அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 68

‘துக்ளக்’கின் விமர்சனமும் ‘சோ’வுக்கு குள்ளநரிப் பட்டமும்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -68)


இயக்கப் போக்குகள். ரெலோ போன்ற இயக்கங்களிடம் பிரச்சனையை யாருடன் பேசித் தீர்ப்பது என்று தெரியாது. காரணம் எல்லோருமே தலைவர்கள் மாதிரித்தான் தம்மைக் கருதிக் கொண்டிருப்பார்கள். புலிகள் இயக்கத்திலும் யாழ் மாவட்டத் தலைமைக்கும் வன்னித் தலைமைக்கும் இடையே பிரச்சனை இருக்கத்தான் செய்தது. ஆனால், யாழ் மாவட்டத்தில் கிட்டு சொன்னால் இயக்கம் முழுவதும் கேட்கும். வன்னியில் மாத்தையா சொன்னால் அங்கு இயக்கம் கட்டுப்படும். இருவரும் பிரபாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டே தீரவேண்டும். ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிலும் அதே போன்ற நிலைதான் ஆரம்பத்தில் இருந்தது. 86ம் ஆண்டு மத்திய பகுதிவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின் போக்கு வித்தியாசமானதாகத்தான் இருந்தது. இயக்கத்தின் விமர்சனக் கூட்டங்களில் தீப்பொறிகள் பறக்கும். அந்தளவுக்கு காரசாரமான விவாதம். நடக்கும். கூட்டம் முடிந்த பின்னர் வெளியே பேசும்போது பிரச்சனை இருப்பதாகவே காட்டிக் கொள்ளமாட்டார்கள். 86 இல் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் இயக்கமே இரண்டாகப்போகும் கட்டத்திற்கு உள்பிரச்சனை தீவிரமடைந்திருந்தது. ஆனால், வெளியே பிரச்சனையின் சாயல்கூட தெரியாதளவுக்கு நடந்து கொண்டனர். பின்னர் படிப்படியாக அந்த நிலை மாறிக்கொண்டிருந்தது. (தொடர் கட்டுரை)


இரண்டு உரிமை கோரல்கள்: மன்னார் கடலில் அகதிகள் சென்ற படகை வழிமறித்து கைது செய்த கடற்படையினரில் எட்டுப்பேரும், இரண்டு இராணுவத்தினரும் தாக்குதலில் பலியானது பற்றி சென்றவாரம் விபரித்திருந்தேன்.
அகதிகளோடு படகில் சென்ற தயாபரனும், சுதனும்தான் இராணுவத்தின் துப்பாக்கியைப் பறித்தெடுத்து தாக்குதல் நடத்தினார்கள்.
இருவரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள். பின்னர் விலகிக்கொண்டு அகதிகள்
சென்ற படகில் தமிழ்நாட்டுக்கு சென்று கொண்டிருந்தவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
கடல் நடுவே தாக்குதல் நடந்து முடிந்தவுடன் படகு அகதிகளோடு மீண்டும் மன்னார் எருக்கலம்பிட்டிக்கு திரும்பி விட்டது.
தாக்கப்பட்ட கடற்படைப் படகு தப்பிச்சென்றதால் கடற்படையினரின் ஏனைய படகுகள் துரத்திவரக்கூடும் என்று கருதியே அகதிகள் படகு கரைக்குத் திரும்பியது.
கடலில் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி மன்னாரில் புலிகளுக்கு எட்டிவிட்டது.
அப்போது புலிகளது மன்னார் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் சாஜகான்.
கடலில் தாக்குதல் நடத்துவதாக இருந்தால் தமது இயக்கத்தினர்தான் தாக்குதல் நடத்தியிருக்கவேண்டும் என்று நினைத்துவிட்டார் சாஜகான்.
உடனே, வானொலி தொடர்புக்கருவி மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்த கிட்டுவுக்கும், தமிழ்நாட்டுக்கும் செய்தி அனுப்பினார்.
செய்தி கிடைத்த்தும் யாழ்ப்பாண பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டார்கள் யாழ் மாவட்ட புலிகள்.
கடலில் வெற்றிகரமான தாக்குதல்: பத்துப் படையினர் பலி: புலிகள் நடத்திய துணிகரத் தாக்குதல்; என்று செய்தி வந்தது.
இதற்கிடையே மன்னார் கடற்கரையில் இறங்கிய தயாபரனும், சுதனும் அங்குள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பினரிடம் சென்றடைந்தனர்.
கடலில் நடைபெற்ற தாக்குதல் செய்தி கிடைத்தவுடன் தள்ளாடி இராணுவ முகாமிலிருந்தும் தலைமன்னாரிலிருந்தும்
புறப்பட்ட இராணுவத்தினர் கடற்கரைப் பகுதிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் சல்லடைபோடடுத் தேடுதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
கடற்படையினர் பீரங்கிப் படகுகளில் வந்து கரையோரப் பகுதிகளை நோக்கி ஷெல் தாக்குதல் நடத்தி தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்கள். ஹெலி’யிலும் தேடுதல் நடந்தது.
அதனால் பாதுகாப்புக்காக தயாபரனும், சுதனும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிடம் செல்லவேண்டியிருந்தது.
புலிகள் உதவி
காட்டுப்பகுதி வழியாக இருவரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம் நோக்கி சென்றபோது அவர்களைப் புலிகள் கண்டுவிட்டனர். புலிகளின் உதவியோடு தான் இருவரும் பத்திரமாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாமுக்குச் சென்றனர்.
முகாமில் தமது தாக்குதல் தொடர்பாக கூறினார்கள் இருவரும். வெற்றிகரமான தாக்குதல் அல்லவா? உடனே யாழ்ப்பாணத்திற்கும், சென்னைக்கும் தகவல் அனுப்பியது ஈ.பி.ஆர்.எல்.எஃப். மன்னார் பிரிவு.
சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பிரதிநிதியாக அப்போது இருந்தவர் கேதீஸ்வரன். அவர் உடனடியாக பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார்:
“மன்னார் கடலில் கடற்படையினர் மீது எமது இயக்கமே தாக்குதல் நடத்தியது.” ஒரே சம்பவத்துக்கு இரண்டு இயக்கங்கள் உரிமை கோரியது இது இரண்டாவது தடவை.
அதற்கு முன்னர் மட்டக்களப்பு சிறையடைப்புக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பும், புளொட் அமைப்பும் உரிமை கோரிப் பிரச்சனைப்பட்டன.
மன்னார் கடலில் தாம் தாக்குதல் நடத்தவில்லை என்பதை பின்னர் தெரிந்து கொண்டதால் புலிகள் அமைப்பினர் அதனை ஒரு பிரச்சனையாக வளர்க்கவில்லை.
முதன் முதலில் கடலில் வைத்து கடற்படையினர் மீது நடத்தப்பட்ட பாரிய தாக்குதல் அதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிதிதிரட்ட நடந்த வரிவிதிப்புக்கள். வரி அறவீடு
யாழ்-மாவட்டத்தில் நிதி திரட்டும் விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புலிகள் ஆகிய இரண்டு அமைப்புக்களுக்கும் இடையில் கடும் போட்டி.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் யாழ் மாவட்டத்தில் நிதித் திரட்டலுக்கான திட்டங்களை தீட்டி செயற்படுத்தும் பொறுப்பை டேவிற்சனிடமும், ரமேஷிடமும் ஒப்படைத்துவிட்டு தமிழகம் சென்றிருந்தார் டக்ளஸ் தேவானந்தா.
திறம்பட திட்டமிட்டு நிதி திரட்டலுக்கான பல வழிகளை கையாண்டார் டேவிற்சன்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து விற்பனை செய்யப்படும் சவர்க்கார வகைகள், ஷம்பு வகைகள் போன்றவற்றுக்கு விற்பனை வரி, இறக்குமதி வரி போன்றவை விதிக்கப்பட்டன.
யாழ் மாவட்டத்தில் அப்போதுதான் ஏராளமான மினி சினிமாக்கள் உருவாகிக் கொண்டிருந்தன.
மினி சினிமாக்களை நடத்துவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிடம் அனுமதிப்பத்திரம் பெற வேண்டும். அதற்குக் கட்டணம் உண்டு.
மினி சினிமா அரங்குகள் எப்படி இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் தயாரித்துக் கொடுத்திருந்தார் டேவிற்சன். அதன்படி நடப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.
காணி உறுதிகள் எழுதுவோர், நொத்தாரிசுகள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரை அழைத்தும் அவர்கள் அறவிடும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட வீதம் கேட்கப்பட்டது.
வியாபாரிகள் சிலர் தாம் விற்பனை செய்யும் பொருட்களுக்கு ‘பில்’ போடாமல் இருந்து விடுவார்கள். அப்படிச் செய்தால் வரி கட்டத் தேவையில்லையல்லவா?
‘பில்’ போடாத முதலாளிகளைக் கண்டு பிடித்து தண்டம் அறவிடப்பட்டது.
தண்டப் பண அளவு வர்த்தகர்களின் வசதியைக் கணக்கிட்டே தீர்மானிக்கப்பட்டது.
சில வர்த்தகர்களிடம் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டம் அறவிடப்பட்டது, அதே சமயம் சில வர்த்தகர்களிடம் பத்தாயிரம் ரூபாவும் தண்டமாக அறவிடப்பட்டது.
அனுமதிப்பத்திரம் எடுக்காமல் மினிசினிமா நடத்தியவர்களிடமும் தண்டம் அறவிடப்பட்டது.
ஆங்கிலப் படங்கள் காண்பிப்பவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் தணிக்கைக் குழுவிடம் காண்பித்து அனுமதி பெற்றே திரையிடலாம் என்பது கண்டிப்பான உத்தரவு.
அந்த உத்தரவு மினி சினிமா உரிமையாளர்களுக்கு பிடிக்கவில்லை.
“இப்படியெல்லாம் உத்தரவுகள் போட்டால் நாம் மினி சினிமாவையே மூடிவிட வேண்டியதுதான்” என்றார்கள்.
“தாராளமாக மூடலாம். அதற்கு எமது அனுமதி தேவையில்லை” என்று சொல்லப்பட்டதும், வேறு வழியின்றி தணிக்கை விதிகளுக்கு கட்டுப்பட்டனர் மினி சினிமா உரிமையாளர்கள்.
மினி சினிமாக்களில் புலிகளும் நிதி கோரினர். புலிகளின் யாழ் மாவட்ட நிதிப் பொறுப்பாளராக அப்போதிருந்தவர் மதன் (86 இன் மத்தியில்)
“மினி சினிமாக்களில் இரண்டு இயக்கங்கள் ஏட்டிக்குப் போட்டியாக பணம் கேட்டால் நன்றாக இருக்காது. நாம்தான் முன்பிருந்தே மினி சினிமா விடயத்தை கையாண்டு வருகிறோம்.” என்று திலீபனைச் சந்தித்துக் கூறினார் டேவிற்சன்.
திலீபன் புலிகள் சார்பாக சொன்ன ஒரே வார்த்தை- “இனிமேல் எம்மவர்கள் அதில் தலையிடமாட்டார்கள்!” அதன்பின்னர் பிரச்சனை இருக்கவில்லை. ஏனைய இயக்கங்களுக்கும் புலிகளுக்கும் இருந்த வேறுபாடு அதுதான்.
இயக்கப் போக்குகள்.
ரெலோ போன்ற இயக்கங்களிடம் பிரச்சனையை யாருடன் பேசித் தீர்ப்பது என்று தெரியாது. காரணம் எல்லோருமே தலைவர்கள் மாதிரித்தான் தம்மைக் கருதிக் கொண்டிருப்பார்கள்.
புலிகள் இயக்கத்திலும் யாழ் மாவட்டத் தலைமைக்கும் வன்னித் தலைமைக்கும் இடையே பிரச்சனை இருக்கத்தான் செய்தது.
ஆனால், யாழ் மாவட்டத்தில் கிட்டு சொன்னால் இயக்கம் முழுவதும் கேட்கும். வன்னியில் மாத்தையா சொன்னால் அங்கு இயக்கம் கட்டுப்படும். இருவரும் பிரபாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டே தீரவேண்டும்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிலும் அதே போன்ற நிலைதான் ஆரம்பத்தில் இருந்தது. 86ம் ஆண்டு மத்திய பகுதிவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின் போக்கு வித்தியாசமானதாகத்தான் இருந்தது.
இயக்கத்தின் விமர்சனக் கூட்டங்களில் தீப்பொறிகள் பறக்கும். அந்தளவுக்கு காரசாரமான விவாதம். நடக்கும். கூட்டம் முடிந்த பின்னர் வெளியே பேசும்போது பிரச்சனை இருப்பதாகவே காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
86 இல் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் இயக்கமே இரண்டாகப்போகும் கட்டத்திற்கு உள்பிரச்சனை தீவிரமடைந்திருந்தது. ஆனால், வெளியே பிரச்சனையின் சாயல்கூட தெரியாதளவுக்கு நடந்து கொண்டனர்.
பின்னர் படிப்படியாக அந்த நிலை மாறிக்கொண்டிருந்தது.
சரணாலயம்

1986 இன் மத்திய பகுதியில் யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள அரசடி வீதியில் சரணாலயம் ஒன்றை அமைத்தனர் புலிகள்.
‘பண்டிதர் சரயாலயம்’ என்று அதற்கு பெயரிடப்பட்டது.
குழந்தைகளுக்கான பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டதே ‘பண்டிதர் சரணாலயம்’.
யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்தது சுப்பிரமணியம் பூங்கா.
யாழ் பொலிஸ் நிலையம், கோட்டை இராணுவ முகாம் என்பவற்றுக்கு அருகில் இருந்தமையால் அங்கு யாரும் செல்வதில்லை.
அதனால் சுப்பிரமணியம் பூங்கா பற்றைக்காடாக மாறியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் வேறு பெரிய பூங்காக்கள் இல்லாத நிலையில் புலிகள் உருவாக்கிய பண்டிதர் சரணாலயம் குழந்தைகளுக்குரிய பொழுதுபோக்கு இடமாக மாறியது.
புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த சிவகுமாரின் முயற்சியால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டது ‘உறுதியின் உறைவிடம்’.
தற்போது உள்ள மாவிரர் நினைவாலயங்களுக்கு முன்னோடியாக இருந்தது உறுதியின் உறைவிடம்தான்.
மறைந்த புலிகள் இயக்க போராளிகளது படங்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும்.
உறுதியின் உறைவிடம் உருவாக காரணமாக இருந்த சிவகுமார் தற்போது கனடாவில் இருக்கிறார்.
புலிகள் இயக்கம் தொடர்பாக கனடா உளவுத்துறைக்கு தகவல் கொடுத்து வந்ததாக சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிவகுமார் தான் அவர்.
அவர்கள் அங்கே
1986 இல் புலிகள் இயக்கத்தில் யாழ் மாவட்டத்தில் கிட்டுவோடு சேர்ந்து தீவிரமாக செயற்பட்டவர்களில் மதன், ஊத்தைரவி, மயூரன், ரஹீம் என்னும் கனகரத்தினம், சுக்ளா ஆகியோர் முக்கியமானவர்கள்.
ரெலோ இயக்கம் மீதான நடவடிக்கையிலும் முன்னின்று செயற்பட்டவர்கள் அவர்கள்தான். இவர்கள் தொடர்பாக முக்கியமாக குறிப்பிட்டு கூறுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
இவர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் இருக்கிறார்கள். சுக்ளா மட்டும் புலிகளது ஃபிரான்ஸ் கிளையில் செயற்படுகிறார். ஏனையோர் முற்றாக ஒதுங்கியிருக்கிறார்கள்.
கிட்டுவின் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தவர் ரஹீம். ராஜீவ் காந்தி கொலை நடந்த சமயத்தில் ஒற்றைக்கண் சிவராசன் தொடர்பாக தகவல்களை வெளிப்படுத்தி இந்திய உளவுப்பிரிவுக்கு உதவியவர் ரஹீம்தான்.
புலிகள் இயக்கத்தின் தீவுப்பகுதி பொறுப்பாளராக இருந்தவர் அம்மான். அவர் கிட்டுவின் விசுவாசியாக இருந்தவர். பின்னர் கிட்டுவுடன் பிரச்சனை ஏற்பட்டது.
ஒருநாள் அம்மானை அழைத்துக் கேட்டார் கிட்டு. “நான் உன்னை மண்டையில் போடவா? அல்லது நீயே குப்பி கடிக்கிறாயா?” அம்மான் குப்பியைக் கடித்து இறந்து போனார்.
புலிகள் அமைப்பில்  அரியாலை-குருநகர் பகுதிகளுக்கு பொறுப்பாக இருந்தவர் பீட்டர். நெடுங்குளம் சந்தியில் நாவற்குழி இராணுவத்தினருக்கு கண்ணி வெடி வைத்ததில் பங்கு கொண்டவர்.
அரியாலை சரஸ்வதி நூலகத்திற்கு பின்னால்தான் பீட்டரின் வீடு இருக்கிறது.
காதல் விவகாரம் ஒன்றில் சிக்கினார் பீட்டர். இயக்கத்தைவிட காதலுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.
ஒருநாள் சயனைட் குப்பி கடித்து இறந்துகிடந்தார் பீட்டர்.
‘துக்ளக்’ மீது பாய்ச்சல்
தமிழ்நாட்டில் வெளிவரும் ஆனந்தவிகடன் நிறுவனத்தின் சஞ்சிகைகளில் ஒன்றாக இருந்தது ‘துக்ளக்’. ரெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரெத்தினம் புலிகளால் கொல்லப்பட்டதை கடுமையாகக் கண்டித்திருந்தது துக்ளக்.
“பிரபாகரன் ஒரு சர்வதிகாரியாக விரும்புகிறார்” என்று விமர்சித்திருந்தார் துக்ளக் ஆசிரியர் சோ. அதைவிட துக்ளக் சோ எழுதியிருந்த மற்றொரு விடயம்தான் தமிழ்நாட்டில் இருந்த ஈழப்போராளிகள் இயக்கங்களின் ஆதரவாளர்களை கொதிப்படையச் செய்திருந்தது.
சோ சாடல்
அப்படி என்ன எழுதியிருந்தார் சோ? அது இதுதான்.
“பொலிசிடம் சிக்குகிறவர்கள் சித்திரவதை செய்யப்படுவார்கள். (அந்த வேதனை தாங்கமாட்டாமல்) காட்டிக் கொடுப்பவர்கள் தங்கள் கூட்டத்தினால் கொலை செய்யப்படுவார்கள்.
கள்ளக் கடத்தல், மற்றும் மாஃபியா கூட்டங்களில் கூட இந்தப்பழக்கம் உண்டு என்பது உலகறிந்த விஷியம்.”
16.6.86 இல் ‘இன்றைய நிலவரம் இதுதான்’ என்ற தலைப்பில் சோ எழுதிய ஏழு பக்கக் கட்டுரையில் தான் அப்படி எழுதியிருந்தார்.
“இலங்கையில் தனி ஈழம் என்ற ஒன்று உருவாகியே தீரவேண்டுமானால், அது ஒரு ஜனநாயக ஆட்சியாகவே இருக்க வேண்டும். பிரபாகரனின் பாஸிச ஆட்சியாக இருக்கக்கூடாது” என்றும் சோ எழுதியிருந்தார்.
பெரும் சர்ச்சையை கிளப்பியது இக்கட்டுரை.
புலிகளையும், பிரபாகரனையும் சோ சாடியதால் ஏனைய போராளி இயக்கங்களை சோ மதித்தார் என்று அர்த்தமல்ல.
சோவுக்குப் பிடிக்காத விஷியங்களில் கம்யூனிசம், பிரிவினை, பெண் விடுதலை, ஆயுதப் போராட்டம் என்று பல விஷியங்கள் அடக்கம்.
ஆர்.எஸ்.எஸ். என்னும் இந்து தீவிரவாத அமைப்பின் தீவிர விசுவாசி சோ. அவரது சொந்தப்பெயர் இராம சுவாமி.
சோவின் கட்டுரைக்குப் பதில் எழுதினார் சாலை இளந்திரையன். பேராசரியரான சாலை இளந்திரையன் தமிழ் நாட்டுக்காரர். ஈழப்போராளிகள் இயக்கங்களுக்கு ஆதரவானவர்.
சோவுக்கு பதில்
‘சோ ஒரு குள்ள நரி’ என்று வர்ணித்தார் சாலை இளந்திரையன். அவர் எழுதியது இது:
“தமிழ் ஈழத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள பிரபாகரனையும், அவருடைய புலிப்படையையும் கொச்சைப்படுத்தி தமிழர் மத்தியில் அவர்களை செல்வாக்கு இழக்கச் செய்வதே பிற்போக்குச் சக்திகளது திட்டம்.
பிரபாகரனின் படை தன்னேரில்லாத விடுதலைப் படையாக உருவாகிவிட்டது என்பதை தமிழர்களைவிட தமிழரின் எதிரிகள் நன்கு புரிந்து கொண்டுவிட்டனர்.
போர் முகத்தில் நிற்கும் படையின் தலைவன் சர்வதிகாரியாகத்தான் செயற்படவேண்டும். இல்லாவிட்டால் எந்தப் படையையும் அவன் நடத்த முடியாது.
இந்திய இராணுவம் இலங்கையில் தலையிட வேண்டும் என்பவர்களை பிரபாகரன் தனக்கு எதிரானவர்களாகக் கருதுகிறாராம்.
ஏனெனில் இந்திய இராணுவம் தலையிட்டால், ஈழம் ஒரு சனநாயக நாடாக அமையுமாம். பிரபாகரனின் சர்வதிகாரத்துக்கு இந்திய இராணுவம் உதவாதாம். துக்ளக்காரர் சொல்கிறார் இப்படி.
அரசியல் அரிச்சுவடி தெரியாத இந்த துக்ளக்கை என்ன சொல்வது? எந்த விடுதலைப் போரும் அந்த நாட்டு குடிமக்களாலேயே நடத்தப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்புவது சுதந்திர சோசலிச தமிழீழம். இந்தியா போன்ற ஒரு காலனியத்தின் கரடு முரடான குட்டி உள்ளே நுழைந்தால், ஈழத்து மக்கட் சோலையே சிதைந்துவிடும். பங்களாதேஷில் அதுதான் நடந்தது.
கிழக்கு பாகிஸ்தானுக்கு விடுதலை பெற்றுத்தரச் சென்ற இந்திய இராணுவம் மக்களைக் கொள்ளையடித்தது. மாதரைக் கற்பழித்தது. மக்களின் சுதந்திர வேட்கையை பூட்ஸ் காலால் மிதித்துக் கொச்சைப்படுத்தியது.
பலம்வாய்ந்த ஒரு இராணுவத்தின் தயவை நாடினால் ஏற்படக்கூடிய இந்த தீய விளைவைக் கருதியே, இந்திய இராணுவம் அங்கே வரவேண்டாம் என்று விடுதலைப் புலிகன் கூறுகிறார்கள்.”
என்று எழுதியிருந்தார் சாலை இளந்திரையன்.

No comments:

Post a Comment