அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை- பகுதி -13

புலிகள் அமைப்பில் தீவிரமாக இயங்கியவர் ஊர்மிளா. ஊர்மிளாதேவி பற்றி இலங்கையின் இரகசியப் பொலிசாருக்குத் தெரிந்துவிட்uma.mடது. அவர்கள் தேடத் தொடங்கினார்கள். ஊர்மிளாதேவியை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். தமிழ்நாட்டில் புலிகளின் அலுவலகம் ஒன்று இருந்தது .ஊர்மிளாதேவியிடம் அந்த அலுவலகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஊர்மிளாவுக்கும் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களுக்குமிடையே முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின. (தொடர் கட்டுரை)

புலிகள் அமைப்பில் தீவிரமாக இயங்கியவர் ஊர்மிளா.
ஊர்மிளாதேவி பற்றி இலங்கையின் இரகசியப் பொலிசாருக்குத் தெரிந்துவிட்uma.mடது. அவர்கள் தேடத் தொடங்கினார்கள். ஊர்மிளாதேவியை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்.
தமிழ்நாட்டில் புலிகளின் அலுவலகம் ஒன்று இருந்தது .ஊர்மிளாதேவியிடம் அந்த அலுவலகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
ஊர்மிளாவுக்கும் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களுக்குமிடையே முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின.
இதேநேரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் போக்கு குறித்து புலிகளுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் ஏற்படத் தொடங்கின.
பிரபாகரன் கூட்டணியினரின் வேகம் போதாது என்று நினைத்தபோதும் அமுதர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிடவில்லை.
தமிழ்நாட்டில் இருந்த உமா மகேஸ்வரன் மற்றும் புலிகளது முக்கியஸ்தர்கள் பிரசுரங்கள் அச்சிட்டு யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் அனுப்பினார்கள்.
அந்தப் பிரசுரங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரை குறை கூறும் வாசகங்களைக் கொண்டிருந்தன.
தமக்கு எதிரான பிரசுரங்கள் வந்திறங்கியுள்ள விசயம் அமுதரின் காதுக்கு எட்டியது.
பிரபாவை அழைத்துப் பேசினார் அமுதர்.துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படாமல் எரிக்கப்பட்டன.
ஊர்மிளா விவகாரம்
இதே நேரம் பிரபாகரனால் உமா மகேஸ்வரன் மீது ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
இயக்க உறுப்பினர்கள் காதலிக்கக்கூடாது என்ற விதியை உமா மீறிவிட்டார்.
உமாவும் ஊர்மிளாவும் காதலிக்கின்றனர்.இது இயக்க விரோதம் என்று குற்றம் சாட்டினார் பிரபா.
‘காதலிப்பது தவறு’என்ற வாதத்தை உமா ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த முரண்பாடு பெரிதாகியபோது உமா மகேஸ்வரன் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினார்.
உமா மகேஸ்வரனுக்கு மரணதண்டனை விதிப்பதாக பிரபாகரன் அறிவித்தார்.
தண்டனையை நிறைவேற்ற உமா மகேஸ்வரனை தேடித் திரிந்தார் பிரபாகரன்.
கூட்டணியால் முரண்பாடு
உமா மகேஸ்வரன் வெளியேறிய பின்னரும் புலிகளுக்குள் முரண்பாடுகள் இருந்தன.
பிரபாகரனின் கூட்டணி சார்பான போக்கை புலிகளுக்குள் ஒரு சாரார் விரும்பவில்லை.
1980ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நீர்வேலியிலும் காரைநகரிலும் புலிகள் இயக்கத்தினரின் மாநாடு ஒன்று நடைபெற்றது.
போராளிகளைத் தேடி யாழ்.குடாநாட்டில் படையினர் சல்லடை போட்டுத் தேடித் திரிந்தபோது 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடினார்கள்.
அந்த மாநாட்டில் புலிகளுக்குள் இருந்த கருத்து முரண்பாடுகள் வெடித்தன
பிரபாகரனின் அமிர் ஆதரவு நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டன.
பிரபாகரனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் புலிகளுக்குள் இரு பிரிவுகள் உருவாகின. 19பேர் பிரபாகரனுக்கு ஆதரவாகவும் 13 பேர் எதிராகவும் நின்றனர்.ஏனையோர் ஒதுங்கிக் கொண்டனர்.
சுந்தரம், செல்லக்கிளி, நாகராசா,ஐயர் போன்றோர் அந்தக் காலகட்டத்தில் விலகியவர்களில் முக்கியமானவர்கள்.
இதில் சுந்தரத்திடம் தான் இயக்கத்தின் ஒரு பகுதி ஆயுதங்கள் இருந்தன.
மக்கள் மத்தியில் அரசியல் வேலைகளில் ஈடுபடவேண்டும் என்ற கருத்துக் கொண்டிருந்தார் சுந்தரம்.
சுந்தரம் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று கேட்டார் பிரபாகரன்.
இதேவேளை சுந்தரம் குழுவினரும் தம்மை தமிழீழ விடுதலைப் புலிகள் என்றே அழைத்துக் கொண்டனர்.
புலிகள் இயக்கத்திலிருந்து பிரபாகரனுடன் முரண்பட்டு வெளியேறிய உமா மகேஸ்வரனையும் சுந்தரத்தையும் சந்திக்க வைக்க ஒரு முயற்சி நடந்தது.
இந்த முயற்சியில் முன்னணியில் இருந்தவர் சந்ததியார்.
1980ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுந்தரம் குழுவினரோடு உமாமகேஸ்வரன் சேர்ந்து கொண்டார்.
பிரபாவின் முடிவு
இதேவேளையில் பிரபாகரன் அணியினர் மத்திய செயற்குழு ஒன்றை உருவாக்கினார்கள்.அதில் ஏழு பேர் இருந்தனர்.
பிரபாகரன்,கலாபதி,கடாபி,அன்ரன்,சாந்தன்,சீலன்,ராகவன் ஆகியோரே அந்த ஏழு பேர்.
சுந்தரம் குழுவினரும் உமாமகேஸ்வரனும் இணைந்து கொண்டதையடுத்து பிரபாகரன் ஒரு முடிவுக்கு வந்தார்.
குட்டிமணி, தங்கத்துரை குழுவினருடன் இணைந்து செயற்படலாம் என்பதுதான் பிரபாகரன்,  செய்த முடிவு.
இதனை ராகவன், கடாபி, கலாபதி ஆகியோர் விரும்பவில்லை.
சாந்தன் இயக்கத்தை விட்டு ஒதுங்கிச் சென்றார். இதனால் புலிகளது செயற்குழு 3-3 என்று இரு அணியாக நின்றது.
குட்டிமணி, தங்கத்துரை குழுவினரோடு பிரபாகரன் அணியினர் இணைந்து கொண்டனர்.
இரு அணியினரும் இணைந்து நிதிசேர்க்கும் நடவடிக்கையில் குதித்தனர்.
யாழ்ப்பாணத்தில் குரும்பசிட்டி என்னுமிடத்தில் பிரபலமான நகை அடைவு பிடிக்கும் கடை ஒன்று இருந்தது.
அதன் உரிமையாளர் வன்னியசிங்கம்.அந்த நகைஅடைவு கடை குறிவைக்கப்பட்டது.
இயக்கம் என்றால் அரச வங்கிகளில் தான் கொள்ளை நடத்துவார்கள். தனியாரிடம் கொள்ளையிடமாட்டார்கள் என்று அப்போதெல்லாம் பொதுமக்கள் நம்பியிருந்தனர்.
மக்கள் எதிர்ப்பு
இதனால் நகை அடைவு கடையில் கொள்ளை நடந்தபோது அதனை மக்கள் இயக்க நடவடிக்கை என்று நினைக்கவில்லை.
தனிப்பட்ட கொள்ளையர்கள் என்று நினைத்த மக்கள் உண்மை அறிந்ததும் பிரபாகரன், குட்டிமணி, தங்கத்துரை,ஸ்ரீசபாரத்தினம் ஆகியோரை நோக்கி கற்களை வீசினார்கள். தாக்குவதற்கு முற்பட்டார்கள்.
கல்லுகள்,பொல்லுகள், கத்திகள், கம்புகள் சகிதம் ஊரவர் திரண்டதைக் கண்ட குட்டிமணி வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்.
கூட்டம் கலையமறுத்து முன்னேறியது. கூட்டத்தை நோக்கி துப்பாக்கி திரும்பியது. அதில் சிலர் காயமடைந்தனர். ஒருவர் கொல்லப்பட்டதாகவும் நினைவிருக்கின்றது.
‘குரும்பசிட்டியில் துணிகரக் கொள்ளை’, ‘கொள்ளையர் வெறியாட்டம்’
1981 இல் நடைபெற்ற அக்கொள்ளை பற்றி பத்திரிகைகள் அவ்வாறு தான் செய்திகள் வெளியிட்டன.
பொலிசார் இயக்கங்கள் மீது சந்தேகம் எழுப்பியபோதும் அதனை மக்கள் நம்ப மறுத்தனர்.
தனியாரிடம் அதுவும் ஒரு தமிழரிடம் இயக்கக்காரர் கொள்ளையிடமாட்டார்கள் என்று நம்பப்பட்டதே அதற்கான காரணமாகும்.
‘தமிழ் புதிய புலிகள்’(TNT) என்ற பெயரில் இயங்கி பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.
தமிழ் புதிய புலிகள் என்ற பெயரில் இயங்கியபோது அதன் தலைவர் போல செயற்பட்டவர் செட்டி என்றழைக்கப்படும் தனபாலசிங்கம்.
இவர் பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுப்பவராக மாறினார்.
1981ஆம் ஆண்டு கல்வியங்காட்டில் செங்குந்தா வீதியிலுள்ள செட்டியின் வீட்டுக்கு குட்டிமணியுடன் சென்றார் பிரபாகரன்.
செட்டியை சுட்டுக் கொன்றார் குட்டிமணி.
பிரபாகரன் அணியினர் குட்டிமணி- தங்கத்துரை குழுவினரோடு இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளை கடாபி, ராகுலன் போன்றோர் விரும்பவில்லை.
யாழ்.பல்கலைக்கழகத்திரல் படித்துக் கொண்டிருந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த ரி.சிவகுமாரன் ‘உணர்வு’ என்னும் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தார்.
பிரபாகரன் அணியினரது நடவடிக்கைகளை மறைமுகமாக அப்பத்திரிகை விமர்சித்தது.
பொலிஸ் நிலையத் தாக்குதல்
இதே நேரத்தில் உமா-சுந்தரம் குழுவினர் யாழ்ப்பாணத்திலுள்ள ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் மீது குறிவைத்தார்கள்.
1981 ஆம் ஆண்டு ஜுலையில் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்தனர் உமா-சுந்தரம் குழுவினர்.
பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் ஒன்று நடத்தக்கூடும் என்பதையே அப்போது நினைத்துப் பார்க்காத நேரம்.
பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கியே தீருவது என்று அரச படையினர் கங்கணம் கட்டியிருந்தனர்.
ஆனால் போராளிகள் அரச படைகளின் கோட்டைகளுக்குள்ளேயே தேடி வருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெற்ற திட்டமிட்ட தாக்குதலில் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையம் போராளிகளின் கைக்கு வந்தது.
அங்கிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றிக் கொண்டு வெற்றிகரமாக தப்பிச் சென்றனர் உமா- சுந்தரம் குழுவினர்.
முதன் முதலில் தமிழ் போராளிகளால் நடத்தப்பட்ட பொலிஸ் நிலையத் தாக்குதல் அது தான்.
அரசாங்கம் திகைத்துப் போனது. பொலிஸ் நிலைய பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டன.
புதிய பாதை
பேராhளிகளது வளர்ச்சியை அரசாங்கம் கவலையோடு கவனித்தது.
கூட்டணித் தலைமையும் உமா-சுந்தரம் குழுவினரது வளர்ச்சியை அதிருப்தியோடு நோக்கியது.
அதற்குக் காரணம் இல்லாமலில்லை. ; ‘புதிய பாதை’ கடுமையாகச் சாடியது.
‘புதிய பாதை’ பத்திரிகையை நடத்தியதால் உமா-சுந்தரம் குழுவினர் ; ‘புதிய பாதை’ குழுவினர் என்று அழைக்கப்பட்டனர்.
உமா-சுந்தரம் குழுவினர் மக்கள் மத்தியில் வேலை செய்வதன் ஒரு கட்டமாக புனர்வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
கே.சி.நித்தியானந்தா
1947ஆம் ஆண்டு இலங்கையில் அரச ஊழியர் வேலைநிறுத்தம் ஒன்று நடைபெற்றது. அந்த வேலை நிறுத்த இயக்கத்தில் முக்கிய பாத்திரம் வகித்தவர் கே.சி.நித்தியானந்தா.
இவர் (GCSU) தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர். வேலைநிறுத்தம் காரணமாக வேலை இழந்த கே.சி.நித்தியானந்தா ஆயுதப் போராட்ட அமைப்புக்களோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்.
இவரது உதவியோடு நெடுங்கேணிப் பகுதியில் சில புனர்வாழ்வு நடவடிக்கைகளில் உமா மகேஸ்வரன் ஈடுபட்டிருந்தார்.
கே.சி.நித்தியானந்தாவின் பெறாமகன் தான் ஈபிடிபி செயலாளர் நாயகமாக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.J.R
கே.சி.நித்தியானந்தா ஈரோஸ் அமைப்போடும் தொடர்பு கொண்டிருந்தார்.
இதனால் உமா-சுந்தரம் குழுவினர் பின்னர் ‘காந்தீயம்’என்னும் அமைப்போடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
கட்டிடக் கலைஞரான டேவிட் என்பவரது தலைமையில் இயங்கிய ‘காந்தீயம்’அமைப்பின் ஊடாக உமா-சுந்தரம் குழுவினர் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
1983ஆம் ஆண்டு ஜுலையில் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட டாக்டர் ராஜசுந்தரம் ‘காந்தீயம்’அமைப்பின் அமைப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுதப் போராட்ட அமைப்புக்கு காந்தியின் பெயரிலான நிறுவனமே ஒரு கவசமாகச் செயற்பட்டது ஆச்சரியமல்லவா? ஆனால் அது காலத்தின் கட்டாயம்.
இராணுவம் மீது தாக்குதல்
1981ஆம் ஆண்டு அக்டோபர் பிரிகேடியர் வீரதுங்காவுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு கொடுத்தார் ஜே.ஆர்.
இலங்கையின் இராணுவத் தளபதியாகவும் வீரதுங்கா நியமிக்கப்பட்டார்.
வடக்கில் வன்முறைகளையும் அரசபயங்கரவாதத்தையும் வீரதுங்காக கட்டவிழ்த்துவிட்டார் அதனை கௌரவிக்கவே அவருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது என்று கண்டனம் எழுந்தது.
பொலிசாரால் ஆயுதம் ஏந்திய போராளிகளை சமாளிக்கமுடியாது. இராணுவத்தினரால் போராளிகளால் எதிர்க்கமுடியாது என்று நினைத்தது அரசு.
அதனால் யாழ்ப்பாணத்தில் இராணுவ ரோந்துகள் அதிகரிக்கப்பட்டன. முக்கிய சந்திகளில் இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இரண்டு இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கையில் துப்பாக்கி இருந்தபோதும் தம்மைத் தாக்கும் துணிச்சல் யாருக்கும் வராது என்ற நம்பிக்கையில் விழிப்பாக இருக்கத் தவறினர். சைக்கிளில் வந்து இறங்கினார்கள் சில இளைஞர்கள். இராணுவ வீரர் ஒருவரது அருகில் வந்தார் ஒரு இளைஞர். இராணுவ வீரர் என்ன நடக்கப்போகிறது என்று ஊகிப்பதற்கு இடையில் அந்த இளைஞர் கைத்துப்பாக்கியை உருவினார்.
தோட்டா பறந்தது. அதேசமயம் இன்னொரு இராணுவ வீரரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
இரண்டு இராணுவத்தினரும் உயிரிழந்தனர். அவர்களது ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சைக்கிளில் தப்பிச் சென்றனர் இளைஞர்கள்
1981ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது அந்தத் தாக்குதல்.
இலங்கை இராணுவத்திற்கெதிராக முதன் முதலில் தமிழ்ப் போராளிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதல் அது தான்.


ஆதற்குத் தலைமை தாங்கியவரர் சீலன் என்றழைக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி.
இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர்
குட்டிமணி –தங்கத்துரை குழுவோடு பிரபாகரன் அணியினர் இணைந்திருந்தபோதே இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
சாள்ஸ் அன்ரனி பிரபாகரன் அணியைச் சேர்ந்தவர். அதனால் அத்தாக்குதல் நடவடிக்கையை புலிகள் தம்மால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பட்டியலில் குறித்து வைத்துள்ளனர்.
வீரதுங்காவுக்கு பதவியுயர்வு கொடுக்கப்பட்டதைக் கண்டித்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட அபிவிருத்தி சபை
ஆயுதப் போராட்டம் காட்டில் பற்றிய தீயாக வளர்ந்து வருவதை அவதானித்தார் ஜே.ஆர்.ஜயவர்த்தனா.
தமிழர் விடுதலைக் கூட்டணியினரை அழைத்துப் பேசினார் ஜே.ஆர்.
“மாவட்ட அபிவிருத்தி சபை தருகின்றேன். ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்.
தமிழீழ தேசிய மன்றத்தைக் கூட்டுவதற்கு 77 தேர்தலில் மக்களது ஆணை கேட்டவர்கள் கூட்டணியினர்.
1981இல் ஜே.ஆர்.கொடுத்த மாவட்ட அபிவிருத்தி சபையோடு மக்களிடம் வந்தார்கள்.
“கிடைப்பதை பெற்றுக் கொண்டு தொடர்ந்து போராடுவோம். தமிழீழத்தை கைவிடவில்லை “என்றனர் கூட்டணியினர். கொதித்துப் போனார்கள் இளைஞர்கள்.
“கேட்டது தமிழீழம் கிடைத்தது மாவட்டம்”
“பிடிப்பது ஆலவட்டம் பெற்றுக்கொண்டது மாவட்டம்” என்றெல்லாம் சுவர்களில் சுலோகம் எழுதினார்கள் இளைஞர்கள்.
“தம்பிமார் இரத்தத்துடிப்பில் பேசுகிறார்கள், இராஜந்திரம் புரியவில்லை”என்றார்கள் கூட்டணித் தலைவர்கள்.
உமா-சுந்தரம் குழுவினர் ஒரு திட்டம் தீட்டினார்கள். ஒரு விபரீதத்திற்கு வித்திட்ட திட்டம் அது.

No comments:

Post a Comment