்.
அதனால் அவர்கள் கறுப்புச் சட்டைப் படையினர் என்று அழைக்கப்பட்டனர்.
14.6.86 அன்று கறுப்புச்சட்டைப் படையினருக்கும், புலிகளது அணியினருக்கும் இடையே வல்வெட்டித்துறை இராணுவ முகாமுக்கு அருகே மோதல் நடந்தது.
நான்கு கறுப்புச்சட்டை படையினர் உயிரிழந்தனர். புலிகள் தரப்பில் இழப்பில்லை.
14.6.86 அன்றும் வல்வெட்டித்துறை இராணுவ முகாமருகே மோதல் நடைபெற்றது.
புலிகள் சிலிண்டர் தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் நடத்திய புலிகளின் தகவலின்படி ஐந்து இராணுவத்தினர் பலியானார்கள்.
தமிழீழத்தின் குரல்
1986 இல் வடக்கு-கிழக்கு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஒரு வானொலி நிலைய ஒலிபரப்பு.
தமிழீழத்தின் குரல்’ என்பது அதன் பெயர். தமிழ் ஈழ கம்யுனிஸ்ட் கட்சி என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டனர் இந்த வானொலி நிகழ்ச்சியை நடத்தியவர்கள்.
ஒருநாள் இயக்கங்களை ஆஹா, ஓஹோ என்று புகழ்வார்கள். மறுநாள் கேவலமாகத் திட்டுவார்கள். அரசுதான் நடத்துகிறதா? அல்லது இந்தியா நடத்துகிறதா? போன்ற சந்தேகங்கள் ஏற்பட்டன.
பாலசுப்பிரமணியம் என்பவரது தலைமையில் ஈழம் கம்யுனிஸ்ட் கட்சி என்று ஒரு அமைப்பு இருந்தது.
ஒருவேளை, அவர்கள்தான் வானொலி நிலையம் நடத்துகிறார்களோ? என்றெல்லாம் பல்வேறு ஊகங்கள் நிலவின.
உண்மையில் இலங்கை அரசுதான் அந்த ஒலிபரப்பை செய்தது. அப்போது தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்தலத்முதலியின் சம்மதத்தோடு அந்த ஒலிபரப்பு நடத்தப்பட்டது.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் தமிழ் சேவையில் இருந்த சிலரின் உதவியோடு நடத்தப்பட்டது.
இயக்கங்கள் தொடர்பான தவறான தகவல்களை பரப்புவதும், இயக்கங்கள் மத்தியிலும், இயக்கங்களுக்கு உள்ளேயும் குழப்பத்தை உருவாக்குவது என்பதுதான் அந்த ஒலிபரப்பின் நோக்கமாக இருந்தது.
எனினும், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
ஈழம் கம்யுனிஸ்ட் கட்சிக்கும் அதற்கும் ஒரு தொடர்புமில்லை.
ஈழம் கம்யுனிஸ்ட் கட்சி என்னவாயிற்று?
அது ஒரு சுவாரசியமான கதை.

(தொடர்ந்து வரும்)
(அரசியல் தொ்டர் எழுதுவது அற்புதன்)
தந்தை-தளபதி-தந்தை

திராவிட-முன்னேற்றக் கழகத் தலைவர் அமரர் பெரியார் ஈ.வே.ராவை தந்தை பெரியார் என்றுதான் அழைப்பார்கள். அதுபோல தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தையும் தந்தை செல்வா என்றே அழைப்பதுண்டு. தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்த தந்தை செல்வா, ‘தளபதி’ அமிர்தலிங்கம் ஆகியோர் தந்தை பெரியாரைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம் இது.

No comments:

Post a Comment