அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 113

வல்லரசான இந்தியாவின் படைகள் புலிகளின் தாக்குதல் காரணமாக வீதிகளில் பிணமாக கிடந்த காட்சி உலகெங்கும் பரவின!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -113)


• கொக்குவில் மோதல்!
• குளப்பிட்டியில் கண்ணிவெடி!
• யாழ் நகரில் ஷெல் மழை
கொக்குவில் இந்துக் கல்லூரி மூன்று மாடிகளைக் கொண்டிருந்தது.
மாடிக் கட்டிடத்தைப் பார்த்ததும் அங்கிருந்து புலிகள் தாக்கக்கூடும் என்று நினைத்தனர் இந்தியப் படையினர்.
கல்லூரி வளவுக்குள் மதில் அருகே நினறு இந்தியப் படையைக் காணும் ஆவலில் முண்டியடித்த மக்களையும் தமது எதிரிகளாகவே நினைத்தனர்.
‘யாழ்ப்பாணம் முழுக்க எதிரிப் பிரதேசம்தான். அங்குள்ள எல்லோரும் எதிரிகள்தான். அவர்களோடு சண்டையிட்டு கைப்பற்றத்தான் நாங்கள் வந்திருக்கிறோம்’ என்பதுதான் இந்தியப் படையின் எண்ணம்

ஏனெனில் இத்தொடரில் முன்னர் குறிப்பிட்டதுபோல, இந்தியப் படையின் பல படைப்பிரிவுகள் இந்தியாவிலிருந்து வந்து தரையிறங்கியதும் உடனடியாகச் சண்டைக்கு அனுப்பப்பட்டன.
அதனால் மக்களையும் எதிரிகளாகவே பார்க்கத் தொடங்கினார்கள். உலகின் மிகப் பெரிய இராணுவங்களில் ஒன்று உலகின் மிகமோசமான கட்டுப்பாடற்ற இராணுவமாக நடந்துகொண்டது.
நேரமோ பிற்பகல், கொக்குவில் இந்துக் கல்லூரி மதிலுக்குப் பின்புறம் நிற்பவர்கள் பொதுமக்கள்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
டிகாக்குவில் இந்துக் கல்லூரிப் பக்கம் இருந்து தாக்குதல்களும் நடத்தப்படவில்லை.
அப்படியிருந்தும் கொக்குவில் இந்துக்கல்லூரி நோக்கி டாங்கியின் சுடுகுழல் திருப்பப்பட்டது.
சுடுகுழல் திருப்பப்பட்டதும் என்ன நடக்கப்போகிறது என்பது மக்களுக்குத் தெரிந்துவிட்டது.
பதறியடித்து உள்ளே ஓடினார்கள்.
அதற்குள் டாங்கியிலிருந்து புறப்பட்ட ஷெல் கல்லூரியின் அறை ஒன்றை ஊடுருவி உள்ளே விழுந்து வெடித்தது.
அறைக்குள் இருந்த 24 பேர் துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் செத்துப் போனார்கள்.
படை முன்னேற்றம்
காங்கேசன்துறை வீதி வழியாக முன்னேறிய இந்தியப் படையின் ஒரு பிரிவு குளப்பிட்டிச் சந்தியில் இருந்து ஆனைக்கோட்டை செல்லும் வழியாக முன்னேறியது.
இன்னொரு பரிவு பிரதான வீதி வழியாக நேராக முன்னேறி கொக்குவில் இந்துக் கல்லூரி வரை சென்றது.
குளப்பிட்டி சந்தியில் இருந்து ஆனைக்கோட்டை செல்லும் பாதையில் சென்றுகொண்டிருந்த இந்தியப் படை புலிகளின் கண்ணிவெடியில் சிக்கியது.
கண்ணிவெடி வெடித்ததும் பலியான படையினர் தவிர ஏனைய படையினர் தரையில் படுத்து சுடுவதற்கு நிலை எடுத்துக் கொண்டனர்.
கண்ணிவெடியைப் புதைத்துவிட்டு வீதியின் இரு மருங்கிலும் பதுங்கியிருந்த புலிகள், இந்தியப் படையினரை சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கினார்கள்.
குளப்பிட்டிச் சந்திவழியாக ஆனைக்கோட்டை சென்ற படைப்பிரிவு புலிகளின் தாக்குதலால் பின்வாங்கியது.
பாதையெங்கும் இந்தியப் படையினரின் சடலங்கள் கிடந்தன. குறைந்தது 20 படையினராவது கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் இழப்புக்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
கொக்குவில் பூநாரி மரத்தடியிலும் இந்தியப் படையினர் மீது புலிகளின் அதிரடித்தாக்குதல் ஒன்றை நடத்தினார்கள்.

கால் நடையாக நகர்ந்து சென்ற படைப்பிரிவு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலிலும் பதினைந்துக்கு மேற்பட்ட இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர்.
வீதிகளில் சடலங்கள் கிடக்க, புலிகளின் கெரில்லாக்கள் அச்சடலங்களுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கொக்குவில்-குளப்பிட்டி மோதல்களின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் பின்னர் இந்தியப் பத்திரிகைகள் உட்பட சர்வதேச பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகின.
ஆசியாவில் பிராந்திய வல்லரசான இந்தியாவின் படைகள் ஒரு கெரில்லா இயக்கத்தின் தாக்குதல் காரணமாக வீதிகளில் பிணமாக கிடந்த காட்சி உலகெங்கும் வியப்பாக நோக்கப்பட்டது.
கொக்குவில் பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களை வழிநடத்தியவர்களில் முக்கியமானவர் நிஷாந்தன்.
கொழும்பில் புலிகள் இயக்கத்;தினரால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்களுக்கு காரணமானவர்களில் முக்கியமானவர் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?
அதே நிஷாந்தன்தான். உண்மையான பெயர் குமாரவேலு விக்னராஜா. தற்போது கனடாவில் இருக்கிறார்.
கனடா உளவுப்பிரிவுக்கு புலிகள் இயக்கத்தினர் மற்றும் ஏனைய இயக்கத்தினர் தொடர்பாகத் தகவல்கள் கொடுத்து உதவினார்.
பின்னர் கனடா உளவுப்பிரிவினர் இவரைக் கைவிட்டுவிட்டனர். கனடா வங்கி ஒன்றில் பணிபுரிந்த நிஷந்தன் கனடிய பொலிசாரால் கடந்த வருடம் கைது செய்யப்பட்டார்.
பதிலடி
குளப்பிட்டிச் சந்தியில் தமது படைப்பரிவு தாக்கப்பட்டதும், கொக்குவில் இந்துக் கல்லூரி அருகே நின்ற இந்தியப் படையினருக்கு யாரையாவது பழிதீர்க்கவேண்டும் போல் இருந்தது.
மறுபடியும் கொக்குவில் இந்துக் கல்லூரி நோக்கி டாங்கிகளால் தாக்கினார்கள். எனினும் அத்தாக்குதலால் பெரும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஏற்கனவே நடைபெற்ற ஷெல் தாக்குதலால் பலியான 24 பேரையும் அடக்கம் செய்ய இந்துக்கல்லூரி மைதானத்தில் குழி வெட்டப்பட்டது.
பசியாலும், பயத்தாலும் சோர்ந்துபோன அகதிகள் பலர் சேர்ந்து ஒருவிதமாக குழியை வெட்டி முடித்தனர். பலியான அனைவரையும் ஒரே குழியில் போட்டு மூடினார்கள்.
பாடசாலை வகுப்பறைகளில் இருந்த கரும்பலகைகள்தான் உடல்கள் தூக்கிச் செல்லும் ‘ஸ்ட்றெச்சர்’களாகப் பயன்படுத்தப்பட்டன.
மீண்டும் இந்தியப் படையினர் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் கொக்குவில் அகதிமுகாமில் உள்ள அனைவரும் ஆங்கிலத்தில் நாங்கள் அகதிகள் என்று உரத்துச் சத்தமிடுவது என்று முடிவு செய்தனர்.
கிட்டத்தட்ட 7 ஆயிரம் அகதிகளைக் கொக்குவில் இந்துக்கல்லூரி உள்வாங்கியிருந்தது. அவர்கள் அத்தனை பேரினதும் உயிர்கள் இந்தியக் படையின் டாங்கிகள் முன்பாக ஊசலாடிக்கொண்டிருந்தன.
அதிகாரியின் மிரட்டல்
அக்டோபர் 26ம் திகதி காலையில் அகதிமுகாமில் இருந்து உரத்துக்கத்தியதற்குப் பலன் கிடைத்தது.
இந்தியப் படையினரில் சிலர் முகாமுக்கு வந்தனர். அந்தப் பிரிவுக்கு தலைமை தாங்கியவர் பெயர் கேர்ணல் மிஸ்ரா.
அதிகாரத் தோரணையிலும், மிரட்டல் பாணியிலும் கேர்ணல் மிஸ்ரா அகதிகளோடு பேசினார்.
அகதிகள் என்று திட்டவட்டமாகத் தெரிந்தபின்னரும் எதிரிகளோடு நடந்து கொள்வது போன்று இரக்கமற்ற போக்கைக் கையாண்டார்.
அக்டோபர் 26ம் திகதியும் 2ம் திகதியும் அகதிகளுக்கு உணவு கொடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.
கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகே இருந்த தேர் மீதும் இந்தியப் படையினருக்கு சந்தேகம்.
தேருக்குப் போடப்பட்ட மறைப்பை உடனடியாக நீக்கும் பணி அகதிகள் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
“தேர் மறைப்பை நீக்கினால் உங்களுக்கு உணவு தரப்படும். இல்லாவிட்டால் எமது டாங்கிகளால் இத்தேரை பொடிப் பொடியாக்கி விடுவேன். உங்களுக்கும் சாப்பாடு தரமாட்டேன்”
அகதிகள் உடனடியாகத் தேரின் மறைப்பை நீக்கினார்கள்.
தேரின் மறைப்பை அகதிகள் சிலர் நீக்கிக் கொண்டிருந்தபோது புலிகள் அங்கு வந்துவிட்டனர்.
அந்த மறைப்பு தங்களுக்கு வசதியாக இருக்கும் என்று நினைத்து வந்தவர்களுக்கு அகதிகள் அதனை நீக்குவதைக் கண்டதும் கோபம் வந்துவிட்டது.
புலிகள் ஆயுதங்களுடன் வருவதைக் கண்டதும் அகதிகள் பயந்து நடுங்கினார்கள்.
“ஐயோ எங்களை ஒன்றும் செய்யாதீர்கள். உங்களைக் கண்டால் அவர்கள் எங்களையும் சுட்டுப்போட்டுவிடுவார்கள். இங்கிருந்து போங்கோ தம்பிமார்” என்று கெஞ்சத் தொடங்கிவிட்டார்கள்.
நவம்பர் 27ம் திகதிக்குப் பின்னர் இரவு நேரங்களில் கொக்குவில் இந்துக் கல்லூரியின் மூன்றாவது மாடியில் ஆட்கள் நடமாடும் சத்தங்கள் கேட்கும்.
பயம் காரணமாக அகதிகள் வெளியே வருவதில்லை. அதனால் யார் நடமாடுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
காலையில் அகதிகள் நித்திரை விட்டெழுந்ததும் இந்தியப் படையினர் முறைத்தபடி அகதிமுகாமுக்குள் வருவார்கள்.
“நேற்றிரவு மாடியில் இருந்து சுட்டது யார்” என்று கேட்பார்கள்.
“ஐயோ எங்களுக்குத் தெரியாது. நாங்கள் வெளியே வருவதேயில்லை” என்று அகதிகள் கெஞ்சுவார்கள்.
“உங்களுக்குள் தான் புலிகள் இருக்கிறார்கள். அதனால் எல்லோருக்கும்தான் ஆபத்து!” என்று படையினர் மிரட்டுவார்கள்.
யாழ்ப்பாணத்தில்……
அரியாலை வழியாக முன்னேறித்தான் யாழ்நகரை இந்தியப் படை கைப்பற்றியது.
யாழ் கண்டி வீதியையும், நெடுங்குள வீதியையும் இணைக்கும் சந்தியில் ‘சுப்பிரமணியம் ஊதுபத்தி தொழிற்சாலை’ இருந்தது.
அந்தத் தொழிற்சாலையைத் தமது முகாமாக மாற்றிக்கொண்டனர் இந்தியப் படையினர்.
அங்குள்ள வெளிப்பகுதியில் ஆட்டிலெறிப் பீரங்கிகள் நிறுத்தப்பட்டன. வானம் பொத்துக் கொண்டு மழை கொட்டுவதைப் போல ஆட்டிலெறிப் பீரங்கிகள் ஷெல் மழை பொழிந்தன.
இந்தியப் படை வருகிறது என்று தெரிந்து முன் கூட்டியே மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓடியதால் பாரிய உயிரழிவுகள் நடக்கவில்லை.
இல்லாது போனால் ஆயிரக்கணக்கான மக்கள் பிணங்களாகக் குவிக்கப்பட்டிருப்பர்.
ஷெல் அடித்து முடிந்த பின்னர் வெற்று ஷெல் கூடுகள் வீதிகளில் குவிந்து கிடந்தன. அவற்றை ஒன்று சேர்த்து அள்ளிச் செல்வதற்கு குறைந்தது இரண்டு லொறிகள் வேண்டும்.
யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகில் உள்ள பழைய பூங்காவில் புலிகளின் முகாம் ஒன்று இருந்தது. இந்தியப் படை முன்னேறிச் சென்றபோது புலிகள் அம்முகாமை கைவிட்டுச் சென்றனர்.
பழைய பூங்காவையும், கச்சேரிப் பகுதியையும் கைப்பற்றுவதற்காக அருகிலுள்ள பகுதிகளான பண்டியந்தாழ்வு, கொய்யாத்தோட்டம், ஈச்சமேடைப் பகுதிகளை நோக்கி n~ல்கள் ஏவப்பட்டன.
அப்பகுதிகளில் உள்ள மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்து செல்லத்தொடங்கியிருந்தார்கள். அப்படியிருந்தும் 30ற்கு மேற்பட்ட மக்கள் மேற்படி பகுதிகளில் ஷெல் வீச்சுக்குப் பலியாகினர். உடல் சிதறி மாண்டனர். பலர் காயமடைந்தனர்.
சென் பற்றிக்ஸ் கல்லூரியில் ஷெல் விழுந்து அங்கிருந்த அகதிகள் பலியாயினர் என்பது பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?
ஷெல் அடியால் காயம் அடைந்தவர்களை இரு மினி வேன்களில் ஏற்றிக் கொண்டு யாழ் ஆஸ்பத்திரி நோக்கி விரைந்தனர்.
இரண்டு மின்வேன்களிலும் முன் பக்கத்தில் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
ஒரு மின்வேன் ஆஸ்பத்திரிக்குச் சென்று விட்டது. அடுத்ததாக சென்ற மினிவேன் விக்ரர் என்பவருக்குச் சொந்தமானது. அவர்தான் மினிவேனை ஓட்டிச் சென்றார்.
“இந்த நேரத்தில் மினி வேனில் செல்ல வேண்டாம்!” என்று விக்ரரை அவரது உறவினர்கள் தடுத்தனர்.
“வெள்ளைக் கொடியுடன் செல்கிறேன். இந்தியப் படையினர் எதுவும் செய்ய மாட்டார்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார் விக்ரர்.
பின்னர் விக்ரர் திரும்கிவரவேயில்லை. மினிவேன் மீது இந்தியப் படையின் துப்பாக்கிகள் வேட்டு மழை பொழிந்தன. விக்ரரும், வேனில் காயம்பட்டுக் கிடந்தவர்களும் பலியானார்கள். வேனை தீயிட்டுக் கொளுத்தியது இந்தியப் படை.
யாழ்ப்பாணத்தில் பிரபலமானது பஸ்தியன் அச்சகம். பஸ்தியன் அச்சக உரிமையாளரும், அவரது குடும்பமும் காயமடைந்து விக்ரரின் வேனில்தான் சென்றனர். அவர்களும் பலியானவர்களில் அடங்குவர்.
கடைகள் சூறை
யாழ் நகர வீதிகளில் பிணமாகக் கிடந்தவர்களை அப்புறப்படுத்த முடியவில்லை. அதனால் எங்கும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.
கடைகள் யாவும் மூடப்பட்டுக் கிடந்தன. உணவுப் பொருட்களுக்குப் பலத்த தட்டுப்பாடு.
அதுதான் சமயம் என்று பூட்டியிருந்த கடைகளை உடைத்து கொள்ளையடித்தது ஒரு கோஷ்டி.
கொள்ளையடித்த அரிசி, பருப்பு, மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து பணம் சுருட்டியது அக்கும்பல்.
ரீவி, ரேடியோ, ஃபான் போன்ற பொருட்களைக் கொள்ளை செய்யும் கடைகளும் கொள்ளையிடப்பட்டன.
நல்லூரில்
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமிக் கோவில் அகதி முகாமில் இருந்தவர்கள் உயிரைக் கையில் பிடித்தபடி இருந்தனர்.
அவர்களது அச்சத்தை அதிகரிக்கும் வகையில் இலங்கை வானொலி ஒரு செய்தியை வெளியிட்டது.
“யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில் அகதி முகாமுக்குள் தான் பிரபாகரன் மறைந்திருக்கிறார்.” எனடபதுதான் செய்தி
செய்தியைக் கேட்டதும் அதன் உள்நோக்கம் புரிந்து அகதிகள் நடுங்கத் தொடங்கினார்கள்.

No comments:

Post a Comment