அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 105

பஸ் நிலையம் முன்னால் வீசப்பட்ட உடல்கள்!! : புலிகளைத் தாக்க இந்தியா வகுத்த திட்டம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -105)


• வீதியில் பிணங்கள்
• “புலிகள் இயக்கத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்! அந்த இயக்கத்தினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்!” என்று கட்டளை பிறப்பித்தார் சுந்தர்ஜி.
• புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கான திட்டம் அமைதிப்படை தலைமையகத்தால் மிக இரகசியமாக தீட்டப்பட்டது.
• இடைக்கால நிர்வாக ஏற்பாடுகளுக்கு பிரபாகரன் இணங்கவில்லை என்பதுதான் அவர் மீது ராஜீவின் கோபத்துக்கு பிரதான காரணமாக இருந்தது.
தொடர்ந்து….

புலிகளின் முகாமில் எட்டு இராணுவத்தினர் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுதலை செய்யுமாறு அவர்களின் பெற்றோர்கள் புலிகள் இயக்கத்தினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அடுத்து தமிழ் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்திருந்தது. ஆயினும் தமது காவலில் இருந்த இராணுவத்தினரை புலிகள் இயக்கத்தினர் விடுதலை செய்யவில்லை.
குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்ட அதேநேரம் புலிகள் இயக்க முகாமில் வைக்கப்பட்டிருந்த எட்டு இராணுவத்தினரும் சுட்டுத் தள்ளப்பட்டனர்.
மறுநாள் காலையில் அந்த எட்டுப் பேரின் உடல்களும் யாழ் நகர பஸ் நிலையம் அருகில் கிடந்தன.
குமரப்பா, புலேந்தியரன் ஆகியோரின் உடல்களை பலாலித் தளத்தில் பொறுப்பெடுக்கச் சென்றவர்களில் ஒருவர் சூசை. அப்போது அவர் வடமராட்சிப் பொறுப்பாளராக இருந்தார். (இப்போது கடற்புலிகளின் சிறப்புத் தளபதியாக இருக்கிறார்)

உடல்களை தமது முகாமில் ஒப்படைத்து விட்டு தனது குழுவினருடன் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் மதுபான விடுதி ஒன்றுக்குள் இருந்தார்.
சூசையும் அவரது குழுவினரும் அந்த அதிகாரியைப் பிடித்து இழுத்துவந்தனர். வீதியில் வைத்து தாக்கினார்கள். அடிதாங்க முடியாமல் அவர் பலியானார்.
“கொதிப்படைந்த பொதுமக்கள் பொலிஸ் அதிகாரியை அடித்துக் கொன்று விட்டனர்” என்று மறுநாள் யாழ் பத்திரிகை செய்தி வெளியிட்டன.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தன.
கொழும்பிலிருந்து பொறியியலாளர்கள் குழு ஒன்று வந்து பரிசீலனை செய்தது. அக்டோபர் 5ம் திகதி அக்குழுவினர் கொழும்பு திரும்பினார்கள்.
அவர்களை வழியனுப்பிவைத்துவிட்டு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பொது முகாமையாளர் ஜெயமன்ன மற்றும் உதவி முகாமையாளர் கஜநாயக்க ஆகியோர் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தனர்.
பொறியியலாளர்களான சோதிலிங்கம், வேலாயுதம் ஆகியோருடன் அவர்கள் இருவரும் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஆயுதங்களுடன் புலிகள் இயக்கத்தினர் புகுந்தனர்.
ஜெயமன்னவையும், கஜநாயக்காவையும் பிடித்து இழுத்துச் சென்றனர். அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று தடுத்தார் பொறியலாளர் சோதிலிங்கம். அதனால் அவரும் தாக்கப்பட்டார்.
மறுநாள் காலையில் இருவரது உடல்களும் சீமெந்து தொழிற்சாலையின் முன்பாகக் கிடந்தன.
சுன்னாகத்தில் நீண்டகாலமாக பேக்கரி நடத்திவந்த ஒரு சிங்களவரும் இரவோடு இரவாகக் கொல்லப்பட்டார்.
சில பகுதிகளில் பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் சிங்கள ஆட்களை அப்பகுதிகளில் உள்ள மக்கள் புலிகளுக்குத் தெரியாமல் பாதுகாப்பு வழங்கினார்கள்.
ரூபவாஹின் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த வாகனம் ஒன்று காங்கேசன்துறையில் வைத்து வழிமறிக்கப்பட்டது. அதில் நான்கு சிங்கள ஊழியர்களும், விக்னேஸ்வரன் என்ற தமிழரும் இருந்தனர்.
நான்கு சிங்கள ஊழியர்களும் கொல்லப்பட்டனர். விக்னேஸ்வரனை மிரட்டிவிட்டு துரத்திவிட்டார்கள்.
கிழக்கில் தாக்குதல்
கிழக்கிலும் சிங்கள மக்கள் பலர் கொல்லப்படடனர். இருப்பிடங்களைவிட்டு விரட்டப்பட்டனர். நூற்றுக்கு மேற்பட்டோர் அவ்வாறு கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவித்தன.
விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி நிமால் சில்வா சென்ற வாகனம் நிலக்கண்ணிவெடியில் சிக்கியது. நிமால் சில்வாவும், அவரோடு பயணம் செய்த மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோனிமுத்துவும் பலியானார்கள்.
தமது முக்கிய தளபதிகள் உட்பட 12 பேரும் பலியானதும் புலிகள் பதிலடியில் இறங்குவார்கள் என்பதை இந்தியப் படை அதிகாரிகள் உணர்ந்தே இருந்தனர்.
வடக்கு-கிழக்கில் உள்ள இலங்கைப் படையினர்தான் புலிகளால் தாக்கப்படுவார்கள் என்றே அவர்கள் கருதியிருந்தனர்.
யாழ்-குடாநாட்டில் இருந்த படை முகாம்களில் அப்போது சிறிய அளவினரான படையினரே தங்கியிருந்தனர். இந்தியப் படைத் தளபதி திபீந்தர் சிங் உடனடியாக தனது படைப்பிரிவுகளை அம்முகாம்களைப் பாதுகாக்க அனுப்பிவைத்தார்.
ஆயினும் இந்தியப் படையினர் எதிர்பாராத கோணத்தில் புலிகள் தமது கோபத்தைத் திருப்பியிருந்தனர்.
தளபதி விஜயம்
இந்தியப்படைத் தளபதி சுந்தாஜி அக்டோபர் 6ம் திகதி பலாலி தளத்துக்கு விஜயம் செய்தார்.
அதேநாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் பி.சி.பந்த் கொழும்புக்கு விஜயம் செய்தார்.
இந்த இரு விஜயங்களும் புலிகள் தொடர்பாக ஒரு கடும்போக்கைக் கடைப்பிடிக்க இந்திய அரசு முடிவுசெய்துவிட்டதன் அடையாளமாகவே தெரிந்தன.
‘குமரப்பா, புலேந்திரன் ஆகியோர் உட்பட கைது செய்யப்ட்ட 17 பேரையும் கொழும்பு கொண்டு செல்லும் முயற்சிகளில் தலையிடவேண்டாம்;’ என்று இந்திய அமைதிப்படைக்கு ஒரு இரகசியத் தகவல் வந்தது அல்லவா?
புலிகள் மீதான கடும் நடவடிக்கைக்கு இந்திய அரசியல் தலைமைப்பீடம் முடிவு செய்த பின்னரே புதுடில்லியிலிருந்து அத்தகவல் அனுப்பப்பட்டது.
குமரப்பா, புலேந்திரன் ஆகியோர் பலியாகி இருக்காவிட்டாலும் கூட, புலிகளை தமது வழிக்கு கொண்டுவர இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுக்க முன்கூட்டியே முடிவு செய்துவிட்டது.
ராஜீவ்காந்திக்கு பிரபாகரன் மீதும் புலிகள் மீதும் கோபம்வந்து விட்டது. ‘இந்தியாவுடன் இவர்கள் விளையாடுகிறார்களா?’ என்று நினைத்துவிட்டார் ராஜீவ்.
ஜே.ஆரும் மிகத் தந்திரமாகப் பேசி ராஜீவின் அபிமானத்தைப் பெற்றுவிட்டார். புலிகள்தான் ஒப்பந்த அமுலாக்கத்துக்கு குறுக்கே நிற்கிறார்கள் என்பது போல ஜே.ஆர். தன்னை நல்ல பிள்ளையாகக் காட்டிக்கொண்டார்.
வடக்கு-கிழக்கில் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களை புலிகள் நடத்தத் தொடங்கியது அக்டோபர் 5ம் திகதி இரவில் இருந்துதான்.
ஆனால் அந்தச் சம்பவங்களுக்கு முன்னரே இந்தியத் தளபதி சுந்தர்ஜியின் விஜயமும், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயமும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
சுந்தர்ஜியின் விஜயத்தின் நோக்கம் நிலமையை நேரில் கண்டறிந்து, இந்தியப் படை அதிகாரிகளுடன் பேசி புலிகளுக்கு எதிரான நடவடிக்கையின் சாதக பாதகங்களைக் கண்டறிவதுதான்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தின் நோக்கம் ஜனாதிபதி ஜே.ஆருக்கு இந்தியா நியாயமாக நடந்து கொள்ளும். புலிகளை வழிக்குக் கொண்டுவரும்.
தேவைப்பட்டால் கடும் நடவடிக்கையில் இறங்கத் தயங்காது என்று உறுதி தெரிவிப்பதுதான்.
இவ்வாறான நோக்கத்துடன் அவர்களின் பயணம் வகுக்கப்பட்டபோதுதான் புலிகள் இயக்கத் தளபதிகள் உட்பட 12 பேரின் மரணமும், புலிகளின் பழிவாங்கும் நடவடிக்கைகளும் வடக்கு-கிழக்கில் நடந்து கொண்டிருந்தன.
ராஜீவின் கோபம்
இடைக்கால நிர்வாக ஏற்பாடுகளுக்கு பிரபாகரன் இணங்கவில்லை என்பதுதான் அவர் மீது ராஜீவின் கோபத்துக்கு பிரதான காரணமாக இருந்தது.
எனினும் இடைக்கால நிர்வாகத்தில் கிழக்கு மாகாணத்தவர்கள் எவரையும் இடம்பெறச் செய்யாமல், இதனை வடக்கு நிர்வாகமாகக் காட்டுவதே ஜே.ஆரின் நோக்கமாக இருந்தது.
அதன் மூலம் வடக்கு-கிழக்கு பிரிப்புக்கான ஆதரவான மனோநிலையை கிழக்கில் உருவாக்க ஜே.ஆர். பின்னிய சூழ்ச்சி வலையை ராஜீவ் காந்தி கண்டு கொள்ளவில்லை.
ஜே.ஆர். படித்தவர், பண்பானவர், சிறந்த அரசியல் தலைவர். இயக்கங்களில் உள்ளவர்கள் படிக்காதவர்கள், சிறு பையன்கள் என்ற மனோ நிலை இந்திய அதிகார மட்டத்தில் நிலவியது அவர்களது கண்களைக் கட்டிப்போட்டிருக்கலாம்.
புலிகள் இயக்கத்தினர் மீது கடும் நடவடிக்கை ஒன்றில் உடனடியாக ஈடுபடுவது உசிதமல்ல. என்பதே இந்திய அமைதிப்படை பொறுப்பதிகாரியான திபீந்தர் சிங்கின் கருத்தாக இருந்தது.
தனது கருத்தை தளபதி ஜெனரல் சுந்தர்ஜியிடமும் திபீந்தர் சிங் எடுத்துக் கூறினார்.
பலாலியிலிருந்து கொழும்புக்குச் சென்ற சுந்தர்ஜி, அங்கு வந்திருந்த பாதுகாப்பு அமைச்சர் பந்த்துடன் இணைந்து கொண்டார். இருவரும் ஜே.ஆரைச் சந்தித்துப் பேசினார்கள்.
அக்டோபர் 7ம் திகதி கொழும்பிலிருந்து இந்திய இராணுவத் தளபதி சுந்தர்ஜியின் கட்டளை அமைதிப்படை தலைமையகத்துக்கு வந்து சேர்ந்தது.
“புலிகள் இயக்கத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்! அந்த இயக்கத்தினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்!” என்று கட்டளை பிறப்பித்தார் சுந்தர்ஜி.
மாத்தையா சொன்னது.
நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னர் பிரபாகரனுடன் பேசிப்பார்க்க நினைத்தார் திபீந்தர்சிங்.
திபீந்தர் சிங்கும், ஹரிகிரத் சிங்கும் பிரபாகரனை சந்தித்துப் பேச விரும்புவதாக புலிகள் இயக்கத் தலைமையகத்துக்கு தகவல் தரப்பட்டது.
“வாருங்கள், சந்திக்கலாம்” என்று தகவல் அனுப்பினார்கள். புலிகள் இயக்கத்தினர்.
அவர்களைச் சந்திக்க பிரபாகரன் விரும்பவில்லை. மாத்தையா சந்திக்கட்டும் என்று கூறிவிட்டார் பிரபாகரன்.
பலாலியிலிருந்து ஹெலிகொப்டர் மூலமாக திபீந்தர் சிங்கும், ஹரிகிரத் சிங்கும் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கினார்கள்.
யாழ் பல்கலைக்கழக வளாகம் எங்கும் ஆயுதம் தாங்கிய புலிகள் இயக்க உறுப்பினர்கள் நிற்பதை இருவரும் கண்டனர்.
“பிரபாகரனைச் சந்திக்க வேண்டும்!” என்று கேட்டார் திபீந்தர் சிங்.
“அவர் தற்போது இங்கே இல்லை” என்று சொன்னார் மாத்தையா.
“மோதல் நிலை ஏற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டாம். அதனால் பொதுமக்கள் தான் துன்பப்படுவார்கள். ஏன் இவ்வாறான ஒரு சூழலைத் தெரிவு செய்கிறீர்கள்?” என்று கேட்டார் திபீந்தர் சிங்.
அதற்கு மாத்தையா சொன்ன பதில் இதுதான்:
“அவமானத்துடன் வாழ்வதைவிட தன்மானத்துடன் சாவதற்கு ஆயத்தமாகி விட்டோம்!” மாத்தையாவின் பதிலால் துணுக்குற்றார் திபீந்தர் சிங்.
வடக்கு-கிழக்கில் உள்ள இலங்கைப் படையினரின் முகாம்களை புலிகள் தாக்க முடிவு செய்துவிட்டனர் என்பதுதான் மாத்தையாவின் கூற்றுக்கு அர்த்தம் என்று நினைத்தார்.
“வடக்கு-கிழக்கில் உள்ள இலங்கைப் படையினரின் முகாம்களுக்கு இந்தியப் படைதான் பொறுப்பு. அந்த முகாம்களை தாக்க முற்பட வேண்டாம்!” என்று கண்டிப்பான கட்டளை போலவே கூறினார் திபீந்தர் சிங்.
மாத்தையா பதில் எதுவும் சொல்லவில்லை. மூவரும் கைகுலுக்கி விடைபெற்றனர்.
பிரபாகரன் சந்திக்க மறுத்ததும், மாத்தையாவின் பதில்களும், புலிகள் இயக்கத்தினர் தமது வழிக்கு வரப்போவதில்லை என்பதை திபீந்தர் சிங்குக்கு உணர்த்திவிட்டன.
பண்ரூட்டியாரின் மாற்றம்
சென்னை சென்ற திபீந்தர் சிங் அமைச்சர் பண்ரூட்டி ராமச்சந்திரனை சந்தித்தார்.
இந்தியப்படை புலிகள்மீது நடவடிக்கையில் இறங்கினால் தமிழகத்தில் அதன் பிரதிபலிப்புக்கள் தோன்றும் என்றும் திபீந்தர்சிங் கவலை கொணடிருந்தார்.
அப்போது எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். எம்.ஜி.ஆரின் பிரதிநிதியாக பண்ரூட்டி ராமச்சந்திரனே தமிழக அரச நிர்வாகங்களைக் கவனித்துக்கொண்டிருந்தார்.
“புலிகளை வழிக்குக் கொண்டுவர ஏதாவது செய்ய வேண்டும். நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாமே!” என்று கேட்டுக் கொண்டிருந்தார் திபீந்தர் சிங்.
புதுடில்லியில் இலங்கைப் பிரச்சனை தொடர்பான ஒரு கூட்டத்துக்கு பண்ரூட்டியும் அழைக்கப்பட்டிருந்தார்.
அக்கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய பண்ரூட்டி ராமச்சந்திரன் திபீந்தர் சிங்கிடம் சொன்னார்.
“புலிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்தான்!”
இந்திய மத்திய அரசின் அதிகார மட்டத்தினர் பண்ரூட்டியாரின் மனதையும் மாற்றிவிட்டனர்.
திட்டம் தயார்
புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கான திட்டம் அமைதிப்படை தலைமையகத்தால் மிக இரகசியமாக தீட்டப்பட்டது.
இந்திய உளவுப்பிரிவுகளின் தகவல்கள் மற்றும் களநிலவரங்களை கவனத்தில் கொண்டு திட்டம் தீட்டப்பட்டது.
யாழ் குடாநாட்டை கைப்பற்றினால் போதும்: புலிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்பதுதான் மூல உபாயமாக இருந்தது.
அதற்கேற்ப அமைதிப்படை தலைமையகத்தால் வகுக்கப்பட்ட திட்டத்தை திபீந்தர் சிங் பரிசீலித்து அங்கீகரித்தார்.
அத்திட்டம் இதுதான்:
1. ஆகாய மார்க்கம், கடல் மார்க்கம் உட்பட பல மார்க்கங்களாக விரைவாக யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவது.
2. முன்னேறிச் செல்லும் படையணிகளுக்கு தொடர்ந்து விநியோகங்களை உறுதிப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் ஒரு விநியோக மையத்தைத் திறப்பது.
3. தரைப்பாதை மூலமான விநியோகம் தொடங்கும்வரை வான்மூலமான விநியோகத்தில் படைகள் தங்கியிருத்தல்.
4. விமானப்படை, கடற்படை மற்றும் பீரங்கிப்படை உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட இலக்குகளை மட்டும் தாக்குதல்.
5. கடற்கண்காணிப்பை மேற்கொள்ளல்.
பிரதான நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படும். திருமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் இந்தியப் படையினர் ரோந்தில் ஈடுபடுவர்.
தலைமையக உத்தரவு கிடைத்தால் மட்டும் அங்கு இலக்குகளை தாக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
பாரிய தாக்குதலுக்கு முன்னர் புலிகளுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தீர்மானித்தனர் இந்தியப் படையினர்.
அக்டோபர் 9ம் திகதி புலிகள் இயக்க முகாம்கள் சில இந்தியப் படையினரால் முற்றுகையிடப்பட்டன. புலிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று காண்பிப்பதற்காக ஏனைய இயக்க முகாம்கள் சிலவற்றிலும் தேடுதல் நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது 131 போராளிகள் கைது செய்யப்பட்டதாகவும், 27 ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பறிமுதல்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியப் படையின் நடவடிக்கை பிரபாகரனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
‘இந்தியப் படையோடு போரிட வேண்டியதுதான்’ என்ற முடிவுக்கு வந்தார் பிரபாகரன்.
போர் தவிர்க்க முடியாதது என்பதை உறுதிப்படுத்துவது போல அக்டோபர் 10ம் திகதி விபரீதங்கள் ஆரம்பமாகின.
அக்டோபர் 10 – அது மறக்க முடியாத நாள்

No comments:

Post a Comment