அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 114

யாழ் நகரில்.. ”வீடுகளுக்குள் சென்று கதவை மூடிவிட்டு பெண்களை கற்பழித்த இந்திய கூர்க்காப்படையினர்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 114)


நல்லூர் கந்தசாமி கோவில் முகாமுக்குள் பிரபாகரன் இருப்பதாக இலங்கை அரசு தனது வானொலி மூலம் அறிவித்தது.
நல்லூர் கந்தசாமி கோவில் அகதி முகாமுக்குள் இந்தியப் படை புகுந்து தேடுதல் நடத்தினாலோ அல்லது அங்கிருந்து மக்களைத் தாக்கினாலோ இலங்கை அரசுக்கு அது மகிழ்ச்சியான செய்திதான்.

இந்தியப் படை-புலிகள் மோதல் ஆரம்பித்த பின்னர் இந்தியப் படையினர் மேற்கொண்ட ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் இலங்கை அரசுக்கு திருப்தியளித்தன.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தைத்தான் ஜே.ஆர். எதிர்பார்த்திருந்தார். தனது இராஜதந்திரம் பலிக்கத் தொடங்கிவிட்டதென்பதை அறிந்தபோது ஜே.ஆர். மனம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்.
என்ன நடந்தாலும் சரி, இங்குதான் இருப்பது, இந்தியப் படை வந்தால் அவர்களிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்வது என்று நினைத்துக் கொண்டு பெரும்பாலான அகதிகள் நல்லூர் கந்தசாமி கோவிலுக்குள்ளேயே அடைந்து கிடந்தனர்.
புலிகளுக்கு வேண்டுகோள்
1987 அக்டோபர் 28ல் இந்தியப் படையினர் நல்லூர் பகுதிக்குள் புகுந்தனர்.
நல்லூரில் வைத்து அவர்கள் மீது பாரிய தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. ஆயினும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் ரொக்கட் லோஞ்சர்களுடன் நல்லூர் அருகே ஒன்று திரண்டனர்.
அவர்களைக் கண்டதும் அகதிகள் பயந்து போனார்கள். நல்லூர் கோவில் பகுதியில் இருந்து அவர்கள் இந்தியப் படைமீது தாக்கினால் தங்கள் கதி என்னவாகும் என்று நினைத்து பீதியடைந்தனர்.
பெண்களும், தாய்மாரும் முகாமிலிருந்த முதியவர்களும் கோவில் வீதியில் நின்ற புலிகள் இயக்க உறுப்பினர்களிடம் சென்று மன்றாடினார்கள்.
“தயவு செய்து இவ்விடத்தை விட்டுப் போய் விடுங்கள்” என்று கெஞ்சினார்கள்.
முகாமிலிருந்த சிலர் புலிகள் மீது ஆத்திரப்பட்டுக் கதைக்கவும் செய்தனர்.

“நீங்கள் எதற்காக சண்டை செய்கிறீர்கள்? அவர்களை எங்களால் எதிர்த்துப் போரிட முடியுமா? வீணாக சண்டைபிடித்து நீங்களும் அழிந்து எங்களையும் அழிக்காதீர்கள். இந்த இடத்தை விட்டுப் போங்கோ” என்று சத்தம் போட்டனர்.
அவர்களின் பேச்சைக் கேட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு கோபம் வந்துவிட்டது.
“இங்கிருந்துதான் தாக்க வேண்டும் என்று மேலிருந்து உத்தரவு வந்தால் தாக்குவோம். நாங்கள் உங்களுக்காக சண்டை செய்கிறோம். நீங்கள் உங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறீர்கள்” என்று சொல்லிவிட்டு அங்கேயே நின்று விட்டனர்.
வேறுசில அகதிகள் அவர்களைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தனர். தங்களிடம் இருந்த உணவில் ஒரு பகுதியை அவர்களுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.
புலிகள் இயக்க உறுப்பினர்களும் கடும் பசியுடன்தான் இருந்தனர்.
முகாம்களை விட்டு வெளியேறி அலைந்து திரிந்த களைப்பு ஒருபுறம், மக்கள் தம் வீடுகளை விட்டு வெளியேறியதால் எங்கு சென்று உணவு பெற முடியாமலும் அவர்கள் பசியுடன்தான் திரிந்தனர்.
அகதிகள் கொடுத்த உணவையும், மற்றும் பிஸ்கட் போன்றவற்றையும் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் இருந்து பார்த்துவிட்டு புலிகள் இயக்க உறுப்பினர்கள் சென்று விட்டனர்.
அவர்கள் அவ்விடத்தை விட்டு சென்ற பின்னர்தான் அகதிகள் பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.
யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன் சங்கிலியனின் தலைநகரம் நல்லூர்.
நல்லூரைக் கைப்பற்றப் புகுந்த இந்தியப் படைக்கு கல்வியங்காட்டுச் சந்தியில் மட்டும் புலிகள் எதிர்ப்பைக் காட்டினார்கள். பின்னர் பாரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமலேயே நல்லூர் பகுதியை கைப்பற்றிக் கொண்டது இந்தியப் படை.
புலிகள் பாரிய எதிர்ப்பைக் காட்டாவிட்டாலும் இந்தியப் படையினர் வீதிகளிலும் வீடுகளிலும் கண்ணில் பட்டவர்களைச் சுட்டுக்கொன்றுதான் சென்றனர்.
குறுக்குப் பாதைகள் வழியாக முன்னேறிய இந்தியப் படையினர் அப்பகுதிகளில் காணப்பட்ட சில பொதுமக்களை பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டனர்.
பாதையைக் காட்டுமாறு அவர்களை முன்னால் நடக்கச் சொல்வார்கள். அப்படிச் சென்று கொண்டிருக்கும் போது புலிகள் தாக்கினால் முன்னால் சென்று கொண்டிருப்பவரின் கதி அதோகதிதான்.
புலிகள் தாக்காத சந்தர்ப்பங்களிலும் பாதை காட்டிச் சென்ற பொதுமக்கள் சிலரை இந்தியப் படையினர் சுட்டுவிட்டுப் போனார்கள். தமக்குப் பாதை காட்டியவர்களுக்கு படை காட்டிய நன்றி அதுதான் (?!)
கூர்க்காப்படை
யாழ் நகரைக் கைப்பற்றிய இந்தியப் படைப்பிரிவில் அதிகமாக இருந்தவர்கள் கூர்க்காப்படையினர். சப்பை மூக்கு, குள்ளமாக இருப்பார்கள்.
எல்லோரும் கத்தி வைத்திருப்பார்கள். மீசை வைத்திருக்க மாட்டார்கள்.
மிக மோசமானவர்கள் என்று யாழ்ப்பாணத்தில் பின்னர் பெயர் எடுத்தவர்களும் கூர்க்காப்படையினர்தான்.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பாக கொழும்புத்துறை மணியம் தோட்டப் பகுதிக்குள் இந்தியப் படையினரால் ஆறு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
பெண்கள் இருக்கும் வீடுகளுக்குள் சென்று கதவை மூடிக் கொள்வார்கள். சோதனை என்ற பெயரில் உடைகளைக் களையச் சொல்வார்கள். மறுத்தால் அடி உதை, மிரட்டல்.
தாயின் முன்னிலையில் மகள். சில இடங்களில் தாய், மகள் இருவருமே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமைகளும் நடைபெற்றன.
சிலர் வெட்கத்தில் வெளியே சொல்லவில்லை.
பாலியல் வல்லுறவை கற்பழிப்பு என்று அழைக்கும் பழமையான வார்த்தை காரணமாக, தமக்கு நடக்கும் கோரங்களை வெளியே சொல்லப் பெண்கள் தயங்கினார்கள்.
ஏனெனில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண் ‘கற்பிழந்த ஒருத்தியாக தான் கருதப்படுவேனோ’ என்று பயந்து போகிறாள்.
அதனால்தான் இந்தியப் படைக்கால பாலியல் வல்லுறவு பலாத்கார சம்பவங்கள் பல வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டன.
கூர்க்காப் படையினர் குள்ளமாக இருகப்பார்கள் என்று சொன்னேன் அல்லவா, கூர்க்காப்ப படையினர் யாழ்ப்பாணம் வந்த பின்னர் சற்றுக் குள்ளமாக இருப்போரை ‘கூர்க்காஸ்’ என்று கிண்டலாக அழைக்கும் பழக்கமும் யாழ்ப்பாணத்தில் பரவலாகியிருந்தது.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சூட்டோடு சூடாக கூர்க்காப் படையினர் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்.
பெண்களைக் கண்டால் சேட்டைகள் செய்வதும் அதிகமாக இருந்தது. பின்னர் அந்த மூர்க்கம் சற்றுக் குறைந்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் முக்கியமான சந்திகளில் உள்ள வீடுகளில் இந்தியப் படையினர் முகாம்களை அமைத்திருந்தனர். கிட்டத்தட்ட இரண்டு கிலோமீற்றருக்கு ஒரு இராணுவ முகாம் என்ற ரீதியில் முகாம்கள் அமைக்கப்பட்டன.
முகாம் ஒன்று புலிகளால் தாக்கப்பட்டால், அப்பகுதியை சுற்றி வளைக்கக்கூடிய முறையில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு முகாம்களுக்கு இடையிலும் அடிக்கடி ரோந்து செல்வது இந்தியப் படையினரின் வழக்கமாக இருந்தது. எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளைத் தோளில் சுமந்தபடி முகாம்களுக்கிடையே கால நடையாகவே ரோந்தில் ஈடுபடுவர்.
‘அன்புவழி’ : வானொலியில் ‘அன்பு வழி’ வீதிகளில் மனித வேட்டை
இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்திற்கு வந்த பின்னர் அவர்களுக்காகவும், யாழ்ப்பாண மக்களுக்காகவும் இந்திய வானொலியில் வி்ஷேச ஒலிபரப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
அதில் ஒரு நிகழ்ச்சியின் பெயர் ‘அன்புவழி’. மதியம் 1.30 மணியளவில் அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.
‘அன்புவழி’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்திய இந்திய அரசு, தனது படையினரை அன்புவழியில் செல்லுமாறு போதிக்கத் தவறிவிட்டது.
இலங்கையில் அமைதி திரும்பும் வரை இந்தியப் படை திரும்பமாட்டாது என்று வானொலியில் அடிக்கடி சொல்லப்பட்டது.
புலிகள் இயக்க உறுப்பினர்கள் சணடைந்தால் மன்னிப்பு வழங்கப்படும் என்றும் வானொலியில் அறிவிக்கப்பட்டது.
அகதி முகாமுக்குள் புலிகள் இயக்கத்தினர் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் இந்தியப் படையினருக்கு இருந்தது.
‘அகதிகள் யார் புலிகள் யார்?’ என்று கண்டறிவதுதான் கடினம் என்பதை படை அதிகாரிகள் உணர்ந்தனர். அதனால் அகதி முகாம்களுக்குள் தமக்குத் தகவல் கொடுப்போரை உருவாக்கத் திட்டமிட்டனர்.
கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாம் மீது நடைபெற்ற ஷெல் தாக்குதல்கள், அதனால் பலியானவர்கள் பற்றி முன்னர் விபரிக்கப்பட்டுவிட்டது.
(கோடு போட்ட சட்டையுடன் கையில் வோக்கியுடன் நிற்பவர்தான் நிரஞ்சன். இவர்தான் தற்போது கனடாவில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். கொக்குவில் மோதலில் எடுக்கப்பட்ட படம் இது.)
அந்த முகாமில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் இது:
முகாம் பொறுப்பாளர்களில் ஒருவர் ஆனந்த் பாலகிட்ணர் மெலிந்த உடல்வாகு கொண்டவர். ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்.
முகாம் தேவைகள் தொடர்பாக இந்தியப் படை அதிகாரிகளுடன் பேசச் செல்பவர்களில் ஆனந்த பாலகிட்ணரும் ஒருவர்.
கொக்குவில் இந்துக் கல்லூரி முகாமுக்குள் புலிகள் இருப்பதாக படையினர் சொல்லிக் கொண்டிருந்தனர்.
முகாமுக்குள் டாக்டர், எஞ்சினியர், ஆசிரியர்கள் என்று பலர் இருந்தனர். அவர்கள் அனைவரையும் கூட்டிச் சென்று இந்தியப் படை அதிகாரிக்கு அறிமுகம் செய்தால் ஒரு கௌரவமாக இருக்கும்.
கௌரவமானவர்கள் தங்கியிருக்கும் முகாம் என்று கருதி இந்தியப் படையினரின் சந்தேகப் பார்வைகள், தொல்லைகள் என்பவற்றில் இருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தார் ஆனந்த் பாலகிட்ணர்.
“இவர் டாக்டர்! இவர் எஞ்சினியர், இவர் ஹெட் மாஸ்டர்” என்று ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்யப்பட்டனர்.
அறிமுகம் செய்து முடிந்ததும் அந்த இந்தியப் படை அதிகாரி ஆனந்த் பாலகிட்ணரிடம் கேட்ட கேள்வி இது.
“இவர்கள் எல்லோரும் டாக்டர்கள், எஞ்சினியர்கள் என்றால் நான் என்ன முட்டாள் விசரன் பைத்தியக்காரன் அல்லது முட்டாள் என்றோ நினைக்கிறீர்?”
ஆனந்த் பாலகிட்ணருக்கு பதில் சொல்ல நா எழவில்லை.
“சுட்டுவிடுவேன்”
பாலகிட்ணர் பத்திரிகையாளர் என்று தெரிந்ததும் அடுத்த கேள்வியை வீசினார் அந்த அதிகாரி.
“நீர் ஒரு பத்திரிகையாளர். புலிகள் எங்கே இருக்கிறார்கள் என்று உமக்குத் தெரியும். அந்தத் தகவலை எங்களுக்குத் தாரும். உங்களுக்கு நான் உதவுகிறேன்.”
“நான் ஒரு பத்திரிகையாளன் தான் ஆனால் புலிகளைப் பற்றிய செய்திகளை எழுதுவதால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதல்லாம் எனக்குத் தெரியும் என்று நினைக்க வேண்டாம்” என்றார் பத்திரிகையாளர்.
அதிகாரிக்கு வந்தது கோபம். தன் முன்பாக நின்ற அந்த மெல்லிய உருவத்தைப் பார்த்தார். “ஏய் பன்றி, உன்னைச் சுட்டுக் கொல்ல என்னால் முடியும்.
ஒரு தோட்டாவை உனக்காக வீணாக்க விரும்பவில்லை!” என்று சீறினார் அந்த அதிகாரி.
“சாதாரண படை வீரர்கள் மட்டுமல்ல, படை அதிகாரிகள் பலர்கூட யாருக்கும் மதிப்பளிக்காமல் அதிகாரத் தோரணையோடும், திமிரோடும் நடந்து கொண்டனர் என்பதற்கு மேற்கண்ட சம்பவமும் ஒரு சிறு உதாரணம்.
ஏனெனில் கீழ்மட்ட படைவீரர்கள் மட்டுமே கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொண்டனர். இந்தியப் படை அதிகாரிகள் எல்லோரும் நல்லவர்கள் என்று ஒரு அபிப்பிராயம் பொது மக்கள் சிலரிடம் இருந்தது.
பொது மக்களுடன் சுமுகமாகவும், நட்பாகவும் நடந்துகொண்ட அதிகாரிகளும் படைவீரர்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் விதிவிலக்குகள் என்றே சொல்ல வேண்டும்.”
இந்தியப் படைக்குள் இருந்த தமிழ் பேசும் படையினர், குறிப்பாக தமிழ் நாட்டுக்காரர்கள் அனுதாபத்தோடு நடந்து கொண்டனர்.
அதனால் அவர்கள் புலிகளுக்கு உதவக் கூடும் என்ற சந்தேகத்தில் மேலதிகாரிகளால் நோக்கப்பட்டனர். குறைந்த அளவிலேயே பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திக் ஷித் உடன் பிரபாகரன்
திக் ஷித் உடன் சந்திப்பு
உரும்பிராயில் இந்தியப் படையின் வேட்டையில் இருந்து தப்பிய சிவப்பிரகாசம் என்பவர் தொடர்பாக முன்னர் குறிப்பிடப்பட்டது அல்லவா.
சிவப்பிரகாசம் உரும்பிராயில் இருந்து சாவகச்சேரிக்கு தப்பி ஓடி அங்கிருந்து ஒரு வாகனத்தில் கேரதீவுக்குச் சென்றார். பின்னர் ஒரு வள்ளம் மூலமாக சங்குப்பிட்டிக்குச் சென்றார்.
சிவப்பிரகாசத்தின் கெட்ட நேரம், சங்குப்பிட்டியிலும் இந்தியப் படை ஹெலிமூலம் குண்டுத்தாக்குதல் நடத்தியது. ஒரு கொங்கிறீட் கட்டிடத்தின் கீழ் மறைந்து கொண்டார்.
ஒரு லொறியில் இருந்த டீசல், மண்ணெண்ணை பீப்பாய்கள் ஹெலி தாக்குதலில் பற்றி எரிவதை சிவப்பிரகாசம் கண்டார்.
எப்படியோ உயிர்தப்பி கொழும்பு வந்து சேர்ந்தார் சிவப்பிரகாசம். இந்தியப் படையிடம் இருந்து தப்பிய ஒருவர் கொழும்பு வந்து சேர்ந்தார் என்ற தகவல் ஒரு நிருபருக்கு எட்டியது.
அந்த நிருபர் வேறு யாருமல்ல, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்தவரும், ‘சண்டே ரைம்ஸ்’, நிருவராகவும் இருந்த ரிச்சட் டீ சொய்ஸாதான் அவர்.
பின்னர் இனம் தெரியாதோரால் கொல்லப்பட்டவரும் அவர்தான். (பிரேமதாசாவின் உத்தரவுப்படி ரிச்சட் டீ சொய்ஸா கொல்லப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது)
ரிச்சட் டீ சொய்ஸா சிவப்பிரகாசத்தை பேட்டி கண்டு, நவம்பர் முதலாம் திகதி (1987) சன்டே ரைம்ஸ் பத்திரிகையில் வெளியிட்டார்.
தனது சொந்தப் பெயரை வெளியிட வேண்டாமென்று சிவப்பிரகாசம் கேட்டுக் கொண்டதால், வேறு பெயரில் அவரது பயங்கர அனுபவம் வெளியிடப்பட்டது.
இந்தியப் படையின் நடவடிக்கையை வெளியே தெரிவிக்க அப்பேட்டியும் உதவியது.
சிவப்பிரகாசமும், மேலும் எட்டுப் பேரும் சேர்ந்து இந்தியத் தூதர் திக் ஷித்தைச் சந்திக்க அனுமதி கேட்டனர். அனுமதி கிடைத்தது.
நவம்பர் 2ம் திகதி இந்தியத்தூதரை அவர்கள் சென்று சந்தித்தனர். காலம் சென்ற நீதியரசர் மாணிக்கவாசகர், சட்டத்தரணி காராளசிங்கம் ஆகியோரும் அக்குழுவில் இருந்தனர்.
அனைவரையும் புன்னகையோடு வரவேற்றார் திக் ஷித்.
உரும்பிராயில் நடைபெற்ற படுகொலைகள், அழிவுகள், அனர்த்தங்கள், சங்குப்பிட்டியில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் விபரித்து ஆங்கிலத்தில் ‘டைப்’ செய்து திக் ஷித்திடம் கையளித்தார் சிவப்பிரகாசம்.
சிவப்பிரகாசத்தின் முகவரியைப் பார்த்தார் திக் ஷித்.
உடனே திக் ஷித் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் இவை:
“ஓ… ம்பிராயா? அது அல்லவா?”
‘ஏன் ஓடினார்கள்?’
பின்னர் சிவப்பிரகாசத்தின் கடிதத்தில் விபரிக்கப்பட்டிருந்த சம்பவங்களைப் படித்துப் பார்த்தார் திக் ஷித்.
நாலு பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு காட்டிய திக் ஷித் கேட்டது இது: “இந்தப் பெண்கள் ஏன் ஓடினார்கள்? இவர்கள் வீட்டில் இளம் பையன்கள் இருந்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம். ஓடியதால்தான் சூடு நடந்திருக்கலாம்” என்றார் திக் ஷித்.
அப்போது குறுக்கிட்ட சிவப்பிரகாசம் : “பலியானவர்களில் 93 வயது மூதாட்டியும், 65 வயது விதவையும் அடக்கம். அவர்கள் ஓடவில்லை. வீட்டுக்குள் புகுந்துதான் சுட்டனர்” என்று விளக்கினார்.
ஆனாலும் திக் ஷித் அதையெல்லாம் பெரிய விஷியமாக எடுத்துக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
“விரைவில் போர் நிறுத்தம் வரும்.” என்று சொன்னார். “விசாரித்துப் பார்க்கிறேன்” என்றார்.
அப்பாவி மக்கள் படுகொலை தொடர்பாக இந்தித் தூதராக இருந்த திக் ஷித் கூட எந்தளவுக்கு அனுதாபம் கொண்டிருந்தார் என்பது மேற்படி சந்திப்பில் ஓரளவு ஊகிக்கக்கூடியதாக இருக்கிறதல்லவா.
புலிகள் நடமாட்டம்
புலிகள் இயக்க முக்கிய தலைவர்கள் யாழ் குடாநாட்டைவிட்டு பாதுகாப்பான வன்னிக் காட்டுப்பகுதிக்குள் பின்வாங்கிச் சென்றிருந்தனர்.
யாழ் குடாநாட்டைவிட்டு புலிகள் தலைவர்களையும், முக்கிய படையணிகளையும் வெளியேறவிடாமல் தடுக்க இந்தியப் படையினர் முயன்றனர்.
ஆயினும் பிரபாகரன் உட்பட புலிகள் இயக்க முக்கிய பிரமுகர்களும், படையணிகளும் தப்பிச் செல்வதை இந்தியப் படையினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
கடல் வழியாக தப்பிச் செல்லலாம் என்று கருதி நூற்றுக்கணக்கான படகுகள் குண்டுவீசி அழிக்கப்பட்டன.
கடற்கரையோரங்களில் படையினர் காவல் புரிந்தனர்.
ஆனால் இந்தியப் படை விமானங்களும், ஹெலிகளும் குண்டுவீசி அழித்தது புலிகளின் படகுகளையல்ல. மீனவர்களின் படகுகளைத்தான்.
ஆயினும் புலிகளின் சில படைப்பிரிவுகள் யாழ்நகருக்குள் மாட்டிக் கொண்டன.
தலைமையோடு அவர்களால் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. யாழ் சுண்டிக்குளிப் பகுதியில் புலிகளின் முக்கிய தளபதி ஒவரும் அவரது குழுவினரும் ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக இந்தியப் படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
“யார் அந்தத் தளபதி?” என்று கேட்டார்கள். பெயரைக் கேட்டதும் உடனடியாகப் புறப்பட்டது இந்தியப் படை.

No comments:

Post a Comment