அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 110

இந்திய அமைதிப்படை நடத்திய கொலை வேட்டை!! : உரும்பிராயில் பிணக்குவியல்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 110)


புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட மேலும் துருப்புக்களை உடனடியாக அனுப்பிவைக்குமாறு இந்திய அமைதிப்படைத் தளபதி திபீந்தர் சிங் புதுடில்லிக்கு அறிவித்திருந்தார்.
அந்தப் படைப்பிரிவுகள் வந்து இறங்கும்வரை காத்திருக்க முடியாது. காத்திருந்தால் தமது பிரதான தளங்களுக்குள் புலிகள் ஊடுருவி விடலாம் என்று நினைத்தனர் இந்தியப் படை அதிகாரிகள்.
யாழ் கோட்டை முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினரை முன்னேறவிடாமல் புலிகள் கடும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.

அதனால் பலாலியிலிருந்து முன்னேறும் துருப்புக்கள் தான் யாழ் கோட்டை முகாமை சென்றடைய வேண்டும்.
அந்தத் துருப்புக்கள் முன்னேறி கோட்டைக்குச் செல்லும்வரை கோட்டையில் இருந்த துருப்புக்கள் தற்காப்புத் தாக்குதல் மட்டுமே நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது.
பலாலியிலிருந்து தரைப்பாதை வழியாக முன்னேறும் துருப்புக்களில் ஒரு பகுதியினர் கடற்கரையோரப் பகுதிகள் ஊடாகவும் யாழ் நகரை நோக்கி முன்னேறினர்.
கடற்பாதையூடாக துருப்புக்களை ஏற்றிச் சென்று யாழ் நகருக்கு அருகே தரையிறக்கி அதிரடித்தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டது.
முன்னேறும் துருப்புக்களுக்கு உதவியாக இந்திய விமானப்படை விமானங்களும், ஹெலிகொப்டர்களும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தன.
இலங்கைப் படை உதவி
யாழ் குடாநாட்டின் பூகோள அமைப்பபைக் கண்டறியவும், அதற்கேற்ப இராணுவ நடவடிக்கைக்குத் திட்டமிடவும் இந்தியப் படையினர் தகவல் திரட்டிய முறைகள்:
1. பூகோள வரைபடங்கள்
2. விமானம் மூலமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
3. உளவு நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட தகவல்கள்
4. இலங்கைப் படையினரின் உதவி.
மிகவும் ஆச்சரியமான விடயம் நாலாவதுதான்.
எந்தப் படையினரின் இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரி இந்தியா தலையிட்டதோ, அதே படையினரின் உதவியை இந்தியப் படையினர் பெற்றுக் கொண்டனர்.
இலங்கைப் படையினரின் ‘ஒப்ரேஷன் லிபரேஷன்’ நடவடிக்கையை நிறுத்தச் செய்தது இந்தியத் தலையீடு.
இதே இந்தியாவின் படைகள் ‘ஒப்ரேஷன் லிபரேஷன்’ நடவடிக்கையை ஆரம்பித்தபோது இலங்கைப் படையினரின் உதவியை தமக்கு வழிகாட்டிச் செல்வதற்கு பயன்படுத்திக் கொண்டனர்.
‘ஒப்ரேஷன் லிபரேஷன்’ இராணுவ நடவடிக்கையில் பங்குகொண்ட இலங்கை இராணுவத்தினரில் சிலரைத் தான் தம்மோடு வழிகாட்டிகளாக இணைத்துக் கொண்டனர் இந்தியப் படையினர்.
‘ ‘ஒப்ரேஷன் லிபரேஷன்’ நடவடிக்கையில் முன்னேறிய அனுபவம் இருந்தமையால், எப்பாதைகள் ஊடாகச் செல்ல முடியும் என்ற விபரங்கள் இலங்கைப் படையிருக்குத் தெரிந்திருந்தது.
இலங்கை இராணுவத்தினரில் சிலரையும் தம்மோடு இணைத்துக் கொண்ட விபரத்தை இந்தியப் படையினர் மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தனர்.

அந்த விடயம் வெளியே தெரியுமானால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களிடம் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள தமிழர்களிடமும் புலிகளுக்கு ஆதரவான உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் ஏற்படும்.
இலங்கைப் படையுடன் இணைந்து இந்தியப் படை – தமிழர்களை வேட்டையாடுகிறது என்னும் பிரசாரம் தீயாகப் பரவிவிடும்.
‘பஸ்செங்கியா’
எனினும் அக்டோபர் 16ம் திகதி உரும்பிராயில் நடைபெற்ற ஒரு மோசமான சம்பவத்தின் போது உண்மை வெளிப்பட்டது.
இந்தியப்படைக்கால சம்பவங்கள் ‘முறிந்த பனை’ என்னும் நூலில் மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உரும்பிராயில் அக்டோபர் 16ம் திகதி நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக ‘முறிந்த பனை’நூலில் தரப்பட்டுள்ள தகவல்கள் கீழே வருகின்றன.
“16ம் திகதி இந்திய இராணுவத்தின் பிரதான படை, பிரதான வீதியைச் சுற்றிக் கொண்டு உரும்பிராய்க்குள் நுழைந்தது.
கவச வாகனங்களைப் பின் தொடர்ந்து வந்த இராணுவ வீரர்கள் தாங்கள் சென்ற வழிகளில் போகிற போக்கில் கண்டபடி சுட்டுக் கொண்டு சென்றனர்.
இலங்கை வானொலி தேசிய சேவையில் தன் இளம் வயதில் மிகப் பிரபலமானவராக விளங்கியவர் ரேடியோ நடராஜா.
எல்லாத் தமிழர்களையும் போலவே அவரும் இந்தியா மீது மிகுந்த அபிமானம் வைத்திருந்தார்.
இந்தியர்கள் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்றும், அவர்களுக்கு விஷயங்களை விளக்கிச் சொல்ல முடியும் என்றும் அவர் நம்பிக்கொண்டிருந்தார்.
இந்தியத் துருப்புக்கள் அவரது வீட்டுக்கு வந்தபோது அவருடன் அவரது மனைவியும், மகனும் இருந்தனர். இந்தியப் படை அதிகாரியோடு பேசுவதற்காக நடராஜா வாசலுக்குச் சென்றார்.
இந்தியப் படையினர் அவரை விசாரித்தனர்.
தனது மகனும் தன்னுடன் இருப்பதாக அவர் கூறினார். மகனையும் வருமாறு கூப்பிட்டார்.
உள்ளே இருந்த நடராஜாவின் மகன் வெளியே வருவதற்காக எழுந்து நின்று சட்டை அணிந்துகொள்ள முற்படுவதை ஜன்னல் ஊடாகக்
கண்ட ஒரு சிப்பாய் சுடத் தொடங்கினான்.
நடராஜாவின் மகன் விழுந்து தரையோடு படுத்துவிட்டதால் சூடுபடவில்லை.
ரேடியோ நடராஜா பிணமாக வீழ்ந்தார்.
இரண்டு தடவை துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதால் தனது கணவரையும், மகனையும் சுட்டுவிட்டார்கள் என்று நினைத்தார் திருமதி நடராஜா.
பயத்தில் பின்புற வேலி வழியாக திருமதி நடராஜா தப்பி ஓடுவதைக் கண்ட ஒரு சிப்பாய் கத்தினான்.
‘பஸ்செங்கியா’ (பின்னால் ஓடுகிறாள்)
உரும்பிராயில் இலங்கை ராணுவப் படையினரும் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதற்கான முதல் அறிகுறி அதுதான். காதில் விழுந்த உரையாடல்
அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த சாந்தி என்பவர் உரும்பிராய் சந்திக்கு அருகில் இருந்த தன் இல்லத்தில் தங்கியிருந்தார்.
16ம் திகதி பெரும் குண்டுவீச்சுச் சத்தம் கேட்டதும் தாயும் மகனுமாய் தங்கள் நாயுடன் ஒரு கட்டிலுக்கு அடியில் சென்று பதுங்கியிருந்தனர்.
மறுநாள் காலை துப்பாக்கிச் சூடு ஓரளவு அடங்கும் வரை காத்திருந்தனர்.
எல்லாம் அடங்கிவிட்டது போல் தெரிந்த நேரத்தில் தாய் வெளியே வெளியே வந்து கதவைத் திறந்தார். பொறுமை இழந்து போயிருந்த அவர்களுடைய நாய் வெளியே குதித்தோடியது.
அந்த ஒழுங்கையில் டாங்கி ஒன்று நின்றது. நாய் குதித்தோடி வந்த சத்தம் கேட்டதும் டாங்கியிலிருந்து சுடத்தொடங்கினார்கள்.
நாய் விழுந்து செத்தது. கதவைத் தாழிட்டு அவர்கள் மீண்டும் கட்டிலுக்கு அடியில் புகுந்து கொண்டனர்.
அச்சமயம் வெளியில் நின்று பேசிக் கொண்டவர்களின் உரையாடல் அவர்கள் காதில் விழுந்தது.
சிங்களத்தில் ஒரு குரல்: “மே பரன கெதர: கடான்ட அமாரு: மோட்டார் எக்க உஸ்ஸண்ட” (இது பழைய வீடு, உடைப்பது கடினம், ஒரு மோட்டார் அடி)
சூடு சூடு
16ம் திகதியில் இருந்து உரும்பிராய் வாசிகள் பலத்த லெஷதாக்குதலையும், துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ள வேண்டியதாகியது.
அக்டோபர் 18ம் திகதி ஒரு ஞாயிறு அன்று உரும்பிராயில் உள்ள இந்துக் கோயில் அருகே கண்ணிவெடித் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.
உரும்பிராய் சந்தியில் இருந்து வடக்கே அரை மைலுக்கும் முக்கால் மைலுக்கும் இடையே வசித்து வரும் 66 வயது மனிதர் ஒருவர், மக்கள் கண்டபடி சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டதாகத் தெரிவித்தார்.
காலை 5.45க்கும் 6.00 மணிக்கும் இடையில் தனது வீட்டு ஒழுங்கை வழியாக இந்திய இராணுவ வாகனங்கள் வந்து கொண்டிருப்பதை அவர் கண்டிருக்கிறார்.
அவர்கள் கண்ணில் கண்டதையெல்லாம் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.
பின் அவர்கள் அவருடைய வீட்டு வளவுக்குள் நுழைந்து முன்வாசல் கதவின் பூட்டை நோக்கிச் சுட்டிருக்கிறார்கள். கதவு உட்பக்கத்திலும் பூட்டப்பட்டிருந்ததால் அசைந்து கொடுக்கவில்லை.
பின் அந்த இராணுவ வீரர்கள் இரண்டு மாடிகளில் ஜன்னல் கண்ணாடிகளை நோக்கிச் சுட்டனர். பின் அவர்கள் அந்த வீட்டை விட்டுவிட்டு அதற்கு எதிரில் இருந்த வீட்டுக்குள் நுழைந்தனர்.
இந்த வீட்டில் நான்கு பெண்கள் இருந்தனர்.
அவர்களில் மூத்தவருக்கு 93 வயதிருக்கும்.
இளைய பெண்ணுக்கு ஏறத்தாழ 25 வயதிருக்கலாம். 93 வயது மூதாட்டி படுத்தபடுக்கையாக இருந்தார்.
இந்திய இராணுவம் முதலில் அவரைச் சுட்டது. மற்றவர்களின் சடலங்கள் வீட்டுப்பின் தோட்டத்தில் காணப்பட்டன.
அவர்கள் தப்பித்து வெளியே ஓடிச்செல்ல முயலும்போது சுடப்பட்டிருக்க வேண்டும். மறுநாள் 19ம் திகதி திங்கட்கிழமை அந்தச் சடலங்களைப் புதைத்தவர்தான் அந்தக் கதையை எங்களுக்குச் சொன்னார்.
வெள்ளைக் கொடியுடன்
உரும்பிராய் சந்திக்கு வடக்கே ஐம்பதுயார் தொலைவில் இலங்கைத் திருச்சபைக்கு எதிரே இருந்த வீடொன்றுக்குள் இந்திய இராணுவம் நுழைந்தது.
அந்த வீட்டுக்காரர்களும், வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்தவர்களுமாய் அந்த வீட்டில் பதினொரு பேர் தங்கியிருந்தனர்ஃ
வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே வருமாறு இந்தியப் படை அழைத்தது. வீட்டுச் சொந்தக்காரரான பொன்னம்பலம் வெள்ளைக் கொடியை ஏந்திக்கொண்டு முன்னேவர, வீட்டுக்குள் இருந்தவர்கள் அவர் பின்னால் வந்தனர்.
‘சுடுங்கள்’ என்று உத்தரவு பிறப்பிக்கப்படுவதை பொன்னம்பலம் கேட்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் நின்றவர்கள் தரையில் சாதிந்து கொண்டிருந்தனர். அவர்களில் பஞ்சரத்னம் என்னும் பள்ளியாசிரியரும் ஒருவர். கணவர் சூடுபட்டு விழுவதைக் கண்ட மனைவி ‘ஐயோ’ என்று கதற, அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பாடசாலை மாணவியர் தலைவியாக இருந்த பதினாறு வயதான பிரேமா சின்னத்துரையும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிரேமாவின் தாய் திருமதி சின்னத்துரையை ஒருவாறும் சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அந்தத் தாயின் கண் எதிரிலேயே பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த அவரின் அன்பு மகள் கொல்லப்பட்டாள்.
அவர்களின் வீடு உரும்பிராய் சந்திக்கு அண்மையில் இருந்தமையால், அது அவ்வளவு பாதுகாப்பானதல்ல என்பதால்தான் தனது மனைவியையும் மகளையும் பொன்னம்பலம் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் சின்னத்துரை.
அவர் மட்டும் தனது வீட்டில் இருந்தார்.
சின்னத்துரையை அவரது மனைவி கடைசியாகப் பார்த்தது, அவர் சைக்கிளைத்துடைத்துக் கொண்டிருந்த போதுதான். அவர் கடைசியாகக் கூறிய வார்த்தைகள்: “கவலைப்படாதேயும், அவங்கள் சண்டை பிடிக்க வந்தவங்கள் இல்லை. அவங்கள் அமைதி காக்கும் படையைச் சேர்ந்தவங்கள். நான் அவையளுக்கு விளங்கப்படுத்துவன்.”
மூன்று மாதங்கள் கழித்து அவருடைய எஞ்சிய எலும்புக் கூட்டைத்தான் திருமதி சின்னத்துரை காண முடிந்தது.
திருமதி சின்னத்துரை தனது பேச்சின் நடுவே அடிக்கடி நிறுத்தி மூச்சுத்திணறிக் கூறுவார் “அவையள் சண்டை பிடிக்க வந்த இராணுவம் இல்லை எண்டு அவர் சொன்னாரே!”
அக்டோபர் 20ம் திகதி நிலமை ஓரளவு அடங்கிவிட்டதாகத் தோன்றிய நேரத்தில் காளிகோவிலுக்கு அருகில் ஒரு நிலக் கண்ணிவெடி வெடித்ததில் சில இந்தியப் படையினர் பலியாகினர்.
அதனால் ஏனைய இராணுவ வீரர்கள் வெறிகொண்டவர்கள் போலாகி மக்களை கொன்று குவிக்கத் தொடங்கினார்கள்.
கொல்லப்பட்வாகளில் பெரும்பாலானோர் வயது முதிந்தவர்களும், பெண்களும், குழந்தைகளுமாவர். மற்றவர்கள் அதற்குள் உருமபிராயை விட்டு வெளியேறியிருந்தனர்.
கேர்லி என்ற பெண் தனது வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதனைத் தன் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த கேர்லியின் வயதான தாய் அவரது பக்கத்தில் இருந்து கதறியபடியே துக்கத்தால் உயிர் நீத்தார்.
உப்பிப் போயிருந்த அவர்களின் சடலங்கள் ஒரு மாதத்தின் பின்னரே அவர்களது உறவினர்களால் தகனம் செய்யப்பட்டன.
தொடர் துன்பம்
பல்கலைக்கழக மாணவியான அம்பிகாவின் தாயாரும், பாட்டியும் அவரது வயதான மலையக வேலைக்காரர் ஒருவரும் இறந்த விதம் இன்னொரு சோகக் கதை.
உரும்பிராய் வடக்கில் இருந்த தங்கள் வீட்டில் அம்பிகாவின் தாயும் பாட்டியும் குடும்ப நண்பரான இன்னொரு முதியவருடன் இருந்திருக்கிறார்கள்.
இந்திய டாங்கியொன்று, காலாட் படைப்பிரிவுகள் தொடர்ந்துவர பிரதான வீதியை ஒட்டியிருந்த திறந்தவெளி வழியாக அவர்களின் வீட்டைக் கடந்து சென்றது.
சிறிது நேரம் கழித்து எல்லாம் எல்லாம் போய்விட்டதா என்று பார்ப்பதற்காக அந்த முதியவர் கதவைத் திறக்கச் சென்றிருக்கிறார்.
அவர் கதவைத் திறந்ததுதான் தாமதம் பீரங்கி வண்டிக்குப் பின்னால் இருந்த படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பின் படைவீரர்கள் அந்த வீட்டுக்குள் புகுந்து அம்பிகாவின் தாயாரையும், பாட்டியையும் சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவத்தை நமக்கு விபரித்துச் சொன்னவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு நடுத்தர வயது விதவையாவார். இனி அவரது சொந்தக் கதையைக் கேளுங்கள்.
சம்பவதினத்தன்று தங்கள் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு அவர்கள் உரும்பிராயை விட்டு வெளியேறுவது என்று தீர்மானித்திருந்தனர்.
அந்த வீட்டிலிருந்த மொத்தம் பதினொரு பேருமே இந்தப் பெண்மணியைப் போலவே அகதிகள்தான்.
பிரதான வீதியில் இருந்த தங்கள் வீடுகளை விட்டுவிட்டு இங்கு வந்திருந்தனர். இப்பெண்மணியின் சொந்த வீடு சேதமாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.
அன்று அவர்கள் வெளியேறுவதற்குத் தயாராக இருந்தார்கள்.
பைகளில் எல்லாவற்றையும் போட்டு நிரப்பியிருந்தார்கள். சப்பாத்துக்கள், செருப்புக்கள் எல்லாவற்றையும் வீட்டுக்கு வெளியே வைத்தனர்.
அப்போதுதான் ஏழு அல்லது எட்டு இந்தியப் படை டாங்கிகள் வந்து அந்த வீட்டின் முன்பாக நின்றன. அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
தங்கள் வீட்டு வாசல்வரை சத்தம் வந்து கொண்டிருப்பது அவர்களுக்குக் கேட்டது. கதவை யாராவது வந்து தட்டினால் தாங்கள் வெளியில் போய் அவர்களுக்கு எதையாவது விளங்கப்படுத்தலாம் என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
ஆனால் படையினர் ஆறு பேர்வந்து கதவை உடைத்துத் திறக்க ஜன்னல் ஊடாக இரண்டுமுறை சுட்டார்கள். உள்ளிருந்தவர்கள் பயத்தால் உறைந்து போனார்கள்.
துப்பாக்கிச் சூட்டினால் உடைந்து தெறித்த சில்லுகள் இப்பெண்மணியின் மகன், மகள் மற்றும் இன்னுமொரு பெண்ணையும் காயப்படுத்தின.
பின்னர் அங்கிருந்து இந்தியப் படையினர் சென்றுவிட்டனர்.
அவர்கள் எல்லோரும் போய் முடிந்த பின்னர் அற்தப் பெண்மணி அதே ஒழுங்கையில் சற்றுத் தள்ளியிருக்கும் தன் மைத்துனி வீட்டுக்குச் சென்றார்.
அங்கே அவருடைய மைத்துனி முதுகில் சுடப்பட்டு இறந்துகிடப்பதைக் கண்டார்.
அவளுடைய வயதான மாமியும், அந்த வீட்டில் தங்கியிருந்த கிழவரும் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும் கண்டாள்.
குடும்பமே பலி
அக்டோபர் 20ம் திகதியன்று மட்டும் அதே ஒழுங்கையில் இன்னும் தள்ளி வசித்துவரும் சிவப்பிரகாசம் என்பவர் தனது வீட்டில் இருந்து ஒரு அரை மைல் சுற்றுவட்டாரத்திற்குள் மட்டும் 18பேர் கொல்லப்பட்டதாக ஒரு கணக்கைத் தெரிவித்தார்.
அவர்களில் ஏழு பேர் மட்டுமே ஆண்கள். அவர்களும் அறுபது வயதைக் கடந்தவர்கள்.
நாற்பத்தேழு வயதான வர்த்தகரான இலகுப்பிள்ளை ஏகாம்பரமும் முப்பது வயதான அவர் மனைவி டொரொத்தியும், மூன்று வயது மகள் ஷெரீனும் பலத்த ஷெல் தாக்குதல்களுக்கு இடையில் வீட்டை விட்டு வெளியேற முற்பட்டனர்.
அப்போது இந்தியப் படையினரால் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஏகாம்பரம் வீட்டுக்கு அடுத்தாற்போல் டொரொத்தியின் மைத்துனி திருமதி சீனித்தம்பியின் வீடு இருந்தது. திருமதி சீனித்தம்பி, அவரது தாய், அவரது சகோதரன் மற்றும் ஏழு வயதுக் குழந்தை அனைவருமே சுட்டுக் கொல்லப்பட்டனர். உறவினர்கள் அவர்களது எலும்புக் கூடுகளைத்தான் மீட்க முடிந்தது.
ஒரு கரடு முரடான குழிக்குள் கிறவெல் கற்களால் மூடப்பட்ட நிலையில் ஏகாம்பரம் குடும்பத்தினரது சடலங்கள் கிடந்தன.
அந்த இடத்தை தோண்டி எடுத்த போது ஏகாம்பரம் தனது பிஞ்சுக்குழந்தையை அணைத்துக் கொண்டபடி செத்துக் கிடந்தார்.

No comments:

Post a Comment