அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 111

“வீட்டுக்குள் பிரவேசித்த பெண்களைக் கண்டதும் சபலம் கொண்ட இந்திய படையினர்!! : வீட்டுக்கதவை மூடிவிட்டு தீர்த்துக்கட்டிய பெண்கள் புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -111)


•சில வீடுகளுக்குள் பெண்கள் மட்டுமே தனியாக இருந்தனர். வீட்டுக்குள் பிரவேசித்த இந்திய படையினருக்கு பெண்களைக் கண்டதும் சபலம் தட்டிவிடும். வீட்டுக்கதவை மூடிவிட்டு பெண்களை நெருங்குவர் படையினர். திடீரென்று அப் பெண்கள் மத்தியில் இருந்து துப்பாக்கிகள் சீறும். உள்ளே புகுந்த அத்தனை படையினரும் கொல்லப்படுவர்.
•அகதி முகாமுக்குள் ஷெல் வீச்சு
• மருத்துவமனைக்குள் பாய்ந்த படைகள்
• கோவிலுக்குள் அகதிகள்
தொடர்ந்து…

யாழ் குடாநாடெங்கும் விமானக் குண் வீச்சுக்களும், ஷெல் தாக்குதல்களும் உக்கிரமடைந்தன.
இந்தியப் படை, யாழ் நகரை நோக்கிப் பலமுனைகளில் முன்னேறத் தொடங்கிவிட்டது என்ற செய்தியை குடாநாடெங்கும் உள்ள மக்கள் அறிந்து கொண்டனர்.
எனினும் ஒன்றுக்குப் பின் ஒன்று முரண்பாடான தகவல்கள் பரவ ஆரம்பித்தன.
வீடுகளில் இருப்பது பாதுகாப்பில்லை என்பது மக்களுக்குத் தெரிந்தவுடன், அவர்குள் கோவில்களையும், பாடசாலைகளையும் நோக்கி ஓடினார்கள்.
எங்கும் பீதி நிலவியது. துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்கும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி தலைதெறிக்க ஓடினார்கள்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்களின் அழகானதும், தூய்மையாகப் பராமரிக்கப்பட்டதுமான கோவில்களில் ஒன்று நல்லூர் கந்தசாமி கோயில்.
வருடா வருடம் திருவிழா நடைபெறுவதற்கு முன்னர் புதிய கட்டிட வேலைகள் நடைபெறும். அதற்கேற்ப வருமானமும் உள்ள கோயில் அது. நல்லூர்க் கந்தனை பணக்காரக் கந்தன் என்றும் கூறுவார்கள்.
நல்லூர் கந்தசாமிக் கோவிலுக்குள் அகதிகள் புகுந்தனர். ஆயிரமாயிரமாக அகதிகள் அங்கு தஞ்சமடைய ஆரம்பித்தனர்.
கிட்டத்தட்ட 25 ஆயிரம் அகதிகள் நல்லூர்க் கந்தசாமி கோவிலுக்குள் அடைக்கலமாகினர்.
கோயிலுக்குள் தான் சமையல் எல்லாம். சிலர் மாமிசம் சமைத்த போது பிரச்சனைகள் ஏற்பட்டன. நல்லூர் கோவில் நிர்வாகத்தினர் மாமிசம் சமைக்க வேண்டாம் என்று கூறினார்கள்.
அவ்வாறு கூறிய போது அகதிகள் சிலர் நிர்வாகத்தினரை கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்துவிட்டனர். விட்டால் போதும் என்று நிர்வாகத்தினர் ஓட்டம் பிடித்தனர்.
அது போதாது என்று அகதிகளுக்குள் சிலர், தாம் உயர்ந்த சாதியினர் என்பதால், தமக்கு தனியான இடம் தர வேண்டும் என்று கேட்டதுதான் பெரிய வேடிக்கை.
கோவிலின் சுற்றுப் புறங்களில்தான் மலசலம் கழிக்கப்பட்டது. மழை வேறு கொட்டிக் கொண்டிருந்தது. அதனால் சுற்றுப் புறமெங்கும் நரகலாகி நாற்றம் அடிக்கத் தொடங்கியது.
யாழ்ப்பாணத்தில் இந்தியப் படை காலத்தில் உருவான அகதி முகாம்களில் மிகவும் பெரியது நல்லூர் கந்தசாமிக் கோயில் அகதி முகாம்தான்.
படை முன்னேற்றம்
அக்டோபர் 17ம் 18ம் திகதிகளில் இந்தியாவிலிருந்து மேலும் படைப்பிரிவுகள் வந்து சேர்ந்தன.
கோப்பாயில் புலிகளின் கடும் பதிலடியால் இந்தியத் துருப்புக்கள் முன்னேற முடியாமல் நின்றன.
இந்தியாவில் இருந்து வந்திறங்கிய சூட்டோடு சூடாக புதிய படைப்பிரிவுகள் களத்துக்கு அனுப்பப்பட்டன.
எங்கெல்லாம் புலிகளின் எதிர்ப்பால் இந்தியத் துருப்புகள் முன்னேற முடியாமல் தடைப்பட்டு நின்றனவோ, அங்கெல்லாம் உதவிக்காக மேலதிகப் படைகள் அனுப்பப்பட்டன.
யாழ் குடாநாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை மூவாயிரம்தான் என்று இந்தியப் படை அதிகாரிகள் கணிப்பிட்டிருந்தனர்.
அக்டோபர் 10ம் திகதி சண்டை தொடங்கும்போது யாழ் குடாநாட்டில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் இந்தியப் படையினர் இருந்தனர்.
மூவாயிரம் பேர் என்று தாம் மதிப்பிட்டிருந்த புலிகளை எதிர்த்து சண்டையிட 20 ஆயிரம் படையினர் போதாது என்று மேலும் புதிய படைப்பிரிவுகளைத் தருவித்தனர்.
புதிதாக வந்திறங்கிய படைகளுக்கு எவ்வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை. பொது மக்களின் இழப்புக்களைத் தவிர்க்குமாறு சொல்லியனுப்பக்கூட இந்தியப் படைத் தளபதிகளுக்கு நேரம் இருக்கவில்லை.
மக்களைப் பற்றி அக்கறைப் படுவதைவிட யாழ் நகரை விரைவாகக் கைப்பற்றுவதுதான் இந்தியப் படை அதிகாரிகளின் ஒரே நோக்கம்.
ஒரு சிறு கெரில்லாக் குழுவை எதிர்த்து நீண்டநாள் சண்டையிடவேண்டியிருந்தால் இந்திய இராணுவத்தின் கௌரவம் என்னாவது?
நாலு நாட்களில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிடலாம் என்று நினைத்தது நிறைவேறவில்லை என்பதும் இந்தியப் படை அதிகாரிகளுக்கு பெரும் கௌரவப் பிரச்சினையாக மாறியிருந்தது.
புதுடில்லியில் இருந்து கேட்கும் கேள்விகளுக்கும் பலாலியில் உள்ள இந்தியப் படை அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும்.
இந்தியாவின் கௌரவம், இந்தியப் படை அதிகாரிகளின் கௌரவம், இந்தியப் படையின் கௌரவம் என்று பல்வேறு கௌரவப் பிரச்சினைகளும் மூர்க்கத்தனமான ஒரு தாக்குதலுக்குத் தூண்டுகோலாக அமைந்தன.
புலிகள் தாக்குதல்

மக்கள் வெளியேறியதால் காலியான வீடுகள் பலவற்றை புலிகள் தமது பாதுகாப்பு அரண்களாகவும், பதுங்குமிடங்களாகவும் மாற்றிக் கொண்டனர்.
மக்கள் நடமாட்டமே இருக்காது, வீடுகள் அமைதியாக இருக்கும். குறிப்பிட்ட வீடுகளைப் படையினர் தாண்டிச் செல்லும் போது பின்புறமிருந்து புலிகள் திடீரென்று தாக்குவர்.
அமைதியாக இருந்த வீடுகளுக்குள் இருந்து புலிகளின் துப்பாக்கிகள் சீறிக் கொண்டிருக்கும்.
ஆரம்ப கட்டத்தில் இவ்வாறான தாக்குதல்களால் இந்தியப் படைகள் நிலை குலைந்து போயின. சுடப்பட்டு வீழ்ந்தன.
சில வீடுகளுக்குள் பெண்கள் மட்டுமே தனியாக இருந்தனர். வீட்டுக்குள் பிரவேசித்த படையினருக்கு பெண்களைக் கண்டதும் சபலம் தட்டிவிடும்.
வீட்டுக்கதவை மூடிவிட்டு பெண்களை நெருங்குவர் படையினர்.
திடீரென்று அப் பெண்கள் மத்தியில் இருந்து துப்பாக்கிகள் சீறும். உள்ளே புகுந்த அத்தனை படையினரும் கொல்லப்படுவர்.
இவ்வாறான தாக்குதல் உத்திகளையும் புலிகளின் பெண்கள் படைப்பிரிவு சில பகுதிகளில் மேற்கொண்டது.
வீடுகளுக்குள் இருந்தும், பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருந்தும் புலிகள் தாக்குவார்கள் என்பது இந்தியப் படையினருக்குத் தெரிந்துவிட்டது.
அதனை எப்படிச் சமாளிப்பது என்பது இந்தியப் படையினருக்கு தெரியவில்லை. வீடுகளையும் கட்டிடங்களையும் நோக்கிப் பீரங்கித் தாக்குதல் தொடுப்பதுதான் சரி என்று தீர்மானித்தனர்.
புதிதாக வந்து சேர்ந்த படைப்பிரிவினருக்கு புலிகளும் ஒன்றுதான்: மக்களும் ஒன்றுதான். யாழ் குடாநாடு என்பது எதிரிகளின் பிரதேசம். கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளத் தொடங்கினார்கள்
யாழ் குடாநாட்டில் மோதல்கள் உக்கிரமான போது புலிகளின் முக்கியமான தலைவர்கள் அங்கிருந்து வெளியேறி வன்னி நோக்கிச் சென்றனர்.
யாழ் குடாநாட்டில் இருந்து புலிகள் வெயியேறாமல் தடுப்பதற்காக கடலோரப் பகுதிகளில் விமானக் குண்டுவீச்சுக்கள் நடத்தப்பட்டன.
கடற்கரையோரமாகக் காணப்பட்ட படகுகள் குண்டு வீச்சுக்களால் அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்ட படகுகள் பல மீனவர்களுக்குச் சொந்தமானவை. புலிகளின் படகுகள் தான் அழிக்கப்பட்டன என்று இந்தியப் படை சொல்லிக் கொண்டிருந்தது.

நல்லூரில் படைகள்
கோப்பாயிலிருந்து இருபாலை நோக்கி முன்னேறிய இந்தியப் படையினர் அங்கிருந்து நல்லூரை நோக்கி நகரத் தொடங்கினார்கள்.
பிரதான வீதிகளில் புலிகள் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருந்தனர்.
அதனால் குறுக்குப் பாதைகள் வழியாக நல்லூரை சென்றடைய இந்தியத் துருப்புக்கள் திட்டமிட்டன.
உரும்பிராய் ஊடாக கோப்பாய் வடக்கு, கோப்பாய் தெற்கு வழியாக யாழ்ப்பாணம் நோக்கி முன்னேறிய படைப்பிரிவுக்கு பிரிகேடியர்கள்
ஜே.எஸ்.டிலானும், சாமோ ராமும் தலைமை தாங்கினார்கள்.
அக்டோபர் 19ம் திகதி மேலும் ஒரு படைப்பிரிவு உதவிக்கு வந்த பின்னரே நல்லூரை நோக்கி அவர்கள் முன்னேற ஆரம்பித்தன.
இரு பாலையில் சில பொது மக்களை பணயக்கைதிகளாகப் பிடித்தனர் இந்தியப் படையினர். நல்லூருக்குச் செல்லும் குறுக்குப் பாதைகள் பற்றிய தகவல்கள் அந்தப் பொது மக்களிடம் இருந்தே பெறப்பட்டன.
இருபாலையில் இருந்து பருத்தித்துறை வீதிவழியாகச் செல்லாமல், புதிய செம்மணிப் பாதை வழியாக இறங்கி, ஒழுங்கைகள் மூலமாக நல்லூரை நோக்கி முன்னேறினார்கள்.
நல்லூரை நோக்கி முன்னேறும் படைப்பிரிவைத் தடுத்து நிறுத்த புலிகள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தனர்.
அதே வேளை மற்றொரு படைப்பிரிவு நாவற்குழியில் இருந்து ரயில் பாதையோரமாக முன்னேறி அரியாலைக்குள் புகுந்தது.
நாவற்குழியில் இருந்து அரியாலைக்கு வந்து சேர அப் படைப்பிரிவுக்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டன.
புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தமையால் மிக மெதுவாகவே முன்னேறினார்கள்.
சுற்றி வளைப்பு
அரியாலைச் சந்தியில் புலிகள் பதுங்கு குழிகளை அமைத்து இந்தியப் யடையினரின் முன்னேற்றத்தை தடுத்து சண்டையிட்டனர்.
அரியாலைச் சந்தி வழியாக முன்னேறும் போது ஒரு படைப்பிரிவு போக்குக் காட்டிக் கொண்டிருந்தது.
இதே நேரம் இன்னொரு படைப்பிரிவு பிரதான பாதைக்கு இருபுறமும் காணப்பட்ட தென்னந்தோப்பு வழியாக இரவோடு இரவாக மெதுவாக நகர்ந்து புலிகளின் அரியாலைக் காவலரணைச்சுற்றி வளைத்தது.
முன்புறமிருந்து தாக்குதலை எதிர்பார்த்திருந்த புலிகள் பின்புறமிருந்து தாக்கப்பட்டனர். எப்பக்கம் இருந்து படைகள் வருகின்றன என்பதை உடனடியாக ஊகிக்க முடியவில்லை.
அதனால் அரியாலை காவலரணை விட்டு புலிகள் பின்வாங்கினார்கள்
அக்டோபர் 18ம் திகதி இரவு அரியாலை இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் வந்தது.
அரியாலையிலிருந்து துரிதகதியில் முன்னேறத் தொடங்கிய இந்தியப் படைகள் மீது புலிகள் ரொக்கட் லோஞ்சர்களால் தாக்கினார்கள்.
இந்தியப் படை முன்னேறிச் சென்று கொண்டிருந்த போது புலிகள் திடீரென்று தமது உத்தியை மாற்றிக் கொண்டனர்.
முன்னேறும் படையினரை நோக்கி எதிர்த்தாக்குதல் தொடுக்காமல் முன்னேற அனுமதித்தனர். படையினர் முன்னேறும் போது பின்புறமிருந்து புலிகள் தாக்கத் தொடங்கினார்கள்.
வீடுகள் ஊடாக பதுங்கி வந்து இரவோடு இரவாக புலிகள் தாக்குதல் நடத்தியதில் இந்தியப் படையின் பின்வரிசை பலத்த இழப்புக்களைச் சந்தித்தது.
எங்கிருந்து புலிகள் தாக்கிவிட்டு மறைகிறார்களோ அப்பகுதியில் உள்ள வீடுகள் இந்தியப் படையினரால் தகர்க்கப்பட்டன.
சில வீடுகளுக்குள் புகுந்த இந்தியப் படையினர் அங்குள்ள பொருட்களையெல்லாம் ஒரே இடத்தில் குவித்து வைத்து தீயிட்டு விட்டுச் சென்றனர்.
வீடுகளுக்குள் இருந்த சைக்கிள்கள், மோட்டர் சைக்கிள்கள், கார்கள் போன்றவையும் அடித்து நொறுக்கப்பட்டன. தீயிட்டும் எரிக்கப்பட்டன.
அகதி முகாம் மீது
அக்டோபர் இருபதாம் திகதி யாழ் கச்சேரியில் இருந்து முன்னேறிய இந்தியப் படையினர் சரமாரியான ஷெல் தாக்குதலில் ஈடுபட்டனர்.
சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் அகதிகள் நிரம்பிவழிந்தனர். இந்தியப் படையினர் ஏவிய ஷெல் ஒன்று அந்த அகதி முகாமுக்குள் வந்து விழுந்தது.
ஆறு பேர் பலியானார்கள். 20 பேர் படுகாயமடைந்தனர்.
70 வயதான சமாதான நீதவான் எஸ். என். கந்தையா உட்பட ஒரு பாடசாலை அதிபர், அவரது மகனான ஒரு ஆசிரியர் ஆகியோரும் பலியானவர்களில் அடங்குவர்.
அது தவிர வீடுகளில் இருந்த பலரும் ஷெல் தாக்குதல்களால் பலியாகினர்.
சென் ஜோன்ஸ் கல்லூரி மீதும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கும் அகதிகள் இருந்தனர். ஷெல்லடியால் அதிஷ்டவசமாக அங்கு யாரும் பாதிப்படையவில்லை.
அக்டோபர் 21ம் திகதி யாழ்நகரை எப்படியாவது கைப்பற்றிவிடுவது என்று இந்தியப் படையினர் முடிவு செய்தனர்.
ஷெல் அடியால் யாழ் நகரம் அதிர்ந்து கொண்டிருந்தது.
யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் இருந்த அகதி முகாம் மீது ஷெல்கள் விழுந்து வெடித்தன.
ஷெல் அடியால் முகாமுக்குள் இருந்த ஆறுபேர் பலியானார்கள். நாவலர் மண்டப அகதி முகாம்மீதும் ஷெல் தாக்குதல் இடம் பெற்றது. நான்கு பேர் பலியானார்கள்.
அகதி முகாம்களும் தாக்கப்படுகின்றன. படைகள் மூர்க்கத்தனத்துடன் முன்னேறிவருகின்றன என்ற செய்தி பரவத் தொடங்கியது.
அகதிகள் செய்வதறியாது திகைத்தனர். அங்கிருந்து வேறு பகுதிகளுக்குத் தப்பி ஓடுவதுதான் பாதுகாப்பு என்று நினைத்தனர்.
சுண்டிக்குளி அகதி முகாமில் இருந்து தப்பியோடிக் கொண்டிருந்த மக்களை நோக்கி இந்தியப் படையினர் சுட்டுத் தள்ளினார்கள். சிலரைக் கைது செய்து விசாரித்தனர்.
உயிர் தப்பி ஓடுவதாக அவர்கள் கூறியதை படைகள் நம்பவில்லை. சுட்டுக் கொன்று விட்டனர்.
எண்பது வயதான லெஸ்லி சாமுவேல் என்ற முதியவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அக்டோபர் 21ம் திகதி – தீபாவளி தினத்தை யாழ்ப்பாண மக்கள் மறக்கவே மாட்டார்கள்.
தீய அசுரன் ஒழிந்தநாள்தான் தீபாவளி என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். அக்டோபர் 21ம் திகதி 1987ல் தீபாவளிதினம் அதற்கு நேர் மாறாக அமைந்தது.
யாழ் நகரை கைப்பற்றிய இந்தியப் படையினர் யாழ் மருத்துவமனையில் நடத்திய மனித வேட்டை தீபாவளி தினத்தன்றுதான் நடந்தது.
மருத்துவமனை வேட்டை

யாழ்ப்பாண பொது மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக ‘முறிந்த பனை’ நூலில் விபரமாகப் பதிவு செய்துள்ளனர். அந்த ஆவணத்தில் இருந்து சில பகுதிகள் இவை.
யாழ் நகரை இந்திய இராணுவம் கைப்பற்றும் என்பது சில தினங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
அதனால் ஊழியர்கள் பலர் வேலைக்குச் செல்லாமல் இருந்தனர். ஏனையோர் இந்திய இராணுவம் நியாயமாக நடந்து கொள்ளும் என்று நினைத்து அங்கேயே தங்கி இருந்தனர்.
ஷெல் தாக்குதல்களால் காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்.
மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவியது. அதனால் அறுவைச் சிகிச்சைகள் செய்யமுடியாமல் இருந்தது. மருத்தவமனையின் சவக்கிடங்கில் 70 சடலங்கள் குவிந்து கிடந்தன.
அக்டோபர் 21ம் திகதி – தீபாவளிதினத்தன்று காலை 11 மணியளவில் மருத்துவமனையின் சுற்றுப்பகுதிகள் அனைத்தும் கோட்டையிலிருந்தும், மேலே ஹெலிகொப்டர்களில் இருந்தும் குண்டுவீச்சுக்கு இலக்கானவை.
காலை 11.30 மணியளவில் வெளி நோயாளர் சிகிச்சைப்பிரிவுக் கட்டடத்தின் மீது ஒரு ஷெல் விழுந்தது.
பிற்பகல் 1.00 மணியளவில் சாந்தி தியேட்டர் ஒழுங்கை முனையில் இந்தியத் துருப்புக்கள் காணப்பட்டன. பிற்பகல் 1.30 மணிக்கு 8ம் நம்பர் வாட்டில் ஒரு ஷெல் விழுந்தது. ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
நிலவரத்தைக் கண்டறிய மருத்துவ நிபுணர் ஒருவர் இன்னொரு வைத்தியருடன் வெளியில் சென்றார்.
மருத்துவமனை வளவுக்குள் இருந்து ஆட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள் என்பதைக்காட்டும் வகையில் காலியான ரவைக்கூடுகள் சில அங்கு விழுந்து கிடந்ததை அவர் பார்த்திருக்கிறார்.
பிற்பகல் 2.00 மணிக்கு ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் மருத்துவமனை வளவுக்குள் நிற்பதை அவர் கவனித்திருக்கிறார்.
பின்னர் அவர் டாக்டர் கணேசரத்தினத்தையும் அழைத்துக் கொண்டு சென்று புலிகள் அங்கு நிற்பதால் ஆஸ்பத்திரிக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதனை ஏற்றுக் கொண்டு புலிகள் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
அவர்கள் சென்று ஐந்து நிமிடத்திற்குள் மற்றொரு புலிகள் அணி ஆஸ்பத்திரி வளவுக்குள் வந்தது. ஒரு பெண் டாக்டரும், இன்னொரு டாக்டரும் சென்று புலிகளுடன் பேசினர்.
புலிகள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.

பிற்பகல் நாலு மணியளவில் ஆஸ்பத்திரி வீதியில் பெட்ரோல் ஷெட் பக்கம் இருந்து 15-20 நிமிஷங்களுக்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பிச் சுடும் சத்தம் எதுவும் கேட்கவில்லை.
“அந்தச் சமயத்தில் எங்கள் அறிவுக்கெட்டிய வரை ஆஸ்பத்திரிக்குள் எந்தப் புலிகளும் இல்லை” என்று அந்த மருத்துவ நிபுணணர் கூறினார்.
யாழ் மருத்துவனையின் கேற் வழியாக இந்திய இராணுவம் உள்ளே புகுந்தது.
உள்ளே புகுந்த இராணுவம் கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கியது.
அதன் பின்னர் தான் மருத்துவ மனைக்குள் நெஞ்சை உலுக்கும் படுகொலை வேட்டை ஆரம்பமானது.

No comments:

Post a Comment