அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 116

பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் இருப்பதாகவும் தகவல்!! இந்தியப் படையினர் முற்றுகை!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-116)


•தமிழகத்தில் கொந்தளிப்பு
•சென்னையில் திரண்ட மக்கள் வெள்ளம்!
• போர் நிறுத்தம்
இந்தியப் படையோடு போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா மூன்று நிபந்தனைகள் விதித்திருந்தார் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?
மாத்தையா நிபந்தனைகளை அறிவித்த பின்னர் ஈரோஸ் இயக்கத் தலைவர் வே. பாலகுமாரும் இந்திய அமைதிப்படைத் தலைவர் திபீந்தர் சிங்கும் சந்தித்தனர்.
பலாலி விமானத் தளத்துக்கு வெளியே ஒரு பாழடைந்த கட்டிடத்தில் அச்சந்திப்பு நடைபெற்றது.


போர் நிறுத்தம் தொடர்பான புலிகளின் நிலைப்பாட்டையும், அதற்கான காரணத்தையும் நாடிபிடித்தறியவே பாலகுமாரை சந்தித்தார் திபீந்தர் சிங்.
ஈரோஸ் இயக்கமும், அதன் தலைவர் வே. பாலகுமாரும் புலிகளுடன் நெருக்கமாக இருந்த காலகட்டம் அது.
தனியான இயக்கங்களாக அப்போது இருந்த போதும் புலிகளின் விருப்பு வெறுப்பு அறிந்து அதற்கேற்பவே ஈரோஸ் செயற்பட்டது.
ஆயினும் தனியான சந்திப்புக்களின் போது காதும் காதும் வைத்தமாதிரி புலிகள் தொடர்பான அதிருப்திகளை வெளியிடவும் ஈரோஸ் தலைவர்கள் தயங்கியதும் கிடையாது.
திபீந்தர் சிங்குடனான சந்திப்பிலும் பாலகுமார் தன்னிடம் சில தகவல்கள் கூறியதாக திபீந்தர் சிங்கே தெரிவித்திருக்கிறார்.
பொதுமக்கள் புலிகளிடம் இருந்து விலகிச் செல்லத் தொடங்கிவிட்டனர் என்பதை அமைதிப்படையின் யாழ்ப்பாணத்தளபதி மற்றும் வே.பாலகுமார் ஆகியோரின் தகவல்கள் மூலம் தன்னால் அறிந்து கொள்ள முடிந்தது என்கிறார் திபீந்தர் சிங்.
போர் நிறுத்தம் தொடர்பான தமது நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்த புலிகள் தயாராக உள்ளனர் என்றும் பாலகுமாரன் தெரிவித்தார்.
போர் நிறுத்த விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை என்று பாலகுமாரிடம் தெரிவித்தார் திபீந்தர் சிங்.
புலிகளின் மூன்று நிபந்தனைகளையும், அந்த நிபந்தனைகளில் தளர்வு செய்ய புலிகள் தயாராக இருப்பதாகவும் டில்லிக்குத் தகவல் அனுப்பினார் திபீந்தர் சிங்.
திபீந்தர் சிங் அனுப்பிய தகவலைப்படித்துவிட்டு டில்லியில் இருந்து பதில் அனுப்பப்பட்டது.
“புலிகள் நெருக்கடிக்குள் சிக்கி உள்ளனர். அதனால்தான் போர் நிறுத்தம் செய்ய முன்வந்துள்ளனர். போர் நிறுத்தம் அவசியமில்லை. புலிகள் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கவும்.” என்று உத்தரவு பறந்து வந்தது.
இந்திய வெளிநாட்டமைச்சும், ‘றோ’உளவுப்பிரிவும் புலிகளை மேலும் நெருக்குதலுக்கு உள்ளாக வேண்டும். என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தன.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் டில்லிக்கு அனுப்பிய செய்தியிலும் “புலிகள் பலவீனமடைந்துள்ளனர். சரிந்துவிழும் கட்டத்தை நெருங்கிவிட்டனர்.” என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசியல் தீர்வு

இந்தியப்படைத் தளபதி திபீந்தர் சிங் தனது அபிப்பிராயத்தை டில்லியில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அனுப்பிவைத்தார்.
திபீந்தர்சிங் தெரிவித்த அபிப்பிராயம் இதுதான்: “யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து காடுகளுக்குள் பின்வாங்கிச் சென்ற புலிகள் சிறு சிறு குழுக்களாக நடவடிக்கைகளில் ஈடுபத் தொடங்கியுள்ளனர்.
இத்தகைய தாக்குதல்களை இராணுவ நடவடிக்கைகளை மட்டும் வைத்து அடக்கிவிடமுடியாது. இதற்கு அரசியல் தீர்வுதான் சரியானது.
புலிகளை படிப்படியாக அரசியல் தீர்வுக்கு உடன்படச் செய்யும் வகையில் தான் அவர்கள் மீது இராணுவ அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.
மக்களின் நம்பிக்கையைப் பெறும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும். அவ்வாறு செய்தால் மக்கள் மத்தியில் புலிகள் மீண்டும் செல்வாக்குப் பெற முடியாது.
ஆனால் இதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும்” என்று அபிப்பிராயம் தெரிவித்திருந்தார் திபீந்தர்.
திபீந்தர் அனுப்பிய அபிப்பிராயத்தைப் படித்துவிட்டு தூக்கிப்போட்டு விட்டது இராணுவத் தலைமையகம். அவருக்கு பதிலே அனுப்பவில்லை.
யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது இந்தியப் படை.
பிரிகேடியர் ஆர்.ஐ.எஸ்.காலன் என்பவர் யாழ் நகர பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
உணவு விநியோகம், மருந்து விநியோகம் என்பவை ஆரம்பிக்கப்பட்டன.
இந்தியாவில் இருந்து உணவுப்பொருட்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்குக் கிரமமாகக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன.
காங்கேசன்துறையிலிருந்து உணவுப்பொருட்களை யாழ்ப்பாண நகருக்குள் கொண்டுசென்று சேர்ப்பதுதான் சிரமமாக இருந்தது.
இந்தியப் படை வாகனங்கள்தான் உணவு கொண்டுசெல்லப் பயன்படுத்தப்பட்டன. இந்தியப் படை வாகனங்களைக் கண்டதும் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
அதன் பின் செஞ்சிலுவைச் சங்கம் உணவு விநியோகத்தில் உதவ முன்வந்தது. தனியார் வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
மெல்ல மெல்ல ரயில் போக்குவரத்தும், வீதிப் போக்குவரத்தும் ஆரம்பமாகின.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் வரை கடுமையாகவும், கொலைப்பசியுடனும் நடந்துகொண்ட இந்தியப் படை பின்னர் தனது முகத்தை மாற்றிக் கொள்ள முயன்றது.
எப்பொழுதும் மக்களுள் ஒருசாரார் இருப்பார்கள். யார் பக்கம் பலம் இருக்கிறது என்று பார்த்து அந்தப் பக்கம் சாய்ந்துவிடுவார்கள்.
புலிகள் இருந்தவரை அவர்களின் ஆதரவாளர்களாக காட்டிக் கொண்ட சிலர், இந்தியப் படை முகாம்களுக்குள் பலகாரங்கள் செய்து கொண்டுபோய்க் கொடுத்தார்கள்.
புலிகளின் மறைவிடங்கள், ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்ட இடங்கள் போன்ற தகவல்கள் இந்தியப் படையினருக்குக் கிடைக்கத் தொடங்கியிருந்தன.
யாழ்;ப்பாணத்தில் பல இடங்களில் பெருந்தொகையான ஆயுதங்களும், கைக்குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
ஏமாற்றம்
புலிகளிடம் தொலைத்தொடர்பு சாதனங்கள் தாராளமாக இருந்தன. அதனால் தொடர்புவிட்டுப் போன புலிகள் இயக்க அணிகளுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது தலைமைப் பீடம்.
புலிகளின் தொலைத் தொடர்பு சாதன வளர்ச்சிகண்டு இந்தியப் படை அதிகாரிகளே பிரமித்தனர்.
புலிகளின் உள் விவகாரங்கள், மற்றும் புலிகளின் இரகசியத்திட்டங்களை அறிவதற்காக புலிகளின் தொலைத் தொடர்பு சாதனங்களை ஒட்டுக் கேட்க ஆரம்பித்தனர்.
புலிகளின் தொலைத்தொடர்பு சாதனத்தை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த இந்தியப் படையினருக்கு ஒரு தகவல் கிடைத்தது.
பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் மூளாயில் ஒரு வீட்டில் இருப்பதாகவும், அங்கு சென்று தலைவரைச் சந்திக்குமாறும் தமது ஒரு பிரிவினருக்கு புலிகள் தகவல் கொடுத்தனர்.
அந்த வீட்டுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்றும் புலிகள் விளக்கியிருந்தனர்.
அது ஒரு அபூர்வமான தகவல். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி கிடைத்த தகவல் அல்லவா?
டாங்கிகள், ஹெலிகள் சகிதமாக விரைந்தது இந்தியப் படை. குறிப்பிட்ட வீடு முற்றுகையிடப்பட்டது.
பிரபாகரனது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் கைதுசெய்ய வேண்டும் என்பதுதான் மேலிடத்து உத்தரவு.
வீடு முற்றுகையிடப்பட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தனர் படையினர்.
அங்கே-வீட்டின் உள்ளே..
யாருமே இருக்கவில்லை.
ஏமாற்றத்துடன் திரும்பினர் இந்தியப் படையினர்.
தமது தொலைத்தொடர்பு சாதனங்களை இந்தியப் படையினர் ஒட்டுக் கேட்கிறார்கள் என்பது புலிகளுக்குத் தெரியும்.
இந்தியப் படையினரை அலையவைத்து ஏமாற்றுவதற்காக புலிகள் பரிமாறிக்கொண்ட பொய்யான தகவல் அது.
அவ்வாறு பல தடவைகள் இந்தியப் படையினர் ஏமாற்றப்பட்டனர்.

தமிழகத்தில் கொந்தளிப்பு
இந்தியப் படையினருக்கும், புலிகளுக்கும் இங்கே கடும் போர் மூண்டபோதும், தமிழ்நாட்டில் புலிகள் இயக்க அலுவலகம் இயங்கிவந்தது.
சென்னை அடையாறு இந்திரா நகரில் இருந்த புலிகள் இயக்க அலுவலகத்தில் கிட்டு, பேபி சுப்பிரமணியம் ஆகியோர் இருந்தனர். அலுவலகத்திற்கு காஸ்ரோ பொறுப்பாக இருந்தார்.
இந்தியப் படை – புலிகள் மோதல் ஆரம்பித்த பின்னர் சென்னையில் இருந்து பல பிரசுரங்களை வெளியிட்டனர் புலிகள்.
“இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏன் எதிர்க்கிறோம்?” என்பதற்கான விளக்கத்தை வெளியிட்டுவந்தனர்.
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். புலிகளின் நடவடிக்கைகளைக் கண்டும் காணாமல் நடந்துகொண்டார். அதுமட்டுமல்லாமல் புலிகளுக்கான நிதி உதவியும் எம்.ஜி.ஆரால் தொடர்ந்து செய்யப்பட்டது.
ஆனால் கலைஞர் கருணாநிதியோ எம்.ஜி.ஆரை இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவராகச் சித்தரிக்கவே விரும்பினார்.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் உருவாக எம்.ஜி.ஆரும் ஒரு காரணம். இந்தியப் படையால் ஈழத்தமிழர்கள் கொல்லப்படவும் எம்.ஜி.ஆர்தான் காரணம் என்று தமிழக மக்களை நம்பவைக்க முற்பட்டார் கருணாநிதி.
தமிழகமெங்கும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அக்டோபர் 15ம் திகதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தியது தி.மு.க. கலைஞர் கருணாநிதிதான் அதற்குத் தலைமை தாங்கினார்.
“எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி. அதனால் தான் இலங்கையில் தமிழர்கள் வேட்டையாடப்படுவதையிட்டுக் கவலையில்லாமல் இருக்கிறார்” என்பதுதான் தி.மு.க தொண்டர்களின் குற்றச்சாட்டு.
1987 அக்டோபர் 15ம் திகதி ‘த வீக்’ பத்திரிகைக்கு கருணாநிதி ஒரு பேட்டியளித்திருந்தார்.
கலைஞர் கருணாநிதியின் இன்றையப் பேச்சுக்களோடு அன்றைய நிலைப்பாட்டை ஒப்பிட்டுப் பார்க்கவும் இப்பேட்டி நமக்கு உதவும்.
வாக்கெடுப்பு ஏன்?
கலைஞர் கருணாநிதியின் ‘த வீக்’ சஞ்சிகைக்கான பேட்டியிலிருந்து சில பகுதிகள்.
கே: சிறீலங்கா நிலமை பற்றி என்ன கூறுகிறீர்கள்?
ப: இந்தியா இப்போது மிகக் கொடூரமாகவும், இரக்கமற்ற முறையிலும் நடந்து கொள்ளுகிறது. தமிழ் மக்களைப் பாதுகப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட அமைதிப்படை இப்பொழுது தமிழர்களை வதைத்து அழிக்கிறது. இந்தியா பெரும் தவறு இழைக்கிறது. இது மாபெரும் குற்றமாகும் என்று பலர் கூறுகிறார்கள்.
கே: இத்தகைய பிரச்சனைகளுக்கெல்லாம் யார் காரணம் என்று கருதுகிறீர்கள்?
ப: போதுமான அனுபவமற்ற ராஜீவைத்தான் குற்றம்சாட்டுவேன். ஜயவர்த்தனா தனது நலத்துக்காக அவரைப் பயன்படுத்திவிட்டார்.
இந்த ஒப்பந்தம் உரிய முறையில் அமைக்கப்படவில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பது தொடர்பாக ராஜீவ் ஏன் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டார்? ஈழம் தமிழர்களுக்குச் சொந்தமானது. அம்மக்களை அபிப்பிராய வாக்கெடுப்புக்குள் ஏன் உட்படுத்த வேண்டும்?
கே: இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தாங்கள் தரும் ஆலோசனை என்ன?
ப: இப்பொழுது உடனடியாக, நீண்டகாலத் தீர்வு பற்றி எனக்கு அக்கறையில்லை. IPKF தமிழர்களைக் கொல்வதைத் தடுக்க வேண்டும்.
பிரபாகரன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறார்.
ஆகவே அவருடன் பேசட்டும். புலிகளை IPKF முடிவுகட்டிவிட்டால் அது ஒரு பெரிய சாதனையாகாது. இந்தியத் துருப்புக்கள் தங்களுடைய வலிமையைக் காட்ட வேண்டுமானால் சீனாவிடமிருந்து எமது பிரதேசத்தை திரும்ப மீட்கட்டுமே?
கே: ஆனால் எல்.ரீ.ரீ.ஈ.யினர் ஒப்பந்தத்துக்கு ஒத்துழைப்புத் தருகிறார்களில்லையே?
ப: ஒப்பந்தத்தை மீறியவர் யார்? ஜயவர்த்தனாவா? அல்லது பிரபாகரனா? தமிழ் பிரதேசங்களில் இனிமேல் குடியேற்றம் இடம்பெறலாகாது என்கிறது ஒப்பந்தம்.
கிழக்கில் பெருந்தொகையான சிங்களக் குடியேற்றம் நடைபெறுவது தொடர்பாக ஒரு பட்டியலே என்னிடம் இருக்கிறது.
எல்.ரீ.ரீ.ஈ.யினர் கைது செய்யப்பட்டமை, ஒப்பந்தம் மீறப்பட்டதற்கு மற்றுமொரு சான்று. அவர்கள் IPKF யிடம் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது பலாலியில் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பிரபா தொடர்பு
ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் தொடர்பு கொண்டு வந்திருக்கிறார். கொழும்பு ஒப்பந்தத்தை மீறுகிறது என்று பிரபாகரன் குற்றம் சாட்டி வந்திருக்கிறார்.
எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே அவருடைய தளபதி திலீபன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
திலீபன் இறக்கும்வரை இந்திய அரசாங்கமோ சிறிலங்கா அரசாங்கமோ எதுவுமே செய்யவில்லை. தமிழர்களின் வலுவான கிளர்ச்சியின் பின்னரே இடைக்கால நிர்வாகத்துக்கு புலிகளுக்கு 7 அங்கத்தவர் தர ஒப்புதலளித்தனர்.
அப்போது இந்தியத் தூதர் (J.N.திக் ஷித்) பிரபாகரனிடம், அவருடைய சிபாரிசின்படியே பிரதம நிர்வாகி நியமிக்கப்படுவார் என்று கூறினார். ஆனால், புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கே: முன்பு எல்.ரி.ரி.ஈ. தங்களுடைய உதவியை ஏற்க மறுத்தனர். பின்னர் ஏன் தங்களை நாடினர்?
ப: அவர்கள் ஒரு நெருக்கடியிலிருந்தனர். அதனால் என்னிடம் வந்தனர். என்னைப் பொறுத்தவரை, அவர்கள் என்னிடம் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, தமிழ்ப் போராளிகளுக்கு எனது ஒத்துழைப்பு இருந்து வந்திருக்கிறது.
இரு வருடங்களுக்கு முன்னர் தி.மு.க. பொதுமக்களிடம் சேகரித்த பணத்தில் ஒரு பகுதியை எல்.ரி.ரி.ஈ. ஏற்க மறுத்துவிட்டது.
ஏனெனில் தமிழ்நாடு அரசு சேகரித்த 3 கோடி ரூபாவை – எமது பணத்தை ஏற்றுக்கொண்டால் – தரப்போவதில்லை என்று எச்சரித்தது. அது எனக்குத் தெரிந்தமையால் நான் அதனைப் பொருட்படுத்தவில்லை.
கே: தமிழ் நாட்டில் 1966-67ல் இந்திய எதிர்ப்புப் போராட்டம் காங்கிரஸ் வீழ்ச்சிக்குக் காரணமானது. சிறிலங்கா பிரச்சனையின் காரணமாக அ.இ.அ.தி.ம.கவும் அதே கதியை அடையுமா?
ப: அது என்னுடைய நோக்கமல்ல… எமது போராட்டங்கள் ஒப்பந்தத்துக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்படவில்லை.
பிரபாகரனே ஒப்பந்தத்தை ஏற்று நடப்பதற்கு சிலகாலம் ஒப்புதல் அளித்திருந்தமையினால் நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.
ஆனால் இப்போது-தமிழர்கள் துன்பப்படும் போது அதனைப் பார்த்துக் கொண்டு எங்களால் சும்மா இருக்க முடியாது. அ.இ.அ.தி.ம.க. தனது தவறுகளாலேயே பதவியை இழந்துவிடும்.
இதுதான் கலைஞர் கருணாநிதி அளித்த பேட்டி. புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தன்னுடனும் தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை பெருமையுடன் கூறுவதில் கலைஞர் எத்தனை ஆர்வம் காட்டியிருக்கிறார் பார்த்தீர்களா?
மீண்டும் யாழ்ப்பாண நிலவரத்துக்குச் செல்லுவோம்

No comments:

Post a Comment