அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 104

குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 புலிகளுக்கு சயனைட் வில்லைகள் கொடுத்த மாத்தையா!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -104)


விரிசலை வளர்த்த ஜே.ஆரின் தந்திரம்
கடல் புறா

‘கடல்புறா’ என்னும் பெயருடைய படகில்தான் குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 புலிகள் இயக்க உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.
‘கடல் புறாவை” டோராப் படகில் வந்த கடற்படையினரே வழிமறித்தனர். லெப்ரினன்ட் ஆரியதாசா டோராப்படகில் வந்த கடற்படையினருக்கு பொறுப்பாக இருந்தார்.
அக்டோபர் மூன்றாம் திகதி அதிகாலை 2 மணியவில்தான் கடற்புறா வழிமறிக்கப்பட்டது.
கடற்புறாவில் இருந்த புலிகள் இயக்க தளபதிகளிடமும், உறுப்பினர்களிடமும் ஆயுதங்கள் இருந்தபோதும், கடற்படையினரைத் தாக்குவதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை.
போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டதால் தமது தளபதிகள் தாக்குதல் நடத்தவில்லை என்று புலிகள் அமைப்பினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தினர் 17 பேரும் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
17 பேரையும் கைதுசெய்த விடயத்தை கடற்படையினர் உடனடியாக ஜே.ஆருக்கும், தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலிக்கும் அறிவித்தனர்.

லலித் அத்துலத் முதலியின் மூளை பயங்கரமாக வேலை செய்யத் தொடங்கியது.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் புலேந்திரன், அநுராதபுரத்தில் சிங்கள மக்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்.
அந்தக்குற்றச்சாட்டை வைத்து அவரை கொழும்புக்கு கொண்டுவந்து விசாரித்தால் சிங்கள மக்களிடம் அரசுக்கு சாதகமான அபிப்பிராயம் ஏற்படும்.
இலங்கை, இந்திய ஒப்பந்தம் தொடர்பாகவும், இந்தியப் படைக்கு அனுமதியளித்தது தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பிரச்சாரம் நடத்திக் கொண்டிருந்தனர்.
ஐ.தே.கட்சி அரசாங்கம் இந்தியாவிடம் பணிந்து, புலிகளுக்கு விட்டுக் கொடுத்துவிட்டது என்ற பிரச்சாரத்தை முறியடிக்க இதுதான் தகுந்த தருணம் என்று கணக்குப் போட்டார் லலித் அத்துலத்முதலி.
ஜே.ஆருக்கு அந்த யோசனையுடன் உடன்பாடு இருந்தது.
கைது செய்யப்பட்டவர்களைக் கொழும்புக்கு கொண்டுவருமாறு கடற்படையினருக்கு உத்தரவு பறந்தது.
தமது தளபதிகள் உட்பட 17 பேரும் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும் புலிகள் அமைப்பினர் இந்தியப் படையின் தொடர்பாளரான பிரிகேடியர் பெர்னாண்டசுடன் தொடர்பு கொண்டனர்.
“ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். உங்கள் தளபதிகளும், உறுப்பினர்களும் பத்திரமாக உங்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்” என்று உறுதியளித்தார் பெர்னாண்டஸ்
இந்தியப் படைத் தளபதி ஹரிகிரத்சிங்குடனும் புலிகள் அமைப்பினர் தொடர்பு கொண்டனர். அவரும் பெர்னாண்டஸ் கூறிய பதிலையே மீண்டும் கூறினார்.
இந்தியப்படைத் தளபதி திபீந்தர்சிங் கொழும்புக்கு விரைந்து சென்று ஜே.ஆரைச் சந்தித்தார்.
திபீந்தர் சிங்கிடம் பிடிகொடுக்காமல் நழுவிக்கொண்டேயிருந்தார் ஜே.ஆர். ஜே.ஆரின் மனதில் வேறு ஒரு திட்டமும் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
(இந்தியப்படைத் தளபதி திபீந்தர்சிங், மாத்தையா)

கைது செய்யப்பட்டவர்களை மீட்டெடுத்து புலிகளிடம் ஒப்படைக்க இந்தியப்படையால் முடியாது போனால், புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையே விரிசல் தோன்றும் என்று ஜே.ஆர் ஊகித்திருக்கக்கூடும்.
தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்துகொண்டு திபீந்தர்சிங்கை குழப்பத் தொடங்கிவிட்டார் ஜே.ஆர்.
“தேவைக்கதிகமான படைகளும், படைக்கலங்களும் உங்களிடம் இருந்தும், புலிகளை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?” என்று கேள்வி எழுப்பினார் ஜே.ஆர்.
“தேவையற்ற மோதலுக்கு இடமளிக்க விரும்பவில்லை. படிப்படியாக அவர்களை வழிக்குக் கொண்டுவரரே விரும்புகிறோம்.” என்று திபீந்தர்சிங் எடுத்துக் கூறினார்.
தன்னால் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றும், தனது கட்சிக்குள் கூட எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது என்றும் ஜே.ஆர். கூறினார்.
ஜே.ஆரின் முடிவை முடிவை மாற்ற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார் திபீந்தர்சிங்.
ஜே.ஆரின் பிடிவாதம்
இக்காலகட்டத்தில் இந்தியத்தூதர் திக் ஷித் விடுப்பில் இருந்தார். நிலமையின் விபரீதத்தை அவருக்குத் தெரியப்படுத்தினார்கள்.
அக்டோபர் 4ம் திகதியன்று கொழும்பு திரும்பினார் திக்~pத். உடனடியாக ஜே.ஆருடன் தொடர்பு கொண்டார்.
ஜே.ஆர் விட்டுக் கொடுக்கவில்லை. ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் அவர்கள் கடத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்தால் தனக்குள்ள எதிர்ப்பு அதிகமாகிவிடும் என்பது ஜே.ஆரின் வாதம்.
அத்தோடு நிற்கவில்லை, தொலைக்காட்சி மூலமாகவும் அறிக்கையையும் ஜே.ஆர்.வெளியிட்டார்
கைது செய்யப்பட்டவர்கள் கடத்தல் காரர்கள் என்பதால் இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் அவர்கள் விடயத்தை இணைத்துப்பார்க்க முடியாது.
அவர்கள் ஆயுதங்களை இந்தியாவிலிருந்து கடத்தி வந்தார்கள் என்று குறிப்பிட்டார் ஜே.ஆர்.
புலிகள் மறுப்பு
புலிகள் அதனை மறுத்தனர். இந்தியாவில் இருந்த தமது அலுவலகத்தை மூடிவிட்டு அங்கிருந்து ஆவணங்களை எடுத்துவரும் போதே தமது உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக புலிகள் கூறினர்.
ஆனால், அவ்வாறு எந்த அலுவலகமும் இந்தியாவில் மூடப்படவில்லை. சென்னையில் புலிகள் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது. கிட்டுவும் அங்குதான் இருந்தார்.
புலிகள் சொன்ன காரணத்தை இந்தியப்படையினர் நம்பவில்லை.
ஆயினும், கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் அதனை வைத்தே புலிகள் ஒரு பெரும் பிரச்சனையைக் கிளப்புவார்கள்.
ஆயுதங்களை ஒப்படைக்க மறுப்பார்கள். இடைக்கால நிர்வாகத்தில் பங்கெடுக்கவும் முன்வரமாட்டார்கள். அதனால் நிலமை மோசமாகும் என்று இந்தியப் படை தளபதிகள் புரிந்து கொண்டனர்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இலங்கை அரசு பொது மன்னிப்பு வழங்கியிருந்தது. அப்படியிருக்கும்போது முன்னர் நடைபெற்ற ஒரு சம்பவத்துக்காக புலேந்திரனை எப்படி விசாரிக்கமுடியும்?
அந்தக் கேள்விக்கும் அரசாங்கம் ஒரு பதில் தயாராக வைத்திருந்தது.
பொது மன்னிப்பு 1987 ஆகஸ்ட் 30ம் திகதிக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்கள், மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கே பொருந்தும்.
அக்டோபர் 3ம் திகதி கைது செய்யப்பட்டவர்களுக்குப் பொருந்தாது என்று அறிவித்தது அரசாங்கம்.
புலேந்திரன்
அது மட்டுமல்லாமல் புலேந்திரன் பொது மன்னிப்புக்குரிய வடக்கு-கிழக்கு பிராந்தியத்துக்கு வெளியே இடம்பெற்ற ஒரு சம்பவத்துக்காகத் தேடப்பட்டவர்.
எனவே அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என்றும் அரசாங்கம் சொல்லிவிட்டது.
17பேரும் கைது செய்யப்பட்ட விடயத்தை இரகசியமாக வைத்திருந்தால், இந்தியாவின் நிர்ப்பந்தம் காரணமாக விடுதலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். அதனால் கைது செய்யப்பட்ட செய்தியை பகிரங்கமாக்கிவிட்டார் ஜே.ஆர்.
அவ்வாறு பகிரங்கமாக்கிவிட்டு, அவர்களை விடுதலை செய்தால் நாட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பும் என்றும் நியாயம் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஜே.ஆரின் அரசியல் சாணக்கியத்துக்கு உதாரணமான சம்பவங்களில் இதுவும் ஒன்று.
ஜே.ஆருடன் ஒருவிதமாகப் பேசி கைது செய்யப்பட்ட உறுப்பினர்களை மாத்தையாவும், அன்ரன் பாலசிங்கமும் சென்று பார்வையிட அனுமதி பெற்றுக்கொடுத்தார் திக் ஷித்.
பலாலி விமானத் தளத்திற்கு அக்டோபர் நாலாம் திகதி 17 புலிகள் இயக்க உறுப்பினர்களும் கொண்டுவரப்பட்டனர்.
விமானத் தளத்திற்கு இந்திய படையினர்தான் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் கைதுசெய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் இருந்தனர்.
மாத்தையா சந்திப்பு

நாலாம் திகதி மாலையில் கைது செய்யப்பட்ட உறுப்பினர்களைச் சந்தித்து மாத்தையாவும், அன்ரன் பாலசிங்கமும் உரையாடினார்கள். கொண்டு சென்ற சாப்பாட்டை 17 பேருடனும் அமர்ந்து சாப்பிட்டார்கள் மாத்தையாவும், அன்ரன் பாலசிங்கமும்.
கொழும்புக்கு விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டால் சயனைட் விழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று மாத்தையா கூறிவிட்டார்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மிகத் தந்திரமாக சயனைட் வில்லைகளும் மாத்தையாவால் வழங்கப்பட்டுவிட்டன.
கைதான 17 பேருக்கும் எப்போது சயனைட் வில்லைகள் வழங்கப்பட்டதோ அப்போதே இந்தியப்படையுடன் ஒரு மோதலுக்கு புலிகள் தலைமைப்பீடம் முடிவு செய்துவிட்டது.
மறுநாள் ஐந்தாம் திகதியும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலாலி விமானத் தளத்துக்குச் சென்றனர். கைதானவர்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது.
அன்றுதான் 17 பேரையும் கொழும்புக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.
இந்தியப்படை அதிகாரிகள் சிலர் அவர்களைக் கொழும்புக்குக் கொண்டுசெல்ல வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தனர்.
இந்தியப்படையைச் சேர்ந்த ஜெனரல் ரொட்றிகஸ் என்பவர் விடாப்பிடியாக நின்று 17 பேரையும் விடுதலை செய்யுமாறு வற்புறுத்தினார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான யாழ் மாவட்டத்தளபதி குமரப்பாவுக்கு இந்தியப்படையினர் வந்த பின்னர்தான் திருமணம் நடந்திருந்தது.

லெப்.கேணல் குமரப்பா
இந்தியப்படை அதிகாரிகளும் அத்திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். திருமணம் நடந்து ஒரு மாதத்துக்குள் குமரப்ப கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தியப்படை அதிகாரி ஒருவரை அழைத்த குமரப்பா தனது மனைவியைச் சென்று பார்த்து ஆறுதல் கூறுமாறு சொன்னார்.
அவர் ஏன் அப்படிக் கூறுகிறார் என்பதற்கான முழு அர்த்தத்தையும் அப்போது அந்த அதிகாரி புரிந்து கொண்டிருக்க முடியாது.
தனது மரணம் உறுதிசெய்யப்பட்ட நிலையில்தான் குமரப்பா அவ்வாறு கூறியிருந்தார்.
விபரீதம் ஆரம்பம்
ஐந்தாம் திகதி மாலை ஐந்துமணி. நீண்ட விபரீதங்களுக்கு வித்திடப்போகும் அந்தக்காட்சி ஆரம்பமானது.
கொழும்பிலிருந்து அனுப்பபட்ட விசேட இராணுவ அணியொன்று விமானத்தில் இருந்து இறங்கி கைது செய்யப்பட்டவர்கள் வைக்கப்பட்டவர்கள் வைக்கப்பட்டிருந்த அறையை நோக்கிசென்றது.
இந்தியப்படையினர் நினைத்திருந்தால் அந்த அணியைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
ஐந்தாம் திகதி பிற்பகல் 4.30 மணியளவில் புதுடில்லியிலிருந்து இந்தியப் படைத்தளபதிக்கு ஒரு இரகசியத் தகவல் கிடைத்தது.
’17 பேரையும் கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியைத் தடுக்க வேண்டாம்’என்று அத்தகவல் தெரிவித்தது.
அத்தகவல் காரணமாகவே இந்தியப் படையினர் தடையெதுவும் செய்யவில்லை.
தமது அறையை நோக்கி இராணுவ அணி வருவதைக் கண்டதும் குமரப்பா, புலேந்திரன் ஆகியோர் சயனைட் வில்லைகளைக் கையிலெடுத்துக் கொண்டனர்.
“யாரும் நெருங்க வேண்டாம். உள்ளே வந்தால் நாம் சயனைட் விழுங்கிவிடுவோம்.” என்று உரத்த சத்தமாகக் கூறினார்கள்.
இராணுவத்தினர் அவர்களை நெருங்கிச் செல்லத் தொடங்கினார்கள்.
குமரப்பாவும், புலேந்திரனும் ஏனைய 15 பேரையும் ஒரு தடவை பார்த்துக் கொண்டனர். அவர்களும் சயனைட் வில்லைகளுடன் தயாராக நின்றனர்.
இராணுவத்தினர் மிக அருகில் வந்து விட்டனர்.
அதே நேரம் குமரப்பாவும் , புலேந்திரனும் சயனைட் வில்லைகளை உட்கொண்டனர்.
அதனைக் கண்டதும் பாய்ந்து சென்ற இராணுவத்தினர் சயனைட்டைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இராணுவத்தினரில் சிலர் கோபத்தில் தாக்குதலும் நடத்தினார்கள்.
கைதான பதினேழு பேரில் 12 பேர் சயனைட் வில்லைகளை துரிதமாக விழுங்கிவிட்டனர். ஏனைய 5 பேர் சயனைட் வில்லைகளை விழுங்கத் தாமதித்ததால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேரும் பலியாகியதும், எதிர்பாராத அதிர்ச்சியால் திகைத்துப் போய்விட்டனர் இந்தியப் படை அதிகாரிகள்.
பலியான 12 பேரின் உடல்களும் இந்தியப் படையினரின் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
புலிகளுக்கு தகவல்

பலியானவர்களின் உடல்களை வந்து பொறுப்பெடுக்குமாறு புலிகள் அமைப்பினருக்குத் தகவல் அனுப்பினார்கள் இந்தியப் படையினர்.
ஐந்தாம் திகதி 12 பேரும் மரணமாகினர்.
ஆறாம் தேதிதான் புலிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
மதியம் 12 மணிக்கு உடல்களை ஒப்படைக்கலாம் என்று முதலில் தெரிவித்திருந்தனர்.
உடல்களைப் பெறுவதற்காக 1.30 மணியில் இருந்து பலாலி தளத்தில் காத்திருந்தனர் புலிகள் இயக்கத்தினர்.
மாலை ஐந்து மணிவரை உடல்கள் ஒப்படைக்கப்படவில்லை.
“உடல்களை தயார் செய்து கொண்டிருக்கிறோம் இன்னமும் பத்து நிமிடத்தில் தந்துவிடுகிறோம்” என்று இந்தியப் படையினர் தெரிவித்தனர்.
ஏழரை மணிக்குத்தான் உடல்கள் கொண்டுவரப்பட்டன. புலிகள் இயக்கத்தினரின் வாகனங்களில் ஏற்றப்பட்டன.
வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடம் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் உடல்கள் தெளிவாகத் தெரியவில்லை.
டோர்ச் லைற் இருக்கிறதா என்று படையினரிடம் கேட்டனர் புலிகள் இயக்கத்தினர். அவர்கள் தம்மிடம் இல்லை என்று கூறிவிட்டனர்.
புலிகள் இயக்கத்தினருக்குச் சந்தேகம் வந்துவிட்டது.
2 மணிக்கு உடல்களைத் தருவதாகச் சொன்னவர்கள் இருள் சூழ்ந்த பின்னர் ஒப்படைக்கிறார்கள். டோர்ச் லைற்கூட இல்லை என்கிறார்கள்.
வாகன வெளிச்சத்தில் உடல்களை பரிசோதித்துப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
உடலில் காயங்கள்.
புலேந்திரனின் உடலில் கழுத்தின் முன்பக்கத்தில் ஒரு காயம். பின்பக்கத்திலும் காயம்.
குமரப்பாவின் உடலிலும் காயங்கள் காணப்பட்டன. துப்பாக்கி முனையில் பொருத்தப்பட்டிருக்கும் கத்தியால் (பயனெட்) ஏற்பட்ட காயங்களே அவை.
புலிகளிடம் உடல்களை ஒப்படைத்த இந்தியப் படை வைத்திய அதிகாரி மௌனமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.
“சயனைட் உட்கொண்டவர்களின் உடலில் காயங்கள் எப்படி வந்தன?” என்று கேட்டார்கள் புலிகள். வைத்திய அதிகாரி மௌனமாக இருந்தார்.
“இவர்கள் சயனைட் உட்கொண்ட நேரத்தில் கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்தார்கள். என்று உங்களால் அத்தாட்சிப்படுத்த முடியுமா?” என்று கேட்டார்கள்.
“என்னால் முடியாது” என்று மறுத்துவிட்டார் வைத்திய அதிகாரி.
12 பேரின் உடல்களுடன் சென்றனர் புலிகள் இயக்கத்தினர்.
இதற்கிடையே குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேர் மரணமான செய்தி குடாநாடெங்கும் காட்டுத் தீயாகப் பரவிக் கொண்டிருந்தது.
குமரப்பாவும், புலேந்திரனும் புதிதாகத் திருமணமானவர்கள். இருவரும் திருமணக் கோலத்தில் இருந்த படங்களை யாழ் பத்திரிகைகளில் வெளியிட்டனர் புலிகள் இயக்கத்தினர்.
மணமாலை மாற்றிக்கொண்ட ஒரு மாத காலத்திற்குள் இரு தளபதிகளும் மரணமாலையைச் சூடிக்கொண்டனர்.
புகைப்படங்களை பார்த்த மக்கள் கலங்கி நின்றனர். அனுதாப அலை எழுந்தது.
அதுதான் தருணம்.
போருக்குத் தயாராகினர் புலிகள்.

No comments:

Post a Comment