அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 107

பாராசூட் மூலம் குதித்துக்கொண்டிருந்த இந்தி படையினரை நோக்கி சுட்ட புலிகள்!!: பிணமாய் வீழ்ந்த சீக்கிய படையினர்கள்!! ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 107)


தரையிறக்கமும் முற்றுகையும்
பாராசூட் மூலம் குதித்துக்கொண்டிருந்த படையினரை நோக்கி சுட்ட புலிகள்!! பிணமாய் வீழ்ந்த சீக்கிய படையினர்கள்
‘ஈழநாதம்’, ‘முரசொலி’ ஆகிய பத்திரிகைக் காரியாலயங்கள் இந்தியப் படையினரால் தாக்கப்பட்டன.
புலிகளின் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சி நிறுவனமும் தாக்கப்பட்டது.


புலிகளின் முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்படவில்லை.
அடுத்ததாக தமது முகாம்கள் இந்தியப் படையினரால் தாக்கப்படலாம் என்பதை புலிகள் உணர்ந்து கொண்டனர்.
முதல் தாக்குதல்
“இந்தியப் படையினர் நம்மைத் தேடி வர முன்னர் நாம் இந்தியப் படையினரைத் தேடிச் சென்று தாக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார் பிரபாகரன்.
அக்டோபர் 10ம் திகதி ஊரடங்கு அமுலில் இருந்தது.
புலிகளின் வாகனங்கள் ஆயுதம் தாங்கிய உறுப்பினர்களுடன் யாழ் நகர் நோக்கி விரைந்தன.
யாழ் நகருக்குள் இறங்கிய புலிகள் இயக்க உறுப்பினர்கள் துப்பாக்கிகள், ரொக்கட் லோஞ்சர்கள், மோட்டார்களுடன் இந்தியப் படையினரின் நிலைகளை நோக்கி பதுங்கிப் பதுங்கி முன்னேறிச் சென்றனர்.
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகே துரையப்பா விளையாட்டரங்கில் கொட்டகைகள் அமைத்து இந்தியப்படை வீரர்களில் ஒரு பகுதியினர் தங்கியிருந்தனர்.
யாழ்ப்பாணம் கோட்டை முகாமுக்குள் ஏனையோர் தங்கியிருந்தனர்.
இந்தியப் படைக்கு எதிரான முதலாவது தாக்குதலை ஆரம்பித்தனர் புலிகள்.
துரையப்பா விளையாட்டரங்கில் கொட்டகைகள் தங்கியிருந்த படையினர் மீதுதான் முதல் வேட்டுத் தீர்க்கப்பட்டது.
புலிகளின் துப்பாக்கிகள் சீறத் தொடங்கின.
அங்கிருந்த இந்தியப் படையினர் தம்மீது தாக்குதல் தொடுக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடியே யாழ் கோட்டை முகாமை நோக்கிப் பின் வாங்கினார்கள்.
புலிகளின் திடீர்த்தாக்குதல் காரணமாக இந்தியப்படை வீரர்கள் பலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
பெண் புலிகள் தாக்குதல்
அதே நேரம் இந்தியப் படையின் கவச வாகனம் ஒன்று யாழ் நகருக்குள் இருந்து கோட்டை முகாம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அருகே உள்ள சுப்பிரமணியம் பூங்கா அருகே பெண் புலிகள் அணியொன்று ரொக்கட் லோஞ்சர்களுடன் பதுங்கியிருந்தது.
கவச வாகனம் அருகில் வந்ததும் ரொக்கட் லோஞ்சரால் குறிவைத்தனர். குறிதப்பவில்லை. கவச வாகனம் சிதறியது. அதில் பயணம் செய்தவர்களும் பலியானார்கள்.
யாழ் கோட்டை முகாமிலிருந்து வெளியேறி முன்னேற இந்தியப்படையினர் முயன்றனர்.
புலிகள் வசதியாக பதுங்குநிலை எடுத்துக் கொண்டு கடும் தாக்குதல் தொடுத்தனர். இந்தியப் படையினர் எவ்வளவு முயன்றும் வெளியே வர முடியவில்லை.
யாழ் கோட்டை முகாமை நோக்கி மோட்டார் ஷெல்கள் ஏவப்பட்டன. கோட்டைக்குள் இருந்த இந்தியப் படையினர் பலாலியில் உள்ள தமது தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு உதவி கோரினார்கள்.
அதே நேரத்தில் தெல்லிப்பழையில் நிலைகொண்டிருந்த மெட்றாஸ் ரெஜிமென்ட்மீதும் புலிகளின் இன்னொரு பிரிவினர் தாக்குதல் தொடுத்தனர்.
அத்தாக்குதல் மெட்ராஸ் ரெஜிமென்டைச் சேர்ந்த ஐந்து இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் பத்தாம் திகதி புலிகள் நடத்திய தாக்குதல்களில் 20க்கு மேற்பட்ட இந்தியப்படையினர் கொல்லப்பட்டனர்.
புலிகள் முந்திக் கொள்வார்கள் என்று இந்தியப்படை அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை.
அக்டோபர் பத்தாம் திகதி யாழ்குடா நாட்டில் தமது முகாம்களை விட்டு இந்தியப் படையினரால் வெளியே நகரவே முடியவில்லை.

திபீந்தரின் திட்டம்

பலாலி விமான நிலையமும், காங்கேசன்துறை துறைமுகமும் புலிகளால் தாக்கப்படலாம் என்று கருதினார் தளபதி திபீந்தர் சிங்.
பலாலியில்தான் இந்தியப் படையினரின் ஆயுதக் களஞ்சியம் இருந்தது. உணவு மற்றும் எரிபொருட்கள் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன.
இந்தியாவில் இருந்து மேலதிக துருப்புக்கள் வந்து சேர்வதற்கும், விநியோகங்கள் கிடைப்பதற்கும் விமான நிலையமும், துறைமுகமும் பாதுகாக்கப்பட வேண்டியிருந்தது.
இரண்டையும் புலிகள் தாக்கினால் யாழ்குடாநாட்டில் உள்ள இந்தியப் படையினர் புலிகளின் பொறிக்குள் சிக்கி விடுவார்கள்.
புலிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், அதிர்ச்சிகரமான தாக்குதல் ஒன்றை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார் திபீந்தர் சிங்.
பிரபாகரன் எங்கே தங்கியிருக்கிறார் என்பது இந்தியப் படையினருக்குத் தெரிந்திருந்தது.
தான் தங்கியுள்ள முகாம் இந்தியப் படையினருக்குத் தெரியும். தனது முகாம் மீது இந்தியப் படையினர் தாக்குதல் நடத்துவர் என்பது பிரபாகரனுக்கும் தெரிந்திருந்தது.
படையினர் நிலை
இந்த இடத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.
யுத்தம் ஆரம்பிக்க முன்னர் இந்தியப் படைவீரர்கள் பலர் தாம் இலங்கைப் படையினரிடமிருந்து தமிழர்களைப் பாதுகாக்க அனுப்பப்பட்டதாகவே நம்பியிருந்தனர்.
புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையே நெருக்கமான உறவுகளும் பல பகுதிகளில் நிலவி இருந்தன.
மெட்றாஸ் ரெஜிமென்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் புலிகளுடன் மட்டுமல்லாமல், பொது மக்களுடனும் அன்போடு பழகிவந்தனர்.
புலிகளையோ, தமிழ்மக்களையோ தங்கள் எதிரிகளாக நினைத்து உக்கிரமாகப் போரிடும் மனநிலையில் அவர்கள் இருக்கவில்லை.
யாழ் குடாநாட்டுக்கு இந்தியப் படையினர் வந்துசேர்ந்து இரண்டு மாதங்களானபோதும் யாழ் குடாநாட்டின் புவியியல் அமைப்புத் தொடர்பாக அவர்கள் அறிந்துகொள்ளவும் ஆர்வம் காட்டவில்லை.
யாழ் நகரில் எந்தெந்தக் கடைகளில் வெளிநாட்டுப் பொருட்கள் வாங்கலாம் என்ற விபரங்கள் மட்டும் இந்தியப் படைவீரர்கள் பலரின் விரல் நுனியில் இருந்தன.
இதேவேளை, புலிகளுக்கு எதிராக தாக்குதல் ஒன்றுக்கு விரைவான திட்டம் தீட்டப்படும் தகவலை இந்தியப் படைக்குள் இருந்த தமிழ் அதிகாரிகள் சிலர் புலிகளுக்கு ஜாடைமாடையாகத் தெரிவித்தும் இருந்தனர்.
மேலதிகத் துருப்புக்கள்
இந்திய அமைதிப்படை தளபதி திபீந்தர் சிங்குக்கு இந்த நிலைமைகள் தெரியாமல் இல்லை.
ஏற்கனவே நிலை கொண்டிருந்த இந்தியப் படையினர் தாம் போரிட வேண்டிய பகுதியில் உள்ள மக்களோடும், புலிகளுடனும் இதுவரை உறவாக இருந்தவர்கள்.
எனவே உக்கிரமான ஒரு போருக்கு உடனடியாகத் தயாராக மாட்டார்கள் என்று ஊகித்திருந்தார். அதனால்தான் மேலதிகத் துருப்புக்களை இந்தியாவிலிருந்து தருவிப்பதற்கு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டார்.
புலிகளுக்கு அதிர்ச்சி கொடுப்பதற்கான தாக்குதலுக்கு திபீந்தர் சிங் திட்டமிட்டார்.
அத்தாக்குதலுக்கும் இந்தியாவில் இருந்து அக்டோபர் பத்தாம் திகதி புறப்பட்டுவந்த படைப்பிரிவினரைப் பயன்படுத்தும் வகயிலேயே திட்டம் தீட்டினார்.
பிரபாகனைக் கைது செய்துவிட்டால் அதன் பின்னர் புலிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது கஷ்டமாக இருக்காது என்றே திபீந்தர் சிங் நம்பினார்.
பிரபாகரனைக் கைது செய்தால் தமிழ் நாட்டில் அதன் எதிரொலியாக எதிர்ப்புக்கள் கிளம்பலாம். தமிழக மக்களின் அபிப்பிராயம் இந்திய மத்திய அரசுக்கு எதிராக மாறலாம் என்பதால் இந்தியப் பிரதமரின் கருத்துக் கேட்கப்பட்டது.
ராஜீவ்காந்தி அப்போதுமீது கோபத்தில் இருந்தார். அதனால் பிரபாகரனைக் கைது செய்யப் பச்சைக்கொடி காட்டிவிட்டார்.
பிரபாகரன் தங்கியிருந்த முகாம், கொக்குவிலில் பிரம்படி என்னும் இடத்தில் இருந்தது.
யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து அரைமைல் தூரத்தில் பிரம்படி ஒழுங்கை அழைந்திருந்தது. அதிலிருந்து 200 யார் தொலைவில் இரயில் பாதை அமைந்திருந்தது.
கிறவல் தரையைக் கொண்ட பிரம்படி ஒழுங்கையில் திருநெல்வேலிப் பாதையில் இருந்து வரும்போது முதலாவதாக ஒரு வளைவு எதிர்ப்படும்.
அங்குதான் பிரபாகரன் தங்கியிருந்த முகாம் இருந்தது.
அந்த முகாமை தனது முகாமாகப் பிரபாகன் தெரிவு செய்தமைக்கு காரணம் இல்லாமல் இல்லை.
யாழ் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இருந்தமையால் விமானப்படையினர் குண்டுவீசுவது சிரமம். பல்கலைக்கழகம் பாதிக்கப்படலாம் என்று நினைத்து அப்பகுதியில் தாக்குதல் நடத்தத் தயங்குவர்.
பிரம்படி ஒழுங்கை பல வளைவுகளைக் கொண்டது என்பதால் இலங்கைப் படையினர் ஹெலிகொப்டர்களில் வந்து இறங்கி திடீர் தாக்குதல் நடத்தவும் முடியாது.
அப்படி முற்றுகையிட்டாலும் கூட பிரபாகரனின் முகாமிலிருந்து வெளியேறிச் செல்ல ஆறு பாதைகள் இருந்தன.
1985ம் ஆண்டு டிசம்பர் 21ம் திகதி ஹெலிகொப்டர்களில் வந்திறங்கிய இலங்கை இராணுவத்தினர் புலிகளின் சுதுமலை முகாமைத் தாக்க முற்பட்டதையும், அத்தாக்குதல் முறியடிக்கப்பட்டதையும் முன்னர் விபரித்திருந்தேன்.
மீண்டும் அவ்வாறான ஒரு தாக்குதலை எதிர்பார்த்து அதற்கேற்பவே புலிகளின் பிரதான முகாம்கள் அமைந்திருந்தன.
1985இல் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி பற்றி இந்திய அமைதிப்படை தளபதி திபீந்தர்சிங் அறிந்திருப்பாரோ தெரியாது.
ஆனால் கிட்டத்தட்ட அதே பாணியில்தான் பிரபாகரனைக் கைதுசெய்ய பிரம்படி முகாம் முற்றுகைக்குத் திட்டமிட்டார் திபீந்தர்சிங்.
கிட்டத்தட்ட 15வருட காலம் கெரில்லாப் போராட்டத்திலும், தலைமறைவு வாழ்க்கையிலும் அனுபவம் உள்ள ஒரு தலைவரை மிகச் சுலபமாகப் பிடித்துவிடலாம் என்று திபீந்தர்சிங் – ஒரு பெரும் படைத் தளபதி எப்படிக் கணிப்பிட்டார் – திட்டம் போட்டார்? என்பதுதான் ஆச்சரியம்.
ஆங்கிலச் சினிமாப் பாணியில் திபீந்தர்சிங் முற்றுகைத் திட்டம் போட்டார். அவரது வீரர்கள் களத்தில் சந்திக்கப் போவது சினிமா வில்லன்களையல்ல. நிஜமான கெரில்லாக்களை என்பதை மட்டும் மறந்து போனார்.
பரா கொமாண்டோக்கள்
அக்டோபர் 12ம் திகதி அதிகாலை ஒரு மணிக்கு எம்-18 ஹெலிகொப்டர்கள் நான்கு பலாலி விமானத் தளத்தில் தயாராக நின்றன.
103 பரா கொமாண்டோக்களும் 100 சீக்கிய மெதுரக காலாட் படையினரும் புறப்பட ஆயத்தமாகினர்.
பரா கொமாண்டோக்கள் பிரபாகரனின் முகாமை முற்றுகையிட்டு அவரை கைது செய்ய வேண்டும். சீக்கிய காலாட் படையினர் தரையிறங்கிய பகுதியை தங்காலிக தளப் பிரதேசமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
பிரபாகரனைக் கைது செய்து பரா கொமாண்டோக்கள் அழைத்துவந்ததும் ஹெலிகொப்டர்கள் தரையிறங்கி படையினரையும், பிரபாகரனையும் ஏற்றிச் செல்லும்.
அதுவரை தரையிறங்கிய பகுதியைத் தளப்பிரதேசமாக வைத்திருக்குத் பொறுப்பு சீக்கிய படையினருக்குக் கொடுக்கப்பட்டது.
அதிகாலை 1.15க்கு எம் 18 ஹெலிகொப்டர்கள் இரண்டில் 70 பரா கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டனர். திருநெல்வேலி வீதியும், பிரவுண் வீதியும் இணையும் சந்திக்கு அருகில் கொக்குவில் கிராம சபைக்கு அருகில் இருந்த வெளியில் அவர்கள் தரையிறக்கப்பட்டனர்.
ஹெலிகொப்டர்களின் சத்தங்களைக் கேட்ட புலிகள் உஷாராகிவிட்டனர். புலிகளின் அணிகள் விரைந்து சென்றனர்.
தரையிறக்கத்தில் ஈடுபட்ட ஹெலிகொப்டர்களை நோக்கிப் புலிகள் சுடத் தொடங்கினார்கள். இரண்டு ஹெலிகொப்டர்கள் சூடுபட்டன. சேதத்துடன் திரும்பிப் பறந்தன.
குதிப்பும் – குறியும்
ஹெலிகொப்டர்களை நோக்கி புலிகள் சுடத் தொடங்கியதால் சீக்கிய காலாட் படையினரை ஏற்றிவந்த ஹெலிகொப்டரால் அவர்களை பரா கொமாண்டோக்கள் தரையிறங்கிய பகுதியில் இறக்கிவிட முடியவில்லை.
பரா கொமாண்டோக்கள் தரையிறங்கிய பகுதியில் இருந்து 300 யார் தூரத்தில் இருந்த பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அருகே சீக்கிய காலாட் படையினர் ஹெலியில் இருந்து பாராசூட் மூலம் குதித்துக் கொண்டிருந்தனர்.
பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மூன்று மாடிக் கட்டிடத்துக்குள் புலிகள் புகுந்து கொண்டு வசதியாக நிலையெடுத்துப் பதுங்கிக் கொண்டனர்.
பாராசூட் மூலம் குதித்துக்கொண்டிருந்த படையினரை நோக்கி மிக வசதியாக குறிவைத்துச் சுடத் தொடங்கினார்கள்.
ஹெலியில் இருந்து குதித்து தரையைத் தொடமுன்னரே சீக்கிய படைவீரர்கள் பலர் பிணமாகிவிட்டனர்.
புலிகளின் இராணுவ ரீதியான துரித நகர்வுகளுக்கு மிக முக்கிய காரணம் அவர்களிடம் இருந்த தொலைத் தொடர்பு சாதனங்கள்.
துப்பாக்கிகளை வாங்கிச் சேகரிப்பதில் காட்டிய அதேயளவு ஆர்வத்தை தொலைத் தொடர்பு சாதனங்களை வாங்கிச் சேர்ப்பதிலும் ஆர்வம் காட்டினார் பிரபாகரன்.
இப்போதும் தொலைத் தொடர்பு சாதனங்கள் புலிகளுக்குக் கைகொடுத்தன.
வேறு பகுதிகளில் இருந்த புலிகளின் அணிகளுக்கு உடனடியாக தகவல் பறந்தது.
மருத்துவ பீடத்தின் மாடிக்கட்டிடத்துக்குள் இருந்து ஒரு அணி தாக்குதல் தொடுத்துக்கொண்டே, ஏனைய அணிகளுக்கு வோக்கியில் தகவல் கொடுத்தது.
விரைந்து சென்ற புலிகளின் அணிகள் பல்கலைக்கழகப் பகுதியை நான்கு புறமும் முற்றுகையிட்டன.
பராசூட்டில் இருந்து குதித்தபோது சுடப்பட்டு வீழ்ந்தவர்கள் போக, தப்பிக் கொண்டட ஏனைய சீக்கிய படைவீரர்கள் தரையோடு தரையாகப் படுத்துக் கொண்டே துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு சீக்கிய படைவீரனும் மண்ணைக் கிண்டி அங்கொரு பாதுகாப்பு அரணை உருவாக்கிக் கொள்ளக்கூடிய சிறிய சவளும், சாக்குப்பையும் வைத்திருந்தனர்.
தரையோடு படுத்திருந்தபடி மண்ணைத் தோண்டிய சீக்கிய வீரர்கள் ஏமாந்து போனார்கள்.
கடினமான தரைமைப்புக் கொண்ட பகுதி என்பதால் மண்ணைத்தோண்டி சாக்கில் போட்டு அரண் செய்து கொள்ள முடியவில்லை.
தாம் இறங்கியுள்ள இடம் எதுவென்றும் புரியவில்லை. தரையமைப்பும் புரியவில்லை. நான்கு புறமிருந்தும் புலிகள் வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டிருந்தனர்.
இரண்டு தடவை புலிகள் சுடுவார்கள். “டப்பு, டப்பு.” உடனே சீக்கிய வீரர்கள் சத்தம் வந்த திசையை நோக்கித் தொடர்ச்சியாகச் சுட்டுத் தள்ளுவார்கள்.
புலிகளின் துப்பாக்கிகள் அமைதியாக இருக்கும்.
சீக்கியப் படையினர் சற்று ஓய்ந்ததும் புலிகள் மீண்டும் சுட்டுவிட்டு நிறுத்திவிடுவார்கள்.
மீண்டும் சீக்கியப் படையினர் வேட்டுக்களை சரமாரியாகத் தீர்ப்பார்கள்.
இப்படியே புலிகள் நாடகத்தைத் தொடர்ந்ததால் சீக்கிய படைவீரர்களின் துப்பாக்கி ரவைகள் தீர்ந்து போய்க்கொண்டிருந்தன.
தொடர்பு இல்லை
கொக்குவில் கிராம சபைக்கு அருகில் நின்ற பரா கொமாண்டோக்கள் சீக்கிய காலாட் படையினருடன் வோக்கியில் தொடர்பு கொண்டனர்.
“எங்கு இறங்கியுள்ளீர்கள்? இங்கு வாருங்கள்!” என்று தாம் நிற்கும் இடத்தைத் தெரிவித்தனர்.
அவர்களது அழைப்பு சீக்கிய படையினருக்குக் கிடைத்தால் தானே பதில் சொல்வதற்கு.
அவர்களது கெட்ட நேரமோ என்னவோ, பாராசூட்டில் தரையிறங்கும் போதே சீக்கிய படையினரின் வானொலித் தொடர்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்.
தொலைத் தொடர்புக் கருவியும் சேதமாகிவிட்டது.
சீக்கிய காலாட்படைக்கு தலைமைதாங்கிவந்தவர் மேஜர் பிரேந்தர சிங். மேலும் சீக்கிய காலாட்படையினர் தரையிறக்கப்படுவர், உதவி கிடைக்கும் என்று அவர் நம்பிக் கொண்டிருந்தார்.
புலிகளின் கடும் எதிர்ப்புக் காரமணமாக ஏற்னகவே திட்டமிட்டபடி மேலும் துருப்புக்களைத் தரையிறக்க முடியவில்லை.
அத்தகவலை அவருக்குத் தெரிவிக்கவும் தொடர்பு கொள்ள முடியாமல் பலாலியில் இருந்த அதிகாரிகள் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தனர்.

30 சீக்கிய படைவீரர்கள் மட்டுமே தரையிறக்கப்பட்டனர்.
கொக்குவிலில் 103 பரா கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் வான் மூல தரையிறக்கம் சாத்தியப்படவில்லை.
நாற்புறமும் சுத்திவளைக்கப்பட்ட நிலையிலும் சீக்கிய படைவீரர்கள் தீவிரமாகப் போரிட்டனர்.
துப்பாக்கி ரவைகள் தீர்ந்த நிலையில் துப்பாக்கிக் கத்தியுடன் போரிடத் துணிந்தனரே தவிர, கைகளைத் தூக்கிக் கொண்டு சரணடைய நினைக்கவே இல்லை.
பொழுது சற்று விடியும்வரை சீக்கிய படையினரை புலிகள் முற்றுகையில் வைத்திருந்தனர். அப்படியானால்தான் இனம் கண்டு சுலபமாகத் தாக்கமுடியும்.
பொழுது புலர்ந்ததும் புலிகளின் தாக்குதல் தொடர்ந்தது.
சீக்கிய படைவீரர்கள் அனைவரும் மேஜர் பிரேந்தர சிங் உட்பட புலிகளை எதிர்த்துத் தாக்கிக் கொண்டே உயிரிழந்தனர்.
இறந்தது போல் கிடந்த சில சீக்கிய வீரர்கள் புலிகள் கிட்ட நெருங்கியதும் சட்டென்று எழுந்து துப்பாக்கிக் கத்தியால் தாக்க முற்பட்டனர்.
இறுதியில் காயமடைந்துகிடந்த ஒரு சீக்கிய படைவீரரை புலிகள் கைது செய்தனர். ஏனைய 29படை வீரர்களும் பலியாகினர்.
கொக்குவிலில் நின்ற பரா கொமாண்டோக்கள் வரைபட உதவியோடு பிரபாகரனின் முகாம் இருந்த பகுதியை நோக்கி முன்னேறத் தொடங்கியிருந்தனர்.

(தொடர்ந்து வரும்)

-எழுதுவது அற்புதன்-

சென்றவாரம் ஒரு தவறு
‘முரசொலி’ ஆசிரியர் திருச்செல்வத்தின் மகனை ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் சுட்டுக் கொன்றனர் என்று குறிப்பிட்டிருந்தேன்.
திருச்செல்வத்தின் மகனது பெயர் பிரபாகரன் என்று தவறுதலாகக் குறிப்பிட்டுவிட்டேன். அவரது பெயர் அகிலன்.
யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரியில் திறமையான மாணவராக இருந்தவர். ‘முரசொலி’ ஆசிரியர் திருச்செல்வம் தற்போதது கனடாவில் இருக்கிறார்.
பிரபாகரன் என்னும் பெயருடைய ஒருவரும் புலிகள்-இந்தியப் படை மோதல் காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment