அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 39

எம்.ஜி.ஆரை குளிர்விக்க பிரபாகரன் சொன்ன கதை: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பாகம்39)


தமிழக அரசியல் சென்று ஒவ்வொரு இயக்கத் தலைவர்களும் தாமே பெரும் இயக்கம் என்று கூறிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு இயக்கமும் தம்மை நியாயப்படுத்த மற்றைய இயக்கத்தின் பொட்டுக் கேடுகளை ஒப்புவித்துவிடும். இதனால் ஈழப் போராளி அமைப்புக்கள் அனைத்தினதும் உள் பிரச்சனைகள் தமிழக அரசியல் தலைவர்களுக்கு அத்துப்படியாகி விட்டன. இதே வேளையில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். புலிகளது தலைவர் பிபாகரன் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர்.தலமையிலான தமிழக அரசோடு முதலில் நெருக்கமாக இருந்தது புளொட் அமைப்பு. எம்.ஜி.ஆர். அமைச்சரவையில்  இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் மூலமாகவே அந்த நெருக்கம் ஏற்பட்டது.  (தொடர் கட்டுரை..)


அகண்ட தமிழகம்
நியூயோர்க் நகரில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு மாநாடு பற்றி சென்ற வாரம் கூறியிருந்தேன்.
இந்த மாநாடு உருவாக்கிய சர்ச்சை ஒன்று தொடர்பாக நிச்சயம் குறிப்பிட வேண்டும். மாநாட்டில் தமிழீழ வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டது.
அமையப்போகும் அல்லது விரும்பப்படும் ‘தமிழர் தாயகம்’ என்ற பெயரில் அந்த வரைபடம் வெளியிடப்பட்டது.
அந்த வரைபடத்தை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளோடு இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டையும் இணைத்து அந்த வரைபடம் உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழீழ ஆதரவு என்ற போர்வைக்குள் அமொிக்காவின் சி.ஐ.ஏ.உளவு நிறுவனம் போட்ட திட்டப்படியே அந்த வரைபடம் தயாரிக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்தது.
நியூயோர்க்கில் இருந்து தமிழீழ ஆதரவாளர்களாக நடித்துக்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் பிரமுகர்களை தமது கைக்குள் போட்டுக் கொண்டது சி.ஐ.ஏ. அவர்களும் சி.ஐ.ஏ. சொன்னதை செய்து முடித்து விட்டார்கள் என்று பரவலாகப் பேசப்பட்டது.
‘அகண்ட தமிழக வரைபடத்தை உருவாக்கியதால் சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்திற்கு என்ன இலாபம்.
இதற்கான பதிலை தமிழ்நாட்டில் இருந்து வெளியான ‘மக்கள் குரல்’ பத்திரிகை சொன்னதில் இருந்து தருகிறேன்:
“இந்தியாவின் தமிழ் நாட்டையும் ஈழத்தோடு இணைத்து ஒரே தேசமாக வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. பிரிவினை பற்றி இந்தியர்களிடமும் இந்திய ஆட்சியாளரிடமும் ஒரு பயத்தை உருவாக்குவதே இந்த அகண்ட வரை படத்தின் நோக்கம்.
இப்படிச் வெய்தால் தமிழீழக் கோரிக்கை அடிபட்டுப்போய் விடும் என்பது தந்திரம்!
ஜயவர்த்தனா அரசுக்கு நடைமுறையில் உதவ இந்த வரைபடமே போதுமானது.
தமிழர்கள் எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பிரச்சனை என்றுதான் அவர் இந்தியாவிடம் சொல்லி வருகிறார்.
“ஈழம் என்று உதட்டளவில் உச்சரித்து யாருக்கோ சேவை செய்ய ஒரு கூட்டம் முற்படுகிறது” என்று சொன்னது ‘மக்கள் குரல்’ பத்திரிகை.
இதன் ஆசிரியர் டி.ராமசாமி அவர்தான் அக்கட்டுரைஎழுதியிருந்தார். இந்திரா காந்தி ராஜீவ் காந்தி ஆகியோரோடு நெருக்கமாக இருந்தவர். (தற்போது மரணமாகி விட்டார் டி.ஆர்)
அந்த பத்திரிகை சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை.
இலங்கை அரசுக்கு யுத்தத்தில் உதவி செய்து கொண்டிருந்தது அமொிக்கா.
தமிழீழத்தை ஆதரிப்பது போல பேசவைத்து அக்கோரிக்கையை ஆபத்தானதாகச் சித்தரிப்பதும் ஜே.ஆர்.அரசுக்கு அமொிக்கா செய்த உதவிகளில் ஒன்றுதான் என்று கருத இடமுண்டு.
தகவல் கொடுத்தவர் யார்?
இதேவேளை இந்தியாவில் ஈழப்போராளிகளது பயிற்சி முகாம்கள் இருந்ததை மறுத்துக்கொண்டிருந்தது இந்தியா.
இந்திய அரசின் மறுப்பை புஸ்வாணமாக்குவது போல ஒரு செய்தியை வெளியிட்டது ‘இந்தியா டுடே‘ சஞ்சிகை.
தமிழ் நாட்டில் ஈழப்போராளிகளது பயிற்சி முகாம்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்ற விபரங்களை வெளியிட்டிருந்தது அச்சஞ்சிகை.
இதனை அடுத்து அத்தகவல்களை யார் கொடுத்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது.
சந்தேகப் பார்வையில் சிக்கியவர்களில் ஒருவர் சிவநாயகம் ‘சற்றடே றிவியூ’ என்றொரு ஆங்கில இதழ் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்தது. அதன்ஆசிரியராக இருந்தவர்தான் சிவநாயகம்.
பின்னர் இவர் சென்னையில் ‘தமிழ் தகவல் தொடர்பு நிலையம்’ நடத்தி வந்தார்.
இவர்தான் பயிற்சி முகாம்கள் பற்றிய தகவல்ளைக் கொடுத்தார் என்று நம்பப்பட்டது.
போலிக் குதிரைகள்
சிவநாயகத்திற்கும் அமொிக்க சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக இந்தியாவின் முற்போக்குப் பத்திரிகையான ‘பிளிட்ஸ்’ அம்பலப்படுத்தியது.
பிளிட்ஸ் பத்திாிகை காட்டமாக குற்றம் சாட்டியது மற்றொருவர் நீலன் திருசடசெல்வம்.
25.08.84 அன்று தகது முன்பக்கத்தில் ‘பிளிட்ஸ்’ வெளியிட்ட செய்திலிருந்து சில பகுதிகள் இதோ:
“தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் சி.ஐ.ஏ புகுத்திவிட்ட நீலம் திருச்செல்வம் ஒரு போலிக் குதிரை. (Trojan Horse) இப்படியானபோலிக் குதிரைகள் மூலம் நீண்ட காலத்திற்கு முன்பே சி.ஐ.ஏ ஈழ விடுதலைக் குழுக்களுக்குள் ஊடுருவி விட்டது.
இன்னொரு போலிக் குதிரைதான் சிவநாயகம் என்பவர். இந்தியாவுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் எதிரான வாதங்களை கிளப்பிவிட்ட ‘இந்தியா டுடே’ கட்டுரைக்கு பெரும்பாலான தகவல்னளைக் கொடுத்தது இந்த மனிதர்தான்.
என்று தொிவித்தது ‘பிளிட்ஸட’ பத’திரிகை.
‘ரெலி’மீது தாக்குதல்
9.9.84 அன்று யாழ்பாணத்தில் பொன்னாலை என்னுமிடத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் மிகவும் துயரமானது.
ஜெகதீசன் என்னும் ஜெகன் என்பவரால் ‘தமிழீழ விடுதலை தீவிரவாதிகள்‘என்னும் இயக்கம் உருவாக்கப்பட்டது. இதனை சுருக்கமாக ‘ரெலி’ (T.E.L.E) என்று அழைத்தார்கள்.
மண்டைஓட்டின் சின்னத்தோடு ‘ரெலி’ தனது செயல்பாடுகளை மேற்கொண்டடு வந்தது.
9.9.84 அன்று காரைநகருக்கு அருகேயுள்ள பொன்னாலை பாலத்தில் கண்ணிவெடிகளை புதைத்துக் கொண்டிருநடதனர் ரெலிஇயக்கத்தினர்.
கடற்படையினர் அப்பாலத்தின் வழியாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது வழக்கம். அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கே ‘ரெலி’ இயக்கத்தினர் தயாராகிக் கொண்டிருந்தனர்.
தயாதிப்புக்கள் எல்லாம் பூர்த்தியாகிவிட்டன. இனித்தாக்குதல் நடத்த வேண்டிது தான் பாக்கி ‘ரெலி‘ உறுப்பினர்கள் காத்திருந்தனர்.
அப்போதுதான் அந்தப் பகுதிக்குஇன்னொரு குழுவினரும் வந்து சேர்ந்தனர்.
‘ரெலி’ தலைவரை அக்குழுவினர் வருமாறு அழைத்தனர் அவரும் அவர்களை நோக்கி சென்றார்.
திடீரென்று அக் குழுவில் அருந்த ஒருவர் ‘ரெலி’ தலைவர் ஜெகனை நோக்கி சுட்டார். தொடர்ந்து ரவை மழை.
ஜெகன் அப்படியே சரிந்து விழுந்து உயிர்விட்டார். இதனைக் கண்ட ‘ரெலி’ இயக்கக்தினர் அங்கிருந்து ஓடித் தப்பிவிட்டனர்.
வந்த குழுவினர் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்
ஜெகனைச் சுட்டவர் திலீபன். இவர்தான் பின்னர் புலிகளது யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தவர். இந்திய படைக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து மரித்தவர்.
ஜெகன் கொல்லப்பட்டதை ஏனைய தமிழ் அமைப்புக்கள் கண்டித்தன.
இதனையடுத்து 13.09.84இல் புலிகளால் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது.
“விடுதலைப் போராளிகள் என்று இனம் கண்டு கொள்ள முடியாத நிலையில்தான் அச் சம்பவம் நடைபெற்றது.”
என்று அப் பிரசுரத்தில் புலிகளால் விளக்கம் சொல்லப்பட்டிருந்தது.
அதன் பின்னர் ‘ரெலி’ இயக்கம் சில காலம் இயங்கியதாயினும் பின்னர் செயலிழந்து விட்டது.
மலையக அகதிகள்
மலையகத்தில் நடந்த வன்செயல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மலையக தமிழ் குடும்பங்கள் வவுனியாவில் குடியேறி இருந்தனர்.
வவுனியாவில் நடைபெற்ற இராணுவத்தினரின் தேடுதல் வேட்டைகளில் அங்கிருந்த மலையகத் தமிழர்கள் தொல்லைகளுக்கு உள்ளாயினர்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நெடுங்கேணிப் பகுதியில் ‘டொலர்’ ‘கென்ற்’ என்னும் பண்ணைகளில சிங்கள மக்களை அரசு குடியேற்றியது.
அநுராதபுரத்திலிருந்து அழைத்து வரப்பட்ட குடியேற்றவாசிகளில் பெரும்பாலானவர்கள் பழைய ‘கேடி’கள். சிறையில் இருந்து வந்தவர்கள் அவர்களுக்கு ஆயுதங்களும் வழங்கப்பட்டிருந்தன.
அருகில் இருந்த தமிழ் குடும்பங்கள் இந்த ஆயுதம் தாங்கியவர்களால் மிரட்டல்களுக்கு உள்ளாகினர். மலையகத் தமிழ் குடும்பங்களும் அதில் அடக்கம்.
இயக்கப் பிரசாரங்கள்
1984 இன் இறுதியில் ஒவ்வொரு தமிழ் இயக்கமும் தமது பலத்தை வெளிப்படுத்தும் பிரசாரங்களில் ஈடுபடத்தொடங்கின.
தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தாமே முன்னணி இயக்கம் என்று காட்டுவதும் அதில் ஒரு முறையாகும்.
இதனால் தமது தாக்குதல்களின் போது பலியாகும் படையினரது எண்ணிக்கையை அதிகமாகக் கூறிக் கொண்டிருந்தார்கள். இதற்கு ஒரு சுவாரசியமான உதாரணம் கூறுகிறேன்.
காரைநகர் கடற்படை முகாம்மீது ஈ.பி.ஆர்.எல்.எஃப். 1984இல் தாக்குதல் நடத்தியபோது கடற்படையினர் எவரும் இறந்ததாகவே அரசு கூறவில்லை. சிலர்காயமடைந்தனர்.
ஆனால் ஈ.பி.ஆர்.எல். எஃப். பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கை என்ன கூறியது தெரியுமா?
“150 கடற்படையினர் பலி. கடற்படை முகாம் தரைமட்டம்!”
இதே போல யாழ்தேவி புகைவண்டி மீதான தாக்குதலில் நூற்றி இருபது பேர் வரையிலான இராணுவத்தினரே பலியாகியிருந்தனர்.
200 பேர் பலியானதாக தமிழ்நாட்டில் அறிவித்தது ரெலோ இயக்கம்.
இதேவேளை தமது உறுப்பினர்கள் ஆயுதங்களோடு , சீருடைகளோடும் அணிவகுத்து நிற்கும் புகைப்படங்களை வெளியிடுவதிலும் இயக்கங்களுக்குள் பலத்த போட்டி நிலவியது.
முதலில் தமது உறுப்பினர்களது புகைப்படங்களை வெளியிட்டது புலிகள் இயக்கம்.
இதனையடுத்து ஏனைய இயக்கங்களும் புகைப்படங்களை வெளியிட்டன.
முதல் இடத்திற்கு வந்ததுவிட வேண்டும் என்ற போட்டியில் முக்கிய இயக்கங்கள் களத்தில் குதித்திருந்தமையைக் கோடிட்டுக் காட்டவே இதனைத் தொிவித்தேன்.
தமிழக மக்களிடம் தமது பலத்தை பொிதுபடுத்திக் காட்டுவதில் ஈழப்போராளி அமைப்புக்கள் ஈடுபட்டிருந்தன.
எம்.ஜி.ஆரிடம் பிரபாகரன் சொன்ன கதை…
எம்.ஜி.ஆரும் பிரபாவும்
தமிழக அரசியல் சென்று ஒவ்வொரு இயக்கத் தலைவர்களும் தாமே பெரும் இயக்கம் என்று கூறிக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு இயக்கமும் தம்மை நியாயப்படுத்த மற்றைய இயக்கத்தின் பொட்டுக் கேடுகளை ஒப்புவித்துவிடும். இதனால் ஈழப் போராளி அமைப்புக்கள் அனைத்தினதும் உள் பிரச்சனைகள் தமிழக அரசியல் தலைவர்களுக்கு அத்துப்படியாகி விட்டன.
இதே வேளையில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். புலிகளது தலைவர் பிபாகரன் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
எம்.ஜி.ஆர்.தலமையிலான தமிழக அரசோடு முதலில் நெருக்கமாக இருந்தது புளொட் அமைப்பு.
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் மூலமாகவே அந்த நெருக்கம் ஏற்பட்டது.
எம்.ஜி.ஆரோடு முரண்பட்டுக் கொண்டிருந்த எஸ்.டி.சோமசுந்தரம் தனிக் கட்சி ஆரம்பித்தபோது அந்த நெருக்கம் குறையத் தொடங்கியது.
எம்.ஜி.ஆர். பிரபாகரனை சந்திக்க விரும்பினார் முதல் சந்திப்பிலேயே பிரபாகரனை எம்.ஜி.ஆருக்குப் பிடித்து விட்டது.
அவர் நடித்த படங்களை விரும்பிப் பார்ப்பதாகவும் அந்தப் படங்கள் மூலமாகவும் அநீதிகளை எதிர்க்கும் உணர்வு சிறு வயதில் வளர்ந்தது என்றும் எம்.ஜி.ஆரிடம் கூறினார் பிரபாகரன்.
எம்.ஜி.ஆர். குளிர்ந்து போனார்.கூடவே இன்னொரு திட்டம் அவர் மனதில் விரிந்தது.
(தொடர்ந்து வரும்)
-எழுதுவது அற்புதன்…
…………………………………………………………………………………………………………………………………………………………………………………
பலியான கரும்புலி மீண்ட தெப்படி? கடற்போரில் புலிகளுக்கு ஆச்சரியம்!
மாண்டு போனார் என்று நினைத்தவர் மீண்டு வந்தால்… ஆச்சரியம் அடர்த்தியாகிவிடுமல்லவா?
புலிகளுக்கும் அப்படியொரு ஆச்சரியம் ஏற்பட்டிருக்கிறது.
16.07.95 அன்று கடற்புலிகள் அணியொன்று காங்கேசன்துறை கடற்பரப்புக்கு விரைந்தது. அந்த அணியில் மொத்தம் மூன்று படைப் பிரிவுகள் பங்கேற்றிருந்தன.
அதிகாலை – 1.15 மணியளவில் கடற்பரப்பில் புலிகளுக்கும், கடற்படைக்கும் இடையே மோதல் தொடங்கியது. அதிகாலை 5.30 வரை மோதல் இடம் பெற்றது.
மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கடற்புலிகளது இரு படகுகள் துறை முகப் பகுதிக்குள் ஊடுருவிச் சென்றன. இரு படகுகளிலும் நான்கு கடற்புலிகள் இருந்தனர்.
மேஜர் நியூட்டன், மேஜர் தங்கம் ஆகியோர் சென்ற படகு ‘எடிதாரா’ கட்டளைக் கப்பலில் மோதியது.
தரையிறங்கு கப்பல் ஒன்றை நோக்கி கப்டன் தமிழினி, கப்டன் செவ்வானம் (இருவரும் பெண் கரும்புலிகள்) ஆகியோர் சென்ற படகு முன்னேறியது.
கடற்படையினர் முன்னேறி வந்த கரும்புலிப் படகை நோக்கி தாக்குதல் தொடர்ந்தனர். படகு சிதறியது.
கடர் போர் முடிந்து திரும்பிய புலிகள் தமது தரப்பில் 17 பேர் பலியானதாக அறிவித்தனர் பலியானவர்களில் நான்கு பேர் கரும்புலிகள் என்று அறிவிக்கப்பட்டது.
நான்கு கரும்புலிகளோடு பிரபாகரன் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் யாழ்பாண பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.
17ம் திகதி கப்டன் செவ்வானம் என்னும் பெண் கடற்கரும்புலி கரைக்கு வந்து சேர்ந்தார் . அன்று வெளியாகிய பத்திகைகளில் மாண்டவர் வரிசையில் தனது படமும் வெளியாகியிருப்பதைக் கண்டார்.
18ம் திகதி யாழ்பாணப் பத்திரிகைகளில் கடற்கரும்புலி மீண்டு வந்துள்ள செய்தியை புலிகள் தொிவித்திருந்தனர்.
படகு தாக்குதலுக்கு உள்ளான போது தமிழினி பலியாகி விட்டார். செவ்வானம் கடலில் குதித்து நீரடி நீச்சல் மூலம் தப்பி வந்து விட்டார். அதனால் கடற்படையினரது கண்ணிலும் அவர் சிக்கவில்லை.
கடற்புலிகள் அணியில் உள்ளவர்களுக்கு நீண்ட தூர நீச்சல், நீரடி நீச்சல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நீரடி நீச்சல் உயிரோடு திரும்பக் கைகொடுத்திருக்கிறது.
கடற் புலிகளுக்கும் – கடற்படைக்கும் இடையே நடைப்பெற்ற முதலாவது பொிய போர் 16.07.95 இல் நடந்ததுதான்.
இப் போருக்கு இருகடற்புலித் தளபதிகள் தலைமை தாங்கிச் சென்றனர்.
அதில் ஒருவர் பெண் லெப்டினன்ட் கேணல் மாதவி (தி.திருச்செல்வி – அல்வாய்) இன்னொருவர் லெப்டினன்ட் கேணல் நரேஸ். (சி.நவராஜன் – திருக்கோணமலை) இந்த இரு தளபதிகளும், மேலும் 14 கடற்புலிகளும் (மூவர் கரும்புலிகள்) 16.07.95 கடற் போரில் பலியானார்கள்.

No comments:

Post a Comment