அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 106

இந்தியாவுடனான உறவு முடிந்தது விரிந்தது போர்க்களம்!! : பிரபாகரன் தங்கியிருந்த பிரம்படி முகாமை தாக்க திட்டம்!! ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -106)


அன்புள்ள வாசகர்களே!
இத் தொடரில் இந்தியாவின் தலையீடு தொடர்புடைய விடயங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ள நிலையில், தற்போது (97 ஜனவரி) மீண்டும் இந்தியத்தலையீடு ஏற்படுமா, ஏற்படாதா என்ற கேள்விகள் நாட்டில் எழுந்தன.
இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியாவின் கடந்தகாலத் தலையீடுகளுக்கான காரணிகள் எவையென்று அறிந்துகொண்டால் நாம் தவறான தகவல்களால் வழிநடத்தப்படமாட்டோம்: நம்பி ஏமாறவும் மாட்டோம்.
“வரலாறு என்பது ஒரு ஆசான் மாதிரி. கற்றும் கொள்கிறது. கற்றும் தருகிறது” என்று மாஓசேதுங் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியாவில் மூன்று விதமான நிலைப்பாடுகள் உள்ளன. அவற்றை இங்கே வகைப்படுத்துவோம்.
இந்தியத் தலையீடு
1. தமிழக மக்களின் அனுதாபம்
இது மொழி ரீதியான, கலாசார ரீதியான உறவுகளால். தொடர்புகளால் உணர்வு ரீதியாக ஏற்படுவது.
2. தமிழக கட்சிகளின் ஆதரவுக்குரல்
தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டும், தமது தமிழ் உணர்வை வெளிப்படுத்தி தமிழக மக்களிடம் அரசியல் ஆதரவைப் பெறவும் சில முக்கிய கட்சிகள் முன்னின்று செயற்பட்டன.
3. இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு.
உள்நாட்டு அரசியல் காரணிகளும், வெளிநாட்டு அரசியல் காரணிகளும்தான் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கையைத் தீர்மானித்தன.
எந்தவொரு நாடும் பிறநாட்டின் உள்விவகாரத்தில் தலையிடும் போது அதன் பின்னணியில் அந்தநாட்டில் பதவியில் இருக்கும் கட்சியின் உள்நாட்டு அரசியல் தேவைகளோ அல்லது அந்த நாட்டின் நலன் சம்பந்தப்பட்ட விடயமோ இருந்தே தீரும்.
இந்தியா இலங்கைத்தமிழர் பிரச்சனையில் தனது எந்த நலனும் இல்லாமல் தலையிட்டது என்று கருதுவோமானால் நாம் வரலாற்றுக் குருடர்களாகவே இருப்போம்.
இந்திய மக்களின் குறிப்பாக தமிழக மக்களின் ஆதரவுக்குரல் என்பது பிரதிபலனை எதிர்பார்த்த ஒன்றாக அமையவில்லை. அது உணர்வு ரீதியானது. அப்பழுக்கற்றது.
ஆனால் மக்களின் உணர்வுகளுக்கும், அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் குரல்களுக்கும் இடையே வேறுபாடு இருந்தே வருகிறது.
நாட்டு நலன், கட்சிகளின் நலன் என்பவற்றை முன்னிறுத்தியே அரசுகளும், கட்சிகளும் கொள்கை முடிவுகளை மேற்கொள்கின்றன. அந்த நலன்களுக்கு ஏற்ப மக்களின் உணர்வுகளையும் கொந்தளிப்புக்களையும் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்ட காலகட்ட நிகழ்வுகளை நினைவுபடுத்திப் பாருங்கள்.
இலங்கை அரசு இந்திய அரசின் கருத்துக்களை செவியில் போட்டுக் கொள்ளவில்லை. அதனால் போராளி இயக்கங்களுக்கு இந்தியா பயிற்சி கொடுத்து அனுப்பியது.
கொழும்பில் குண்டுவெடிப்புக்கள் நடத்துவதற்கு ஈரோஸ் இயக்கத்தையும், புலிகள் அமைப்பையும் இந்திய உளவு நிறுவனங்கள் தூண்டிவிட்டன.
போராளிகள் கொடுக்கிற அடியில் ஜே.ஆர். தம்மிடம் ஓடிவரவேண்டும். இந்தியா தவிர்ந்த வேறுயாருடனும் சேர்ந்து பயனில்லை என்பதை ஜே.ஆர்.உணர்ந்துகொள்ள வேண்டும் என்று கச்சிதமாய் காரியம் பார்த்தது இந்தியா.
இந்திய நலன்
ஆயிரக்கணக்கான இன்னுயிர்களை காவு கொடுத்து தமிழர் தம் அரசியல் கௌரவத்தை நிலைநிறுத்தின- போராளி இயக்கங்கள்.
ஆனால் அவற்றின் கருத்து அறியாமலேயே ஒப்பந்தப் பத்திரத்தை தயாரித்தது இந்திய அரசு.
அந்த ஒப்பந்தத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு கேள்விக்குறியானது. ஆனால் இந்தியாவின் நலன் சார்ந்த சில விடயங்கள் திட்டவட்டமாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த விடயங்கள் பின்வருமாறு.
1. இந்திய இலங்கை உறவுகளைப் பாதிப்படையச் செய்ய ஏதுவாக பிறநாட்டு இராணுவ மற்றும் உளவாளிகளை இலங்கையில் பணிபுரிய அனுமதிக்கலாகாது.
2. இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும் வகையில் திருமலை அல்லது ஏனைய துறைமுகங்களை வேற்று இராணுவப்பாவனைகளுக்கு இலங்கை அனுமதிக்கலாகாது.
3. திருமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியா-இலங்கை இணைந்து திருத்தவும் பயன்படுத்தவும் வகை செய்தல்.
4. இலங்கையில் பிறநாட்டு ஒலிபரப்புச் சேவைகள் இடம்பெற அனுமதித்தால் அவை பொதுவான நிகழ்ச்சிகளை மட்டுமே ஒலிபரப்ப அனுதமிக்க வேண்டும். இராணுவ மற்றும் உளவு பார்க்கும் நடவடிக்கைகளோடு அமைதலாகாது.
இந்த விடயங்களில் ஜே.ஆரிடம் வாய்மூல உறுதியை மட்டும் வாங்காமல், ஒப்பந்த ~ரத்துக்களாக குறிப்பிட்டு கையொப்பம் பெறப்பட்டது.
வடக்கு-கிழக்கு இணைப்பு விடயத்தில் மட்டும் ஜே.ஆர். கூறிய சில வாய்மூல உறுதி மொழிகளை இந்தியப் பிரதமர் ராஜீவ் நம்பிவிட்டார்.
இந்தியாவோடு ஜே.ஆர். உடன்பட்டுப் போகத் தொடங்கியதும், இந்திய அரசும், இந்திய அரசும், பிரதமர் ராஜீவ் காந்தியும் ஜே.ஆரின் நட்புக்குத்தான் முன்னுரிமை கொடுத்ததுபோலத் தோன்றியது.
இடைக்கால நிர்வாக விடயத்தில் ஜே.ஆர். கையாண்ட சூழ்ச்சித்திட்டங்கள் பற்றிக்கூட இந்திய மத்திய அரசு கூர்ந்து நோக்கவில்லை.
ஜே.ஆரை திருப்திப்படுத்த – புலிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே இந்திய அரசு திட்டங்களைத் தீட்டியது.
நாம் கொஞ்சம் முன்னால் சென்றுவிட்டு மீண்டும் வரலாம்.
திக் ஷித்தின் உரை
1989ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி புதுடில்லியில் உள்ள ஐக்கிய சேவைகள் நிறுவனம் ஒரு கருத்தரங்கு நடத்தியது.
அக்கருத்தரங்கில் ‘இலங்கையில் இந்திய அமைதிப்படை’ என்ற பொருளில் இந்திய இந்தியத் தூதர் திக் ஷித் உரையாற்றினார்.
இலங்கைக்கு இந்தியப் படை சென்றது ஏன்? என்று திக்~pத் பின்வருமாறு விளக்கமளித்தார்.
“எமது ஒற்றுமையைப் பாதுகாக்க, எமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட வித்தியாசமான ஆய்வின் வெற்றியினை நிலை நிறுத்தவே நாம் இலங்கை சென்றோம்.
இலங்கைத் தமிழர்கள் தங்கள் உயிர் வாழ்வைப் பொறுத்து சில நிர்ப்பந்தங்களுக்கு உள்ளானார்கள். இது எமது அரசியலைப் பாதிக்கக் கூடிய விடயமாகும்.
இந்தியக் குடியரசில் முதன்முதலில் பிரிவினைக்குரல் – தமிழ்நாட்டில் – அறுபதாம் ஆண்டுகளிலேயே தலை காட்டியதை நாம் மறக்க முடியாது.
இலங்கைத் தமிழ் கோராளிகள் 1972முதல் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடத்தலைப்பட்டனர். இதனை முறியடிக்க முடியாத நிலையில் சிறீலங்கா அரசு தடுமாறியது.
சிங்களவர்களால் நிர்வகிக்கப்படும் கொழும்பில் உள்ள மத்திய அரசால் தமிழ் போராட்டக் குழுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆயினும் இந்தியாவின் உதவியை இலங்கை நாடவில்லை.
இதற்குக் காரணம் இந்தியாவில் 5 கோடி தமிழர்கள் வாழ்ந்தமையால் அவர்களுடைய கருத்துக்களை இந்திய அரசு புறக்கணிக்க முடியாமல் இருக்கிறது என்பதை இலங்கை அரசு புரிந்துகொண்டமையால் ஆகும்.
ஆகவே, இலங்கை அரசாங்கம், தமிழ் இயக்கங்களைக் கட்டுப்படுத்தவும், வன்முறையை ஒழிக்கவும் பிறநாடுகளின் ஒத்துழைப்பை நாடவேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டது. இது தொடருமானால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக முடியும்.
அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் சம்பிரதாயமற்ற முறையிலும் , அந்தரங்கமாகவும் அந்நாட்டு போர்க்கப்பல்களை கொழும்பு, திருமலை மற்றும் காலி துறைமுகங்களுக்குத் தருவிக்கவும் இலங்கை அரசு ஏற்பாடுகளைச் செய்தது.
உளவு மற்றும் புலனாய்வுகளுக்கு உதவ பிரிட்டனின் கூலிப்படை, இஸ்ரேலிய மொசாட், ஷின்பெற் ஆகியவற்றின் உதவி பெறப்பட்டது. கடற்படையினருக்குப் பாகிஸ்தான் உதவி பெறப்பட்டது.
எமது நாட்டுடன் உறவு இல்லாத பல நாடுகளிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவும் இலங்கை நடவடிக்கை எடுத்தது.
இத்தகைய எமது நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய காரணிகளை முற்யடிக்க வேண்டிய நிலை இருந்மையால் நாம் தீவிரமாகத் தலையிடவேண்டி ஏற்பட்டது.
இலங்கை 15 ஆயிரம் மைல்களுக்கு அப்பாலோ, ஃபிஜித் தீவுகள் இருக்கும் தூரத்திற்கு அப்பாலோ இருந்திருந்தால் பரவாயில்லை. இலங்கை எமது நாட்டில் இருந்து 18 மைல் தூரத்தில்தான் இருக்கிறது.
அதுதான் திக் ஷித் மிகத் தெளிவாக இந்தியத் தலையீட்டுக்குக் கூறிய விளக்கம்.
ஊடங்கு உத்தரவு
இத்தோடு நிறுத்திக் கொண்டு, நாம் மீண்டும் 1987ம் ஆண்டு நிகழ்வுகளுக்குத் திரும்பிச் செல்லுவோம்.
அக்டோபர் 10-1987

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு பின்புறமாக மேற்குப்பகுதியில் அமைந்துள்ள பிரம்படியில் பிரபாகரன் தங்கியிருந்த முகாம் இருந்தது.
அக்டோபர் 9ம் திகதி நடைபெற்ற சில சம்பவங்களும், அக்டோபர் 10ம் திகதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் இந்தியப் படையினர் தமக்கெதிராக நடவடிக்கையில் இறங்கப் போகிறார்கள் என்று பிரபாகரனை ஊகிக்கச் செய்துவிட்டன.
அக்டோபர் 10ம் திகதி காலையில் யாழ்ப்பாணத்தில் இருந்த பத்திரிகைக் காரியாலயங்களை இந்தியப் படையினர் முற்றுகையிட்டனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, உதயன் ஆகிய பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்தன.
ஈழமுரசு பத்திரிகை புலிகளால் நடத்தப்பட்டது. ஈழமுரசு பத்திரிகையை ஆரம்பித்தவர் அமிர்தலிங்கம். ஐ.தே.கட்சியின் ஆதரவாளராக இருந்தவர்.
அமிர்தலிங்கத்தைக் கடத்திச் சென்ற புலிகள் இயக்கத்தினர் அவருக்கு மரண தண்டனை விதித்தனர். ஈழமுரசையும் கைப்பற்றினார்கள்.
முரசொலி பத்திரிகை ஆசிரியராக இருந்தவர் திருச்செல்வம். நல்லூர் எம்.பியாக இருந்த அருளம்பலத்தின் விசுவாசி.
இயக்கங்களுக்குப் பயந்து கொழும்புக்குத் தப்பியோடினார். பின்னர் இயக்கங்களுடன் பேசி சமரசம் செய்து கொண்டு யாழ்ப்பாணம் வந்தார்.
ஈழமுரசு பத்திரிகையில் ஆசிரியராக இருந்த திருச்செல்வம் பின்னர் அமிர்தலிங்கத்துடன் பிரச்சனைப்பட்டுக்கொண்டு வெளியேறினார். ‘முரசொலி’ ஆசிரியரானார்.
‘ஈழமுரசு’ அதிபர் அமிர்தலிங்கம் தொடர்பான பல தகவல்களை புலிகளுக்கு வழங்கியவர் திருச்செல்வம்தான். ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபின்னர் ‘முரசொலி’ புலிகளுக்கு ஆதரவான பத்திரிகையாக மாறியது.
இந்திய அமைதிப்படை காலத்தில் திருச்செல்வத்தின் மகனை ஈ.பி.ஆர்.எல்.எஃப். சுட்டிக் கொன்றது. திருச்செல்வத்தை தேடிப் போனவர்கள் அவர் இல்லையென்றதும் மகனைச் சுட்டுக் கொன்றுவிட்டு திரும்பினார்கள்.
மகனது பெயர் பிரபாகரன்.
பிரசார சாதனங்கள் குறி
ஈழமுரசு, முரசொலி இரண்டையும் தடைசெய்துவிட்டால் புலிகளின் செய்திகள் வெளிவராது என்பது மட்டும் இந்தியப் படை அதிகாரிகளின் நோக்கமல்ல.
யாழ் நகரைக் கைப்பற்ற வேண்டுமானால் பலத்த பதிலடியை புலிகளிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டும் என்பது அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது.
வீடுகளும், கட்டிடங்களும் நெருக்கமாக அமைந்துள்ள பகுதி யாழ் நகர். அந்த மறைவுகளுக்குள் இருந்து புலிகள் தாக்குவார்கள்.
எனவே மோதலில் பொதுமக்களின் உயிரிழப்புக்களும் பெருமளவில் ஏற்பட்டே தீரும். அச்செய்திகள் வெளியாவது இந்தியாவுக்கு நல்லதல்ல. மேலும் பொதுமக்களிடமும் வெறுப்பை ஏற்படுத்தும்.
உயிரிழப்புக்கள் தவிர்க்கமுடியாமல் ஏற்படப்போகும் போர்க்கள நிலவரத்தை உத்தேசித்து புலிகளின் பிரசார சாதனங்களின் வாயை மூடுவதற்கு திட்டமிட்டனர் இந்தியப் படை அதிகாரிகள்.
ஈழமுரசு, முரசொலி காரியாலயங்களுக்குள் புகுந்த இந்தியப் படையினர் அங்குள்ள அச்சுயந்திரங்களையும், தளபாடங்களையும் தகர்த்தனர். அந்த அலுவலகங்களில் பணியாற்றிய ஊழியர்கள் சிலரையும் கைது செய்தனர்.
புலிகள் அமைப்பினரின் ஷநிதர்சனம்’ தொலைக்காட்சி நிறுவனமும் தகர்க்கப்பட்டது.
பத்திரிகைக் காரியாலயங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவை தாக்கப்பட்ட செய்தி அறிந்ததும் பிரபாகரன் தனது முக்கிய தளபதிகளைச் சந்தித்தார்.
பிரம்படியில் உள்ள பிரபாகரனின் முகாமில் அவசரக்கூட்டம் நடைபெற்றது.
“இந்தியப் படை போரை ஆம்பித்துவிட்டது. நாமும் திருப்பித்தாக்க வேண்டியதுதான்” என்று உத்தரவிட்டார் பிரபாகரன்.
நாமும் தயார்
பலாலியில் இருந்த இந்திய படை தலைமையகத்தில் மேஜர் பெரிய சாமி என்னும் அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் தமிழ்நாட்டுக்காரர்.
இந்தியப் படைக்கும், புலிகளுக்கும் இடையேயான தொடர்புகளுக்கு அவர்தான் பாலமாக இருந்தார்.
அக்டோபர் 10ம் திகதி தொலைத் தொடர்பு சாதனம் மூலம் புலிகளுடன் தொடர்பு கொண்டார் மேஜர் பெரியசாமி.
மேஜர் பெரியசாமி தொடர்பு கொள்வதாகத் தெரிந்ததும் பிரபாகரன் வோக்கியை வாங்கிக் கொண்டார்.
“மேஜர் பெரியசாமி நான்தான் பிரபாகரன் பேசுகிறேன்.” என்றதும் ஆச்சரியத்துடன் “யாரு பிரபாகரனா? வணக்கம் சார்” என்றார் பெரியசாமி. தொடர்ந்து ஏதோ சொல்ல முற்பட்ட பெரிய சாமியை இடைமறித்து பிரபாகரன் கூறினார்.
“நீங்கள் தேவையற்ற முறையில் போரை ஆரம்பித்துள்ளீர்கள். நாங்களும் போருக்குத் தயார் என்று உங்கள் தளபதிகளிடம் சொல்லுங்கள்.
இனிப் போர்க்களத்தில் சந்திப்போம்!” என்று சொல்லிவிட்டு வோக்கியை நிறுத்திவிட்டார் பிரபாகரன்.
இலங்கை இந்திய வரலாற்றிலும், இலங்கைத் தமிழர் வரலாற்றிலும் மறக்க முடியாத போருக்கு இருதரப்பும் தயாராகின.
இந்தியப் படையினர் முந்திக் கொள்வதற்கிடையில் புலிகள் தாக்குதலைத் தொடுக்கவேண்டும் என்று கட்டளையிட்டார் பிரபாகரன்.
இந்தியத் துருப்புக்கள் முன்னேறி வராமல் தாக்குதலை நடத்துமாறு யாழ்ப்பாணத்தில் காவல் அரண்களில் இருந்த புலிகளுக்கு உத்தரவுகள் பறந்தன.
அப்போது யாழ் மாவட்ட புலிகளின் இராணுவப்பிரிவு பொட்டம்மானின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
திபீந்தர் வகுத்த திட்டம்

அக்டோபர் 10ம் திகதி பகல் யாழ்நகரில் வெடியோசைகள் கேட்கத் தொடங்கின.
இதேநேரம் இந்திய அமைதிப்படை தளபதி திபீந்தர் சிங் தனது அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.
நான்கு நாட்களில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற வேண்டும்.
பிரபாகரன் தங்கியிருந்த பிரம்படி முகாமையும், யாழ் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள புலிகளின் தலைமையகத்தையும் பரா கொமாண்டோப்பிரிவும், காலாட்படைப்பிரிவும் தாக்குவது.
தாக்குதல் ஆரம்பித்து 24 மணி நேரத்திற்குள் அவற்றுக்கு உதவியாக காலாட்படைப்பிரிவுகள் அங்கு செல்ல வேண்டும்.
பிரம்படி முற்றுகைக்கு தான் வகுத்த திட்டம் எத்தனை பெரிய விபரீதத்தில் சென்று முடியப்போகிறது என்பது அப்போது திபீந்தர் சிங்குக்கும் தெரியாது.
அதற்காக ஹெலிகொப்டரில் புறப்பட்ட பரா கொமாண்டோக்களுக்கும் தெரியாது.
பிரம்படியில் விரிந்தது போர்ககளம். உலகில் மிகப்பெரும் இராணுவங்களில் ஒன்று உலகில் மிகச் சிறந்த கெரில்லா இயக்கமொன்றை அங்கு எதிர்கொண்டது.
விளைவு?

No comments:

Post a Comment