அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 112

‘மக்களே எதிரிகள், எதிரிகளே மக்கள்’ என்ற ரீதியில் இந்தியப்படையினரின் படுகொலை வேட்டை!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -112)


• இந்தியப் படையின் மனித வேட்டை
• முகாம்மீது டாங்கித் தாக்குதல்
• வேட்டை ஆரம்பம்
யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையின் துயரக்கதை எப்படி ஆரம்பமானது? மருத்துவமனை வைத்தியர் ஒருவர் விபரிக்கிறார்.
“நாங்கள் அப்போது கதிரியக்கப்பகுதியில் தேநீர் அறையில் இருந்தோம். அந்த இடம் முழுவதும் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு நின்றனர். 7ம் நம்பர் வார்டைக் காலி செய்து விட்டு வந்த மக்களும் அங்கு அங்கிருந்தனர்.
சூட்டுச் சத்தம் எங்களுக்கு அருகில் வந்துகொண்டிருப்பது கேட்டது.

இந்திய இராணுவம் உள்ளே நுழைந்தாலும் அவர்கள் எங்களைச் சோதனையிடுவார்கள், பின் அவர்களுக்கு நாங்கள் விஷயங்களை விளங்கப்படுத்தலாம் என்று நம்பிக்கொண்டிருந்தோம்.
எங்களுடன் இருந்த டாகடர் கணேசரத்னம் அறையை விட்டு வெளியே சென்றார். எங்களின் சக ஊழியர்கள் சிலர் இன்னமும் தங்கள் வார்ட்டுக்களில்தான் இருந்தனர்.
சூட்டுச் சத்தம் இப்போது மிக மிக அருகில் வந்து விட்டது. எங்களைச் சுற்றியுள்ள அபாயத்தை உணர்ந்து எல்லோரும் அப்படியே தரையில் படுத்துவிட்டோம்.
சுட்டுக்கொண்டே கதிரியக்கப் பிரிவுக்குள் வந்தது இந்திய இராணுவம். அங்கே நெருக்கியடித்துக் கொண்டிருந்த மக்கள் தான் அவர்கள் கண்களில் முதலில் பட்டனர்.
மக்களைக் கண்டதும் உடனடியாக அவர்கள்மீது சரமாரியாக சுட்டுத்தள்ளத் தொடங்கினார்கள்.
நோயாளிகள் சூடுபட்டு செத்து விழுவதைக் கண்ணால் கண்டோம்.
விரலைக் கூட அசைக்காமல் செத்துப் போனவர்களைப் போலத் தரையில் கிடந்தோம். இறந்து போனவர்களின் அகற்ற வரும்போது எங்களையும் அவற்றோடு போட்டு எரித்து விடுவார்களோ, சுட்டுவிடுவார்களோ என்று முழு நேரமும் நடுங்கிக் கொண்டிருந்தோம்.
இரவில் மேலும் சில வெடிச்சத்தங்கள் கேட்டன. எங்களுடைய குவார்ட்டர்ஸ் அமைந்திருக்கும் மேல் மாடியில் அவர்கள் நடமாடும் சத்தம் எங்கள் காதுகளில் விழுந்தது.
மறுநாள் காலை 11.00 மணி வரை கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் நாங்கள் அப்படியே கிடந்தோம்.
“அம்மாவுக்கு ஆதரவு”
அந்த இடத்திலிருந்து இன்னொருவர் மேலும் விபரிக்கிறார்;
“இந்திய இராணுவம் வெளி கேற் வழியாகப் புகுந்து, தாழ்வாரம் வந்து கண்டபடி சுட ஆரம்பித்தது. மேற் பார்வையாளர் அலுவலகத்திற்குள்ளும், வேறு அலுவலகங்களுக்குள்ளும் அவர்கள் கண்மூடித்தனமாகச் சுட்டார்கள்.
என்னோடு பணி புரிந்த சக ஊழியர் பலர் இறப்பதைக் கண்டேன். இன்னொரு சக ஊழியர் என்னிடம் கிசுகிசுத்தார். “அப்படியே அசையாமல் படுத்துக் கிடவுங்கள்”
அன்றிரவு முழுவதும் இம்மிகூட அசையாமல் அங்கு கிடந்த சடலங்களில் அடியில் படுத்துக்கிடந்தோம்
ஆஸ்பத்திரி மேற்பார்வையாளராக இருந்த ஒருவருக்கு இருமல் இருந்தது. உரத்து இருமினால் அவர்கள் காதில் விழுந்துவிடும் அதனால் இரவு முழுவதும் முனகியவாறு இருமிக்கொண்டிருந்தார்.
அந்த முனகல் இருமல் கூட ஒரு இந்திய வீரனின் காதில் கேட்டுவிட்டது.
ஒரு கைக்குண்டை அவர் மீது வீசி எறிந்தான்.
அந்த மேற்பார்வையாளரும், அவர் அருகில் கிடந்த சிலரும் பலியானார்கள்.
அம்புலன்ஸ் சாரதி இறந்தது எனக்குத் தெரியும்.

இன்னொரு இடத்தில் ஒருவர் தன் கைகளை மேலே உயர்த்தியபடி எழுந்து நின்று உரத்துக் கூவினார்.
“நாங்கள் அப்பாவிகள். நாங்கள் இந்திரா காந்தி அம்மாவுக்குத்தான் ஆதரவு”
அவர் உரத்துச் சொல்லிக் கொண்டிருக்க அவர்மீதும் ஒரு கைக்குண்டை எறிந்தார்கள். அவரும் அவருக்கு அருகில் கிடந்த சகோதரரும் இறந்து போனார்கள்.
காலையில்
இரவு கடந்துபோய் காலையாகிவிட்டது. காலை 8.30 மணியளவில் குழந்தை வைத்திய நிபுணர் டாக்டர் சிவபாதசுந்தரம் மூன்று தாதிமாருடன் தாழ்வாரம் வழியாக நடந்து வந்தார்.
“தாங்கள் யார் என்று அடையாளம் காட்டிக் கொண்டு இராணுவத்திடம் சரணடைந்துவிடுவது உசிதமானது என்று அவர்களிடம் அவர் எடுத்துக் கூறியிருக்கிறார்.
கைகளை உயர்த்திக் கொண்டு “நாங்கள் சரணடைகிறோம். நாங்கள் ஒன்றுமறியாத டாக்டர்களும், நர்சுகளும்தான்” என்று உரத்துக்கூறியவாறு அவர்கள் நடந்து வந்தனர்.
டாக்டர் சிவபாதசுந்தரம் தமக்கு அருகில் வரும்வரை இந்திய இராணுவத்தினர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர் கைகளை உயர்த்திக்கொண்டு அவர்களை நோக்கி நம்பிக்கையோடு சென்றார்.
தமக்கு அருகில் அவர் வந்ததும் இந்தியப் படைகள் அவர் மீது வேட்டுக்களைப் பொழிந்தன.
அந்த இடத்திலேயே துடிதுடித்தபடி செத்து வீழ்ந்தார் டாக்டர் சிவபாதசுந்தரம். அவருடன் வந்த நர்சுகள் காயமடைந்தனர்.
மருத்துவமனையில் சிக்கிவிட்ட குழந்தைகளையும், புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் காப்பாற்ற வந்த உன்னத மனிதன் டாக்டர் சிவபாதசுந்தரம் இரத்தத்தில் மிதந்தார்.
உயிர் பிழைத்திருந்தவர்கள் மறுநாள் காலை பதினொருமணிவரையும் இறந்து போனவர்கள் போல அப்படியே கிடந்தனர்.

இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் ஆஸ்பத்திரி வார்ட் ஒன்றுக்கு வந்தபோது அவரை இடைமறித்து நேர்நின்று வாதாடிய பிறகுதான் தாங்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.
அந்த டாக்டர் அதிகாரிக்கு நிலமையை விளக்கிக் கூறினார். தனது இரு கைகளையும் மேலே உயர்த்தியவாறு தன்னுடன் பணிபுரிந்தவர்களையும், காயமடைந்து கிடந்தவர்களையும் குரல் கொடுத்து அழைத்தார்.
தங்களின் சக மருத்துவர் டாக்டர் கணேசரட்ணம் ஸ்டதெஸ்கோப்புடன் கீழே விழுந்து இறந்து கிடப்பதையும் அவர்கள் கண்டனர்.
இரத்தக் காலடிகள்
ஆஸ்பத்திரியில் தங்கி இருப்பவர்கள் மேலே தங்களின் அறைகளுக்குச் சென்று பார்த்தபோது முழுப்பகுதியும் சூறையாடப்பட்டிருப்பதைக் கண்டனர்.
தரையில் சிதறிக் கிடந்த அவர்களின் துணிமணிகள்மீது இரத்தம் தோய்ந்த பூட்ஸ்களின் தடங்கள் காணப்பட்டன. அவர்களின் விலைமதிப்புள்ள உடமைகள் யாவும் பறிபோய்விட்டன.
ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த மற்றொரு மருத்துவர் விபரிக்கிறார்.
“கதிரியக்கப் பகுதியில் இருந்து ஓய்வறையை விட்டு விலகிச் செல்லும் நடை பாதைப் பகுதியில் நான் கிடந்தேன். என் கால்கள் வெளியே நீண்டு கிடந்தன.
திறந்திருந்த ஜன்னல் ஒன்றின் வழியாக வந்த மாலைச் சூரிய ஒளி பட்டுக்கொண்டிருந்தது. பயத்தில் உறைந்து போயிருந்த நான் என்னிடம் எவ்வித அசைவும் தெரிந்துவிடக்கூடாதே என்பதற்காக மரக்கட்டை போலப் படுத்துக்கிடந்தேன்.
உண்மையிலேயே நான் உயிர்தப்பியது பெரிய அதிஷ்டம்தான் அந்த இராணுவ வீரர்கள் ஒரு கைக்குண்டை வீசியெறிந்தார்கள்.
அதனால் என் முன்பான படுத்துக் கிடந்தவர்கள் எல்லாம் இறந்து போய்விட்டதைக் காலையில்தான் பார்த்தேன்.
அந்த இரவு முழுவதும் விழித்துக் கொண்டே கிடந்தேன்.
பல்வேறு சத்தங்கள், குரலோசைகள், அவ்வப்போது எங்கள் தலைகளுக்கு மேலால் சீறிப்பரவும் துப்பாக்கிவேட்டுக்கள், அல்லது கைக்குண்டுகள் வீசப்படும் அனைத்தும் எனக்குக் கேட்டுக் கொண்டிருந்தன.
“ராஜீவ் வாழ்க”
“அம்மா டீ டீ டீ” என்று ஒரு குழந்தை அழுவது கேட்டது.
இன்னொரு குழந்தை கதறி அழுதது. ஒரு வேளை அதன் தாய் இறந்திருக்கக்கூடும் என்று நினைத்தேன்.
என் கால்கள் விறைத்துப் போயிருக்கிறது. நன்றாகக் குளிர்ந்து போயிருக்கிறது. என் கால்களின் மேல் ஒரு பிணம் கிடக்கிறது. தயவு செய்து அதை எடுத்துப் போடுங்கள்!” என்று ஒரு பெண்மணி கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்தப் பெண்மணியின் வலி முனகலை என்னால் பொறுக்கமுடியவில்லை. “யாராவது அவருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் அந்தப் பிணத்தை எடுத்துப் போட்டால் என்ன? உங்களுக்குக் காது செவிடா?” என்று கத்தினேன்.
அந்தப் பெண்மணி தொடர்ந்து முனகிக் கொண்டிருந்தாள்… காலையில் அந்தப் பெண்மணி கிடந்த இடத்தில் அமைதி நிலவியது.
அவளும், அவள் அருகில் கிடந்தவர்களும் இறந்து போயிருந்தனர்.
ஒருவர் சிவபுராணத்தை வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார். கூடவே ‘ராஜீவ் வாழ்க. இந்திரா வாழ்க’ என்றும் சத்தமாகக் கூறிக் கொண்டிருந்தார்.
அவரும் ஒரு கைக்குண்டுக்குப் பலியாகி செத்துக் கிடந்தார்.
காலை 10.30 அல்லது 11.00 மணிக்கு எங்களோடு சேர்ந்து தங்கியிருக்கும் ஒரு பெண் டாக்டர், உயிரோடு இருப்பவர்கள் கைகளை மேலே உயர்த்தியபடி எழுந்து நிற்குமாறு கூவியழைப்பதைப் கேட்டோம்.
எங்கள் அறையில் ஆறுபேர் மட்டுமே உயிரோடு இருப்பதாக நான் நினைத்திருந்தேன். ஆனால், அப்போது குறைந்தது பத்துப்பேராவது உயிரோடு இருக்கிறோம் என்று தெரிந்தது.
நாங்கள் எல்லாம் கைகளை மேலே உயர்த்திக் கொண்டு வெளியே வந்தோம். எங்கள் முன்னால் கிடந்த பிணங்கள் மீதெல்லாம் ஏறிக் கடந்தோம்.
அந்தச் சடலங்கள் ஒரு மைல் தூரத்துக்குப் பரவிக் கிடந்தன போலத் தோன்றியது. இந்தியப் படை எங்களை நெருங்கிவர முடியாமல் பெரும் தடை போட்டது போல அந்தப் பிணங்கள் கிடந்திருக்கின்றன.
அதனால் தான் நாங்கள் தப்பிப்பிழைத்திருக்கிறோம்.
எங்களில் சிலர் அழ ஆரம்பித்தார்கள். எங்கள் மத்தியில் அப்போதிருந்த ஒரே ஒரு மருத்துவ நிபுணர்தான் எங்களைச் சாந்தப்படுத்pனார்.
“அழாதீர்கள். நாம் அழுது கொண்டிருக்கும் நேரமல்ல. நாம் மிக அதிகமாகவே இழந்துவிட்டோம். ஆனால் நாம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.
நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து அவற்றுக்காக உழைப்போம்” என்று அவர் கூறினார்.
“அவர் மட்டும் அந்த வார்த்தைகளைக் எங்களிடம் கூறியிருக்காவிட்டால் நாங்கள் நிச்சயம் ஒரேயடியாக இடிந்து போயிருப்போம்.”
யாழ் மருத்துவமனையின் மருத்துவர்கள், தாதிகள், மற்றும் ஊழியர்கள் அடங்கிய அச்சிறு அணியினரின் அபாரமான துணிச்சலும் மகத்தான அர்ப்பணிப்புமே முற்றுகை, பீதி, விரக்தி ஆகியவற்றின் பிடியில் சிக்குண்ட நிலையிலும் இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனைகளில், யாழ் மருத்துவமனையைத் தனித்துவத்தோடும், பெருமையோடும் நிலை நிறுத்துகிறது.
‘முறிந்தபனை’ நூலின் ஆசிரியர் குழுவினருக்கு யாழ் மருத்துவமனை வேட்டையை நேரில் கண்டு அனுபவித்தவர்கள் சொன்ன துயரக்கதைகள் நெஞ்சை உலுக்கக்கூடியவை. என்றும் மறக்கவும் முடியாதவை.
வெறித்தனம்
மக்கள் யார்? எதிரிகள் யார்? என்று இனம் காணமுடியாத நிலையில் நடைபெற்ற சம்பவங்கள் அல்ல இவை.
கைகளை உயர்த்தி மன்றாடிய அப்பாவிகளை நோக்கி கைக்குண்டுகள் வீசப்பட்டன. தரையோடு விழுந்து படுத்தவர்களை நோக்கி கைக்குண்டுகளை உருட்டிவிட்டனர்.
இந்தியாவுக்கு தாம் எதிரிகள் அல்ல என்று வெளிக்காட்டுவதற்காக ‘ராஜீவ்காந்தி இந்திராகாந்தி’ என்ற பெயர்களைச் சொல்லிக் கொண்டனர் சிலர்.
அந்தப் பெயர்களைக் கேட்டால் இந்தியப் படை வீரர்கள் நெகிழ்ந்து போவார்கள். இரக்கம் காட்டுவார்கள் என்றுதான் அந்த அப்பாவிகள் நினைத்தனர்.
அவர்கள் அப்படி பெயர்களைச் சொன்னது பிழையாகிப் போனது. உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி கைக்குண்டை உருவி வீசினார்கள்.
மருத்துவமனை வளவுக்குள் புலிகள் நடமாடியது உண்மைதான். ஆனால் இந்தியப் படை வெறியாட்டம் நடத்தியபோது புலிகள் யாரும் மருத்துவமனை வளவுக்குள் நிற்கவும் இல்லை. இந்தியப் படையைத் தாக்கவும் இல்லை.
மருத்துவமனைக்குள் புலிகள் இருக்கக்கூடும் என்று நினைத்து இந்தியப் படை உள்ளே பிரவேசித்த மாதிரியும் தெரியவில்லை.
மருத்துவமனையின் முன்பக்க வாசல் வழியாகவே இந்தியப் படையினர் உள்ளே புகுந்தனர்.
மருத்துவ மனையின் பின்வாசல் கதவு திறந்தே கிடந்தது. அந்த வாசல் வழியாகவோ, அல்லது சுற்று மதில்கள் மூலமாகவோ மருத்துவமனைக்குள் இருந்து தப்பிச் செல்ல முடியும்.
புலிகள் மருத்துவமனை வளவுக்குள் இருந்திருந்தால் கூட இந்தியப் படையால் பிடித்திருக்க முடியாது.
மருத்துவமனை முற்றுகையிடப்படவில்லை. புலிகளைப் பிடிப்பதுதான் நோக்கம் என்றால் மருத்துமனையை படைகள் முற்றுகையிடப்பட்டிருக்கும்.
இந்தியப் படைக்கு அந்த நோக்கமெல்லாம் கிடையாது. கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளும் வெறிபிடித்த படையாகத்தான் அது மருத்துமனைக்குள் புகுந்தது.
‘மக்களே எதிரிகள், எதிரிகளே மக்கள்’ என்று முடிவு செய்துவிட்ட மூர்க்கமான படையாகவே இந்தியப்படை படுகொலை வேட்டையில் இறங்கியது.

தகவல்களும் கைதுகளும்
யாழ்ப்பாணத்தில் மக்கள் தஞ்சமடைந்த அகதிமுகாம்கள் மீது n~ல் தாக்குதல்;கள் நடத்தப்பட்டதால் அங்கிருந்த மக்கள் பீதியுடன் தான் இருந்தனர்.
யாழ்ப்பாணம் நாவலர்வீதியில் அமைந்துள்ள நாவலர் பாடசாலை அகதி முகாமில் நடந்த ஒரு சம்பவமும் வேதனையான வேடிக்கை.
அகதி முகாமுக்குள் புலிகளும் இருக்கிறார்களா என்று கண்டறிவதற்காக சிலரிடம் தகவல் சேகரித்தது இந்தியப் படை.
தகவல் கொடுத்து உதவினால் தம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று நினைத்த சிலர் இந்தியப் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உதவினார்கள்.
யாழ்ப்பாணம் ராஜா திரையரங்க உரிமையாளர் எஸ். தியாகராஜா. எஸ்.ரி.ஆர். என்று அழைக்கப்படுவார்.
தமிழர் விடுதலைக் கூட்டணிப் பிரமுகர். யாழ் மாநகரசபைத் தேர்தலிலும் போட்டியிட்டவர். பின்னர் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தவர்.
தியாகராஜா மீது கோபம் உள்ள யாரோ ஒருவர் இந்தியப்படைக்கு தகவல் கொடுத்தார். நாவலர் பாடசாலை அகதி முகாமில்தான் தியாகராஜா இருப்பதாக தகவல் சொல்லப்பட்டது.
நாவலர் பாடசாலை அகதி முகாம் மீது ஷெல் விழுந்து அகதிகள் சிலர் பலியாகி இருந்தனர். அதனால் அங்கிருந்த அகதிகள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தனர்.
நாவலர் பாடசாலை முகாமுக்குள் சென்ற படை அதிகாரி ஒருவர் ‘தியாகராஜா’ என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.
அகதிகள் மத்தியில் இருந்து ஒருவர் எழுந்து “யெஸ் ஐ ஆம் தியாகராஜா” என்று சொல்லிக் கொண்டே முன்னால் வந்தார்.
மீண்டும் அதிகாரி கோட்டார்;
“நீர்தானா தியாகராஜா”
“யெஸ் ஐ ஆம் தியாகராஜா”
அவர் சொன்னது தான் தாமதம். விழுந்தது அடி. உருட்டி உருட்டி அடித்தார்கள்.
நல்லவேளையாக உயிர் தப்பினார் தியாகராஜா. பின்னர்தான் தெரிந்தது அவர் ராஜா திரையரங்க உரிமையாளர் தியாகராஜா அல்ல. பெயர் ஒன்றாக இருந்ததால் வந்த வினை அது.
கொக்குவில் வேட்டை
அக்டோபர் 25ம் திகதி யாழ்;ப்பாணம் கொக்குவில் பகுதிக்குள் இந்திய இராணுவம் கவச வாகனங்களுடன் புகுந்தது.
கொக்குவில் இந்துக் கலலூரி அகதி முகாமில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் அகதிகள் தங்கியிருந்தனர்.
கொக்குவில் இந்துக் கல்லூரி மூன்று மாடிக் கட்டிடத்தைக் கொண்டிருந்தது.
கல்லூரி முகப்பில் ‘அகதி முகாம்’ என்ற அறிவிப்புப்பலகை தொங்கவிடப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் ஏனைய அகதி முகாம்களில் ஷெல்லடியால் மக்கள் பலியான விபரம் கொக்குவில்லுக்கு எட்டவில்லை.
அதனால் ‘அகதி முகாமைக் கண்டால் இந்தியப் படையினர் உதவி செய்வார்களே தவிர, தொல்லை தர மாட்டார்கள்’ என்று முகாமில் இருந்தவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.
‘ஈழநாடு’ பத்திரிகையாளரும், நீதிபதியின் மகனுமான ஆனந்த் பாலகிட்னரும் கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாமை நிர்வகித்தவர்களில் ஒருவர்.
தொண்டர் நிறுவனமான சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் சீருடையுடன் அகதி முகாம் வாயிலில் ஆனந்த் பாலகிட்னரும், தொண்டர்களும் அமர்ந்திருந்தனர்.
இந்தியப் படை டாங்கி ஒன்று கொக்குவில் இந்துக் கல்லூரி முன்பாக வந்து நின்றது. அப்போது நேரம் பிற்பகல் இரண்டு மணி.
டாங்கிகளின் ஓசை கேட்டதும் இந்தியப் படை வருகிறது என்பது முகாமில் இருந்த மக்களுக்கு விளங்கிவிட்டது.
இந்தியப் படை எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று அகதிகள் பலருக்கு ஆவலாக இருந்தது.
இந்துக் கல்லூரியின் சுவர் ஓரமாக அகதிகள் குழுமி நின்று இந்தியப் படை வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான் இந்தியப்படை டாங்கி ஒன்று கல்லூரி முன்பாக வந்து நின்றது.
அதன் சுடு குழாய் கல்லூரியை நோக்கித் திரும்பியது.
இந்தியப் படையைக் காண்பதற்காக ஆவலோடு ஓடிவந்து குழுமிய மக்களை நோக்கி குறிவைத்தது.
பறந்துவந்தன ஷெல்கள்

No comments:

Post a Comment