அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 65

வானில் இருந்து தரையில் இறங்கிய படை!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-65)ரெலொ இயக்கத்தை தடைசெய்த பின்னர் ‘இந்தியா டுடே’ ஆங்கில சஞ்சிகைக்கு பிரபாகரன் அளித்த பேட்டியின் ஒரு பகுதியை சென்ற வாரம் தந்திருந்தேன். 1986 இல் பிரபாவின் மனோபாவம் எத்தகையதாக இருந்தது என்பதை இப்பேட்டி புலப்படுத்துகிறது. பேட்டியிலிருந்து மேலும் சில முக்கிய பகுதிகள்: கேள்வி: கம்யுனிச நாடுகளில் இருந்து நீங்கள் ஆயுத உதவி பெறுவதாக ஜயவர்த்தனா குற்றம் சாட்டுகிறாரே? பிரபா : கம்யுனிஸ்ட் நாடுகளில் இருந்து எனக்கு ஆயுதங்கள் கிடைத்தால் இந்தப் பேட்டியை சுதந்திர தமிழீழத்தில் இருந்து தந்திருப்பேன்.   கேள்வி: தமிழீழ வெளிவிவகாரக் கொள்கை எப்படியிருக்கும்? பிரபா: நாம் சோசலிச அணிகளுடன் இருப்போம். ஏனெனில் அப்படியான நாடுகள்தான் இன்று எமக்கு உதவி புரிகின்றன. (தொடர் கட்டுரை)
ரெலொ இயக்கத்தை தடைசெய்த பின்னர் ‘இந்தியா டுடே’ ஆங்கில சஞ்சிகைக்கு பிரபாகரன் அளித்த பேட்டியின் ஒரு பகுதியை சென்ற வாரம் தந்திருந்தேன்.
1986 இல் பிரபாவின் மனோபாவம் எத்தகையதாக இருந்தது என்பதை இப்பேட்டி புலப்படுத்துகிறது.
பேட்டியிலிருந்து மேலும் சில முக்கிய பகுதிகள்:
கேள்வி: கம்யுனிச நாடுகளில் இருந்து நீங்கள் ஆயுத உதவி பெறுவதாக ஜயவர்த்தனா குற்றம் சாட்டுகிறாரே?
பிரபா : கம்யுனிஸ்ட் நாடுகளில் இருந்து எனக்கு ஆயுதங்கள் கிடைத்தால் இந்தப் பேட்டியை சுதந்திர தமிழீழத்தில் இருந்து தந்திருப்பேன்.
கேள்வி: தமிழ் ஈழத்துக்கு எந்த விதமான அரசியலமைப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
அங்குதான் யுத்தம்
பிரபா: தமிழீழ அரசு ஒரு சோசலிச அரசாக அமைந்திருக்கும். மக்களால் ஆதரிக்கப்படும் ஒரே ஒரு அரசியல் கட்சியே அங்கு இருக்கும். பல கட்சி ஜனநாயகத்தை நான் விரும்பவில்லை. ஒரு கட்சி அரசு மூலமே விரைவில் தமிழீழத்தை வளர்ச்சயடைந்த ஒரு நாடாக மாற்றியமைக்க முடியும்.
கேள்வி: பாராளுமன்ற ஜனநாயகம் இருக்குமா?
பிரபா: மக்கள் ஜனநாயகக் குடியரசாக, யூகோஸ்லேவிய அமைப்பு முறையில் ஒரு கட்சியை மக்கள் தெரிவு செய்வார்கள்.

கேள்வி: தமிழீழ வெளிவிவகாரக் கொள்கை எப்படியிருக்கும்?
பிரபா: நாம் சோசலிச அணிகளுடன் இருப்போம். ஏனெனில் அப்படியான நாடுகள்தான் இன்று எமக்கு உதவி புரிகின்றன.
கேள்வி: அண்மைக்காலத்தில் நீங்கள் யாழப்பாணம் போனதுண்டா?
பிரபா: என்னுடைய நடவடிக்கைகள் இரகசியமானவை. எனது நம்பிக்கைக்குரிய தளபதிகள் என்னோடு தினமும் தொடர்புகொள்வார்கள்.
கேள்வி: ஜயவர்த்தனா உங்கள்மீது சுமத்தும் குற்றச்சாட்டு என்னவெனில், இந்திய மண்ணிலிருந்து உங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கிறீர்கள் என்பதாகும். அது பற்றி என்ன கூறுகிறீர்கள்.
பிரபா: எமது போராட்டம் எமது மண்ணான தமிழீழத்திலேயே நடைபெறுகிறது. எமது யுத்தத்தை அங்கேயே நடத்துகிறோம். தேவையேற்படும் போது நாமும் அங்கு செல்வோம். இங்கிருந்து போராடும் எண்ணம் நமக்கு இல்லை. நாம் இங்கிருப்பது சர்வதேச அளவில் அரசியல் பிரசாரம் செய்வதற்காகவே.
கேள்வி: இந்திய அரசின் ஈடுபாட்டை எவ்வளவு தூரம் போற்றுகிறீர்கள்?
பிரபா: எமது இரட்சியத்திற்கு இந்திய அரசின் அனுதாபம் உண்டு. எம்மை இங்கு தங்குவதற்கு அனுமதித்துள்ளதே இந்திய அரசின் மிக உயர்ந்த மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டு. இந்தியா தலைமறைவாக வாழும் சகல அரசியல் தலைவர்களுக்கும், இரட்சக்கணக்கான ஈழமக்களுக்கும் அடைக்கலம் தந்துள்ளது.
கேள்வி: இந்தியா ஐக்கிய இலங்கை என்ற அமைப்புக்குள் தீர்வைக் காண முயல்கிறது. நீங்கள் ஈழம் தவிர வேறு எதனையும் ஏற்பதில்லை என்கிறீர்கள். இதிலே முரண்பாடு இல்லையா?
பிரபா: நாம் எமது மக்களின் அரசியல் அபிராசைகளையே பிரதிபலிக்கிறோம். எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக இந்திய அரசு நடக்காது என்று நம்புகிறோம்.
எமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற இந்தியாவின் ஆதரவு தேவை. அதே சமயம் எமது தமிழீழ மக்களுக்கு இறைமையும், சுயநிர்ணய உரிமையும் உண்டு.
அதுதான் பிரபா அளித்த பேட்டி. ஒரு கட்சி முறைக்கு ஆதரவு, பல கட்சி ஜனநாயகத்திற்கு எதிர்ப்பு போன்ற அம்சங்கள் பிரபாவின் பேட்டியில் ஏனைய இயக்கங்களை அச்சுறுத்துவதாகவே இருந்தன.

எதிர்ப் பிரசாரம்
ரெலோவுக்கு நடந்தது தமக்கும் நடக்கும் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட் போன்ற அமைப்புக்கள் நம்பத் தொடங்கிவிட்டன.
“யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம்களை புலிகள் உளவறிகிறார்கள்: விபரம் திரட்டுகிறார்கள்” என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். தமிழ்நாட்டில் அறிவித்தது.

‘ஈழப்போராளி’ என்றொரு பத்திரிகை தமிழ்நாட்டிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பால் வெளியிடப்பட்டது. வரதராஜப்பெருமாள்தான் அதன் பொறுப்பாளராக இருந்தார்.
அதுவரை காலமும் தமிழ்நாட்டில் பிரசார வேலைகளை கவனித்துவந்த டேவிற்சன் யாழ்ப்பாணம் திரும்பினார்.
பத்திரிகை வேலைகளுக்கு பொறுப்பாக இருந்த ரமேஷ்சுக்கும் பத்மநாபாவுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டன.
அதனால் வரதராஜப்பெருமாள் தமிழ்நாட்டிலிருந்து ஈழப்போராளி என்னும் பத்திரிகையை பொறுப்பேற்கச் செய்தார்.
புலிகளுக்கு எதிராக கடும் பிரசார ஏடாக ‘ஈழப்போராளி’ வெளிவந்தது.
‘ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்’ என்று தலைப்புச் செய்தியும் வெளியிடப்பட்டது.
டக்ளஸ் தேவானந்தாவும் அரவது பக்கம் நின்ற ரமேஷ், டேவிற்சன், இப்ராகீம் போன்றவர்கள் புலிகளுக்கு சார்பானவர்களாகக் கருதப்பட்டனர்.
பத்மநாபாவும் அவருடன் நின்ற சுரேஸ் பிரேமச்சந்திரன், வரதராஜப்பெருமாள் போன்றோர் தீவிர புலி எதிர்ப்பாளர்களாக கருதப்பட்டனர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். பிரச்சனையில் கிட்டுவின் உதவியோடு டக்ளஸ் தேவானந்தா அணியினர் இயக்கத்தை கைப்பற்றத் திட்டம் என்றும் ஒரு பிரசாரம் செய்யப்பட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். உள் இயக்கப் பிரச்சனையை பேசித்தீர்க்கவும், வெளிநாட்டு சந்தையில் ஆயுதம் வாங்கவும் இந்தியா செல்லப் புறப்பட்டார் டக்ளஸ் தேவானந்தா.
படகுப் பயணம்
யாழ்ப்பாணம் குருநகரில் இருந்து படகு புறப்பட்டது.
காலநிலை சீராக இல்லை. கடலின் நீரோட்டம் மோசமாக இருந்தது. படகும் அதன் கொள்ளளவுக்கு மீறிய சுமையோடு சென்றது.
நடுக்கடலில் பயங்கர அலையொன்று சுழன்றடிக்க படகு கவிழ்ந்தது. கவிழ்ந்த படகில் தொற்றிக் கொண்டு நின்றனர் சிலர்.
சுகிர்தன், அசோக், அகிலன், எட்வேர்ட் என்னும் நான்கு பேரும் தம்மால் நீந்திக் கரை சேரமுடியாது என்று நினைத்து விட்டனர்.
கழுத்தில் கட்டியிருந்த சயனைட்டைக் கடித்துக்கொண்டு படகின் பிடிப்பை விட்டனர். கடலில் விழுந்தனர்.
ஏனையோர் படகில் பிடித்தபடி தத்தளித்துக்கொண்டிருந்தனர்.
யாராவது ஒருவர் கரைக்குச் சென்றால்தான் வேறு படகுகளை உதவிக்கு அழைக்கவும் முடியும்.
நடுக்டகடலில் இருந்து கரை நோக்கி நீந்தத் தொடங்கினார் டக்ளஸ் தேவானந்தா.
கிட்டத்தட்ட பத்துமணி நேர நீச்சல். திசை தெரியாமல் அலைகளில் சிக்கித்தடுமாறி நீந்திவர நீண்ட நேரமானது. அவரோடு சேர்ந்து படகின் ஓட்டியாகச் சென்ற கென்னடி என்னும் உறுப்பினரும் கரைக்கு வந்து சேர்ந்தார்.
அதன் பின்னர்தான் கரையில் இருந்து படகுகள் உதவிக்கு விரைந்தன.
ஆனால் அதற்கு முன்னரே படகில் தொங்கிக் கொண்டிருந்த ஏனைய மூன்று உறுப்பினர்கள் கடலில் விழுந்து காணாமல் போய்விட்டனர்.
ஜீவன், கலீல், காமினி, ரமணன் ஆகிய நான்கு பேர் மட்டுமே படகில் தமது பிடியை தளரவிடாமல் தொங்கிக்கொண்டிருந்தனர்.
அவர்களை மீட்டுக்கொண்டு, கடலில் விழுந்தவர்களை பல படகுகளில் தேடினார்கள். பலன் இல்லை.
மறுநாள்தான் சடலங்கள் கரை ஒதுங்கியது. சயனைட் கடித்த உறுப்பினர்களது சடலங்கள் நீலம்பாலித்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தன.
மொத்தம் ஏழு பேர் கடலில் பலியானார்கள். அத்தனை பேரும் டக்ளஸ் தேவானந்தாவின் மெய்ப் பாதுகாவலர்கள். மக்கள் விடுதலைப் படையின் முன்னணி உறுப்பினர்கள்.
எட்வேர்ட் (கோப்பாய்), இமாம் (சாவகச்சேரி), சுகிர்தன் (மன்னார் தளபதி) நடராஜா (திருமலை), அசோக் (இளவாலை), ஞானம் (மட்டக்களப்பு) ஆகியோரே கடலில் பலியானவர்கள் ஆவர்.
ஆயுதம் வாங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகளும் கடலில் தொலைந்து போயின.
இறுதிச் சடங்குகள்
கடலில் பலியான ஏழுபேரினதும் இறுதிச் சடங்குகள் யாழ்ப்பாணத்தில் மிகப்பாரியளவில் நடத்தப்பட்டன.
பலியான உறுப்பினர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தி பொதுக்கூட்டமும் நடத்தும் முறையை யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் சிறப்பாகச் செய்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புத்தான்.
டேவிற்சன்தான் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்று திறம்படச் செய்து வந்தார்.
ஏழு பேரின் இறுதிச் சடங்கும் எழுச்சிகரமாக நடத்தப்பட்டது. மானிப்பாயில் வெள்ளம் போல் மக்கள் திரண்டிருக்க
ஏழுபேரின் உடல்களுக்கும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. சிதைகளுக்கு டக்ளஸ் தேவானந்தா தீமூட்டினார்.
மதச்சார்பற்ற இறுதிச் சடங்காக உணர்ச்சிகரமாக நடந்து முடிந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். நடத்திய மிகப்பெரிய இறுதி அஞ்சலி நிகழ்ச்சியும் அதுதான்.
அதிரடித் தாக்குதல்
இதற்கிடையே இக்கட்டுரைத் தொடரில் தவறவிட்ட ஒரு முக்கிய மோதல் ஒன்றைச் சொல்ல வேண்டும்.
யாழ்ப்பாணம் சுதுமலையில் புலிகளது முகாம் ஒன்று இருந்தது.
புலிகளது யாழ்மாவட்ட தளபதி கிட்டு அங்குதான் தங்கியிருந்தார்.
சுதுமலை முகாம் பற்றிய விலாவாரியான தகவல் இலங்கை அரசுக்கு கிடைத்து விட்டது.
1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி. காலை நேரத்தில் மூன்று ஹெலிகொப்டர்கள்.
ஹெலிகொப்டர்கள் ஏன் வருகின்றன? வழக்கம் போல வட்டமடித்துவிட்டுச் சென்று விடக்கூடும் என்று மக்கள் நினைத்தனர்.
ஆனால், மூன்று ஹெலிகளும் புலிகளது சுதுமலை முகாமுக்கு அருகே தரையிறங்கின.
நவீன ஆயுதங்களோடு குதித்தனர் இராணுவத்தினர். ஏ.கே.47, எல்.எம்.ஜி, ஆர்.பி.ஜி. மோட்டார்களோடு அதிரடிப்பயிற்சி
பெற்ற இராணுவத்தினர் புலிகளது முகாமை நோக்கி பாய்ந்தனர்.
புலிகளது முகாமில் இருந்தும் பதிலடி ஆரம்பித்துவிட்டது.
அதே சமயம் ஹெலியில் படையினர் வந்து இறங்கிய விடயம் ஏனைய இயக்கங்களுக்கு எட்டிவிட்டது.
ஆயுதங்களோடு சுதுமலை நோக்கி ஏனைய இயக்க உறுப்பினர்களும் விரைந்தனர்.
புலிகளது முகாமில் அப்போது கிட்டுவும் இருந்தார். வோக்கி டோக்கி மூலம் ஏனைய தமது முகாம்களுக்கு செய்தி அனுப்பினார் கிட்டு.
பல்வேறு திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுவதை அறிந்த இராணுவத்தினர் தாக்குதலை நிறுத்திவிட்டு, ஹெலிகளில் ஏறிக்கொண்டனர்.
தமக்கு இக்கட்டான நேரத்தில் உதவிக்கு விரைந்த ஏனைய இயக்கங்களுக்கு நன்றி சொன்னார் கிட்டு.
யாழ் குடாநாட்டில் வான் வழியாக வந்திறங்கி அதிரடித் தாக்குதல்களை நடத்த இராணுவத்தினர் திட்டமிட்டிருந்தனர்.
அத்திட்டத்தின் முதலாவது தாக்குதல்தான் சுதுமலைத் தாக்குதல்.
ஆனால், சுதுமலையில் கிடைத்த பதிலடியில் இருந்து படையினர் தப்பிச் சென்றதே பெரிய காரியமாகிவிட்டது.
அதனால் வான் மூலமாக தரையிறங்கி அதிரடித் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அத்தோடு கைவிட்டனர் இராணுவத்தினர்.
தமது முகாமை நோக்கி வந்து முன்னேறிய படையினரை திருப்பியனுப்ப புலிகள் தீரமுடன் சமரிட்டதை மறுக்க முடியாது. அதே சமயம் ஏனைய இயக்கங்கள் அத் தாக்குதலை முறியடிக்க செலுத்திய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாகும்.
இஸ்ரேலிய மொசாட் ஆலோசனைப்படிதான் வான்மூலம் வந்து தரையிறங்கும் தாக்குதல்களுக்கு அன்றைய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி அனுமதி வழங்கியிருந்தார்.
பேச்சு முயற்சி
மீண்டும் 1986ம் ஆண்டு காலப்பகுதிக்குச் செல்லுவோம். இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவுடன் மறுபடியும் பேச்சு நடத்த முன்வந்தது தமிழர் விடுதலைக் கூட்டணி.
மாகாணசபைத் திட்டத்தையும் பரிசீலிக்க முன்வந்தார் அமிர்தலிங்கம்.
ஈழப் போராளி அமைப்புக்கள் கூட்டணியின் நிலைப்பாட்டை கடுமையாகக் கண்டித்தன.
எனினும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை அதனைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
இயக்கங்கள் அரசியல் விவேகமற்றவை என்பது போலவே கூட்டணியினர் கூறிவந்தனர்.
போருக்கு இயக்கங்கள். பேச்சுக்கு கூட்டணி என்று நம்பவைக்க முற்பட்டது மூலமே இயக்கங்களின் கடுமையான வெறுப்புக்கு ஆளாகியது கூட்டணி.
நூற்றுக்கணக்கான போராளிகளை பலிகொடுத்து இயக்கங்கள் போராடிக் கொண்டிருந்த நேரம் அது.
அந்த நேரத்தில் இயக்கங்களின் தாக்குதல்களால்தான்; ஜே.ஆர். பேச்சுக்குவரவே ஒப்புக்கொள்ளவேண்டியிருந்தது.
தமது தாக்குதல்ளால் கிடைக்கும் பலன்களை கூட்டணி அனுபவிக்க நினைப்பதாக இயக்கங்கள் வெறுப்புக் கொண்டன.
குறிப்பாக, புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் அமிர்தலிங்கம் அன்ட் கொம்பனி என்றும், தமிழர் வியாபாரக் கூட்டணி என்றும் கூட்டணியை கேலியாக அழைக்கத் தொடங்கினர்.

No comments:

Post a Comment