Thursday, 18 December 2014

தமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள்

முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.
 

விடுதலைப் புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக,  பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும், தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

அதேவேளை விடுதலைப் புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.

அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப் பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும், ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.LTTE_Training_in_January_2006_Mark0102_11[1]
அந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில், இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக,  விடுதலைப் புலிகளின் இறுதிப் போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.
தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.

விடுதலைப் புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.

அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றி வளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.
, சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.

இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.

வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.

புளியங்குளத்தை சுற்றி வளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்த போதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்கக்கூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.

அதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.

சிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.
அப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.

ஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.

பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்பு நடவடிக்கைக்கான தளபதி.

தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப் பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.

தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித் தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.
நவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்து வந்தார்.

வன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்ட போதும் அது முடியாமல் போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக் கொண்டார்.
விடுதலைப் புலிகளின் போராட்ட வலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப் படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்ட வாழ்க்கையாக இருந்தது.

“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.

முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப் புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.

இரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறி படையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்த போதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.
மரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத் தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.

ஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச் சமரின் போது ஆட்லறிப் படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.

தமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப் புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்பு தளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத் தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப் புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.

ஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த் தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.

ஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.

ஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத் தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

சிறிலங்காவில் போரை நிறுத்தும் அனைத்துலக முயற்சிகளை இந்தியாவே தடுத்தது

சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவைக் காப்பாற்றுவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது.
விக்கிலீக்ஸ் இணையம் மூலம் வெளியான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல் பரிமாற்ற குறிப்புகளில் இருந்து இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.

 

சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த போரில் பொதுமக்கள் பலியாவது குறித்துக் இந்திய அரசு கவலை தெரிவித்தது.

ஆனாலும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை சிறிலங்கா அரசு தொடர்வதை இந்தியா எதிர்க்கவில்லை.

2009 ஜனவரி மாதம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அவரது மாளிகையில் சந்தித்த அப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மனிதஉரிமைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதைத் தவிர, வேறு எந்த நோக்கத்துடனும் தான் கொழும்பு வரவில்லை என்று கூறியதாக, அமெரிக்கத் தூதுவரிடம் இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்தார்.

போர் தொடர்வதை இந்தியா எதிர்க்கவில்லை என்று அவர் வெளியிட்ட அறிக்கை மூலமே தெளிவாகியிருக்கிறது.

பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், 23 ஆண்டு மோதலுக்குப் பிறகு, சிறிலங்காப் படைகள் பெறுகின்ற வெற்றியானது சிறிலங்காவின் வடக்கிலும் ஏனைய பகுதிகளிலும் இயல்பு நிலையையை நிலை நாட்டுவதற்காக அரசியல் ரீதியாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று கூறியிருந்தார்.
மத்திய அரசின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவின் நெருக்குதலால் 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும், போரைத் தாற்காலிகமாக நிறுத்துமாறு சிறிலங்கா அரசை வலியுறுத்துவதற்காக முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது.

அதன் பிறகு வேறெந்த தருணத்திலும் சிறிலங்காவில் போர் தொடர்வதை இந்தியா தடுக்கவில்லை.

2009 ஏப்ரல் 15ம் நாள் அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவரை, அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலரும், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சிவசங்கர் மேனன் சந்தித்தபோது, மோதலுக்குத் தீர்வு காண்பதற்காக ஐ.நா. சபை தனது பிரதிநிதியை அனுப்புவதை சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கும், போர்நிறுத்தத்துக்கும் சிறிலங்கா அரசு தயாராக இல்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார்.

அனைத்துலக நாடுகளின் கோரிக்கைகள் அனைத்தையும் புறக்கணிக்காமல், குறைந்தபட்சம், விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு சிறிலங்கா அரசுக்கு இந்தியா யோசனை கூறியதாகவும் சிவசங்கர் மேனன் அமெரி்க்க அதிகாரியிடம் கூறியிருக்கிறார்.

அதேவேளை, புலிகளின் முக்கிய தலைவர்கள் யார், ஏனைய தலைவர்கள் யார் என்பதை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்வியும் எழுந்ததாக மேனன் கூறியிருக்கிறார்.

பேச்சுக்களுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ள அதேவேளை, விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தும் முரண்பட்ட தகவல்கள் வருவதாகவும், பிரபாகரனுக்காகப் பேசவல்லவர் யார் என்று தெரியவில்லை என்றும், நிலைமையை அவர் உணர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுக்களுக்கு இந்தியா முன்முயற்சி எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார்.
2009 மே 6, 7ம் நாட்களில், சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் சிறப்புத் தூதுவர் டெஸ் பிறவுண் இந்திய வெளிவிவகாரச் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை ஆகியோரைச் சந்தித்தார்.

அப்போது, சிறிலங்கா இராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் நிலையில் உள்ளதால், போரை நிறுத்துவதற்கான சாத்தியங்கள் இப்போது இல்லை என்று இந்திய அதிகாரிகள் இருவரும் கூறினார்.

அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம் குறித்து இந்திய அதிகாரிகள் கவலை தெரிவித்தாலும், போருக்குப் பிறகு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சம்மதிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இருந்ததாக பிரித்தானிய சிறப்புத் தூதுவர் டெஸ் பிறவண் அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்ட நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா பிரச்சினையையும் சேர்த்து, அறிக்கை வெளியிட்டால்- சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா. குரல் கொடுத்தால்- அது எதிர்விளைவுகளைத் தான் ஏற்படுத்தும் என்று பிரித்தானிய சிறப்புத் தூதுவரிடம் சிவசங்கர் மேனனும், எம்.கே.நாராயணனும் கூறியுள்ளனர்.

ஐ.நா பாதுகாப்பு சபை அல்லது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மூலம் அழுத்தம் கொடுப்பதை விட, இராஜாங்க ரீதியான நடவடிக்கைகளே பயனுள்ளதாக இருக்கும் என்று சிவசங்கர் மேனன் அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் கூறியதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ள்து.

Tuesday, 2 December 2014

'தமிழக' விடுதலைப்புலிகள்

தமிழீழ விடுதலைப் இயக்கத்தில் தமிழக இளைஞர்கள் பலர் தங்களை இணைத்துக்கொண்டு, பிரபாகரன் அவர்கள் தலைமையில் பங்காற்றிய செய்தி
கிடைத்து இருக்கிறது.


ஏறக்குறைய 50,000 போராளிகள் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சற்றேறக்குறைய 200 தமிழக போராளிகள் இருந்தனர்; அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை;

கிடைத்தவரை சில தகவல்கள் தருகிறேன்.வீரமரணம் அடைந்தோருக்கு புலிகள் வழங்கும் 'மாவீரர்' பட்டம் பெற்ற தமிழகத் தமிழர்களில் ஒரு கரும்புலி இரண்டு பெண்போராளிகள் உட்பட 14 பேரின் விபரங்கள்,
-------------------------
பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது
வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
________________

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: உமா
இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 27.05.1972
வீரச்சாவு: 11.12.1999
நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: விசுவமடு
மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
_____________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மணியரசி
இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி
ஊர்: தமிழகம்.
வீரப்பிறப்பு: 02.02.1977
வீரச்சாவு: 19.04.1996
நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2 நடவடிக்கைக்கு எதிரான
சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
______________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: பத்மநாபன்
இயற்பெயர்: பி.பத்மநாபன்
ஊர்: திருச்சி, தமிழகம்.
வீரப்பிறப்பு: 27.07.1963
வீரச்சாவு: 16.03.1988
நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு
________________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுனில்
இயற்பெயர்: கதிரவன்
ஊர்: தமிழகம்.
வீரச்சாவு: 11.04.1988
நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில் இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
________________
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்)
இயற்பெயர்: முத்தையா இராமசாமி
ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 23.07.1962
வீரச்சாவு: 11.12.1991
நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
______________
நிலை: 2ம் லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: உதயசந்திரன்
இயற்பெயர்: சேதுபாணடித்தேவர் ராமமணி சேகரன்மகாதேவர்
ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 05.05.1969
வீரச்சாவு: 09.06.1992
நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு
__________________
பிரிவு: கடற்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: ஈழவேந்தன்
இயற்பெயர்: துரைராசன் குமரேசன்
ஊர்: தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 25.05.1969
வீரச்சாவு: 20.11.1992
நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு துயிலுமில்லம்: எள்ளங்குளம்
மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
_____________
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: சச்சு
இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த்
ஊர்: பியர், இந்தியா.
வீரப்பிறப்பு: 04.09.1975
வீரச்சாவு: 20.12.1992
நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம் படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
______________
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்)
இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 01.01.1966
வீரச்சாவு: 13.05.1996
நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
_____________
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு)
இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 31.05.1975
வீரச்சாவு: 19.05.1996
நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
_____________
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குற்றாளன்
இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 08.08.1969
வீரச்சாவு: 16.07.1996
நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு
_________________
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுதா
இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன்
ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு
வீரப்பிறப்பு: 28.10.1980
வீரச்சாவு: 05.07.1999
நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
_____________
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: குருசங்கர்
இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 18.04.1973
வீரச்சாவு: 25.07.1996
நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து
பண்டுவம் பெறும்போது வீரச்சாவு துயிலுமில்லம்:
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில்
இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
--------------------------

""நடிகனுக்குப் பாலூற்றும் இளைஞரைப்பற்றிப் பேசிக் களைப்படைந்தோர் இனி இவர்களைப்பற்றிப் பேசுங்கள்""

நன்றி : பத்திரிக்கையாளர் திரு.அருண்குமார்.

தமிழீழத்தை தங்களின் அரசியல் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொண்டு, மேடைகளில் உணர்ச்சி பொங்க பேசும் அயோக்கியர்களை அறிந்த அளவுக்கு,

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த இந்த மறத்தமிழர்கள் குறித்து நாம் இதுவரை அறியாமலே போய்விட்டோமே.....

தலைவர் விடுதலையின் வழிகாட்டி – புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அம்மான்

தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்  ச.பொட்டு அம்மான் அவர்கள் எழுதியது.எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப் பற்றி நான் எழுதுவதா? என்பது தான்.தேசியத்தினதும் மற்றும் அக்கறையுடைய அனைவரினதும் பார்வையும் அவர் மீது உன்னிப்பாகப் பதியும் இவ்வேளையில், அவரது பண்புகளைப் பகிர்ந்து கொள்வது தலைவரது விடுதலைக்கான விழுமியங்களை முழுதாய் அறியாதோருக்கு எடுத்துச் சொல்லும் பணியாகவே அமையுமென்ற கருத்து வலுப்பட்டது. அந்தக்கருத்தின் வலுவால் தலைவரைப்பற்றிய பெருமித உணர்வுடன் எழுதுகின்றேன்.தலைவரைப்பற்றிய பெருமைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்திற் பார்ப்பர். எந்தவொரு பின்புலமுமில்லாத சாதாரண குடும்பத்திற்பிறந்து, சுயமான அரசியல் தெளிவுடன் விடுதலைக்கான அத்திவாரத்தை அமைத்து, களத்தில் முன்னின்ற போராளியாயும் தளபதியாயும் சமகாலத்திற் செயற்பட்டு, அணிதிரட்டல் செய்து, விடுதலை இயக்கத்தை உருவாக்கிக்கொண்டது வரையான அவரது செயற்பாடுகள் அவரது வரலாற்றின் ஆரம்பச்சாதனைகள்.

விடுதலைப் போராட்டத்தின் பின்னே முழு மக்களையும் அணிதிரளக்கூடியபடி  களச்செயற்பாடுகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்தியமை அவரது அடுத்த சாதனைக்கான வளர்ச்சிக்கட்டம். சந்தித்த ஒவ்வொரு நெருக்கடிகளிலும் விடுதலைப் போராட்டம் ஓய்ந்து விடாதபடி முன்னெடுப்பதன் பின்னே உள்ளமை அவரது ஆற்றலின் வெளிப்பாடு. உலகினது வல்லாதிக்கங்களின் அபிலாசைகளுக்கும் நெருக்குதல்களுக்கும் எமது விடுதலைப்போர்  விலையாகிப்போய்விடாதபடியான வழிகாட்டுதலே எமது விடுதலைக்கான அவரது தலைமைத்துவத்தின் மகுடம்.

ஒடுக்கப்பட்டு நசிவுறும் எமது இனத்தின் விடுதலைக்கான வழி ‘சுயமாகப் போராடி, சுயமாக வலுவாகிக்கொள்ளுதல்’  என்ற தத்துவத்தை உலகின் முன் நிறுவிக்காட்டிய பெருமையினாலேயே எங்கள் தலைவர் உச்சமான பெருமையைப் பெறுகின்றாரென நான் கருதுகின்றேன். எம் தலைவரது குணாம்சங்களே அவரது உயர் நிலைக்குக் காரணம் என்பது வெளிப்படை. அவரிடம் இயல்பாக அமைந்திருந்த நற்பண்புகளும் அவர் தனக்குத்தானே உருவகித்து வளர்த்துக்கொண்ட தலைமைத்துவப் பண்புகளும் இணைந்தே மிகச் சிறந்த அரசியல், இராணுவ ஆற்றலைக்கொண்ட தேசிய நிர்மாணியாக உலகின் முன் அவரை வெளிப்படுத்தியுள்ளது.

தன்னை ஒரு தலைவனாக உருவகித்துக்கொள்ளாமல் ஒரு போராளியாகவே அவர் தனது பொதுவாழ்வை ஆரம்பித்தார். இன்னும் சொல்வதானால் தனது செயலார்வத்திற்கு ஒரு வழிகாட்டியைத் தேடி அலையும் இளம் போராளியாக அவர் நீண்டகாலத்தைச் செலவு செய்தார். அக்காலப்பகுதியில் அவர் பெற்ற பக்குவமும் பட்டறிவுமே அவரை இன்றைய உயர்ந்த தலைமை நிலைக்கு உயர்த்தியுள்ளது எனலாம்.

அக்காலத்தைய தலைமை நிலையில் உள்ளவர்களிடம் முறையான செயற்திட்டம் இல்லாமையை அவதானித்தார். அத்துடன் அவர்களிடம் அர்ப்பணிப்புணர்வு இல்லாதிருப்பதையும் அடையாளம் கண்டுகொண்டார். அவை அவருக்குப் பல பாடங்களைக் கற்பித்தன. அந்தப் பாடங்களினாலேயே அவரது தலைமை உருவானது. தலைமை உருவானது என்பதைவிட வரலாற்றின் வாசலின் ஊடாகத் தலைமை நிலைக்கு அவர் அழைத்துவரப்பட்டார்.

ஆம். தனக்குத் தலைவர்களாகக் கருதிச்செயற்பட்ட அக்காலத்தைய மாணவர்பேரவை, இளைஞர்பேரவைத் தலைவர்கள் பேச்சளவிலேயே தலைவர்களாக இருந்தமையைக் கண்டுகொண்டார். எதிரியின் முறியடிப்பு முயற்சிக்கு நெஞ்சுரத்துடன் முகம்கொடுக்கத்தவறிய அவர்களது பொறுப்பின்மை அவரை வருத்தியது. அக்காலத்தைய போராட்ட அமைப்பையே சிதறடிக்கும் வகையாக சின்னத்தனத்துடன் அவர்கள் நடந்துகொண்டபோது தனியானதொரு அமைப்பை உருவாக்கும் நிலைக்கு உள்ளானார்.

விடுதலை அமைப்பொன்றை உருவாக்கிச் செயற்படுத்தியபோதும் தான் தலைவராகும் எண்ணமின்றி இன்னொருவரைத் தலைவராக்கி தன்னைச் செயற்பாட்டாளராக வைத்துக்கொண்டார். ஒரு விடுதலைப்போராட்டத் தலைமை இயற்கையாக உருவாகவேண்டும் என்பதை அந்தச் செயற்கைத் தலைமை நிரூபித்தது. அவர்களது தனிப் பலவீனங்களுக்காக ஒரு விடுதலை இயக்க மாண்பு குலைக்கப்பட்டு, நெறிமுறைகள் சிதறடிக்கப்பட்டபோது செயற்கைத் தலைமைகள் அடையாளம் காணப்பட்டமையும் அகற்றப்பட்டமையும் நடந்தேறின. அந்த வேளையில் அவர் விடுதலைக்கு வழிகாட்ட முன்வந்தார்.

அதனால் அவர் தலைமை நிலைக்கு அழைத்துவரப்பட்டார். தலைமைக்குத் தேவையான தீர்க்கதரிசனப் பார்வைக்கு உதாரணமாக கொள்ளத்தக்கவர் எமது தலைவர் என்பதை நாம் பெருமையுடன் இங்கு கூறிக்கொள்ளலாம். இந்திய அரச பிரதிநிதிகளால் எமது தமிழீழ விடுதலைப் போராட்டப் போராளிகளுக்கான ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்ட நேரம் அது.

1983ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் வடமாநில மலைகளாற் சூழப்பட்ட பிரதேசத்தில் நாம் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தோம். அங்கு பயிற்சி ஆசிரியராக இருந்த இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் எமது பயிற்சி விடயங்களிலும் எமக்குப் பழக்கப்படாத உறைபனி நிலையை எதிர்கொள்வதற்கான தனிப்பட்ட கவனிப்பிலும் அதீத அக்கறை எடுத்துச் செயற்பட்டிருந்தார். பயிற்சி பெறும் அனைவருக்கும் பொறுப்பாக இருந்த பொன்னம்மானுக்கு அடுத்த நிலையில் இருந்த கிட்டண்ணை உட்பட எம்மிற் பலருடன் நெருக்கமான உணர்வு உறவினை குறித்த அதிகாரி ஏற்படுத்தி விட்டிருந்தார்.

தலைவர் அவர்கள் எமது பயிற்சி முகாமிற்கு வருகைதந்து பயிற்சிகளைப் பார்வையிட்டார். அவ்வேளையில் எம்மிற் பலர், குறித்த அதிகாரி பற்றியும் அவர் எம்மீது கொண்ட கரிசனை பற்றியும் சொன்னதை தலைவர் அமைதியாக கேட்டபடி இருந்தார். அன்றிரவு தெரிவு செய்யப்பட்ட பொறுப்பாளர்களுடன் தலைவரின் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. அப்போது அவர் கூறிய கருத்துக்கள் இன்னும் எனக்குப் பசுமையாக நினைவில் உள்ளது. அதாவது ‘இந்தியா தனது சுயநல நோக்கிலேயே செயற்படுகின்றது – உண்மையில் எமது விடுதலைக்காக நாமே சொந்தமாகப் போரிட வேண்டும்.

போராளிகளாகிய நாம் எமது விடுதலையை இந்தியா பெற்றுத்தரும் என்ற எண்ணத்துடன் இருப்பது எமது விடுதலைப்போரைப் பலவீனப்படுத்திவிடும். எனவே இந்தியாவை நம்பியிருக்காது எமது விடுதலைக்காகப் போராடும் மனஉறுதியைப் போராளிகளிடையே ஏற்படுத்துங்கள்’ என்பதாகத் தலைவரின் கருத்து அமைந்திருந்தது. இந்தியா எமது விடுதலையைப் பெற்றுத்தரப்போவதில்லை. எமது விடுதலைக்காக நாமே போரிட வேண்டியிருக்கும் என்று அன்றே கூறிய அவரது தீர்க்கதரிசனமான சிந்தனையே எமது விடுதலைப் போராட்டம் சொந்தக்காலில் நிற்பதற்கும் நெருக்கடியின்போது அழிந்துவிடாமல் நிலைத்து நிற்பதற்கும் அடிப்படை ஆதாரமாக அமைந்ததெனலாம்.

எமது விடுதலைப் போராட்டம் சார்ந்த இந்தியாவின் நிலை சார்ந்து மட்டுமல்லாமல் எமது விடுதலைப் போராட்டத்தின் போக்கு, எமது விடுதலைப் போராட்டத்தின் மீதான சிங்கள அரசியல்வாதிகளின் அணுகுமுறை மற்றும் எமது விடுதலைப் போராட்டத்திற்காக மக்களை எவ்வாறு அணிதிரட்டுவது என அனைத்து நிலைகள் பற்றியும் தெளிவாகச் சிந்தித்து வடிவம் ஒன்றை வகுத்திருந்தார். எதிர்காலக் கட்டமைப்புகள் எவ்வாறு அமையவேண்டும் என்பதனையும் கற்பனையாகத் தன்மனதில் உருப்போட்டு வைத்திருந்தார்.

எம் தலைவர் அவர்கள் அரசியல் ஞானம்மிக்க இராசதந்திரி என்பதில் சந்தேகமே இல்லை. தலைவர் இராணுவ விடயங்களில் விற்பன்னராக உள்ளதைச் சந்தேகத்திற்கிடமின்றி ஏற்றுக்கொள்ளும் சிலர், அரசியல் விடயத்தில் தலைவர் அவர்கள் தேர்ச்சி பெறாதவர் என்ற வகையில் கருதுவதுண்டு. அக்கருத்து மிகவும் தவறு. இன்று வன்னியில் ஒரு அரசுக்குரிய கம்பீரத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் எமது விடுதலை இயக்க நிர்வாக அலகுகளுடனும் ஆட்களுடனும் தொடர்புபட உலகின் பிரதிநிதிகள் வந்து போகும் சூழல் ஏற்பட்டது – ஏற்படுத்தப்பட்டது.
இது ஒரு அரசியல் வெற்றி. யாழ்ப்பாணத்தில் இருந்து எமது இயக்கம் பின்வாங்கவேண்டி ஏற்பட்ட அந்த இராணுவ நெருக்கடியின் சூடு தணிவதற்கிடையில் நீண்டநெடிய ஜெயசிக்குறு ஆக்கிரமிப்புப்போரை எதிரி தொடர்ந்தான். கடந்த 90களின் பிற்பகுதியில் எமது இயக்கம் சந்தித்த இராணுவப் பின்னடைவு நிலைமையை மாற்றி வெற்றி கொள்ள வைத்தது தலைவர் அவர்களது இராணுவ வெற்றி.

அந்த இராணுவ வெற்றியை மேற்சொன்ன அரசியல் வெற்றியாக ஆக்கி எமது விடுதலைப்போரின் மீதான பார்வையைச் சர்வதேச நிலைக்கு நகர்த்தி எடுத்துள்ளமை எமது தலைவரது இராசதந்திர நகர்வின் பெறுபேறே. எம்மினத்தின் நூற்றாண்டுகால அரசியல் வரலாற்றைத் தெளிவுறப்புரிந்து வைத்திருப்பதிலும் உலகில் நடந்த, நடைபெறுகின்ற விடுதலைப் போராட்டங்கள் அனைத்தினது வரலாறுகளையும் அறிந்து வைத்திருப்பதிலும் நாடுகள், இயக்கங்கள் என்பவற்றின் வாழ்வையும் வளர்ச்சிப்போக்கையும் தீர்மானிக்கும் பேச்சுவார்த்தைகள் பற்றிய அறிவைக் கொண்டிருப்பதிலும் கூர்ந்து அவதானித்து வருவதிலும் தலைவர் அவர்களது அறிவு மிகமிக அதிகம்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களது காலத்தில் எமது விடுதலைப்போரைத் தமக்குச் சாதகமாகக் கையாண்டு கொள்வதில் இந்தியா கொடுத்த அரசியல் நெருக்குவாரங்கள் மிக அதிகம். இன்றும் இந்தியாவின் அதிகார நாற்காலிகளை அலங்கரித்து வீற்றிருக்கும் மூத்த அரசியல் தலைவர்களும் ராஜீவ்காந்தி அவர்களும் எமது விடுதலைப் போராட்டத்தையும் தலைமையையும் ‘சின்னப்பெடியளின் குழப்படியாக’ சித்திரித்து கையாள முற்பட்டனர்.

அந்த அரசியல் நெருக்கு வாரங்களில் எமது விடுதலைப் போராட்டம் மூழ்குண்டு போகாதவாறு எதிர்நீச்சலிட்டுத் தக்கவைத்த அரசியல் மேதமையுடன் விடுதலைப்போரை வழிநடத்தினார். விடுதலைப் போராட்டம் அரசியல் நெருக்குவாரங்களையும் இராணுவ நெருக்கடிகளையும் சந்திக்கும் வேளைகளிற்கூட விட்டுக்கொடுக்க முன்வராத தலைவரின் பண்பையே சிலர் அரசியல் ஞானமின்மையாகச் சிந்திக்கத் தலைப்படுகின்றனர். மறுவளமாகக் கூறுவதானால் தலைவர் அவர்கள் கொண்டுள்ள தேர்ந்த அரசியல் ஞானத்தெளிவின் அடிப்படையிலேயே குறித்த விட்டுக்கொடுப்புகளுக்கு முன்வருவதில்லை.

இராசதந்திரம், கொள்கைப்பற்றுறுதி, சரணாகதி போன்ற பதங்களை அதனதன் சரியான அர்த்தப் பரிமாணங்களுடன் புரிந்து கொள்வார் எமது தலைவர். கொள்கைப்பற்றுறுதி இல்லாது எதிரியிடம் மண்டியிடுபவர்கள் அல்லது இனத்தினது உரிமைகளை விலைபேசிச் சலுகைகளைப் பெற முனையும் கயவர்கள் தம்செயலை நியாயப்படுத்த இராசதந்திரம் என்ற பதத்தின் பின்னே மறைந்து கொள்வதைக் கோபமாகவும் கேலியாகவும் சுட்டிக்காட்டுவார்.

எமது இனத்தினுடைய நலன்களை விட்டுக்கொடுக்க மறுக்கும் தலைவர் அவர்களது கொள்கைப்பற்றுறுதியானது அவரது அரசியல் தெளிவினால் விளைந்த பயனே. காலத்திற்குக்காலம் எம்மினத்தினிடையே தோன்றிய தலைமைகள் இன விடுதலை சார்ந்த தீர்க்கமான பார்வையைத் தம்மிடையே கொண்டிருக்கவில்லை. அவ்வக்காலத்தைய மக்களினது மன உணர்வுகளைப் பிரதிபலித்தும் மக்களது மன எழுச்சியை ஒருமுகப்படுத்தியும் அத்தலைவர்கள் விளங்கினர் என்பது ஓரளவு உண்மைதான். ஆனாலுங்கூட உண்மையான விடுதலை நோக்கிய பயணத்திற்காக மக்களைத் தயார்படுத்தும் தீர்க்க தரிசனமோ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் அர்ப்பணிப்புணர்வோ இல்லாதிருந்தனர்.

மாறாக எம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ளவர்களுடன் ஒத்துப்போவதாகவே இருந்தது அவர்களது அரசியல். எமது இனத்தினது விடுதலை உணர்வுகள் பொங்கிப் பிரவாகிக்கும் வேளைகளில் தலைவர்களாக இருந்த மனிதர்களுடன் தனிப்பட்ட முறையிற் சமரசம் செய்து கொள்வதையே ஆக்கிரமிப்பாளர்கள் செய்து கொண்டிருந்தனர். ஆக்கிரமிப்பாளர்களது தந்திரோபாயத்திற்குப் பலியாகி இன விடுதலையைக் காவு கொடுக்கும் கயமைக்குப் பெயர் இராசதந்திரம் என்றால் அந்த இராசதந்திரம் எமது தலைவருக்குத் தெரியாதுதான்.

குமுறிக் கொண்டிருக்கும் எமது மக்களது விடுதலை உணர்வுகளை மழுங்கடிக்க ஏதாவது ஒரு பெயரிலான அற்ப தீர்வுக்கான பேச்சுவார்த்தையிலோ தேர்தலிலோ பங்குகொண்டு எதிரிக்குத் துணைபோதலுக்குப் பெயர் இராசதந்திரம் என்றால் அந்த இராசதந்திரம் எமது தலைவருக்குத் தெரியாதுதான். விடுதலைக்கான கொள்கைப்பற்றுறுதியை முதன்மைச் சிந்தனையாக்கி, அந்த இலட்சியத்திற்குப் பங்கமின்றிச் செயற்பட நண்பர்களை நாடுவதன் பெயர் இராசதந்திரம் என்றால் அந்த இராசதந்திரத்தில் எமது தலைவர் வல்லவர்.

விடுதலைப் போரியலுக்கும் அதனிடையேயான போரோய்ந்த அரசியல் நகர்வுகளுக்கும் கருத்துலகு பற்றிய பார்வையுடன், காலச் சூழல் பற்றிய கணிப்பீடும் அவசியம். இவ்வுணர்வலை வரிசைகளை உய்த்தறிவதும் கணிப்பிட்டுக் கையாள்வதும் இராசதந்திரம் என்றால் அந்த இராசதந்திரத்தில் எமது தலைவர் ஒருவித்தகர். இந்தியாவில் அமைந்த எமதியக்க ஆரம்பகாலப் பயிற்சித் தளங்கள், தமிழ் நாட்டு முதலமைச்சர் எம.ஜி.ஆர் அவர்களுடனான நட்புறவு,  இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலத்திற் சிறீலங்கா ஜனாதிபதி பிரேமதாசா அவர்களுடனான பேச்சுவார்த்தை என்பன தலைவரது இராசதந்திர நகர்வின் சில வெளிப்பாடுகள்.

அந்த இராசதந்திர நகர்வில் விளைந்த நட்புறவுகள் எமது இனத்தின் உரிமைகளை விலையாகக் கேட்க அனுமதிக்காத அவரது ஆளுமையே இங்கு முதன்மையானது. கொள்கைப்பற்றுறுதிக்கும் இராசதந்திர நகர்விற்கும் இடையே தலைவர் அவர்கள் சுயமாக வகுத்து வைத்திருந்த எல்லைக்கோட்டினைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். தனக்குத் தனிப்பட்ட முறையில் ஒவ்வாத தன்மைகொண்ட பலருடனுங்கூட அவர் நட்புறவுடன் பழகுவதைக் கண்டிருக்கின்றேன். தனிப்பட்ட நலன் சார்ந்து அமைவதாக அவர்கள் எண்ணிவிட இடம் கொடாமல் நிகழும் மேற்கண்ட பழக்கங்கள்கூட அவரது இராசதந்திர ஆளுமையின் இன்னுமொரு பக்கம்.
இனத்தின் விடுதலை மீது அவர் கொண்ட கொள்கைப்பற்றுறுதியே அவரது அந்த ஆளுமையின் இரகசியம்.  போராட்டப்போக்குகளிற் கடும் நெருக்கடிகள் காலத்திற்குக்காலம் ஏற்படுவதுண்டு. அப்படியான நெருக்கடிகளிலும் அந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காகவேனும் செய்யப்படும் எந்தப் பணியிலும் நேர்மை தவறுவதை அல்லது வஞ்சகமான செயற்பாடுகளை தலைவர் அவர்கள் அனுமதிப்பதில்லை. மில்லர் கரும்புலியாகக் களம் செல்வதற்கு முந்திய நிலைமை அது.

சிறிய முகாமினைக்கூட இயக்கம் தாக்கியழிக்க ஆரம்பிக்காத 1985 ஆண்டு முற்பகுதியாக இருக்க வேண்டும். அவ்வேளையில் இராணுவ முகாம் ஒன்றைத் தாக்குவதென்பது எமதியக்கத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்கும். களத்தில் நின்ற பொறுப்பாளர்களால் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருந்தது. அதாவது, தனியார் வாகனங்கள் சிறு பரிசோதனையுடன் செல்லும் வீதியின் ஓரமாக அமைந்திருந்தது அந்த இராணுவ முகாம். அவ்விராணுவ முகாம் ஊடாக வழமையாகச் சென்றுவரும் பொது ஆள் ஒருவருடைய வாகனமும் பொதுநபரான சாரதியும் வழமையாகச் சோதனை செய்யும் இராணுவத்திற்குப் பழக்கமாய் போய்விட்டதால் சோதனை இல்லாமலே போய்வரக்கூடியதாக அமைந்திருந்தது.
அதனை அவதானித்த எம்மவர்கள் வாகனச் சாரதிக்குத் தெரியாமல் வாகனத்தில் வெடிகுண்டை பொருத்திவிட்டு, ‘வாகனம் இராணுவ முகாமின் மத்தியிற் செல்லும்போது, தூரக்கட்டுப்பாட்டுக்கருவி மூலமாக’ (றிமோட்) குண்டை வெடிக்க வைத்து, முகாமிற்கு பேரிழப்பை ஏற்படுத்திவிட்டு, மேலதிக அணியை உள்ளனுப்பி, முகாமைக் கைப்பற்றுவதாகத் திட்டம் அமைந்திருந்தது. திட்டம்பற்றி அறிந்தவுடன் தலைவர் அவர்கள் கடும் சினமுற்று திட்டத்தை நிறுத்திவிட்டார்.

சாரதிக்கே தெரியாமற் குண்டைப் பொருத்தும் யோசனையைக் கடுமையாகக் கண்டித்ததுடன், ‘உங்களுக்குள் ஒரு துணிவுள்ளவன் இருந்தால் தன்னை அழிக்கும் மனநிலையுடன் வெடிகுண்டை எடுத்துச் சென்று வெடிக்க வைக்கலாமே தவிர, இவ்வாறு வஞ்சகம் புரிவது கடும் தவறென்று’ கண்டித்தார். அதன் பின்னர் கொஞ்சக் காலமாக இத்திட்டத்தின் தவறுபற்றி அடிக்கடி பொறுப்பாளர்களுக்கு எடுத்துச் சொல்லி சுலபமாக வெற்றிகள் பெறுவதற்காக நியாயமில்லாத திட்டங்கள் வகுக்கக்கூடாதென கருத்தேற்றம் செய்தவண்ணமே இருந்தார்.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போதான நெருக்கடியான காலமது. அர்த்தமற்ற அரைகுறைத் தீர்வுகளைக் கடைபரப்பிய இந்திய வஞ்சகத்தை நன்கு தெரிந்தும் தெரியாததுபோல் துணை நின்றனர் துரோகிகள். ‘ஆண்டவன்தான் இனித்தமிழினத்தைக் காப்பாற்ற வேண்டும்’ என்றுரைத்த தந்தை செல்வாவின் வழிவந்தவர்களாகத் தம்மைக் கூறிக்கொண்டவர்கள் அவர்கள். தமிழினத்தின் விடுதலைக்காகக் குருதி சிந்திப் போராடும் இளைய சந்ததிக்குப் பக்கத்துணையாக இருக்கவும் துணியவில்லை.

ஆண்டவன் காப்பாற்றட்டும் என்று ஒதுங்கியிருக்கவும் விரும்பவில்லை. மாறாக ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணையிருக்கத் துணிந்தனர். பதவி மோகத்தில் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கத் துணிந்த துரோகிகளை அகற்றுவது தவிர்க்கமுடியாததானது. துரோகிகளை அழித்துவிட வேண்டும் என்பதை மட்டுமே சிந்தனையில் இருத்திய நடவடிக்கையாளர்கள் நெறிதவறிவிட்டனர். நடவடிக்கைக்கு பொருத்தமான வாய்ப்புக் கிடைக்காததால் சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்து அங்கேயே தாக்குதலைச் செய்துவிட்டனர்.

தாக்குதல் செய்யப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்ட தலைவர் அவர்கள் பேரதிர்ச்சியும் துயருமுற்றார். நேர்மையான வீரத்துடன் நடவடிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும். மாறாகக் கலந்துரையாடலுக்கான சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டதும் அந்தச் சந்திப்பு தாக்குதலுக்குத் தெரிவு செய்யப்பட்டதும் மிகவும் தவறான அணுகுமுறை. இந்த அணுகுமுறை எமது இயக்கத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்தி விட்டது. ‘எமது போராளிகள் பின்பற்ற வேண்டிய வீரமான அணுகுமுறையாக இது அமையவில்லை.
இந்த அணுகுமுறை அனுமதிக்கப்பட்டிருக்கவே கூடாது. எமது விடுதலை இயக்க அறநெறிக்கு மாறாக இவை நடந்துவிட்டன’ என்றெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லிக் குமுறித் தீர்த்தார். வீரம், சுத்தமான வீரம் என்பனபற்றிக் கனல்தெறிக்கும் வார்த்தைகளாலும் உணர்வுகளாலும் அவர் கொடுத்த விளக்கத்தைக் கேட்ட எந்த ஒரு போராளியும் இதுமாதிரியான ஓர் திட்டத்தை தம்மனதால் கூட நினைக்கத்துணியமாட்டார். நிகழ்வுகள் நடந்துமுடிந்து பல்லாண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் வேறேதாவது புதிய தாக்குதல்கள் பற்றியதான உரையாடல்களில் மேற்படி தவறான அணுகுமுறை பற்றிய விடயத்தைச் சுட்டிக்காட்டுவார்.

நெறிமுறை மீறிய அந்த அணுகுமுறைக்கான அவரது வேதனையுடன் எமது இயக்கம் எப்படியிருக்க வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பும் அவ்வேளையில் வெளிப்படும். தலைவர் அவர்களது இந்த நேர்மைப் பண்பே எமது இயக்கத்தின் வளர்ச்சிக்கான ஆத்ம பலத்தைக் கொடுத்து நிற்கின்றது எனலாம். வேறொரு விதத்திற் சொல்வதானால், தனது மனச்சாட்சியை சிறிதளவேனும் களங்கப்படுத்திக்கொள்ள அனுமதிக்காத அவரது நேர்மையே எமதினத்தின் தலைமைத்துவத்திற்கான ஆளுமையாக வடிவம் பெறுகிறது எனலாம்.

காலத்திற்குகாலம் விடுதலைப் போராட்டத்தின் தேவைகருதி அறிமுகம் செய்யப்படும் கட்டுப்பாடுகளைத் தானே கடைப்பிடிப்பதில் தலைவர் முன்னிற்பவர். குறிப்பாகத் தன்னைச்சொல்லி எவரும் சலுகைகளைப் பெற்றுவிடாதபடி அவர் எடுக்கும் கவனமானது, குறித்த கட்டுப்பாடுகளை செயற்படுத்துவோரிற்கு மனவுந்துதலைப் பெரிதும் தரும். தலைவர் அவர்கள் மனம் கலங்கியதை நான் பார்த்த மிக அரிதான சந்தர்ப்பங்களில் ஒன்று நினைவிற்கு வருகின்றது. இது சுமார் பத்து வருடங்களுக்கு முன்னைய சந்தர்ப்பம். எமது இயக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியே பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெறுவதில் தோல்வியடைந்த ஒருவர், தலைவர் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் மூலமாக குறுக்குவழி முயற்சி ஒன்றினைச் செய்திருந்தார்.

ஒரு சலுகைமுறைச் சிபாரிசிற்காகக் குறித்த விண்ணப்பம் மிக நெருக்கமான ஆடாகத் தன் கவனத்திற்கு தரப்பட்டபோதும், தலைவர் அதற்காக சிபாரிசு செய்ய மறுத்துவிட்டார். அந்த மறுப்பை பெற்றுக்கொண்டவரது கோபம் அல்லது மனக்கவலையானது தலைவர் அவர்களிற்குங்கூட தனிப்பட்ட முறையில் மனக்கலக்கம் தருவதாய் அமைந்தபோதிலும் அந்த விண்ணப்பத்திற்காகச் சிபாரிசு ஒன்றைச் செய்வதற்கு அவர் சம்மதிக்கவேயில்லை.

பயண அனுமதிக்காகத் தன்னை அணுகுபவர்களின் போராட்டப் பங்களிப்பின் காரணமாகவோ தனது பொதுவான சமுதாயப்பார்வை காரணமாகவோ ஏராளமான சிபாரிசுகளையும் சிலவேளைகளில் அவசரமான கட்டளைகளையும் தலைவர் எமக்குத் தருவதுண்டு. ஆனாலும் மேற்குறிப்பிட்ட விடயத்திற் பயண அனுமதிக்கான வேண்டுகோளுக்குரியவர் அதற்குப் பொருத்தமான தன்மையைக் கொண்டிராத காரணத்தால் அந்த விண்ணப்பத்திற்கு தனது சிபாரிசைச் செய்யத் தலைவர் உறுதியாகவே மறுத்துவிட்டார்.

இதுபோன்ற இறுக்கமான தன்மையைப் பலவேளைகளிலும் கடைப்பிடிப்பதால் தனிப்பட்ட நண்பர்கள் பலருடனும் உறவுகள் இல்லாதுபோகும் சூழலும் தலைவர் அவர்களுக்கு ஏற்பட்டே வந்துள்ளது. இலட்சியத் தெளிவு மற்றும் தனிப்பட்ட நேர்மையால் விளைந்த பக்கம்சாராத்தன்மை என்பவற்றையே தனது பலமாகக் கருதுபவர். அதனால் இந்த நட்பிழப்புகளுக்காக வருந்தாமல் தனது நேர்மைக்காகவே பெருமைப்பட்டுக் கொள்வார். தாயக விடுதலைக்காகப் போராட அல்லது போராட்டத்திற்கு பங்களிக்க முன்வரும் ஒவ்வொருவரையும் தனது உறவுகளாக ஏற்றுப்போற்றும் பண்பினைத் தனதியல்பாகவே வளர்த்துக்கொண்டுள்ளார்.

இன்னும் சொல்வதானால் தனிப்பட்ட நட்பு, உறவு எனும் வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளாத தன்மையே, ஒரு இனத்தையே, அவர் பின்னால் அணிதிரள வைத்துள்ளது எனலாம். பூமி எங்கும் சூரியனின் ஒளியிற் குளிக்கும். அதே சூரியனை நெருங்கிச் செல்லும்போது ஒளியை மட்டுமின்றி வெம்மையாலும் சுடும். அதேபோல் எங்கள் தலைவரை நெருங்கியிருப்போரும் அவரது குளிர்மையான ஒளியை பெறுவதுடன் மட்டுமல்லாது, வெம்மையான கண்டனத்தை அல்லது கோபத்தைப் பெறவும் தவறுவதில்லை.

குறிப்பாக அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருந்து அதனை நியாயமின்றிப் பிரயோகிப்போர்மீது அவருக்கு வரும் கோபத்தை மாற்றவோ, மறக்கவோ முடியாது. அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருப்போர் அதனைத் தவறாகப் பயன்படுத்துவதே அநேக பிரச்சனைகளுக்குக் காரணமென்பதும் அணுகுமுறைகளைச் சீராக்கினால் அவற்றுக்குரிய தீர்வுகள் கிடைக்குமென்பதும் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தும் விடயம். பொதுமக்களை அதிகாரத் தொனியுடன் அணுகும் புலனாய்வுத்துறையினர் பற்றிய முறைப்பாடுகளைப் பெறும்வேளையில் தலைவர் அவர்களது கோபத்தைப் பலதடவைகளில் சந்தித்துள்ளேன்.

அப்படியான உணர்வு வெளிப்பாட்டுச் சந்தர்ப்பத்தில்தான், அதிகாரத்தாலும்  பணபலத்தாலும் உருவாக்கப்படும் புலனாய்வுக் கட்டமைப்பு காலத்தால் அழிந்துவிடும். அன்பான அணுகுமுறையாலும் விடுதலை உணர்வை தட்டி எழுப்புவதாலும் உருவாக்கப்படும் கட்டமைப்பே காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் எனும் வழிகாட்டும் கருத்து வடிவத்தை முன்வைத்தார். எமது தலைவர் அவர்களது அவ்வாறான கோபத்தின் வெளிப்பாடுகளை நாம் விடுதலைக்கான அவரது கோட்பாடுகளின் வெளிப்பாடுகளாக பார்க்கலாம்.
எமது இனத்தின் விடுதலை பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும் அல்லது எமதினத்தின் விடுதலைக்கான பணிதவிர வேறொன்றையும் சிந்திக்க மறுக்கும் அவரது எண்ண வெளிப்பாடுகளே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வெளிப்படும். வார்த்தைகளினால் மட்டுமல்லாது வாழ்க்கையினால் வழிகாட்டியாக செயற்படும் எமது தலைவரின் காலத்தில் அவரின் பின்னே அணிதிரள்வோம். எம்தலைவரது வழிகாட்டுகையில் விடுதலை மீதான உறுதிப்பாட்டின் வழித்தடத்தில் அணிதிரள்வதே தமிழ்த்தேசிய உணர்வுடையோரின் கடமையாகும்.

அவரது வழிநடத்தலின்கீழ் இணைந்துள்ள ஒவ்வொருவரும் அவரது எண்ணங்களையும் கருத்துக்களையும் சரிவரப்புரிந்து விடுதலையை விரைவுபடுத்த உழைப்பது பொறுப்பாகும்.  விடுதலையின் வழிகாட்டியாகத் தன்வாழ்வை அமைத்துக்கொண்ட எங்கள் தலைவரினது ஐம்பதாவது அகவையின் நாளில் பெருமிதத்துடனும், நம்பிக்கையுடனும் வாழ்த்துக்கூறும் தமிழ்த் தேசியத்தின் குரலுடன் நானும் இணைவதிற் பெருமை கொள்கின்றேன்.

ச.பொட்டு அம்மான்
புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்,
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.