Monday, 2 April 2012

நச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன்2009ஆம் ஆண்டு 03ஆம் மாதம் 4 ம் திகதி நேரடி மோதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிய  இந்திய – இலங்கை இராணுவம் கோழைத்தனமாக    நச்சு குண்டு வீசி படுகொலை செய்தனர். இதில்  வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் அண்ணா மற்றும் பல போராளிகள் வீரகவியமனவர்கள்.

2009ம் ஆண்டு போர் உக்கிரமடைந்த நிலையில், ஏப்பிரல் மாதம் அளவில் ஆனந்தபுரத்தில் கடும் சமர் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. ஆனந்த புரத்தில் தேசிய தலைவர் தங்கும் ஒரு இரகசிய இடத்தை இலங்கைப் படையினர் சுற்றிவளைத்து பெட்டியடித்தனர். சுமார் 4,000 விசேட அதிரடிப்படையிர் களமிறக்கப்பட்டு இத் தாக்குதல் வியூகம் வகுக்கப்பட்டது. தம்மைச் சுற்றி பெட்டியடிக்கப்பட்டதை உணர்ந்த புலிகள் அதனை உடைத்து புதுமாத்தளான் பகுதிநோக்கி நகர முயன்றனர். இதற்காக சுமார் 1000 விடுதலைப் புலிகள் 4,000 இராணுவத்தினரை எதிர்த்து கடும் சமரில் ஈடுபட்டனர். இத் தாக்குதலானது உலகில் எங்கும் இதுவரை எந்த ஒரு விடுதலை அமைப்பும் மேற்கொள்ளாத கடும் தாக்குதலாக அமைந்தது. விசேட அதிரடிப்படையினர் நூற்றுக்கணக்கில் இறந்தனர்.

ஒரு சிறிய இடத்தை பெரும் இராணுவப்படையால் கைப்பற்ற முடியாத நிலை தோன்றியது. களத்தில் பிரிகேடியர் தீபன், கேணல் கடாபி, கேணல் விதுசா, கேணல் துர்க்கா ஆகியோர் நிற்பதை இராணுவத்தினர் புலிகளின் உரையாடலை ஒட்டுக்கேட்டதன் மூலம் அறிந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் அங்கே நின்றால் இராணுவத்தால் 1 அங்குலம் கூட முன்னேற முடியாது என்பது இராணுவத்துக்கு நன்கு தெரியும். இதேவேளை இராணுவத்தினர் திடீரென 1 கிலேமீட்டார் பின் நோக்கி நகர்த்தப்பட்டனர். இது ஏன் என்பது அவர்களுக்கே தெரியாது. ஆனால் சற்று நேரத்தில் அப்பகுதிக்கு, நச்சுவாயுக் குண்டுகளும், எரிக்கும் பொஸ்பரஸ் குண்டுகளும் வந்து விழுந்தது.

புலிகளுடன் போரிட்டு வெல்லமுடியாத இராணுவம், கோழைத்தனமாகவும் பேடித்தனமாகவும் நச்சுக் குண்டுகளை அவ்விடத்துக்கு ஏவியது. இதனால் பல போராளிகளும் தளபதிகளும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர். நச்சுவாயுக் குண்டுகளையும், ஆட்களை மயங்கவைக்கும் குண்டுகளையும் பாவித்து இராணுவம் செய்த அட்டூழியங்கள் பல. இவ்வாறு ஏவப்பட்ட நச்சுக்குண்டால் பிரிகேடியர் தீபன் அவர்கள் உருக்குப் போராடிக்கொண்டு இருந்தார். இதனை அறிந்த இராணுவம் அவரை உயிருடன் பிடிக்க, தற்காலிக சிகிச்சை கூடக் கொடுத்துள்ளது.

வரலாற்று நாயகர்களில் வரலாறுகள் என்றும் எங்களுடன்! புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் அக்கினி சமரில் வீரவரலாறான எங்கள்அங்கினி குஞ்சுகளை நச்சுக்குண்டுகள் கொண்டு இனஅழிப்பினை அழித்த சிங்கள இனவெறியாளர்களின் இனக்கொடூரங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை அக்கினிகுஞ்சுகளை இன்றும் எங்கள் மனங்களில் இறுக பற்றுகின்றோம்.

அன்று 2009ஆம் ஆண்டு 03ஆம் மாதம் இறுதி நாட்கள் ஆனந்தபுர மண்ணில் அக்கினி சுவாலைமூண்ட தாக்குதல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன இவ்வாறான தாக்குதல்களுக்கு விடுதலைப்புலிகளின் போராளிகளை அழிக்கவென்று சிங்களப்படையினர் தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை களமுனையில் பயன்படுத்துகின்றார்கள். மணித்துளிகள் நகர தாக்குதல்களும் உச்சம் பெறுகின்றது ஆனந்தபுர மண்ணில் இருந்து தலைவர் அவர்களை  பத்திரமாக மீட்டுக்கொண்டு செல்கின்றார்கள் சிறப்பு போராளிகள்.இன்னிலையில் ஆனந்த புரம் மண்ணில் நின்று போராளிகள் சமராடிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களை மீட்டெடுக்கமுடியாத நிலையில் எதிரியின் இறுக்கமான சூள்நிலை இன்னிலையில் காயம் அடைந்த பிரிகேடியர் தீபன் அண்ணாவினை பின்தளத்திற்கு கொண்டு செல்லவேண்டிய தேவை அங்கங்கு ஸ்ரீலங்காப்படையினர் ஊடுருவிவிட்டார்கள்  தீபன் அண்ணா காயமடைந்த நிலையில் ஒருநாள் அதிகாலை கொண்டு செல்லப்படுகின்றார் அன்று செல்லும் வளியில் ஸ்ரீலங்காப்படையினரின் பாரிய தாக்குதல்  ஒன்றிற்கு முகம் கொடுத்து அதில் தாக்குதல் நடந்தேறுகின்றது. அந்த உக்கிர தாக்குதலில் பிரிகேடியர் தீபன் அண்ணா அந்த மண்ணினை முத்தமிடுகின்றார் .தீபன் அண்ணா உள்ளிட்ட போராளிகளை அழிக்க எதிரியவன் பயன்படுத்திய நச்சுக்குண்டுகள் என்பதை இன்றும் உறுதிசெய்கின்றோம்.

தடைசெய்யப்பட்ட பல்வேறு குண்டுகளையே சிங்கள படையினர் களமுனையில் பயன்படுத்தி இந்த இனஅழிப்பு போரினை நடத்தினார்கள்.இவ்வாறு அன்று ஆனந்தபுரம் மண்ணில் பல வீரத்தளபதிகள் வரலாறாகின்றார்கள் ஆனந்தபுரத்தில் இருந்து தலைவர் சென்ற பிறகு அந்த மண்ணில் முன்னூறு வரையான போராளிகள் நின்று தாக்குதல்களை தொடுக்கின்றார்கள் அவர்களுக்கான இறுதி கட்டளை நீங்கள் உடைத்துக்கொண்டு வரமுடிந்தால் வாருங்கள் என்றதுதான் அந்த கட்டளை காயமடைந்த போராளிகளை காப்பாற் முடியாது இறந்தவர்கள் அந்தந்த இடங்களில் விடப்படுகின்றார்கள் இதில்தான் எதியின் முற்றுகை வலயத்தினை ஊடறுத்து நூறுவரையான போராளிகள் தாக்குதலை நடத்திக்கொண்டு அந்த இடங்களை விட்டுவெளியேறுகின்றார்கள் அதாவது சிறு சிறு அணிகளாக அந்தபோராளிகள் களமுனையினை விட்டு வெளியேறுகின்றார்கள்.ஏனைய போராளிகள் எதிரியின் தொடர் எறிகணை மழையிலும் நச்சுக்குண்டு வீச்சிலும் வீரச்சாவினை அடைகின்றார்கள் அவர்களது உடலங்கள் எதிரியினால் கைப்பற்றப்படுகின்றது.

அவைதான் ஆனந்தபுரம் மண்ணில் எரியால் சிதைக்கப்பட்ட உடலங்கள் இதில் இன்னும் ஒரு நிகழ்வு  நடந்தேறுகின்றது இந்த பகுதியில் இறுதியில் காயம் அடைந்த நிலையில் இருந்த போராளிகளை ஸ்ரீலங்காப்படையினர் உயிருடன்பிடித்து சித்திரவதை செய்கின்றார்கள்.இதிலும் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தன.

இது இவ்வாறு ஆனந்தபுரம் மண் ஸ்ரீலங்காப்படையினரின் நெருப்பு மழையினால் நனைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது .இவ்வாறான நிலையில்தான் படையினர்; பலத்த இழப்புக்களுக்கு மத்தியில் ஆனந்தபுரம் மண்ணினை பிடிக்கின்றார்கள்.தீபன் அண்ணா எத்தனையோ களங்களை கண்ட தளபதி மட்டுமல்லாமல் எத்தனையோ பெயர்குறிப்பிட்டும் குறிப்பிடாமலும் நடத்தப்பட்ட தாக்குதல்களின் வெற்றிகளுக்கு பின்னாலும் அவரது கரங்கள் இருக்கின்றன.

வடபோர் முனையின் கட்டளைத்தளபதியாக இருந்து அவர் ஆற்றிய சாதனைகள் சாதராணமானவையல்ல தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அவருக்கென்றொரு தனி வரலாறு எழுதும் அளவிற்கு அவரது திறமைகள் எதிரியினால் கூட வியந்துபாக்கப்பட்டவை அந்த சிறப்பு மிக்கதளபதியின் வீரச்சாவு  நிகழ்வு  மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அன்று நிகழ்தேறுகின்றது அந்தநினைவூகளை என்றும் மறக்கமுடியாது.

Sunday, 1 April 2012

மாவீரர்கள்- கேர்னல் ரமணன்பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக்கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப்போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பள்ளி, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர.

பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணிபோல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும்போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்துவைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும் மீன்கறி வகைகளுக்கும் பேர்போனது. அந்த ஊரின் வரலாற்றுத் தொன்மை பற்றி "மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்" (ஏட்டுச் சுவடிப் பிரதி- வித்துவான் சா.இ.கமலநாதன்) புகழுடன் பேசுகிறது. எமது தாயகத்தின் பண்பாட்டுத் தொட்டில்களில் ஒன்றான பழுகாமத்தின் இப்போதைய சிறப்பிற்கு கண்டுமணி மகாவித்தியாலயமும் காரணம்.

படுவான்கரையை முன்னேற்றுவதற்கு ஓயாது உழைத்து அந்தப் பாடசாலை உருவாவதற்கு அடித்தளமிட்ட கண்டுமணி ஐயாவின் பெயரே அந்தப் பாடசாலைக்கும் இடப்பட்டதில் ஊரில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியே. இப்போது அது கிழக்குப் புறமாக தாராளமான அளவில் ஒரு விளையாட்டுத்திடலும் இரண்டு மாடிக் கட்டிடங்களும் ஆய்வு கூடமும் அந்தப் பகுதியின் கொத்தணிப் பாடசாலை என்ற களையோடு இருந்தது. பழுகாமத்தில் இன்றிருக்கும் பெரியவர்களில் பலர் கற்றுத் தேர்ந்ததும் சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் உழைத்த பலருக்கு எழுத்தறிவித்ததும் அதன் மேல் எழுதப்படாத பெருமைகள்.

அவற்றோடு சேர்த்து தாயக மீட்புப் போரிலும் பங்கேற்கப்போகும் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தப் பள்ளியை ஒரு உழுவூர்தி நெருங்கிக் கொண்டிருப்பதற்கான இரைச்சல் இப்போது கேட்கிறது. மதிலின் பின்னால் பதுங்கியிருக்கும் உருவங்கள் அசையாவிட்டாலும் ஒரு பரபரப்பிற்கு உள்ளாகின்றன. ஒரேயொரு உருவம் மட்டும் மெதுவாக தலையை நீட்டி நெருங்கும் உழுவூர்தியை உற்றுப் பார்க்கிறது. அதன் முகத்தில் நிறைவு தெரிய தலையை உள்ளே இழுத்த பின் பின்புறத்தில் பதுங்கிக்கொண்டிருந்த உருவங்களுக்கான சைகைகள் கிடைக்கின்றன.

இப்போது மறைந்திருந்த உருவங்களின் கைகளில் ஆயுதங்கள் தெரிகின்றன. பெரும்பாலானவை கைக் குண்டுகள். தாக்குதல் ரைபிள்கள் இரண்டு.
உழுவூர்தியின் பெரிய சில்லுக்களின் மீதான சுரிக்காப்புத் தகடுகளிலும் பெட்டியிலுமாக வந்துகொண்டிருந்த ஆட்களில் சிலர் சீருடை அணிந்திருந்தார்கள். சிலர் இயல்பான பொது உடையில் இருந்தார்கள்.

எல்லோருடைய கைகளிலும் ஆயுதங்கள். அருகிலிருந்த முகாமிலிருந்து மனித வேட்டைக்காகக் கிளம்பி வந்துகொண்டிருந்த அவர்கள் முதல் நாளும் அதேபோல வந்து மனித வேட்டையை நடத்தியிருந்தார்கள். அவர்களின் வேட்டையில் குருத்துக்கள் முறிக்கப்பட்டன. எல்லா வயதுப் பெண்களும் சூறையாடப்பட்டார்கள். வயல் வாடிகளுக்குள்ளே உயிருடன் குடும்பங்கள் எரிக்கப்பட்டன. ஒவ்வொரு இரவும் உயிர் பிழைப்பதற்கான ஓய்வில்லாத ஒட்டமாக இருந்தது. பிய்த்தெறியப்பட்ட குடும்பங்கள் காடுகளிலும் வெளியூர்களிலுமாக கொடிய குற்றவாளிகளைப் போல ஒளித்தோடிக கொண்டிருந்தார்கள். மனித வேட்யைக்காரர்கள் தகப்பனுக்காக மகனையும் தமையனுக்காக தங்கையையும் குதறிக் கொண்டிருந்தார்கள். அவ்வகையான வெறியாட்டத்திற்காக வந்துகொண்டிருந்த அந்தக் கும்பல் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தை நெருங்கியபோது திடீரெனத் தோன்றிய ஒரு உருவம் கையிலிருந்த ரைபிளால் சரமாரியாகச் சுடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உழுவூர்தியைச் சுற்றிலும் தோன்றிய உருவங்கள் கைக்குண்டுகளாலும் ரைபிளாலும் தாக்கத் தொடங்க திருப்பிச் சுடும் திராணியற்றுச் செத்து விழுந்தது மனிதவேட்டைக் கும்பல.

தலை தெறிக்கத் தப்பி ஓடியோர்போக விழுந்துகிடந்தவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டன. தாக்கிய உருவங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கிய பின் வெடிப்புகையும் இரத்தமுமாகக் கிடந்த சாலையில் விழுந்துகிடந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினரையும் துரோகிகளையும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு விடுபட்டுக் கிடந்த மேலுமொரு ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிய கடைசி உருவம், ரமணன்.

அந்தச் சண்டையின் வேவு நடவடிக்கையைத் திட்டமிட்டதிலிருந்து கடைசியாக நின்று போராளிகளைப் பாதுகாப்பாக மறைவிடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது வரை தலைமை தாங்கி நடத்திய ரமணனின் அகவை அப்போது 21. பயிற்சி பெற்று ஒரு ஆண்டு தான் ஆகியிருந்தது.

கந்தையா உலகநாதன் என்ற இயற்பெயருடன் பழுகாமத்தில் பிறந்து கண்டுமணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று 86ம் ஆண்டின் முற்பகுதியில் போராட்டத்தில் இணைந்து மட்டக்களப்பு 3ம் பாசறையில் பயிற்சி முடித்த ரமணனின் குடும்பம் விடுதலைக்காகச் செலுத்திய விலை சாதாரணமானதல்ல. ரமணன் இயக்கத்தில் இணைந்த சில நாட்களிலேயே அவரின் அண்ணனும் இணைந்து விடுகிறார். இன்னுமோர் அண்ணன் (கந்தையா மோகனதாஸ்) ஆரம்பத்தில் பிறிதொரு அமைப்பில் தனது விடுதலைப் பணியை ஆரம்பித்திருந்தாலும், தேசியத் தலைவரின் மகத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த போது இந்தியப் படையாலும் துரோகிகளாலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர். அடுத்த தங்கையும் போராளியாக பல ஆண்டுகளை நிறைவு செய்தவர். இன்னுமொரு சகோதரர் போராளியாகவிருந்து தமிழீழக் காவற்றுறையில் பணியாற்றுபவர்.

போராட்டத்தை அன்றிலிருந்து இன்றுவரை வருடிக்கொடுக்கும் அவரின் தாயார் எதிர்கொண்ட துயரங்களும் கொஞ்சமல்ல. அடிக்கடி தேடிவரும் படைகளுக்கும் தொடரும் துரோகிகளுக்கும் ஈடுகொடுப்பதிலேயே அந்தத் தாயின் வாழ்கை கழிந்துகொண்டிருந்தது. அவ்வாறான ஒரு சம்பவத்தில் ஆத்திரமுற்ற எதிரிகள் அவரின் வீட்டைக் குண்டு வைத்துத் தரைமட்டமாகத் தகர்த்து விடுகிறார்கள். அவரின் தங்கை வீட்டில் தஞ்சமடைய, அந்த வீடும் தாக்குதலுக்கு உள்ளாகிறது.

இவ்வாறான சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கையினுள்ளும் எதிரி மீதான தனது தாக்குதல்களில் சற்றும் தளர்வைக் காட்டி யவரல்ல ரமணன். தனது வீட்டை எதிரிகள் நெருங்குவதை அறிந்து அங்கே வைக்கப் பட்டிருந்த மரங்களுக்குக் கீழே பொறி குண்டை அமைத்துவிட்டு விலகிச் செல்ல அங்கேவந்து அடாவடி செய்த படையினர் இருவர் கொல்லப்படுகிறார்கள். பலர் காயமடைகிறார்கள். தேசியத் தலைவரின் கெரில்லாத் தந்திரோபாயங்களுக்கு மிகச் சிறந்த முறையில் களநிலை வடிவம் தந்தவர்களில் ரமணனும் ஒருவர். எந்தப் பொருள் எப்போது வெடிக்கும் எங்கிருந்து சன்னங்கள் கிளம்பும் என்று இரவும் பகலும் எதிரியை ஏங்கவைத்த பெருமை ரமணனுக்கே உண்டு.

நியுட்டன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்தபோது தனது புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாயத்தைத் துவக்கிய ரமணன், துரோகி ஒழிப்பிலும் ஊடுருவல் களை முறியடிப்பதிலும் தனது தனித்துவ முத்திரையை பதித்திருக்கிறார். ரமணனைக் கொல்வதற்கான பல சதிகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதும் அத்திட்டங்கள் அனைத்துமே ரமணனின் நுட்பமான தகவற் கட்டமைப் பால் முறியடிக்கப்பட்டன. அவரின் தந்தி ரோபயச் செயற்பாடுகள் தாயகத்திற்கு வெளியிலும் நீண்டிருந்தன. ரமணனின் புலனாய்வுப் பேறுகளைப் பட்டியலிடுவது சிரமம். “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன். தேவை கருதி அவர் மாவட்ட மட்டத்தில் பணியாற்ற வேண்டியதாயிற்று,” என்கிறார் தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு.

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப் புக் காலத்தில் தனித்துவமான திட்டங்களைத் தீட்டி தாக்குதல்களைத் தலைமை தாங்கி நடத்திய ரமணன் தம்பிலுவில் துரோகிகளின் முகாம் தகர்ப் பில் ஒரு பகுதித் தலைமையை ஏற்றுச் சமர் செய்தவர். அந்தச் சமரில் விழுப்புண்ணடைந்தவர். அதன் பின், பூநகரித் தவளைச் சமரிலும், ஆனையிறவுப் பீரங்கித் தளத்தின் மீதான தாக்குதலிலும் அணித் தலைமைப் பங்கேற்றுப் படை நடத்தியவர். ஜயசிக்குரு விஞ்ஞானகுளச் சமரின்போது விழுப்புண்ணடைந்தார்.

கேணல் ரமணனின் போராட்ட வாழ்வின் தொடக்க நாட்களில் இருந்தே அவரோடு நெருக்கமாகப் பழகியவரும் பல சமர்க்களங்களை அவரோடு பகிர்ந்துகொண்டவருமான கேணல் ரமேஸ் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, “ஒரு சமரிலே ரமணனின் சம்பந்தம் இருப்பதைப் போராளிகள் அறியும்போது அவர்களுக்கு நம்பிக்கையும் சிறிலங்கா படையினர் அறியும் போது அவர்களுக்குப் பயமும் ஏற்படு வதுண்டு. அந்தளவிற்கு ரமணனின் திட்ட மிடல்கள் புகழ்பெற்றவையாக இருந்தன.” என்றார். படைத்துறைச் செயற்பாடுகளைப் புலனாய்வுத் தன்மையோடு நகர்த்துவது ரமணனின் தனித்துவம்.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம். துரோகி கருணா எமது மாவீரர்களை அவமதிக்கும் வகையில் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரான நீசத்தனத்தில் இறங்கியபோது கொதித்தெழுந்த உள்ளங்களில் ரமணன் முக்கியமானவர். அவமானத்தில் இருந்தும் அழிவிலிருந்தும் எமது மக்களையும் போராளிகளையும் காப்பாற்றும் பணியில் மிகப் பழுவான பணியொன்றை விரும்பி ஏற்கிறார் ரமணன். மிகச் சில போராளிகளுடன் மட்டக்களப்புப் பகுதியைப் பின்புறமாக அண்மித்து உள் நுளைகிறார். ரமணன் வந்துவிட்ட செய்தி விடுதலையை விரும்பிய மக்களுக்குத் தேனாக, துரோகி கருணாவிற்கோ இடியாகக் கேட்கிறது. ஏற்கனவே வாகரையை இழந்துவிட்ட கருணா இப்போது மாவடி முன்மாரியையும் இழந்து கொண்டிருப்பதைக் காண்கிறான். இந்த நேரத்தில் ரமணன் தொடுத்த தந்திரோபாயத் தாக்குதலால் நிலை குலைந்துபோய் தனது கையாட்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கருணா தப்பியோட முயற்சிக்கிறான். முதல் அணியாக குடும்பிமலைப் பிரதேசத்திற்குள் நுழைந்து கருணாவினால் கடைசி நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட நீலனின் வித்துடலை மீட்ட அணி ரமணனுடையது.

அதன் பின்னர் சிறிலங்கா படைப் புலனாய்வினரும் ஒட்டுக்குழுக்களும் செய்த பெரும்பாலான சதிகளை முறியடித்து மாவடி முன்மாரிப் கோட்டத்தின் காவலனாகவும் மட்டக்களப்பின் துணைத் தளபதியாகவும் இருந்த கேணல் ரமணன் வவுணதீவிலுள்ள போராளிகளின் காவலரண் களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது எதிரியின் சதிச் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவடைகிறார்.

மண்ணின் மணத்தோடும் அதற்கேயுரிய இயல்புகளோடும் சீற்றத்தோடும் வளர்ந்த ரமணன் அந்த மண்ணின் தனிச் சிறப்பான கலைகளிலும் பேச்சாற்றலிலும் சிறந்து விளங்கியவர். பூநகரித் தகர்ப்பின் பின் எழுதுமட்டுவாள் ஜெயந்தன் முகாமில் அவர் எலும்புக்கூட்டு உடையணிந்து நடனமாடியதைப் பார்த்தவர்கள் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள்.

தளங்களில் நடக்கும் கலை நிகழ்வுகளில் பாடியதோடு மட்டுமல்லாது தான் கற்றதும், எதிரியை மறைந்திருந்து சுட்டதுமான பள்ளியின் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற ஈகைச்சுடர் திலீபன் நினைவு நிகழ்வின்போது தனது உற்றவரும் பெற்றவரும் பார்த்திருக்க தலைவனைப் பற்றிய பாடலைப் பாடியதும் அனைவரது கண் முன்னும் அகலாது நிற்கும். கலைகளோடு மட்டுமல்லாது விளையாட்டுக்களிலும் நேரே பங்கெடுத்து போராளிகளுடன் விளையாடி தளத்தை உற்சாகமாக வைத்திருந்த நாட்களும் பதிவுகளுக்குரியவை.

சுனாமியின் பின்னான நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் மக்களின் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டபோது, எதிரியால் இலக்குவைக்கப்பட்டிருப்பது தெரிந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் மக்களோடு நின்றதும் நினைவழியா நிகழ்வுகள். பன்சேனைக் கிராமத்தில் திலீபன் மருத்துவமனையைக் கட்டுவதற்கான அவரின் காத்திரமான பங்களிப்பு அந்தக் கட்டிடத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பொழுதிலும் கண்முன் ஆடும். பழுகாமமும் அதற்குத் தலைப்பாகை கட்டி நிற்கும் ஒட்டிச் சதுப்பு நிலமும் ரமணனுடைய நினைவுகளைத் தன் ஆழங்களில் தாங்கி நிற்கின்றன. கண்ணாக் காடுகளின் சலசலப்பிலும் கொக்குப் பீச்சல் திடலில் ஓய்வு கொள்ளும் பறவையினங்களின் பாட்டிலும் ரமணனின் பெயர் நிச்சயம் சொல்லப்படும். தாயகப் பயணப் பாதையில் விழுமுன்னமே முளை விட்ட விருட்சமாகத் தனது தனித்துவமான போர் உத்திகளைத் தந்து சென்ற ரமணன் என்றும் அந்த உத்திகளின் வடிவத்திலும் நினைவுகளின் ஆழத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

மாவீரர்கள்- கேணல் இளங்கீரன் வீரவணக்கம்வன்னியில் நடைபெற்று வரும் சமரில் 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார்.

சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். நிறையச் சமர்க்களங்களைச் சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர்.

ஓயாத அலைகள் – 3 இன்போது குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் பிரிகேடியர் பால்றாச்சின் தலைமையில் சண்டையிட்டபோது விக்ரர் கவச எதிர்ப்பு அணியையும் சமர்க்களத்தின் ஒரு பகுதியையும் வழிநடத்தியவர் இளங்கீரன்.

மாவீரர்கள்- லெப்டினன்ட் கேர்னல் ஜொனிஅமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.

கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார்.

ஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன்சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.

மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.

ஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார்.

படைநிலைகளைப் போய்ப் பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகளின் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார்.

ஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தினார். அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டார்.

10.4.85 அன்று யாழ்ப்பாணம் காவல்துறை நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர்.

19.12.84 அன்று தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.
 

ஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி வியாட்டுத்திடலையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது.

அதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை நிலையம் பலப்படுத்தப்பட்டிருந்தது. அகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை நிலையம் மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது.

காவல்துறை நிலையம் கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாம் மூடப்பட்டது. காவல்துறை நிலையம் கைப்பற்றப்பட்ட பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும் இந்தியப் படையுடன் சுதுமலையில் நடந்த தாக்குதலின் போது பாரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி.

கட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது.

இந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் தந்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சி தந்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார். முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம்.

இந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார்.

அதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார்.

ஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம் - தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம் - அருகாமையில் சென்றுவிட்டோம் - நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர்.

தேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார்.

தான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார். நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் சினமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் சினத்தோடு இருந்தார் தலைவர்.

அவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது அமைதியை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார். இந்த வகையில் கேணல் கிட்டு ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார்.

நெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மணலாற்றுக் காட்டிலிருந்து என்னை ஜொனியை அழைத்துவர தலைவர் அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் நான் அவரை விசுவமடுவில் சந்தித்தேன்.

இரண்டு நாட்கள் நான் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தேன். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் அமைதியைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, அமைதி ஏற்பட சாகுவரை உண்ணாநிலைப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார். பிறகு நான் ஒரு இழுபறியுடன்தான் மேஜர் தங்கேசுடன் புறப்பட்டோம். போகின்ற வழியில் இந்த இந்த இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு இந்திய பாசறைகள் அமைக்கும், அங்கு உங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும் - தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார். அவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான்.

நான் அவரைக் கூட்டிச் செல்லும்போது, "தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் - சொல்வீர்களா என்று தெரியவில்லை - இருந்தாலும் சொல்லுங்கள்" என்று சொன்னேன்.

நாங்கள் பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் ஜொனியைப் பற்றி சொன்னேன். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னேன். அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா? யோகி வந்துள்ளாரா? என்று.

அந்தக் காலகட்டத்தில் மெல்லிய ஒலிக்குக் கூட விழித்து விழிப்பாக இருப்பார். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு. அந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார்.

தலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். நாற்காலி, மிசையம்(மேசை) எல்லாம் அப்போது இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு.

பின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்லத் தயாராக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று கேட்டேன், "என்ன நடந்தது? எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா?" என்று கேட்டேன். அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்.."எதுவுமே கதைக்காதீங்க.. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்" என்றார். "என்ன முடிவு?" என்று கேட்டேன்.

தலைவர் கூறினார், "இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. யாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்" என்றார். "நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்" என்றார் ஜொனி.

இடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார்.

ஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம்.

அவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது.

போராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார்.

இத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவு கூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே.

யோகரத்தினம் யோகி
வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.
(16.03.2006 அன்று லெப்.கேணல் ஜொனி அவர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி "புலிகளின் குரல்" வானொலியில் ஆற்றிய நினைவுரை)

Saturday, 31 March 2012

மாவீரர்கள்- லெப்.கேணல் ராதாயார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் உந்துருளியில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச மேலாளரைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு வகையான பார்வையைக் கொடுக்கவில்லை.


அமைதியும் கவர்ச்சியும் கொண்ட அவரது தோற்றத்தைப் போலவே அவரது அணுகுமுறைகளும் அமைந்திருந்தன. 8ம் வகுப்பில் படிக்கும் போதே சாரணர் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ராதா உயர்தர வகுப்பு படிக்கும் வரை சாரணர் இயக்கத்தில் இருந்து கல்லூரியின் பயிற்சிப் பாசறைக்கே தலைவனாக இருந்ததினால் கல்லூரிக் காலத்தில் இருந்தே அவரிடம் செயலாணை(நிர்வாக) ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்து காணப்பட்டன.யாழ். இந்துக் கல்லூரியில் மாணவ தலைவர்கட்கு முதன்மை மாணவத் தலைவனாக இருந்த ராதா வகுப்பறைகளின் நடைபாதைகளில் நடந்து வந்தாலே மாணவர்கள் பள்ளி முதல்வரைக் கண்டதுபோல் அமைதியாகி விடுவார்கள். இது ராதா மாணவப் பருவத்து நினைவுகள்.

கல்வி, விளையாட்டு, செயலாணை என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ராதா தனது கல்லூரி வாழ்வை முடித்துக் கொண்டு கொழும்பில் வைப்பகம் ஒன்றில் பணிபுரிந்தார். 1983ல் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்களினால் கண்ட ஹரிச்சந்திரா உடனடியாகத் தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார்.

அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் ஒருங்கே கொண்ட ஒரு வித்தகனை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றுக்கொண்டது. இந்த வேறுபாடுடைய வீரனை, நடமாடும் பல்கலைக் கழகத்தினை இனங்கண்டுகொண்ட தேசியத்தலைவர், ராதாவின் ஆற்றலும், ஆளுமையும் அவரைப் போல பல நூறு போராளிகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து கொண்டு பயிற்சி முகாமினை நடாத்தும் பணியினை ராதாவிடம் ஒப்படைத்தார். அந்தப் பல்கலைக் கழகத்திடம் இருந்து விடுதலைப்புலிப் போராளிகள் படித்துக்கொண்ட பாடங்கள் தான் எத்தனை? எத்தனை?பயிற்சி முகாமில் புலிக்கொடி பறக்கிறது. போராளிகள் அணிவகுத்து நிற்கின்றார்கள். இப்போது கல்லூரியில், வீதிகளில் கண்ட ஹரிசந்திராவை அங்கே காணமுடியவில்லை. ஆங்கிலப் படங்களில் வெறுமனே வேசமிட்டு வரும் ஒரு பெரிய படை மேலாளரைப்போல் ஒருவனை அங்கே காணமுடிந்தது.

"Scout Attention" என்ற மேலாண்மை அறைகூவலும், உருமறைப்பு உடைகள் உரசும் சத்தத்துடனான படைய நடையும் அவருக்கே உரியவை. பயிற்சிக் கழகத்தில் ராதாவைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அவ்வளவு கடுமை, மிக வேகம்.அதுதான் ராதா.

ராதா அசைக்க முடியாத தன்னம்பிக்கை மிக்கவர். அதேபோல் தலைவரும் ராதா மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் போராளிகள் கடுமையான கொமாண்டோ பயிற்சிகளை பெறும்போது அவர்களின் பின்னே போலிக்குண்டுகளைப் பயன்படுத்தி போர்க்கள நிலைமையைப் போன்ற மனமயக்கத்தை உருவாக்கும் போர்ப்பயிற்சி மரபுமுறை. ஆனால் ராதா இந்த மரபுகளை மீறினார். தான் போலிக்குண்டுகளை பயன்படுத்த விரும்பவில்லை, உண்மையான குண்டுகளை பயன்படுத்தப் போவதாக ராதா தலைவரிடம் இசைவு வேண்டினார். ராதாவின் திறமையிலும் நம்பிக்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் ராதாவிற்கு இசைவு கொடுத்தார்."படுத்து நிலையெடு" (Down Position) இது ராதாவின் கட்டளை. பயிற்சி பெறும் போராளிகள் வேகமாக நிலை எடுத்து நகர்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னே நின்ற ராதா எம்-16 ரகத் துப்பாக்கியினால் அவர்களின் பாதணிகளைக் குறிபார்த்துச் சுடுகிறார். உண்மையான ரவைகள் பாதணிகளில் பட்டும் படாததுமாய் செல்கின்றன. அருகே நின்று பயிற்சியை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொன்னம்மான் சொல்கிறார் "அது தான் ராதா".

அன்றைய பயிற்சி முடிந்து போராளிகள் தங்கள் தங்குமிடங்களுக்கு செல்கின்றார்கள். அங்கே தங்களது இரும்பிலான அடிப்பாகங்களைக் கொண்ட பாதணிகளைக் கழற்றிப் பார்க்கிறார்கள். சிலரது பாதணிகளை எம்-16 ரவைகள் துளைத்திருந்தன. இந்த ஓய்வு நேரத்தில் அந்த ”மேலாளரைக் ராதா”வைக் காணவில்லை. ஒரு நல்ல நண்பனை அங்கே காணமுடிந்தது. ”என்ன ஐ சே கஸ்டமா இருக்கா, துன்பந்தான்”. இப்படிக் கதைப்பது ராதாவின் வழமை.பள்ளிக்கால காதல் கதை கேட்கும் அளவிற்கு பழகுவார் ராதா. ஒரு மாலை நேரம் பயிற்சி முடிந்து எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு போராளி தனது பள்ளிக்காதலியின் பெயர் இராசாத்தி என்றும் அவளைப் பற்றிய கதைகளையும் ராதாவோடு கதைத்திருந்தான். சிறிது நேரத்தில் முகாமின் ஒலிபெருக்கி "இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" என்ற பாடல் மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படி ராதா வேறுபாடானவர்.

தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மிசையத்தில்(மேசை) நூல்கள் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். ராதாவின் ஆற்றல் கண்டு தலைவரே ஒரு தடவை வியந்து புகழ்ந்ததுண்டு.

அடர்ந்த காடு குறிப்பிட்டளவு போராளிகள், பொன்னம்மான், விக்டர் உட்பட சில தளபதிகள் அவர்களோடு தலைவர். இவர்களுடன் கையில் தொலைத் தொடர்பு கருவியுடன் ராதா. எல்லோரும் மிகுந்த மகிழ்வோடு தலைவரும், பொன்னம்மானும் கூறும் கதைகளைக் கேட்டபடியே காட்டின் வழியே நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரோடும் சேர்ந்து சிரித்துக் கதைத்தபடி நடந்து கொண்டிருந்த ராதா திடீரென "Down Postion" என உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். தலைவர் உட்பட எல்லோரும் கட்டளைக்குப் பணிந்தார்கள்.
தலைவனும் தளபதிகளும் உள்ளிருந்து வெளிநோக்கி வியூகம் அமைக்குமாறு சைகையால் கட்டளை கொடுத்தார்கள். அதுவரை எதுவுமே நடக்கவில்லை. சிறிது சிறிதாக கேட்ட ரீங்கார சத்தம் ஒன்று மட்டும் கூடிக்கொண்டு வந்தது. அதுவரை ராதாவைத் தவிர எவருக்கும் எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் காட்டுத் தேனீக்களின் பெரிய கூட்டமொன்று பேரிரைச்சலுடன் எல்லோரையும் கடந்து சென்றது.

தேனீக்கள் கண்களில் இருந்து மறைந்ததும் எல்லோரும் எழுந்தார்கள். பொன்னம்மானும் தலைவரும் ராதாவைப் பார்த்தார்கள். " காடு பற்றிய புத்தகம் ஒன்றில் படிச்சனான் அண்ணை. சத்தம் சிறிதாக இருக்கும் போதே இதுவா இருக்குமோ என்று நினைச்சுத்தான் கட்டளை (Command) கொடுத்தனான். அதுபோலவே நடந்துவிட்டது. இந்தத் தேனீக்கூட்டம் பாதை மாறாதாம் வந்த வழியே பறக்குமாம். நாங்கள் கீழே படுக்காமல் நடந்து வந்திருந்தா இண்டைக்கு எங்களிலே கனபேருக்குக் கண் பறந்திருக்கும்" என்று ராதா கூறி முடித்தார்.ராதாவைத் தொடர்ந்து பொன்னம்மான் போராளிகளைப் பார்த்து " இண்டைக்கு இதிலை இரண்டு விசயம் படித்திருக்கிறியள். ஒரு திடீர் கட்டளை வந்தால் எப்படி நிலை (position) எடுக்கிறது ஒன்று கட்டளை (order) வந்தால் கேள்வி கேட்கக் கூடாது எண்டது இரண்டாவது. ஏன் படுக்க வேணும் எதற்குப் படுக்க வேணும் என்று யாரும் கேட்டுக் கொண்டு நின்றிருந்தால் இப்ப கண் போயிருக்கும் Down என்றால் Down தான்" என்று சொல்லிச் சிரித்தார்.

இவ்வாறு எண்ணற்ற திறமைகளைக் கொண்டிருந்த ராதா தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்ற சிறப்புக் கொமாண்டோ அணியிற்கும் பயிற்சி அளித்தார். பயிற்சியாளனாக இருந்த ராதா லெப்.கேணல் விக்டருடன் மன்னார்க் களம் நோக்கிச் சென்று சாதனைகள் செய்யத் தொடங்கினான். மன்னார் காவல்துறை நிலையத் தாக்குதலில் ராதாவின் திறமையை விக்டர் பல இடங்களிலும் குறிப்பிடுவது வழக்கம்.

விக்டர் வீரச்சாவடைந்த பின் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாகப் பொறுப்பேற்ற ராதா உலகில் கண்ணிவெடியால் தகர்க்கப்படாதென புகழ்பட்ட "பவள்" கவச ஊர்தியைத் தகர்த்து விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத் திறனை உலகிற்குக் காட்டினார்.

கேணல் கிட்டு அவர்கள் காலை இழந்த பின் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற ராதா குறுகியகால இடைவெளியில் குரும்பசிட்டி படைமுகாம், மயிலியதனை படைமுகாம், காங்கேசன்துறை காபர்வியூ படைமுகாம் என பல முகாம்களைத் தாக்கிப் பல வெற்றிகளைக் குவித்தார்.

பல முனைகளிலும் திறமை கொண்ட இந்த நடமாடும் பல்கலைக்கழகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால்..... இது தலைவர் உட்பட எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. "சண்டைக்கு எண்டு போய் சாகிறதெண்டால் ஐ சே எங்களுக்கெண்டு ஒரு றவுண்ஸ் அல்லது ஓர் செல் துண்டு இருக்கு அது வந்தால் தான் சா வரும். இல்லையெண்டால் ஒரு போதும் சாகேலாது I say" இது ராதா போராளிகளைப் பார்த்து அடிக்கடி கூறும் வசனம். ஆம் அவர் கூறியது போல் 20-05-1987ல் அவரைத் தேடி எதிரி ஏவிய குண்டொன்று அவரது மார்பினைத் துளைத்தது. ஹரிச்சந்திரா என்ற ராதா காவியமாகி ஆண்டுகள பல தாண்டிய போதும் அவரது நினைவுகள் எம் மண்ணில் இருக்கும். ராதாவின் சாதனைகளில் இன்னும் ஊமையாய் இருக்கும் உண்மைகள் சில, எம் தேசம் மீண்ட பின்பே பேசப்படும்.

Saturday, 24 March 2012

மொழி காத்த தலைவன்மாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான்.

ஆகவே, உறவைப்போல அந்த மண்ணையும் அவன் உறங்காமல் காத்தான். உயிர்போல் நேசித்தான். காரணம் அவன் வாழ்ந்த மண் என்பது அவன் மூதாதையரை உருவாக்கிய மண். தமது மூதாதையர் அந்த மண்ணிலேதான் வாழ்ந்து களித்து, சிரித்து இவனை படைத்துவிட்டு அந்த மண்ணிற்கே உரமாகி போனார்கள். ஆகவே தமது மூதாதையரின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு இன்னமும் நினைவாய் இருக்கிறது.

தமது மூதாதையரின் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், பழக்க வழக்கங்கள் அதைவிட மேலாக அவர்கள் விட்டுச் சென்ற மொழி அவனை அந்த மண்ணைவிட்டு பிரிக்க முடியாமல் செய்கிறது.ஆகவே அந்த மண் என்பது அவன் உயிர்வலி. அந்த மண் என்பது அவனின் உணவாதாரம். அந்த மண் என்பது அவனின் வாழ்வு. அவனின் இலக்கியம். அவன் வாழும் கலாச்சாரம். இது வாழ்ந்து முடித்த புத்தகம் மட்டுமல்ல. வாசித்து வாசித்து தமது வருங்காலத்திற்கு விட்டுச் செல்லக்கூடிய ஒரு பெரும் பொக்கிஷம். ஆகவேதான் மண்ணை நேசிப்பது என்பது மனிதனுக்குள் ஒரு சிறப்பு வாய்ந்த அசைக்க முடியாத, விட்டுக் கொடுக்க முடியாத பேராற்றலாய் உரைந்து போயிருக்கிறது. அவன் வாழ்வு அந்த மண்ணிலேதான் செதுக்கப்பட்டது. அந்த மண்ணில் வீசும் காற்று இவன் மொழியை சுமந்து கொண்டு சுற்றி சுற்றி அவனுடைய காதிலே பாடல்களாக, இசையாக மொழிமாற்றம் செய்து இவனை மகிழ்விக்கிறது.

அந்த காற்று சுமந்து செல்லும் இசையிலே இனிமை இருக்கிறது, காதல் இருக்கிறது, கருணை இருக்கிறது, அன்பு இருக்கிறது, தாலாட்டு இருக்கிறது, இறுதியாக ஒப்பாரியும் இருக்கிறது. ஆகவேதான் ஒப்பற்ற அந்த மண்ணை அவன் ஒருபோதும் மறக்க முடியாதவனாக மாறிப் போகிறான். தமக்கு தீங்கு வந்தபோதிலும்கூட தாங்கிக்கொள்ளும் அவன் தன் மண்ணுக்கு தீங்கு என்றவுடன் வீரிட்டு எழுகிறான். தன் மண்ணுக்கு கலங்கம் என்றவுடன் கனலாகிறான். காரணம் அந்த மண் அவனைக் காத்த மண். அவனை வாழ வைத்த மண். இனியும் வாழ வைக்கப்போகும் மண்.

ஆகவே ஒவ்வொரு இனமும் தன் மண்ணை நேசிப்பது என்பது தன் வாழ்வை சுவாசிப்பதற்கு சமமானது. மண் என்பது ஏதோ உயிரற்ற பொருளல்ல. அது நம்மோடு பேசும். நம்மோடு சிரிக்கும். நம்மோடு அழும். நம்மை கரம்பிடித்து அழைத்துச் செல்லும். நம்மை தாங்கிக் கொள்ளும். நம்மை சுமந்துக் கொள்ளும். ஆகவே மண் நம்முடைய மறுஉயிர். மண் நம்முடைய உணவு. மண் நமது முகம். மண் என்பது நமது மறுபரிசீலனை. நமது பிள்ளைகளுக்கு நாம் பதிவு செய்து வைக்கும் பரிசுப்பொருள்.

ஆகவேதான் மண்ணுக்கான போராட்டம் என்பது இந்த பூமிப்பந்தில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் பெரும் பலம் படைத்த கொள்ளைக்காரர்கள் பிற மண்ணை சூறையாட தாம் நடத்தும் சமருக்கு எதிர்ச்சமர் புரிந்து நம்மை பலியாக்கிக் கொள்ள மண்ணின் மைந்தர்கள் களம் காண்கிறார்கள். ஏதோ அந்த மண் இன்றோடு அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக அல்ல. அது தமது தலைமுறைத் தலைமுறையாய் தம்மை அடையாளப்படுத்தும் என்பதற்காக.

சிலபேர் தமிழீழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ஏன் விட்டுக் கொடுத்துப்போகலாமே. அரசியலில் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு ஒத்து வாழலாமே என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய பதில் ஒன்றுதான். உயிரை கொடுக்கலாம், ஆனால் மானத்தை இழக்க முடியாது. மானம் என்பது உயிரை விட மேலானது. இது ஒரு காரணமாக இருந்தாலும் மேலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு இனத்திற்கான அடையளம் என்பது அந்த இனம் பேசும் மொழி. மொழியை இழப்பது என்பது உயிரை இழப்பதற்கு சமமானது.

இன்று உலகில் பேசப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான மொழிகள் அழிந்து விட்டது. நூற்றுக்கணக்கான மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இந்த மொழிகள் அழிவதற்கு காரணம் என்ன என்று ஆழ்ந்து யோசித்தோமேயானால் அவர்கள் தமது மொழி அடையாளமான மொழியை தாங்கிக் கொண்டிருந்த, மொழியை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த, மொழியை பதிவு செய்து வைத்துக் கொண்டிருந்த தமது சொந்த மண்ணை இழந்தார்கள்.இப்போது அந்த மண்ணோடு அவர்கள் பேசிய மொழியும் புதைந்து போனது. வாழ்பவர்கள் மட்டும் பேசினார்கள். தமது பிள்ளைகள் வந்தவர்களின் மொழியை பேசினார்கள். ஆகவே தம் மூதாதையரின் மொழி என்னதென்று அவர்களுக்கு தெரியாமலேயே போனது.

தமக்கான மொழி அடையாளத்தை மட்டுமல்ல, இன அடையாளத்தையும் அவர்கள் இழந்து விட்டார்கள். ஆகவேதான் அந்த மொழியோடு சேர்ந்து அவனின் இனமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவன் இலக்கியமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவனின் கலாச்சாரம் அழிந்தது. நாளடைவில் அவனே அழிந்து போனான். அவனுக்கென்று ஒரு அடையாளம் இல்லாமலேயே போனது. நாளைய வரலாற்றில் அவனைப்பற்றி வாசிக்க யாரும் இல்லை. அவனைப் பற்றி யோசிக்க எவரும் இல்லை. அவனை யாரென்று யாருக்கும் தெரியாது.

ஆனால் தமிழ் அப்படிப்பட்டதா? கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்தக்குடி அல்லவா? அதை எப்படி இழப்பது? அதை காப்பது நமது கடமையல்லவா? ஆகவேதான் தாய் தமிழகத்தில் மொழி இழந்து, மொழிக்கான அடையாளத்தை இழந்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் தமிழீழத்தில் ஒரு மாவீரன் தோன்றினான். இனி உலகு உள்ள நாள்வரை தமிழுக்கென்று ஒரு அடையாளத்தை அவன் தக்க வைத்தான். தமிழினத்தின் முகவரியை அவன் உலகெங்கும் அனுப்பினான்.

இனி எந்த காலத்திலும் தமிழ், தமிழினம், தமிழ்மொழி சிதைவுக்கு சிறிதும் இடம் இருக்காது. இதை ஏழு கோடி மக்களுக்கு மேல் வாழும் தமிழ்நாடு செய்யாத நிலை இருக்கும்போது சில லட்சம் மக்கள் மட்டுமே வாழும் தமிழீழம் செய்து முடித்தது. காரணம் அவர்கள் தம் இனத்தின் அடையாத்தைக் காக்க தமது உயிரை துச்சமென மதித்தார்கள். பாரதிதாசன் சொல்வாரே ‘எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்களினம் என்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணை அளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாள்’ என. அந்த புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை அவர்கள் முற்றிலுமாய் உள்வாங்கி களத்திற்கு வந்தார்கள்.

தமக்கான ஒரு நாடு இருந்தால்தான் நமக்கான மொழியை காக்க முடியும் என்பதை அந்த மாபெரும் தலைவன் முற்றிலுமாய் உணர்ந்திருந்தான். இந்த 21ஆம் நூற்றாண்டில் ஈடுஇணையற்ற அறிவியல் சாதனங்களை மொழி போராட்டத்திற்கு பயன்படுத்தத் தொடங்கினான். இனம் காக்கும் போருக்கு உயிரை பலியாக்கும் தற்கொலையாளர்களை தந்துதவினான். ஒவ்வொரு உயிரின் இழப்பிலிருந்தும் ஓராயிரம் தமிழ் ஓசை உலகை சூழ்ந்தது. ஒவ்வொரு களபலியிலும் தமிழ் இனத்தின் அடையாளம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.தனக்கென ஒரு மண் தேவையா? என்று மானங்கெட்டவர்களும், மதிக்கெட்டவர்களும் மாறி மாறி பேசுகிறார்கள்.

ஒருவேளை தமிழ்நாடு தனிநாடாய் இருந்திருக்குமேயானால் இங்கிருந்து இப்போதிருக்கும் நிலை இருந்திருக்குமா? இங்கு நமக்கான மொழி அடையாளம் இருக்கிறதா? தமிழ் பேச மக்கள் இருக்கிறார்களா? நமக்கான தமிழ் கல்வி இருக்கிறதா? கலப்பின மொழியாக அல்லவா தமிழ் மொழி மாறிவிட்டது. நமக்கான மொழி, நமது உயிராதாரம், நமது அடையாளம் என்ற உணர்வு யாரிடமாவது உயிரோட்டமாக காணப்படுகிறதா? வீதியெங்கும் ஆங்கிலப் பள்ளிகளும், ஆங்கில மோகமும் நம்முடைய தமிழ் மொழி சிதைவிற்கு பெரும் காரணமாகி விட்டதே. அதை மாற்றுவதற்கான மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு அடிப்படை முயற்சியைக் கூட நம்முடைய தமிழ் தலைவர்கள் செய்யாமல் அவர்கள் தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் துரோகிகளாக மாறிவிட்டார்களே! இதை நம்மால் மறுக்க முடியுமா? மறக்க முடியுமா?

ஆகவேதான் நமக்கு கிடைத்த ஒரு சிறு பயணப்பாதையை நாம் எந்த நேரத்திலும் இழக்கக் கூடாது.இதை புரிந்து கொள்ளும்போது நமக்கு தமிழீழத்தின் கட்டாயம் புரியும். நம்முடைய தமிழ் மண்ணின் அவசியம், நமக்கான ஒரு நிலம் தேவை என்பதற்கான அடிப்படை தன்மைகள் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆகவே நாம் தமிழீழத்தை ஆதரிப்பதென்பது நமது மொழியை ஆதரிப்பது. தமிழீழ மண்ணை மீட்டெடுப்பதென்பது நம்முடைய வருங்காலத்தின் அடையாளத்தை மீட்டெடுப்பது. தமிழீழத்தின் போராட்டத்தை ஆதரிப்பதென்பது நம்மையே நாம் ஆதரித்துக் கொள்வது. ஆகவே தமிழ் துரோகிகளின் கூட்டத்திற்கெதிராக ஒரு மண்ணின் அடையாளத்தை எத்தனை எத்தனை மரணங்கள் வந்தாலும் அத்தனை மரணங்களையும் மரணிக்க வைத்து ஒரு மறப் போராட்டத்தை அற தன்மையோடு அகிலத்திற்கே அறிவித்துக் கொண்டிருக்கும் மொழி காக்கும் அந்த தலைவனை இனம் காக்கும் அந்த தலைவனை நாம் ஆதரித்தே தீர வேண்டும்.

அத்தலைவனை ஆதரிக்கும்போது ஏற்படும் துயர்களை நாம் தூசாக கருதவேண்டும். அத்தலைவனை ஆதரிக்கும்போது இன்னல் நமக்கு ஏற்படும் என்றால் அது இனிதே என்பதை நாம் உணர வேண்டும். காரணம் அத்தலைவன் நமக்கான தலைவனல்ல. நம் எதிர்கால தலைமுறைக்கும் தலைவன். தமிழ் மொழியை காப்பதற்காக, இன அடையாளத்தை மீட்பதற்காக களம் கண்ட தலைவன். பெரும் ஆற்றல் வாய்ந்த படைகட்டி அதிலிருந்து பணம் ஈட்டி தமது குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் தன்னல தலைவனல்ல நாம் பெற்றிருக்கும் தலைவன். அவனைப் பெறுவதற்கு நாம் பெரும் பேறு பெற்றிருக்கிறோம். ஆகவேதான் ஒரு மொழி அழியும் காலத்திலே அதை மீட்பதற்காக அவன் இயற்கையாக தோன்றியிருக்கின்றான்.

எந்த ஒரு போராட்டக் காலமும் அதற்கான தலைவர்களை தாமகத்தான் தோற்றுவிக்கும். தலைவர்களை மனிதர்கள் உருவாக்க முடியாது. வரலாறு தான் தலைவர்களை உருவாக்கி படைத்தளிக்கும். நம்முடைய புலிநிகர் தலைவனும் அப்படி படைத்தளிக்கப்பட்ட ஆற்றல் வாய்ந்தவன். ஆகவேதான் வெறும் இந்தியர்கள் வாழ்கிறார்கள் என்ற நிலை மாறி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்கின்ற வரலாற்று வரிகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்த தமிழ் மொழிக்கு புதிய அடையாளத்தை உருவாக்கித் தந்தான். இப்போது நமக்குப் புரிகிறது. அந்த தலைவனின் போராட்டம் என்பது அந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்பது தமிழீழ களம் அமைத்தது தன்னலத்திற்காக அல்ல. இந்த போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்களை கள பலியாக்கியது ஏதோ போர் வெறியால் அல்ல. அது நமது மொழியை காப்பதற்கான போராட்டம். நம்முடைய இன அடையாளத்தை காப்பதற்கான போராட்டம்.

தமது மொழியை எந்த அளவிற்கு அவன் நேசித்தானோ, அதே அளவிற்கு அவன் அந்நிய மொழியையும் ஆழமாய் நேசித்தான். எந்த நிலையிலும் தான் எதிர்க்கும் அடக்குமுறையாளர்களுக்கெதிராக சமர் புரிந்தானே ஒழிய, அந்த இனத்தின் அடையாளத்தையோ, அந்த இன கலாச்சாரத்தையோ, பண்பாடு பழக்க வழக்கங்களையோ, அவர்கள் வாழ்க்கை முறைகளையோ எந்த நிலையிலும் எக்காரணம் கொண்டும் அவன் எதிர்த்தது கிடையாது. இதுவே அவன் தமது தாய்மொழியை எந்த அளவிற்கு நேசித்தான் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறது. தமது மொழியை நேசிக்கும்போதுதான் நாம் அந்நிய மொழியை நேசிக்கத் தொடங்குவோம். அந்நிய மொழியை நசுக்கும்போது நம்மை அறியாமலேயே நாம் நம் மொழியை நசுக்கி சிதைவடையச் செய்து விடுவோம் என்பதை அந்த தலைவன் உணர்ந்திருந்தான்.

ஆக இந்த மண்ணை நேசிப்பதென்பது தமது மொழியை காப்பதற்கான அடையாளம் என்பதை நாம் புரிந்து கொள்ளவே உயிர்பலி தந்து மண்ணை காக்கும் போராட்டத்தை அந்த மாபெரும் தலைவன் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றான். மண்ணை காப்போம், மொழியை காப்போம், இனத்தைக் காப்போம், நமக்கான ஒரு தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம். அது நமது இழப்பிற்குப் பின் நம்முடைய சந்ததிக்கு மகிழ்ச்சியைத்தரும். அந்த மொழி காத்த தலைவனின் வழி நின்று வாழ்வோம்.