அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை- பகுதி - 25

புலிகளை வெட்டிவிட நினைத்த பாலகுமார்: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-25


இந்தியா தமிழ் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்த பின்னர் ஆயுதங்கள் வழங்க முன்வந்தது. இந்தியா ஆயுதம் தரப்போகும் செய்தி அறிந்துஇயக்கங்களின் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் மகிழ்ச்சி. புலிகளுக்கும் மகிழ்ச்சிதான். மகிழ்ச்சியடையாதவர் பிரபாகரன் ஒருவர் மட்டும்தான். இந்தியா ஆயுதம் தரப்போகிறது என்ற மகிழ்ச்சியில் தமது தலைவரை சந்திக்க சென்ற கிட்டு உட்பட முக்கிய உறுப்பினர்களிடம் பிரபா சொன்னது இது.  “நாங்கள் உடனடியாக வெளியில் இருந்து ஆயுதம் வாங்க வேண்டும்”. கேட்டவர்களுக்கு அதிர்ச்சி, இந்தியா ஆயுதம் தரப்போகிறது. பின்னர் ஏன் வெளியே ஆயுதம் வாங்க வேண்டும்? (தொடர் கட்டுரை)


இந்தியா தமிழ் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்த பின்னர் ஆயுதங்கள் வழங்க முன்வந்தது.
இந்தியா ஆயுதம் தரப்போகும் செய்தி அறிந்துஇயக்கங்களின் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் மகிழ்ச்சி.
புலிகளுக்கும் மகிழ்ச்சிதான். மகிழ்ச்சியடையாதவர் பிரபாகரன் ஒருவர் மட்டும்தான்.
இந்தியா ஆயுதம் தரப்போகிறது என்ற மகிழ்ச்சியில் தமது தலைவரை சந்திக்க சென்ற கிட்டு உட்பட முக்கிய உறுப்பினர்களிடம் பிரபா சொன்னது இது.
ஆயுத உதவியும் பிரபாவின் அவதானமும்:
ஆயுத உதவி:
“நாங்கள் உடனடியாக வெளியில் இருந்து ஆயுதம் வாங்க வேண்டும்”.
கேட்டவர்களுக்கு அதிர்ச்சி, இந்தியா ஆயுதம் தரப்போகிறது. பின்னர் ஏன் வெளியே ஆயுதம் வாங்க வேண்டும்?
அவர்களின் மனதில், ஓடிய எண்ணங்களைப் புரிந்துகொண்ட பிரபாகரன் சொன்னது இது.
“இந்தியா ஆயுதம் தருகிறது என்றால் எம்மை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதமாகவே ஆயுதம் தரும். நாம் எமது சொந்தக் காலில் நிற்க வேண்டுமானால் சொந்தமாகவும் ஆயுதங்கள் தேடிக்கொள்ள வேண்டும்”.
சொன்னது மட்டுஅல்ல திட்டமிட்ட அதற்கான வாய்ப்புக்களையும் உருவாக்கினார் பிரபாகரன்.
புலிகள் தவிர புளொட் அமைப்பினரும் வெளியே ஆயுதம் வாங்க முற்பட்டனர்.
ஆயுதப் பறிப்பு:
1984இல் புளொட் அமைப்பினரின் ஆயுதங்கள் கப்பல் ஒன்றில் சென்னைத் துறைமுகத்திற்கு வந்தன.
இந்திய சுங்கப் பகுதியினால் அந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களது பெறுமதி 4 கோடி என்று புளொட் அப்போது கூறியிருந்தது.
தனது கையை விட்டு போராளிகள் அமைப்புக்கள் செல்வதை இந்தியா விரும்பவில்லை.
சொந்தமாக ஆயுதங்கள் பெரும் போராளிகள் அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்தமைக்கு அதுதான் காரணம்.
புளொட் அமைப்புக்கும் இந்தியா ஆயுதம் வழங்கியது.
அதே சமயம் புளொட் தானாகவே சொந்தமாக வாங்கிவந்த ஆயுதங்களை அதே இந்தியா பறித்து வைத்துக்கொண்டது.
இந்திய சுங்கப் பகுதியினரின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு புலிகள் வெளிநாடுகளில் உள்ள ஆயுத வியாபாரிகளிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
ரொலோவும் வெளியில் இருந்து ஆயுதங்களை வங்க முயற்சி எடுத்த போதும் குறிப்பிடத்தக்க அளவில் சாத்தியமாகவில்லை.
ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ் தலைமைகளுக்கு வெளியில் இருந்து ஆயுதம் வாங்குவது ஒரு நல்ல கனவாக மட்டுமே இருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆட்சேர்ப்பில் காட்டிய தீவிரத்தை ஆயுத சேகரிப்பில் காட்டவில்லை.
ஈரோஸ் ஆட்சேர்ப்பில் சில வரையறைகளோடு நின்று கொண்டது.
பின்வந்த காலங்களில் ஈரோஸ்ன் பெயர் கெட்டுவிடாமல் இருந்தமைக்கு அதுவும் ஒரு காரணம், உள்ளவற்றில் பரவாயில்லை என்று அதனை மக்கள் கருதியமை 1988 பொதுத் தேர்தலில் வடக்கு – கிழக்கில் ஈரோஸ் நிறுத்திய சுயேட்சைக் குழுக்கள் வெற்றிபெறவும் ஒரு காரணமாக அமைந்தது.
முகாம் தகர்ப்பு:
1984இல் திருகோணமலையில் கிண்ணியா வங்கி ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பால் கொள்ளையிடப்பட்டது. சுபத்திரன் தலைமையில் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.
1984இல் பெப்ரவரியில் யாழ்ப்பாணத்தில் குருநகர் இராணுவ முகாம் கட்டிடங்கள் புலிகளால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டன. குருநகரில் நிலைக்கொண்டிருந்த இராணுவத்தினர் அந்த முகாமை விட்டு வெளியேறினார்கள்.
மீண்டும் இராணுவம் அங்கு வந்து முகாம் அமைப்பதை தடுப்பதற்காகவே புலிகள் கட்டிடங்களை குண்டு வைத்து தகர்த்தனர்.
சமூக விரோதிகள் ஒழிப்பு:
வடக்கில் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாக வடிவங்களும் சீர்குலைந்தன.
திருடர்களும், குற்றவாளிகளும், தீயசக்திகளும் இந்த நிலையைத் தமக்கு சாதகமாக்கிக் கொள்ள முற்பட்டனர். இயக்கங்களின் பெயர்களையும் பயன்படுத்திக் கொண்டனர்.
அப்போதெல்லாம் மக்களுக்கு இயக்கங்களின் பெயர்கள்தான் அறிமுகம்.
இயக்கங்களின் இருந்த உறுப்பினர்களை மக்களுக்கு தெறியாது. இரகசியமாக இயங்கிய கால கட்டம் அது.
“நானும் இயக்கம்தான்” என்று ‘சட்டைக் கொலரைத்’ தூக்கி விட்டபடி திரிந்தவர்களை அப்போதெல்லாம் காணவே முடியாது.
பல அம்மக்களுக்குக் கூட தமது பிள்ளைகள் இயக்கத்தில் இருந்தது தெரியாத காலம் அது.
ஆகவே இயக்கப் பெயர்களைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் சில இடங்களில் தமது கைவரிசைகளைக் காட்டினார்கள்.
சமூக விரோதிகள் என்று இனம் காணப்பட்ட சிலரைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
வரவேற்பு:
சமூக விரோதிகள் அழித்தொழிப்பு தொடர்பாக 1984 மார்ச் மாதத்தில் புலிகளால் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது.
சமூக விரோதிகள் தம்மால் அழித்தொழிக்கப்படுவார்கள் என்று புலிகள் அப்பிரசுரத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்த நடவடிக்கைக்கு மக்களிடம் வரவேற்புக் கிடைத்தது. இயக்கங்கள் குறித்தும் மக்களிடையே இருந்த நல் அபிப்பிராயம் மேலும் வளர்ந்தது.
ஆயுதப் போராட்டம் காரணமாகவே வடக்கில் பொலிஸ் நிர்வாகம் செயல் இழந்தது.
அதனைப் பயன்படுத்தி வளர முற்பட்ட சமூக விரோதிகளை களைய வேண்டிய பொறுப்பு ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கு இருந்தது.
தத்துவம், மனிதாபிமானம் என்ற பெயரில் சில இயக்கங்கள் அதனைச் செய்ய தவறிவிட்டன.
மக்கள் விரோதிகளிடம் மனிதாபிமானம் காட்டுவதென்றால் ஆயுதம் ஏந்தியதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.
இதனை உணராதபோதுதான் சில இயக்கங்களுக்குள் கூட மக்கள் விரோத சக்திகள் புகலிடம் பெற்றுக்கொண்டன. அந்த இயக்கங்கள் மதிப்பிழக்கும் சுழலும் ஏற்பட்டது.
ரொலோவின் வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
முழங்காலுக்கு மேலே உயர்த்திக் கட்டிய சரமும், சடைமுடியும், கழுத்தில் தொங்கும் கருப்பு நூலும், காதில் கடுக்கனும் ரொலோவின் அடையாளமாக மாறியது.
போர்குணம் வேறு, சண்டித்தனம் வேறு. சண்டியர்கள் மக்களை மதிப்பதில்லை, மக்கள் அவர்களிடம் பயந்தாலும் சண்டியர்கள் வீழ்ச்சியடையும் பொது மக்கள் மகிழவே செய்வர்.
மக்கள் விரோதிகள் விடயத்தில் புலிகள் வெளியே மட்டும் அல்ல, இயக்கத்தின் உள்ளேயும் கண்டிப்பான போக்கையே கையாண்டனர்.
கோண்டாவில் தாக்குதல்:
1984 மார்ச் 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட பஸ் ஒன்று கோண்டாவிலை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த பஸ்ஸில் விமானப் படையைச் சேர்ந்த இருவர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்த விடயம் புலிகளுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது.
கோண்டாவிலில் வைத்து இரு விமானப்படை வீரர்களும் புலிப் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
(1) ரோகன் ஜெயசேகரா
(2) சரத் அனுரசிறி
ஆகியோரே 1984 மார்ச் 20இல் புலிகளால் கொல்லப்பட்ட விமானப்படை வீரர்கள்.
மார்ச் 25:
இலங்கையில் தேசிய பாதுகாப்பு அமைச்சராக அத்துலத் முதலியை நியமித்தார் ஜே.ஆர்.
பாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் யாழ்ப்பாணத்தில் உயர்மட்டபாதுகாப்பு மாநாடு நடத்த ஏற்பாடுகளைச் செய்தார் அத்துலத்முதலி.
ஏற்பாடுகள் நடந்தன. மாநாட்டுக்கு தலைமை தங்குவதற்காக யாழ்ப்பாணத்தில் வந்திறங்கினார் அத்துலத்முதலி.
அவர் வந்து இறங்கிய அரைமணி நேரத்திற்குள் ஒரு செய்தி அவர் செவிக்கு வந்தது.
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த அதிரடிப் பிரிவினர் ரோந்து சென்றனர்.
ரோந்து சென்றவர்கள் மீது புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
ஒரு சார்ஜன்டும், இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
ஒற்றுமை முயற்சி:
பிரதானமான தமிழ் விடுதலை இயக்கங்களை ஒன்றுபடுத்தும் முயற்சி ஒன்று 84இல் மீண்டும் ஆரம்பமானது.
பத்மநாபா, டக்லஸ் தேவானந்தா ஆகியோர் தமிழ்நாட்டில் சென்னையில் ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒற்றுமை முயற்சியின் முதற்கட்டமாக ரொலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்தன.
‘ஈழத்தேசிய விடுதலை முன்னணி’ (ஈ.என்.எல்.எஃப்) என்று மூன்று இயக்கங்களும் ஐக்கிய கூட்டமைப்புக்கு பெயரிடப்பட்டது.
இந்தக் கூட்டமைப்போடு ‘புளொட்’ அமைப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஈரோஸ் விரும்பியது.
ஈரோஸ் சார்பாக அதில் முன்னணியில் நின்றவர் வே.பாலகுமார்.
‘புளொட்’ அமைப்பினருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பிற்கும் இடையே அப்போது பிரச்சனை நிலவியது.
மட்டக்களப்பு சிறை உடைப்பை அடுத்து ஏற்பட்டபிரச்சனை அது.
பத்மநாபா கசப்பை மறந்துவிட்டு ‘புளொட்’ அமைப்பைக் கூட்டமைப்புக்குள் கொண்டு வர தயாராகவே இருந்தார்.
சுரேஸ் பிரேமச்சந்திரன், ரமேஷ் போன்றவர்கள் அதனை விரும்பவில்லை. புளொட் அமைப்பினர் தமது உறுப்பினர்கள் மீது தாக்குதலை நிறுத்த வேண்டும். நிறுத்தினால்தான் கூட்டமைப்பிற்கு புளொட் வரமுடியும் என்று நிலைப்பாட்டை அவர்கள் மேற்கொண்டனர்.
அப்போது கூட்டமைப்புக்கு ரமேஷ் செயலாளராக இருந்தார்.
பாலகுமாரின் விருப்பம்:
‘புளொட்’ அமைப்பை பேச்சுக்கு அழைக்குமாறு வே.பாலகுமார் ரமேஷிடம் பலமுறை வற்புறுத்திக் கொண்டிருந்தார்.
ரொலோ தலைவர் சிறிசபாரத்தினத்தை தனியே சந்தித்த வே.பாலகுமார் “கூட்டமைப்பில் புலிகள் சேர்ந்தால் கூட்டமைப்பே அவர்களுடையதாக மாறிவிடும், எனவே புளொட்டை கொண்டுவருவோம்” என்று யோசனை தெரிவித்தார்.
ஆனால், பாலகுமார் இப்படி தமக்காக வாதாடுவது புளொட் தலைவர் உமாமகஸ்வரனுக்குத் தெரியாது.
கூட்டமைப்பின் அலுவலகம் கோடம்பாக்கத்தில் இருந்தது. சென்னையில் ஏனைய இயக்கங்களுக்கு அலுவலகங்கள் இருந்தன.
ஈரோஸ்க்கு மட்டும் அலுவலகம் கிடையாது.
அதனால் கூட்டமைப்பு அலுவலகத்தில் வந்து நாள் முழுவதும் குந்திவிடுவார் பாலகுமார்.
ஒருநாள் உமாமகஸ்வரனும் வேறு சிலரும் கூட்டமைப்பு அலுவலகத்திற்குச் சென்றனர்.
பாலகுமார் தான் அப்போது அங்கு இருந்தார். பாலகுமாரோடு காரசாரமான வாக்கு வாதத்தில் ஈடுப்பட்ட உமாமகேஸ்வரன் அங்கிருந்த மேசையில் ஓங்கிக் குத்தினார்.
“ஈரோஸ் ஒரு ‘லெட்டர் கெட்’ இயக்கம்” என்று பாலகுமாரைப் பார்த்து கேலி செய்துவிட்டும் சென்றுவிட்டார் உமாமகேஸ்வரன்.
இதன் பின்னர் புளொட் அமைப்பை கூட்டமைப்பில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சைக் குறைத்துக் கொண்டார் பாலகுமார்.
புலிகள் மறுப்பு:
கூட்டமைப்பில் சேராமல் வெளியே நின்று புரிந்துணர்வோடு செயற்பட விரும்புவதாகப் புலிகள் கூறிக் கொண்டிருந்தனர்.
புலிகள் தாமதித்துக் கொண்டிருந்த போது தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கூட்டமைப்பில் சேர விருப்பம் தெரிவித்திருந்தனர்.
கூட்டணியும் வருவதால் புளொட் அமைப்பையும் அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ், ரொலோ, புளொட்,கூட்டணி ஆகிய அமைப்புக்களதுபிரதிநிதிகள் சென்னையில் கூடிப் பேசினார்கள்.
கூட்டணி சார்பில் அமிர் -சிவ \சிதம்பரம், வி.பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புலிகள் வராவிட்டால் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்காமல் கூட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவாக்கலாம் என்று புளொட் கூறியது. கூட்டணியும் அதனை ஆதரித்தது.
மீண்டும் ஒரு முறை புலிகளிடம் முடிவை கேட்டுவிட்டு மேற்கொண்டு பேசித் தீர்மானிக்கலாம் என்றளவில் அந்தக் கூட்டம் முடிவுற்றது.
சுழிபுரம் படுகொலைகள்:
யாழ்ப்பாணத்தில் சுழிபுரம் என்னும் இடத்தில் புலிகள் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.
சித்திரவதை செய்யப்பட்டே அவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இக் கொலைகளை புளொட் அமைப்பினரே செய்தனர் என்று சம்பவத்தை நேரில் கண்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அப்போது சென்னையில் இருந்து ‘ஈழச் செய்தி’ என்னும் மாத பத்திரிகை ஒன்றை ஈ.பி.ஆர்.எல்.எஃப் வெளியிட்டு வந்தது.
‘ஈழச் செய்தி’ ஆசிரியராக இருந்தவர் ரமேஷ்.
சுழிபுரம் படுகொலையைக் கண்டித்து ‘ஈழச் செய்தி’ காரசாரமாக விமர்சித்தது.
இதனையடுத்து புலிகள் அமைப்புக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டது.
‘ஈழச் செய்தி’ பத்திரிக்கையை புலிகள் தாமும் வாங்கி விநியோகித்தனர்.
கூட்டமைப்புக்கும் வருவதற்கு தாம் தயாராக இருபதாக புலிகள் சார்பில் இராசநாயகத்தால் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பிற்கு தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment