அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 108

பரா கொமாண்டோக்களின் பாய்ச்சல்!! : படுகளமான யாழில் பிரபாகரன் முகாம் அமைந்திருந்து பிரம்படி வீதி!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை – 108)


கொமாண்டோக்களின் நகர்வு
கொக்குவில் கிராமசபைக்கு அருகே இருந்த வெளியில் தரை இறங்கிய 103 பரா கொமாண்டோக்களும் செயலில் இறங்கினார்கள்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் இருகே தரையிறங்கிய சீக்கிய கலாட்படையினரின் கதி பற்றிய பரா கொமாண்டோக்களால் அறிய முடியவில்லை.
சீக்கிய காலாட் படையினர் தமது இடத்திற்கு வந்து சேருவார்கள் என்று முதலில் பரா கொமாண்டோக்கள் தாமதித்தனர். மேலும் தாமதிக்க வாய்ப்பில்லாத நிலையில் பரா கொமாண்டோக்கள் செயலில் இறங்கினார்கள்.
அவர்கள் ஒரு வரைபடம் வைத்திருந்தனர். பிரபாகரனின் முகாம் இருந்த பிரம்படி வீதிக்கு அருகே ரயில்வே பாதை இருந்தது.
ரயில்வே பாதையை பிரதான அடையாளமாக வைத்துத்தான் பிரம்படி வீதியைக் கண்டுபிடித்து உள்ளே செல்ல வேண்டும்.
பிரம்படி வீதிக்குள் புகுந்து, அங்குள்ள சிலரை பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்து மிரட்டி, பிரபாகரனின் முகாமைக் காட்டுமாறு கேட்பதுதான் பரா கொமாண்டோக்களின் நோக்கம்.
கொக்குவில் கிராமசபை வெளியில் இருந்து பிரம்படி வீதிவரை வந்து சேருவதற்கு இடையில் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.

அதனால் வீட்டு மதில்சுவர்களால் ஏறிக்குதித்து உள்வழியாக முன்னேறினார்கள் பரா கொமாண்டோக்கள்.
யாழ்பல்கலைக்கழக மருத்துவபீடம் அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின் வேட்டொலிகள் அப்பகுதி மக்களை கிலிகொள்ள வைத்தன.
நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன. அமைதி கெட்டு பயங்கர சூழ்நிலை தோன்றிவிட்டது.
இப்படியான சந்தர்ப்பங்களில் பொதுவாக யாரும் வீடுகளைவிட்டு வெளியே வருவதில்லை. உள்ளேயே பயந்துகொண்டு கதவுகளை இறுக மூடிக்கொண்டு இருந்து விடுவார்கள்.
அதனால் பரா கொமாண்டோக்கள் வீட்டு மதில்களைத் தாண்டி வளவுகள் வழியாக சென்ற பாதை யாரும் பார்க்கவில்லை.
நாய்கள் குரைத்தாலும்கூட வெளியே வந்து பார்க்க யாருக்கும் துணிச்சலில்லை.
புலிகள் வீதிகளில் நடமாடத் தொடங்கிவிட்டனர். ஆயினும் பரா கொமாண்டோக்கள் சென்ற பாதையை அவர்களால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
சாதாரண நேரம் என்றால் நாய்கள் குரைப்பதை வைத்து ஊகித்திருக்கமுடியும். பல்கலைக்கழக மருத்துவபீடம் அருகே வேட்டொலிகள் கேட்கத் தொடங்கியதும் நாய்கள் குரைக்கத் தொடங்கியதால், புதிய நபர்களைக் கண்டுதான் நாய்கள் குரைக்கின்றன என்று ஊகிக்க முடியவில்லை.
வீடு முற்றுகை


ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் நிதானமாகவே பரா கொமாண்டோக்களும் முன்னேறிச் சென்றனர்.
அதிகாலை ஒரு மணிக்கு தரையிறங்கிய பரா கொமாண்மோக்கள் பிரம்படி வீதிக்குள் நுழைந்த போது நேரம் அதிகாலை 4 மணி.
பிரபாகரன் முகாமுக்கு அருகே கிட்டத்தட்ட நூறு யார் தொலைவில் உள்ள ஒரு வீட்டின் கதவு தட்டப்பட்டது.
அது ராஜா என்பவருக்கு சொந்தமான வீடு.
இரவு முழுக்க கேட்ட வேட்டுச்சத்தங்களால் ராஜாவும் அவரது குடும்பத்தினரும் விழித்துக் கொண்டிருந்தனர்.
துப்பாக்கிச் சத்தங்கள் சற்று ஓய்ந்தது போலத் தெரிந்தது. அப்போதுதான் தூங்கலாம் என்று படுக்கைக்குச் சென்றார் ராஜா.
கதவு தட்டப்பட்டதும் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்துவந்தார். கதவைத் திறக்கப் பயமாக இருந்தது.
யார் வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. திறக்காமல் இருந்தாலும் பிரச்சனைதான்.
மெல்லக் கதவைத்திறந்து எட்டிப்பார்த்த ராஜாவின் முகம் எதிரே துப்பாக்கி முனை நீண்டது. சத்தம் போட வேண்டாம் என்று சைகை காட்டியபடியே பரா கொமாண்டோக்கள் சிலர் வீட்டுக்குள் புகுந்தனர்.
ராஜாவின் குடும்பத்தினரை வெளியே அழைத்து, வீட்டை சோதனை போட்டனர். ராஜாவின் வீட்டில் ஒரு படம் மாட்டியிருந்தது.
படத்தைப் பார்த்துவிட்டு பரா கொமாண்டோ வீரர் ஒருவர் கேட்டார் “அது யார் பிரபாகரனா?”
“இல்லையில்லை, குருமகராஜி” என்று சொன்னார் ராஜா.
ராஜாவையும் அவரது குடும்பத்தினரையும் பணயக்கைதிகளாக வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட அரை மணிநேரம் அங்கு தாமதித்தார்கள் பரா கொமாண்டோக்கள்.
மேலிடத்திலிருந்து முக்கிய உத்தரவை எதிர்பார்த்து அவர்கள் தாமதித்திருக்கலாம்.
ஏனெனில் பிரபாகரனைக் கைது செய்து விட்டால் உடனடியாக ஹெலிமூலமாக அவரைக் கொண்டு செல்ல வேண்டும்.
ஹெலி பாதுகாப்பாக தரையிறங்க பாதுகாப்பான தற்காலிக தளப்பிரதேசத்தை ஏற்படுத்த வேண்டும். அனைத்து நடவடிக்கைகளுக்கும் 103 பேர் மட்டும் போதாது.
ஏற்கனவே திட்டமிட்டபடி பிரபாகரனின் முகாமை முற்றுகையிட்டு அவரை பிடிப்பதுமட்டும்தான் கொமாண்டோக்களின் வேலை.
தளப்பகுதி ஒன்றை உருவாக்கி நடவடிக்கை முடியும்வரை அதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சீக்கிய மெதுரக காலாட்படையினரின் பொறுப்பு.
சீக்கிய காலாட்படையினரின் உதவி கிடைக்காமையால், மேலதிக உதவி அனுப்பப்படுமா என்று அறிவதற்கு பரா கொமாண்டோக்கள் தமது மேலிடத்துடன் தொடர்பு கொண்டிருக்கலாம்.
ஆனால் உதவி அனுப்பக்கூடிய நிலையில் மேலிடம் இருக்கவில்லை.
இறுதியாக ராஜாவையும், அவரது மைத்துனரையும் பணயக்கைதியாக்கிக்கொண்டு, பிரபாகரனின் முகாமைக்காட்டுமாறு மிரட்டினார்கள்.
கொமாண்டோக்களோடு ஒத்துழைக்க மறுத்தால் குடும்பத்தையே அழித்துவிடுவார்கள் என்று பயந்தார் ராஜா.
புலிகள் தாக்குதல்
ராஜாவையும், அவரது மைத்துனர் குலேந்திரனையும் தமக்கு வழிகாட்டிக்கொண்டு முன்னே செல்லுமாறு கூறினர் கொமாண்டோக்கள்.
இதேவேளை பிரபாகனின் முகாம் இருந்த பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலிகள் நிலையெடுத்து தயாராக இருந்தனர்.
கொக்குவில் பகுதிக்குள் இன்னொரு படைப்பிரிவு தரையிங்கியுள்ளது என்பது புலிகளுக்குத் தெரியும்.
கொக்குவிலை முற்றுகைக்குள் வைத்திருந்து விடிந்த பின்னர் அப்படைப்பிரிவை முற்றாக அழித்துவிடுவதுதான் புலிகளின் திட்டம்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் அருகே சீக்கிய காலாட் படையினர் தரை இறங்கிய போதே பிரபாகரன் உஷாராகிவிட்டார்.
அதனால் அவர் எப்போதோ முகாமில் இருந்து வெளியேறிச் சென்று விட்டார். முகாமிலிருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களை அகற்றும் பணி அதிகாலை 4 மணிவரை நடைபெற்றது.
பரா கொமாண்டோக்கள் பிரபாகரனின் முகாமை நெருங்குவதற்கு மூன்று மணிநேரம் முன்பதாகவே பிரபாகரன் வெளியேறிவிட்டார்.
பிரபாகரன் வெளியேறிய போதும் அவரது முகாமைச் சுற்றி புலிகளின் பாதுகாப்பு வளையம் இருந்தது.
பிரம்படி ஒழுங்கைக்குள் பிரபாகரனின் முகாம் இருந்த வளைவில் அதிரடிப் படையினர் திரும்பினர்.
அவர்கள் ஒருவர் பின் ஒருவராக நகர்ந்து வருவதை தென்னங்காணி ஒன்றின் தென்னைகளின் பின்னால் இருந்த புலிகள் கண்டுவிட்டனர்.
புலிகளின் துப்பாக்கிகள் சீறத் தொடங்கின. பரா கொமாண்டோ வீரர்கள் மூவர் சூடுபட்டு தரையில் சரிந்தனர். ஏனைய வீரர்கள் தரையோடு படுத்துக் கொண்டு, எங்கிருந்து சுடுகிறார்கள் என்று கவனித்தார்கள்.
வழிகாட்டியாக வந்த ராஜா அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். அருகில் இருந்த வீடொன்றின் பின்னால் மறைந்து கொண்டு உயிர்தப்பினார்.
தென்னைகளின் மறைவில் இருந்து சுட்டுவிட்டு, துப்பாக்கிப் பிரயோகத்தை நிறுத்திய புலிகள், தரையில் படுத்துக் கொண்ட கொமாண்டோக்கள் எழுந்து கொள்ளட்டும் என்று காத்திருந்தனர்.
அதனால் புலிகள் எங்கிருந்து சுட்டானர் என்பதை பரா கொமாண்டோக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
தென்னங்காணிக்கு முன்னால் இருந்த வீடுதான் அவர்கள் பார்வையில் பட்டது. அங்கிருந்துதான் புலிகள் சுடுகிறார்கள் என்று நினைத்துவிட்டனர்.
மோட்டார் தாக்குதல்
தரையில் படுத்திருந்தபடியே சிறிய மோட்டார் மூலமாக அந்த வீட்டைக் குறிபார்த்தனர்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் மெல்ல எட்டிப்பார்த்த வீட்டுக்காரர் பொன்னம்பலம் அதனைக் கண்டுவிட்டார்.
“ஷெல் அடிக்கிறான்கள். கீழே படுங்கோ” என்று கத்திக்கொண்டே விழுந்து படுத்துவிட்டார்.
ஷெல் வீட்டுக்கூரையை உடைத்துக் கொண்டு விழுந்தது. கீழே படுத்துக் கொண்டதால் அவர்கள் உயிர் தப்பினார்கள்.
சண்டை தொடங்கிவிட்டது. ஓடித்தப்ப வேண்டும் என்று அப்பகுதியில் உள்ளவர்கள் பலர் பரபரப்பாகினார்கள்.
தனபாலசிங்கம், கோபாலகிருஷ்ணன் என்னும் இரண்டுபேர் ஒழுங்கைக்குள் வந்து நிலமையை நோட்டமிட்டனர்.
இந்தியப்படை அருகே வந்துவிட்டது. இனிமேல் இங்கிருப்பது ஆபத்து. அதனால் குடும்பத்தினரை வேறு இடத்திற்கு கூட்டச் செல்லவேண்டும் என்று நினைத்தனர்.
அவர்கள் விரைவாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்க, அவர்களைக் கண்டு கொமாண்டோக்கள் சுடத் தொடங்கினார்கள்.
இருவரும் தலைதெறிக்க ஓடி வீட்டுக்குள் புகுந்த போது, அவர்கள் பின்னால் கொமாண்டோக்களும் வந்துவிட்டனர்.
வீட்டுக்குள் இருந்தவர்கள் கைகளை உயர்த்திக்கொண்டும், கை கூப்பிக் கொண்டும் மன்றாடினார்கள்.
அதனைக் கவனிக்கும் நிலையில் கொமாண்டோக்கள் இல்லை. சடசடவென்று சுட்டுத் தள்ளினார்கள்.
தனபாலசிங்கம், கோபாலகிருஷணன், தனபாலசிங்கத்தின் மனைவி, அவர்களின் குழந்தை, அவர்கள் வீட்டில் இருந்த ஜீவா என்னும் பெண்., அவரது ஒன்பது வயது மகன், மற்றும் அங்கிருந்த ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் மட்டும் காயங்களுடன் தப்பினான்.
தம்மைக்காப்பாற்ற வந்திருப்பதாக தமிழர்களால் ஆனந்தக் கண்ணீருடன், ஆலாத்தி எடுத்து வரவேற்கப்பட்ட இந்தியப் படையின் முதல் வேட்டையில் ஒரு தமிழ்க் குடும்பம் அழிந்தது.
பிரம்படி ஒழுங்கைக்குள் இருந்து தப்பி ஓட முற்பட்ட பொதுமக்கள் சிலர் தொடர்ந்து ஓட முடியவில்லை. இந்தியப் படை கிட்டத்தில் வந்துவிட்டது. ஓடுவதை விட, ஒளிந்திருப்பதே பாதுகாப்பு என்று நினைத்துவிட்டனர்.
அதனால் பக்கத்தில் இருந்த வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர்.
வீட்டுக்குள் சுடு
பொழுது விடிந்துவிட்டது. புலிகள் ஆங்காங்கே மறைந்திருந்து தாக்கத் தொடங்கினார்கள். வீட்டு வளவுகள் ஊடாக கொமாண்டோக்கள் முன்னேறியதால் புலிகளால் அவர்களை இலகுவாகத் தாக்க முடியவில்லை.
வீட்டு வளவுகள் வழியாக முன்னேறிய கொமாண்டோக்கள் சந்தேகப்படும்படியான வீட்டுக் கதவுகளைத் தட்டினார்கள்.
அவ்வாறு தட்டப்பட்ட வீடுகளில் ஒன்று மங்கையக்கரசி விசுவலிங்கம் என்பவரது வீடு. வீட்டின் உள்ளே பத்துப் பேர் இருந்தனர். கதவு தட்டப்பட்ட போதும் பயத்தில் அவர்கள் திறக்கவில்லை
கதவை உடைத்துத் திறந்த கொமாண்டோக்கள் அதே வேகத்தில் சுட்டுத் தள்ளினார்கள். உள்ளே இருந்த பத்துப் பேரும் துடிதுடித்தபடி சுருண்டு விழுந்தனர்.
பிரபாகரனைப் பிடிக்க வந்த கொமாண்டோக்கள் இப்போது தமது நோக்கத்தை மாற்றிக் கொண்டனர்.
பிரபாகரனை இனிப் பிடிக்க முடியாது. அங்கிருந்து தப்பிச் செல்வதுதான் இப்போதுள்ள பணி என்று தீர்மானித்துவிட்டனர்.
குடியிருப்புக்கள் மத்தியில் தற்காலிகமான தளம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு, உதவி வரும் வரை காத்திருக்கத் தீர்மானித்தனர்.
வீட்டுக் கூரைகளில் படுத்து நிலை எடுத்துக் கொண்ட கொமாண்டோக்கள், தாம் இருந்த பகுதியை புலிகள் நெருங்கிவிடாமலிருக்கச் ஷெல்களை ஏவிக் கொண்டிருந்தனர்.
ஏற்கனவே பொது மக்கள் பலர் வீடுகளை விட்டு ஓடியதால், கூரைகளைப் பதம் பார்த்த ஷெல்களால் உயிரிழப்புக்கள் இதிகம் ஏற்படவில்லை.
ஓட முடியாமல் இருந்தவர்களும் வீடுகளுக்குள் கட்டில்களின் கீழே படுத்துக்கொண்டனர்.
பிரம்படி வீதியின் முன்பாக உள்ள நந்தாவில் வீதியில் உள்ள வீடொன்றில் குடியிருந்த பாலசுப்பிரமணியம் என்பவரும், அவரது குடும்பத்தினரும் வீட்டுக்கு வெளியே வந்து பனைமரம் ஒன்றின் கீழ் ஒளிந்திருந்தனர்.
வீட்டுக்குள் இருந்தால் ஷெல் அடியால் பலியாக வேண்டியிருக்கும் என்ற பயத்தில் பனைமரத்தின் கீழ் இருந்தனர்.
ஆனால் ஷெல் ஒன்று அங்கும் விழுந்து வெடித்தது. பாலசுப்பிரமணியத்தின் மகன் பலியானார். கா.பொ.த. உயர் வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்தவர் அவர்.
உயிரபயம் தேடி ஓடிய மக்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி நோக்கிச் சென்றனர்.
இந்தியப் படை காலத்தின் முதலாவது அகதி முகாம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உருவாகத் தொடங்கியது.
தொடர்புமையம்
பிரம்படி வீதியில் நைஜீரியாவில் கடமையாற்றிவிட்டு திரும்பிய ஆசிரியரின் வீடு இருந்தது.
வீட்டு ஜன்னல் வழியாக ஒரு துப்பாக்கி முனை உள்ளே நீள்வதை அவர் பார்த்தர். அடுத்ததாக ஒரு முகம் தெரிந்தது.
கதவைத் திறக்குமாறு சைகை மூலம் அந்தக் கொமாண்டோ கட்டளையிட்டார். கதவு திறக்கப்பட்டதும், இன்னொரு கொமாண்டோ வாசலில் நின்று சைகை காட்டினார்.
பத்துப் பதினைந்து கொமாண்டோக்கள் மறைவில் இருந்து வெளிப்பட்டனர்.
பின்னர் வீட்டுக்குள் புகுந்த கொமாண்டோக்கள் ஆசிரியரையும், அவர் மனைவியையும் பிடித்து கைகளைப் பின்னால் கட்டினார்கள். அங்குள்ள ஒரு அறையில் போட்டுப் பூட்டினார்கள்.
பிரம்படி வீதியில் ஒரு பகுதியை பிடித்து வைத்துக் கொண்ட பரா கொமாண்டோக்கள் அந்த ஆசிரியரின் வீட்டைத் தமது தொடர்பு மையம் ஆக்கிக் கொண்டனர்.
அங்கிருந்து கொண்டுதான் மேலிடத்துடன் தொடர்பு கொண்டு தாம் எங்கிருக்கிறோம் என்ற தகவலை சங்கேத மொழியில் தெரிவித்தனர்.
அவர்கள் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்ற வழி நடத்தலும் மேலிடத்திலிருந்து கிடைக்கத் தொடங்கியது.
ஹெலி தாக்குதல்
அதன்பின்னர் ஷெல் அடிகளை நிறுத்திக் கொண்டு, புலிகள் தேடி வந்தால் முற்றுகைக்குள் அவர்களை இழுத்துத் தாக்கலாம் என்று காத்திருந்தனர்.
“உதவி வரும், அதுவரை சமாளித்துக் கொள்ளுங்கள்” என்று பராக் கொமாண்டோக்களுக்கு செய்தி கிடைத்துவிட்டது.
மோதல் ஓய்ந்துவிட்டது. இனிமேல் வீடுகளுக்குச் செல்லாம் என்று பொது மக்கள் சிலர் திரும்பிவந்தனர்.
காத்திருந்த பரா கொமாண்டோக்கள் சற்றும் யோசிக்கவில்லை. சுட்டுத் தள்ளினார்கள்.
கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரிக்குள் புகுந்த பரா கொமாண்டோக்கள் சிலர் அங்கிருந்த மாணவர்கள் சிலரைப் பிடித்து பணயக் கைதிகளாக வைத்திருந்தனர்.
அன்றைய அவலங்களோடு அக்டோபர் 12ம் திகதி கழிந்தது.
புலிகள் முற்றுகையிட்டு நிற்க, பரா கொமாண்டோக்கள் உள்ளேயே இருந்தனர். தரைவழி மூலமாக அவர்கள் வெளியேறிச் செல்ல முடியாது என்றே புலிக் நம்பியிருந்தனர்.
ஹெலிகொப்டர் வந்து தரையிறங்க முடியாமல் தாக்கினால் போதும், பரா கொமாண்டோக்கள் தப்பவே முடியாது என்றே நினைத்தனர்.
அக்டோபர் 13ம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு இந்தியப் படை ஹெலிகொப்டர்கள் கொக்குவில், பிரம்படி பகுதிகளின் மேலாகப் பறந்து துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தன.
ஹெலிதான் தரையிறங்கப் போகிறது என்று நினைத்த புலிகள், அப்பகுதிகளில் ஹெலி தரையிறங்கக் கூடிய இடங்களில் தயாராகக் காத்திருந்தனர்.
ஆனால் இந்தியப் படையின் திட்டம் வேறாக இருந்தது.
புலிகள் எதர்பாராத ஒரு கோணத்தில் பரா கொமாண்டோக்களை மீட்டெடுக்கத் திட்டம் தீட்டினார்கள் இந்தியப் படை அதிகாரிகள்

No comments:

Post a Comment