அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 103

கருணாநிதியின் ‘தமிழ் ஈழ’ முழக்கம்!! : “இடைக்கால நிர்வாக சபையை ஏற்றுக்கொண்ட பிரபாகரன்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-103)


சென்னையில் பிரசாரம்
செப்டம்பர் 26ல் திலீபன் உயிரிழந்த பின்னர் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

திலீபனின் மரணம் தொடர்பாக ஈ.பி.டி.பி. தமிழ்நாட்டில் அஞ்சலி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால் வெளியிடப்பட்ட அனுதாபச் செய்தி சென்னையில் உள்ள புலிகள் இயக்கத்தினரின் அலுவலகத்தில் பொறுப்பாக இருந்த காஸ்ரோ என்பவரிடம் கையளிக்கப்பட்டது.
ஈ.பி.டி.பி. சார்பாக ரமேஷ், அசோக் ஆகியோர் காஸ்ரோவை சந்தித்து அச்செய்தியைக் கையளித்தனர். அப்போது சென்னை அலுவலகத்தில் கிட்டுவும் இருந்தார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரான பிரசாரங்களை இந்தியாவில் இருந்து கொண்டே புலிகள் அமைப்பினர் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
புலிகளின் சென்னை அலுவலகத்தில் இருந்து ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையும் வெளியிடப்பட்டது.
இந்தியப் படைகளுக்கும், புலிகளுக்கும் இடையில் வடக்கு-கிழக்கில் முறுகல் நிலை ஏற்படத் தொடங்கிய போதும், சென்னையில் கிட்டுவுடன் இந்திய உளவு நிறுவனங்கள் தொடர்புகளை வைத்திருந்தன.
இந்திய உளவு நிறுவனங்களைச் சேர்ந்த சிலரும், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது. அவசரமாகச் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் தமக்கும் உடன்பாடில்லை என்று கிட்டுவிடம் தெரிவித்தனர்.
திலீபனின் மரணம் தமிழ்நாட்டிலும் அனுதாபத்தை ஏற்படுத்தியிருந்தது.
கலைஞரின் ஆவேசம்
தமிழ்நாட்டில் இப்போது புலிகளை ஆதரித்துப் பேசுகிறவர்களை பொலிசார் கைது செய்கின்றனர். புலிகளை ஆதரிப்பது தமிழ்நாட்டிலும் பிரிவினையைத் தூண்டும் செயல் என்று தமிழக அரசு கூறுகிறது.
கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்னர் கலைஞர் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவர்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் சிலவற்றை இந்தக்கால கட்டத்தில் நினைவுபடுத்திப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
கலைஞர் கருணாநிதியின் சொந்தப்பத்திரிகை முரசொலி. அதில் ‘கரிகாலன் பதில்கள்’என்றொரு பகுதியில் கலைஞரின் பதில்கள் இடம்பெறும்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக கரிகாலன் பதிலகள் என்ற பகுதியில் கலஞர் வெளியிட்ட கருத்துக்களைத் தொகுத்து தி.மு.க தலைமையகம் ஒரு நூல் வெளியிட்டது.
‘கொழும்பு ஒப்பந்தம்’ என்ற தலைப்போடு, கலைஞரின் வர்ணப்படத்துடன் வெளியான அந்த நூலில் இருந்து சில முக்கிய பகுதிகள் இவை:
கேள்வி: இலங்கை அதிபர் ஜயவர்த்தனே ‘மீண்டும் பேச்சுவார்த்தை’ என்ற பல்லவியைப் பாடத் தொடங்கியுள்ளாரே?
பதில்: அவர் பாடுகிற பாட்டுக்குத் தலையாட்டுவதற்கு இந்திய அரசு தயாராக இருக்கும்போது, மேலும் இலங்கைத் தமிழினத்தை அழிக்கவும், தமிழ் ஈழம் அமையாமல் தடுக்கவும் அவர் பல்லவியை அவர் எந்தப் பல்லவியை வேண்டுமானாலும் பாடுவார்.
கேள்வி: இறுதியாக ‘தனித்தமிழ் ஈழம்’ இல்லாமலே போய்;விடும் போலிருக்கிறதே?
பதில்: அப்படியொரு முடிவு ஏற்பட்டால் ‘தனித்தமிழீழத்தை ஆதரிக்கமாட்டோம்’ என்று மத்திய காங்கிரஸ் அரசும், மாநிலத்தில் எம்.ஜ.ஆர். அரசும் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிவந்ததை நிலைநாட்டுவதில் வெற்றிபெற்றுவிட்டன என்றுதான் அர்த்தம்.
(சமீபத்தில் ஜெயின் கமிஷன் முன்பாக சாட்சியமளித்த கலைஞர் கருணாநிதி, தான் எப்போதும் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது. என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)
கேள்வி: “அரசியல் நாணயம் சிறுதுமில்லாத சிங்கள ஆட்சியாளருடன் அவசரக்கோலத்தில் செய்யப்படும் எந்த உடன்படிக்கையும் ஏமாந்த தமிழனின் வரலாற்றில் இன்னுமொரு சோணகிரி அத்தியாயமாகவே அமையும்” என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அறிக்கை விட்டுள்ளாரே?
பதில்: தமிழின உணர்ச்சியுள்ள ஒவ்வொருவரும் இப்போது செய்யப்படும் அவசர ஒப்பந்தம் குறித்து இப்படித்தான் கருதுவார்கள்! இப்படித்தான் கருத முடியும்!
படை சென்றது ஏன்?
கேள்வி: யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ள இந்திய இராணுவத்தினர் இலங்கை அதிபர் ஜயவர்த்தனாவின் கட்டளைப்படி இயங்குவார்கள் என்று இந்திய தூதர் திக்~pத் கொழும்பில் அறிவித்துள்ளாரே?
பதில்: சிங்கள இராணுவத்தினர் தமிழினத்தின் மீது குண்டுகளை வீசி அழிப்பதைத் தடுத்து தமிழீழம் பெற்றுத்தர இந்திய இராணுவம் செல்ல வேண்டுமென்று நாம் கூறினோம். ஆனால் இப்போது இந்திய இராணுவம் இலங்கை அரசின் கட்டளைக்கு கீழ்ப்பட்டு நடக்க அனுப்பப்பட்டிருக்கிறது.
கேள்வி: இப்பொழுது இலங்கையின் ஈழப்பகுதியில் என்ன நடக்கிறது?
பதில்: இலங்கை இராணுவத்திற்குப் பதிலாக இந்திய இராணுவம் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைத் தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
கேள்வி: “தாங்கள் கோரியதற்கு அதிகமாகவே தமிழர்களுக்கு கிடைத்துள்ளது. எனவே அவர்கள் புகார் செய்வதற்கு எதுவுமில்லை” என்று அலஹாபாத்தில் ஒரு விழாவில் பேசிய ராஜீவ் காந்தி கொழும்பு ஒப்பந்தம் தொடர்பாகக் கூறியுள்ளாரே?
பதில்: அவர்கள் கோரியது தமிழ் ஈழம் என்ற தனிநாடு. அந்தத் தனிநாட்டில் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்க வேண்டும் என்பது! இப்போது கிழக்கு மாநிலத்தை பற்றிய உத்தரவாதம் பொதுவாக்கெடுப்பில் தொடங்கிக் கொண்டிருக்கிறது.
தனிநாடு கிடைக்கவில்லை என்பது மாத்திரமல்ல, அமைய இருக்கும் தமிழ் மாநிலத்துக்கும் சுயநிர்ணய உரிமையோ, அல்லது குறைந்த பட்சம் மாநில சுயாட்சி அந்தஸ்தோ கூட தரப்படவில்லை. இந்த நிலையில் தாங்கள் கோரியதற்கு அதிகமாகவே தமிழர்களுக்குக் கிடைத்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது!
மதிக்காவிட்டாலும்….
கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், அந்த இயக்கத்தவரும், தி.மு.கழகத்தை மதிக்காத நிலையில் நடந்து கொண்டார்களே: இப்போது வெளியிடப்படுகின்ற உங்களின் கருத்துக்கள் பிரபாகரனையும், அவரது புலிகள் இயக்கத்தையும் ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளதே?
பதில்: சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் பெப்ரவரி மாதம் பத்தாம் தேதியன்று (1987) சென்னையில் கூடிய தி.மு.க. நிர்வாகக் குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தை நினைவுக்குக் கொண்டுவந்தால் யாருக்கும் இப்படியொரு சந்தேகம் எழாது!
அந்தத் தீர்மானத்திலேயே பிரபாகரனும் அவரது இயக்கமும் மத்திய மாநில அரசுகளால் எப்படியெல்லாம் அலைகழிக்கப்பட்டனர் என்பதையும், பொதுவாகப் போராளிகளிடம் இருந்த ஒற்றுமையை மத்திய, மாநில அரசுகள் எப்படியெல்லாம் திட்டமிட்டுச் சீரழித்தன என்பதையும் விளக்கமாகக் கழகம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பிரபாகரன் என்ற தனிப்பட்ட ஒருவரோ, அவரது இயக்கத்தினரோ நமது கழகத்தை மதிக்கிறார்களா இல்லையா என்பது முக்கியமல்ல!
இலங்கையில் தமிழின அழிவையும் அவர்களது உரிமைகள், உடமைகள் பறிக்கப்படும் கொடுமையையும் தமிழ்க் குருதியோடுகிற நம்மால் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும் என்பதே முக்கியம்!
கேள்வி: “ராமாயணத்தில் இலங்கையை மீட்ட ராமச்சந்திரமூர்த்தி எனப் படித்துள்ளோம். இன்று இலங்கையை மீட்டிருப்பவரும் இந்த இராமச்சந்திர மூர்த்திதான்!” என்று அமைச்சர் ஒருவர் பேசியுள்ளாரே?
பதில்: பழைய இராமாயணத்தில் ‘அசோகவனம்’. புதிய இராமாயணத்தில் ‘அசோகா ஹோட்டல்’…
(பிரபாகரன் ஆசோகா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டதையே கலைஞர் குறிப்பிடுகிறார். ராமச்சந்திரமூர்த்தி என்பது எம்.ஜி.ஆரைக் குறிக்கிறது)
ராஜீவ் காந்தி, ஜே.ஆர், எம்.ஜி.ஆர். மூவரும் கூட்டுச் சேர்ந்து தமிழ் ஈழம் அமைவதைத் தடுத்துவிட்டதாக தி.மு.க. தமிழ்நாடெங்கும் பிரசாரம் செய்தது.
எம்.ஜீ.ஆர். தமிழர்கள் மீது பற்றே இல்லாதவர் என்பதை எடுத்துக்காட்ட இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தியது தி.மு.க.
(பிரபாகரன், இந்தியத் தூதர் திக் ஷித், )
இரகசியப் பேச்சுக்கள்
யாழ்ப்பாணத்தில் இந்திய அதிகாரிகளும் புலிகள் இயக்கத் தலைவர்களும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்கள்.
இந்திய சார்பாக இந்தியத் தூதர் திக் ஷித், அவரது உதவியாளர் சென், லெப்டினன்ட் ஜெனரல் திபீந்தர் சிங் ஆகியோரும், புலிகள் தரப்பில் பிரபாகரன், மாத்தையா, அன்ரன் பாலசிங்கம் ஆகியோரும் பங்குகொண்டனர்.
இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இடைக்கால நிர்வாகத்தில் தமக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் தேவை என்று புலிகள் தரப்பால் கேட்கப்பட்டது.
பொலிஸ் அதிகாரம், குடியேற்றம் ஆகிய பொறுப்புக்கள் தம்மிடம் இருக்கவேண்டும் என்பதையும் புலிகள் வலியுறுத்தினார்கள்.
எட்டுப்பேரைக் கொண்ட இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைப்பது. அதில் மூன்று பேர் புலிகளால் சிபாரிசு செய்யப்படும் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது.
அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்று புலிகள் தரப்பினரால் கேட்கப்பட்டதால் இடைக்கால நிர்வாக சபையில் 12 உறுப்பினர்கள் இருக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஏழுபேர் புலிகளின் பிரதிநிதிகள், இரண்டு பேர் தமிழர் விடுதலைக் கூட்டணயின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கியதாக இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டறிக்கை
இந்தியத் தரப்புக்கும், புலிகளுக்கும் இடையே பேச்சுக்கள் இரகசியமாகவே நடந்தன ஆயினும், பேச்சுக்களின் இறுதியில் இரு தரப்பும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.
“இடைக்கால நிர்வாக சபையொன்றை ஜே.ஆர். ஜயவர்த்தனா தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி உருவாக்குவார்.
இடைக்கால நிர்வாக சபைக்கு தலைவரைத் தெரிவுசெய்ய மூன்று பெயர்களை புலிகள் அமைப்பினர் சிபாரிசு செய்வர். அதிலிருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்வார்.
புலிகள் இயக்கத் தலைவர்களினதும், ஏனைய உறுப்பினர்களதும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதும், தலைவர்களின் சொந்தப்பாதுகாப்புக்கான ஆயுதங்கள் தவிர, ஏனையவை கையளிக்கப்படும் என்று பிரபாகரன் தெரிவித்தார்.
பொலிஸ் படை நடவடிக்கை உட்பட சிவில் அம்சங்கள் அனைத்துக்கும் புலிகள் அமைப்பினர் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று பிரபாகரன் கூறினார்.
மாகாண சபைக்கான தேர்தல்கள் சதந்திரமாக நடைபெற தனது முழுமையான ஒத்துழைப்பை புலிகள் வழங்குவார்கள் என்றும் பிரபாகரன் கூறினார்.
புலிகள் இயக்கதினரும், இந்தியத் தகவல் துறையினரும் பரஸ்பரம் விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்தித் தூதர் திக் ஷித்தும், பிபாகரனும் ஒப்புக் கொண்டனர்.
இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அறிக்கையில் இந்தியத் தரப்பு சார்பாக இந்தியத் தூதரக முதல் செயலாளர் (அரசியல்) பூரியும், புலிகள் சார்பாக துணைத்தலைவர் மாத்தையாவும் ஒப்பம் இட்டிருந்தனர்.
இடைக்கால நிர்வாக சபை விடயத்தில் பிரபாகரன் மனம் விரும்பித்தான் உடன்பட்டார் என்று சொல்லமுடியாது. அதனால் தான் கூட்டறிக்கையிலும் அவர் கையொப்பமிடவில்லையோ என்று சந்தேகம் எழுந்தது.
இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் பதவிக்கு புலிகள் அமைப்பினரால் மூன்று பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.
முதல் பெயராக அப்போது திருமலை மேலதிக அரசாங்க அதிபராக இருந்த என்.பத்மநாதனின் பெயரை புலிகள் பிரேரித்திருந்தனர்.
இரண்டாவதாக யாழ் மாநகர சபை ஆணையாளராக இருந்த சிவஞானத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது.
இடைக்கால நிர்வாக சபைத்தலைவர் மற்றும் பிரதிநிதிகளாக 15 பேரின் பெயர்கள் புலிகள் இயக்கத்தினரால் சிபாரிசு செய்யப்பட்டன.
ஜே.ஆர். தந்திரம்
சிபாரிசுப் பட்டியலை ஆராய்ந்தார் ஜே.ஆர். ஜயவர்த்தனா.
புலிகள் அமைப்பினர் சிபாரிசு செய்த பட்டியலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் இருந்தன.
இடைக்கால நிர்வாக சபைத் தலைவராக புலிகள் இயக்கத்தினர் சிபாரிசு செய்திருந்த என்.பத்மநாதனும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்தான்.
முதல் வேலையாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களை ஒதுக்கித்தள்ளினார் ஜே.ஆர்.
“கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களையும் சேர்த்துவிட்டால் வடக்கு-கிழக்கு ஒற்றுமைக்கு வழி செய்வதாக அமைந்துவிடும். இடைக்கால நிர்வாக சபையில் கிழக்கைச் சேர்ந்தவர்கள் இல்லையென்றால் தான் கிழக்கு மாகாண மக்களிடம் அதிருப்தி ஏற்படும். வடக்கு-கிழக்கு இணைந்திந்தால் வடக்கின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருக்கும் என்ற அபிப்பிராயத்தை உருவாக்க ஜே.ஆர். கையாண்ட சாணக்கிய தந்திரம் அது.”
இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் பதவிக்கு சகல வகையிலும் பொருத்தமானவராகவும் அனுபவம் வாய்நதவராகவும் என்.பத்மநாதன் இருந்தார்.
ஆனால், அவரைத் தலைவராக நியமித்தால் வடக்கு-கிழக்கு பூசலை தூண்டிவிட முடியாது.
அதனால் பத்மநாதனை ஒதுக்கிவிட்டு இடைக்கால நிர்வாக சபைத் தலைவராகவும் வடக்கைச் சேர்ந்த சிவஞானத்தை தெரிவு செய்தார் ஜே.ஆர்.
சிவஞானம், யாழ் மாநகர சபை ஆணையாளராக இருந்தபோது தமிழ் ஈழ விடுதலை இராணுவத் தலைவர் ஒபரேய் தேவனால் சுடப்பட்டு உயிர் தப்பியவர்.
மாநகர சபையில் ஊழல் செய்தார் என்பதனாலும் அரசாங்கத்துக்கு ஆதரவானவர் என்பதனாலும் அவர் சுடப்ப்ட்டார். அவரது பெயரையும் புலிகள் சிபாரிசு செய்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
அவரையே இடைக்கால நிர்வாக சபைத் தலைவராக ஜே.ஆர். அறிவித்த போது புலிகள் அமைப்பினர் அதிர்ச்சியடைந்தனர்.
“மூன்று பெயர்களை சிபாரிசு செய்ய வேண்டும் என்பதற்காகவே சிவஞானத்தின் பெயரையும் சேர்த்திருந்தோம்.
பத்மனாதனின் பெயரை முதல் பெயராக குறிப்பிட்டிருந்தோம். அவரைத்தான் இடைக்கால நிர்வாக சபைத் தலைவராக அறிவிக்க வேண்டும்” என்று புலிகள் அமைப்பியர் கூறினார்கள்.
தாம் சிபாரிசு செய்த பட்டியலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் பெயர்கள் இல்லாததும் புலிகள் அமைப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
பிரபா ஒப்புதல்
இந்தியத் தூதர் திக் ஷித் பலாலிக்கு விரைந்தார். பிரபாகரனும் திக் ஷித்தும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
சிவஞானத்தை தெரிவுசெய்தது தொடர்பாக ஜே.ஆர். ஒரு புத்திசாலித்தனமான நியாயத்தை திக் ஷித்திடம் கூறியிருந்தார்.
“என்.பத்மநாதனை விட சிவஞானம் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர். பத்மநாதன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சில காலம் சிறையில் இருந்தவர். அதனால்தான் சிவஞானத்தைத் தெரிவு செய்தேன்.” என்று கூறியிருந்தார் ஜே.ஆர்.
அதனைப் பிரபாகரனிடம் கூறினார் திக் ஷித். கிழக்கு மாகாணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். பதமநாதனையே தலைவராக நியமிக்க வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினார் பிரபாகரன்.
மாலை ஐந்து மணிவரை கூட்டம் நடைபெற்றது. பிரபாகரனை திக் ஷித்தும், இந்திய அதிகாரிகளும் பலவாறு சமாதானம் செய்தனர்.
இறுதியாக சிவஞானத்தை தலைவராக நியமிக்க சம்மதம் தெரிவித்தார் பிரபாகரன். பிரபாகரன் சம்மதம் தெரிவித்தபோது இந்தியத் தூதர் உட்பட அதிகாரிகள் கரகோஷம் செய்து வரவேற்றனர்.
தலைவர் தேர்வுக்கான ஒப்புதல் பத்திரத்தில் பிரபாகரனிடம் கையொப்பம் வாங்கினார் திக் ஷித்.
‘அப்பாடா..’ என்று நிம்மதிப்பெருமூச்சோடு கொழும்புக்கு திரும்பினார் திக் ஷித்.
ஆனால் பிரபாகரன் மட்டும் வேறு ஒரு திட்டம் வைத்திருத்தனர்.
இடைக்கால நிர்வாக சபைத்தலைவர் பதவியை ஏற்கக்கூடாது என்று சிவஞானத்துக்கு புலிகள் இயக்கத்தினர் கண்டிப்பாகக் கட்டளையிட்டனர்.
அதே நேரத்தில் இடைக்கால நிர்வாக சபைத்தலைவர் தெரிவில் தனக்கு உடன்பாடில்லை. “நிர்ப்பந்தம் காரணமாகவே ஒப்புதல் பத்திரத்தில் கையொப்பமிட்டேன்.” என்று பிரபாகரன் கூறிவிட்டார்.
“இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் பதவி எனக்கு வேண்டவே வேண்டாம்” என்று சிவஞானமும் அறிவித்தார்.
இறுதிக்கட்டம்
இவ்வாறான நிலையில் இந்திய-புலிகள் உறவின் கடைசிக் கட்டம் விரைந்து வந்தது.
1987 அக்டோபர் 3ம் திகதி, இலங்கைக் கடற்படையினர் சந்தேகத்துக்கு இடமான ஒரு படகைக் கண்டனர்.
கடற்படையினரால் அப்படகு சுற்றி வளைக்கப்பட்டது.
படகில் புலிகள் இயக்கத்தின் 17 உறுப்பினர்கள் இருந்தனர்.
திருமலை மாவட்டத் தளபதி புலேந்திரன், யாழ் மாவட்டத்தளபதி குமரப்பா ஆகியோர் உட்பட 17 பேர் படகில் இருந்தனர்.
அனைவரையும் கைது செய்தனர் கடற்படையினர்.
அதன்பின்னர்தான் உருவானது விபரீதம்.

No comments:

Post a Comment