Monday, 19 November 2018

இனப்படுகொலைகள் - 1977ன் பின்னர் தமிழர் விரோத மக்கள் படுகொலைகள்


1977ன் பின்னர் தமிழர் விரோத மக்கள் படுகொலைகள்

1977ல் யூ.என்.பி. அரசாங்கம் அமைக்கப்பட்டும் அமிர்தலிங்கம் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ஏற்றும் மூன்று வாரங்கள் செல்வதற்குள், தமிழர் விரோத ஆத்திரமூட்டல்களுக்கு ஜயவர்தன ஆட்சி வழியமைத்துக் கொடுத்தது. 1977 ஆகஸ்ட் 12ம் திகதி யாழ்ப்பாணத்தில் றோட்டரிக் கழகத்தினால் புனித பட்றிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டு வந்த கார்னிவேலுக்கு சிவில் உடையில் வந்த பொலிஸ் அதிகாரிகள் கூட்டமொன்று, நுழைவுச் சீட்டு இல்லாமலேயே மைதானத்துக்குள் நுழைந்து கொள்ள முயற்சித்தமை ஆத்திரமூட்டலின் ஆரம்பமாகியது. இதைப்பற்றி உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதற்கு மறுதினம் கார்னிவேலுக்குள் நுழைந்த மற்றுறோர் பொலிஸ் அதிகாரிகள் கும்பல், அங்கு வருகை தந்திருந்தோர் மீது முதல் நாளைக் காட்டிலும் மோசமான முறையில் தாக்குதல் நடாத்தியது. இருப்பினும் கார்னிவேல் மைதானத்தில் கூடியிருந்த தமிழ் மக்கள் இந்த பொலிஸ் காடையர்கள் கும்பலை மைதானத்தில் இருந்து கலைப்பதில் வெற்றி கண்டனர்.


ஆகஸ்ட் 14ம் திகதி பொலிஸ் பழிவாங்கல்கள் யாழ்ப்பாண வீதிகளில் தலைநீட்டின. துவிச்சக்கர வண்டிகளில் சென்ற தமிழ் மக்களை தாக்கிய பொலிசார் வண்டிகளைத் தோளில் சுமந்து செல்லுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டனர். இந்தச் சித்திரவதைகளை சகித்துக் கொள்ள முடியாத ஒருவர் ஒரு பொலிஸ்காரரைச் சுட்டார்.


மறுநாள் அதிகாலை வீதிகளில் இறங்கிய பொலிசார் வீதிகளில் செல்வோர் மீது அளவு கணக்கற்று தாக்குதல் நடாத்தினர். இந்த நாசங்களைப் பற்றி கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு செய்த முறைப்பாடுகளாலும் கூட எதுவிதமான நிவாரணமும் கிடைக்கவில்லை. இது யூ.என்.பி. அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் உயர் பொலிஸ் அதிகாரிகளின் ஆசியுடன் தமிழ் மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு செய்யப்பட்ட காட்டுமிராண்டித் தாக்குதல் என்பது நிரூபிக்கப்பட்டது.


ஆகஸ்ட் 16ம் திகதி அதிகாலையில் சிவில் உடையில் வந்த பொலிஸ் அதிகாரிகள் யாழ்ப்பாண நகரக் கடைகளுக்குத் தீமூட்டினர். இந்தத் தீவைப்பு 24 மணித்தியாலங்கள் பூராவும் தொடர்ந்து நடைபெற்றது. இச்சம்பவங்களால் நான்கு யாழ்ப்பாண நகரவாசிகள் கொல்லப்பட்டதோடு 30க்கும் அதிகமானோர் கடும் காயமடைந்தனர். யாழ்ப்பாண பொதுச் சந்தையின் ஒருபாகமும் தீக்கிரையானது. இச்சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதன் பின்னர் சந்தைப்பக்கம் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கமும் தாக்கப்பட்டார். இச்சம்பவம் பற்றி பாராளுமன்றில் பேசிய அமிர்தலிங்கம் கூடியிருந்த பொலிஸ் அதிகாரிகள் தாம் யார் என்பதை அடையாளங்காட்டியதன் பின்னரும் தம்மை தாக்கியதாக தெரிவித்தார்.


கார்ணிவேலுக்கு வந்த நிராயுதபாணிகளான தமிழ் மக்கள் மீது ஆத்திரமுட்டும் வகையில் தாக்குதல் நடத்துவதன் மூலம் ஆரம்பமான பொலிஸ் காடைத்தனங்கள், கொலைகள், இரத்தக்களரிகள் ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற இவற்றை எது விதத்திலும் திடீர் ஆத்திரத்தில் உருவானவையாகக் கொள்ள முடியாது. இவை திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒடுக்குமுறை இயக்கத்தின் ஒரு பாகமாகும்.


அதுமட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல் நடாத்தும் திட்டமும் தீட்டப்பட்டு இருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் கும்பல் எனக் கூறிக்கொண்டு ஒரு இனவாதக் கும்பல் பஸ்ஸில் ஏறி அனுராதபுரத்தில் இறங்கி தமக்கு யழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற பொய் பிரச்சாரத்தை நடாத்தியது. இதன் மூலம் தெற்கில் இனவாத இரத்தக் களரிக்கு களம் அமைக்கப்பட்டது. இச்சமயத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான மக்கள் படுகொலைத் தாக்குதல்கள் குருணாகலை, மாத்தளை, பொலநறுவை, கண்டி, பாணந்துறை போன்ற இடங்களில் விரைவாகப் பரவி இருந்தது. இது முன்கூட்டியே இரத்த வெறியுடனும் கொள்ளையடிக்கும் திட்டத்துடனும் ஆயத்தமாகி வந்த யூ.என்.பி. குண்டர்களை நடவடிக்கையில் இறக்கியதன் பெறுபேறாக ஏற்பட்டதாகும். கொழும்பிலும் தோட்டத்துறை உட்பட ஏனைய பகுதிகளிலும் தமிழர் விரோதக் காடையர்களின் கலகங்கள் வெடிக்க இச்சம்பவங்களில் இருந்து 24 மணித்தியாலங்கள் தன்னும் பிடிக்கவில்லை.


பல நாட்களின் பின்னர்-ஆகஸ்ட் 20ம் திகதி நாடு பூராவும் ஊரடங்குச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. சமாதானத்தைக் காக்கும் பேரில் இராணுவம் நாடு பூராவும் கட்டவிழ்த்து விடப்பட்டது. எனினும் பொலிசும் இராணுவமும் இனவாத இரத்தக் களரியுடன் கைகோர்த்தபடியே தொழிற்பட்டன. அவசரகால சட்டம், ஊரடங்குச் சட்டம் மற்றும் பொலிஸ்-இராணுவப் பாதுகாப்புடன் தமிழ் மக்களை கொன்று தள்ளவும் அவர்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்கவும் இனவாதிகளுக்கு மிகவும் வாய்ப்பான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.


யூ.என்.பி.அரசாங்கத்துக்குச் சொந்தமான பத்திரிகைகள் அறிக்கை செய்ததன்படி, இந்த ஒரு சில தினங்களுக்குள் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் தொகை 112 ஆகும். நாட்டின் பல மாகாணங்களில் 50000க்கும் அதிகமான தமிழ் மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாக்கப்பட்டனர். ரூபா.200 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டும் கொள்ளை அடிக்கப்பட்டும் இருந்தன. இவை அனைத்தையும் காதுகளால் கேட்டது மட்டுமல்லாது கண்களால் நேரில் கண்டுமுள்ள நளின் த சில்வாவும், குணதாச அமரசேகரவும் அவர்களின் சீடர்களும் இன்னமும் ''தமிழ் மக்களுக்கு சிறப்பாக இழைக்கப்பட்ட அநீதி என்ன'' என்ற கேள்வியை இடைவிடாது எழுப்பிக் கொண்டுள்ளனர்.


யூ.என்.பி. அரசாங்கம் 1977ல் ஆட்சிக்கு வந்ததுதான் தாமதம் யாழ்ப்பாணத்தில் தொடங்கி நாடு பூராவும் கட்டவிழ்த்துவிட்ட இனவாத படுகொலைகள் மற்றும் சமூக அழிவுகளின் எதிரில் சமசமாஜ-ஸ்டாலினிச தலைவர்கள் அரசாங்கத்திற்கு சுண்ணம்பு பூசுவதிலும் இனவாத குண்டர்களை தூண்டுவதிலும் ஈடுபட்டனர்.


இந்த துரோக அரசியல் கட்சிகள் இரண்டும் அப்போது அமைத்துக்கொண்டிருந்த இடதுசாரி ஐக்கிய முன்னணி மூலம், 1977 ஆகஸ்ட் 24ம் திகதி 'ஜய தின' பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரையில் பின்வருமாறு கூறிக்கொண்டது: "இந்த நிலைமையின் எதிரில் அரசாங்கம் செயற்பட்ட விதம் எந்தவிதத்திலும் திருப்தியற்றது என்பதே இடதுசாரி ஐக்கிய முன்னணியின் கருத்து என்றாலும், அதை ஒரு சந்தர்ப்பவாத பிரச்சினையாக இழுக்க இடதுசாரி ஐக்கிய முன்னணி விரும்பவில்லை...


"சமாதானக் குழுக்களை அமைத்து அவற்றை செயற்பட வைக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம். ஆதலால், இத்தகைய சமாதான குழுக்களை அமைக்கவும் அவற்றை செயற்பட வைக்கவும் தமது ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிசாருக்கும் ஆயுதப்படைகளுக்கும் அரசாங்கத்தின் ஏனைய அதிகாரிகளுக்கும் உடன் கட்டளை வழங்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகிறோம்."


புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இந்த அறிக்கையை "யூ.என்.பி. அரசாங்கத்துக்கு பந்தம் பிடிக்கும் மற்றும் ஆயுதப் படைகளுக்கு வக்காலத்து வாங்கும் அறிக்கை" என சரியான விதத்தில் சுட்டிக்காட்டியது.


இந்தக் கட்டுரைத் தொடரின் ஆசிரியரால் எழுதப்பட்டு அவரின் பெயரில் 1977 ஆகஸ்ட் 26ம் திகதி "கம்கறு மாவத்த" பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைப் பற்றி மேலும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. அது பின்வருமாறு குறிப்பிட்டது: "இந்த தீர்க்கமான கட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பையிட்டு குரல் எழுப்பாத எவரும் சோசலிஸ்ட் என்ற பெயருக்கு பொருத்தமானவர் அல்ல. சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்த கொள்கை சார்ந்த பொறுப்பில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்...


"இடதுசாரி ஐக்கிய முன்னணி தலைவர்கள் கூறுவது என்ன? இந்த நெறிகெட்ட ஆட்சியாளர்களின் 'மகிழ்ச்சியற்ற' செயற்பாடு வெளித்தோன்றுவது ஒரு "சந்தர்ப்பவாத பிரச்சினை" என்கிறார்கள். வடக்கில் தமிழ் மக்களினதும் சரி தெற்கில் சிங்கள மக்களினதும் சரி எந்தவொரு அடிப்படை பிரச்சினையையும் தீர்த்து வைக்காத முதலாளித்துவ ஆட்சியாளர்கள், படுகொலைகளையும் ஒடுக்குமுறைகளையும் ஒரே தீர்வாகக் கொண்டுள்ளதை மக்கள் படுகொலைகளின் மத்தியில் தன்னும் வாய் திறந்து பேசாத தலைமைத்துவம், முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான தலைமைத்துவமாவது எப்படி? அத்தகைய தலைமை முதலாளித்துவ வர்க்கத்தின் சகல எதிர்ப் புரட்சி திட்டங்களின் போதும் அதற்கு அடிபணிந்து செயற்படும் சந்தர்ப்பவாத தலைமைத்துவம் ஆகும்."


ஆகஸ்ட் 12ம் திகதி புனித பற்றிக் கல்லூரியில் நடைபெற்ற கார்னிவேலில் தமிழ் மக்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்ட ஆத்திரமூட்டுகின்றதும் அழிவுநிறைந்ததுமான நடவடிக்கைகளின் பின்னணியில் செயற்பட்ட பிற்போக்கு சக்திகளை பெயர் குறிப்பிட்ட அக்கட்டுரை, சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களின் துரோகத்தை மேலும் விவரிக்கையில் கூறியதாவது:


"நாடு பூராகவும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் தூண்டுதல்களினதும் சொத்து சூரையாடல்களதும் கொலைகளதும் முன்னணியில் நின்றவர்கள் தேர்தல் காலத்தில் தலையில் பச்சை தொப்பி போட்டுக்கொண்ட யூ.என்.பி. காடையர்களும் பொலிஸ்காரர்களுமே. பிரதமர் உட்பட யூ.என்.பி. தலைவர்கள் வாய்களைத் திறந்த போதெல்லாம் இவர்களைத் தூண்டினர். இனவாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் காரர்களும் இதில் சேர்ந்துகொண்டனர். ஆத்திரமூட்டும் வதந்திகளைப் பரப்பும் அப்பட்டமான சாதனங்களாக ஆயுதப் படைகள் விளங்கின. இதை முழு நாடும் அறியும்.


"இடதுசாரி ஐக்கிய முன்னணி தலைவர்கள், இந்த சம்பவங்கள் ஒன்றை பற்றியோ அல்லது அதன் சிருஷ்டிகர்த்தாக்கள் பற்றியோ ஒரு வார்த்தை தன்னும் கூறாமல் நாடு சகஜ நிலைமைக்குத் திரும்புவது பற்றி பேசுவது படு கேவலமான மோசடியாகும்.


இந்த சகல நிலைமைகளும் அம்பலமாகியுள்ள ஒரு நிலையில், ஒன்றில் கோழைத்தனமான மடையர்களுக்கு அல்லது திட்டமிட்டு தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் இயக்கத்தை தடம்புறள வைக்கும் முதலாளித்துவ கொந்துராத்தினை எடுத்தவர்க்கே தமிழ் மக்களின் பாதுகாப்பினை புறக்கணித்து யூ.என்.பி. அரசாங்கத்திற்கும் ஆயுதப் படைகளுக்கும் பந்தம் பிடிப்பது சாத்தியமாகும். சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைமையின் பெரும்பான்மை குழுவினர் இரண்டாம் தரத்தைச் சேர்ந்தவர்கள். இதை அவர்கள் தமது வரலாற்றின் மூலம் நிரூபித்துக்கொண்டுள்ளனர். முதலாம் தரத்தைச் சேர்ந்த சிலரும் கடந்த கூட்டரசாங்க காலத்தில் எச்சில் சோற்றில் வயிற்றை நிரப்பிக்கொண்டு இந்த கட்சியின் தலைமையின் மூலைமுடுக்குகளைப் பிடித்துக் கொண்டுள்ளனர். இப்போது தமது வர்க்கத்தினதும் விவசாயிகளதும் வேலையற்ற இளைஞர்களினதும் வீட்டுப் பெண்களினதும் தமிழ் பேசும் மக்கள் பகுதியினரதும் அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொருட்டு முன்னணியில் நிற்கையில் தொழிலாளர் வர்க்கத்திற்கு உள்ள முக்கிய தடை இந்தத் தலைவர்கள் கும்பலே." (விஜே டயஸ், கொள்ளை கொலை பரவுகையில் சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களின் சந்தர்ப்பவாத அறிக்கை. கம்கறு மாவத்த 1977 ஆகஸ்ட் 26)


இந்த ஆய்வுகளுக்கு இனங்க, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தால் தொழிலாளர் வர்க்கத்தின் முக்கிய பணி பற்றி சுருக்கமாக சுட்டிக் காட்டப்பட்டிருந்த "கம்கறு மாவத்த" ஆசிரியர் தலையங்கம் பின்வருமாறு குறிப்பிட்டது: "யூ.என்.பி. அரசாங்கத்தின் கீழ் ஆரம்பமான இனவாத ஆத்திரமூட்டல்களின் முக்கிய படிப்பினை, சீர்திருத்தவாத தலைமைகளை கலைத்துவிட்டு தமது கைக்குள் அரச அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளும் முன்நோக்கின் கீழ் வழிநடாத்தும் தலைமையைக் கட்டியெழுப்பும் பணியை தொழிலாளர் வர்க்கம் பின்தள்ளிப் போட முடியாது என்பதாகும். தொழிலாளர் வர்க்கத்தினை அரசியல் ரீதியில் நிராயுதபாணியாக்குவது என்பது எதிர்ப் புரட்சி சக்திகளை ஆயுதபாணியாக்குவதாகும்.


"யூ.என்.பி. அரசாங்கத்தை வெளியேற்றி தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொணரும் முன்நோக்கின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தை சூழ தமிழ் பேசும் மக்கள் உட்பட சகல ஒடுக்கப்படும் மக்களையும் அணிதிரட்ட தொழிலாளர் வர்க்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


"வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை நிபந்தனையற்று ஊர்ஜிதம் செய்வதும் அனைத்து இனவாத சட்டங்களையும் ஒழித்துக் கட்டுவதும் சகல முதலாளித்துவ இராணுவங்களையும் குண்டர் படைகளையும் கலைக்கும் பொருட்டு தொழிலாளர் வர்க்கத்தின் பாதுகாப்புக் கமிட்டிகளைக் கட்டியெழுப்புவதும் இனவாத குண்டர் படைகளை வீதிகளில் இருந்து கலைக்க நடவடிக்கை எடுப்பதுவும் இந்த முன்நோக்கின் தவிர்க்க முடியாத அம்சங்களாகும்."


சமசமாஜ கம்யூனிஸ்ட் தலைவர்கள் மட்டுமன்றி சகல வகையான மத்தியவாதிகளும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் இந்த முன்நோக்கும் வேலைத் திட்டமும் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களிடையே வேரூன்றச் செய்யும் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டனர். அதில் விக்கிரமபாகு கருணாரட்னவின் தலைமையில் பிற்காலத்தில் நவசமசமாஜக் கட்சியை அமைக்க ஒன்றிணைந்த வாசுதேவ நாணயக்கார முக்கிய பேர்வழியாவார்.


இந்தச் சகலரதும் உதவியோடு தமது கையை மேலும் பலப்படுத்திக் கொண்ட யூ.என்.பி. அரசாங்கம், ஆகஸ்ட் இனவாத பயங்கர இயக்கத்தின் மத்தியில் நாடு பூராகவும் அடக்குமுறையை இறுக்கமாக்கும் பொருட்டு புதிய அரசியலமைப்பு சட்டத்தை வரைந்துகொள்ள விரைவாக நடவடிக்கை எடுத்தது. 1977 செப்டெம்பரில் அதற்கான தெரிவுக் குழு அமைக்கப்பட்டது. 1948 சுதந்திரம் என சொல்லிக்கொள்ளப்பட்ட பெப்பிரவரி 4ம் திகதியின் முப்பது ஆண்டுகளின் பின்னர், 1978ல் ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதி பதவியில் வேரூண்றிக்கொள்ள இதனைப் பயன்படுத்தினார். புதிய அரசியலமைப்புச் சட்டத்தினை நிறைவேற்றிக்கொள்வதற்கு முன்னரே, 1972 அரசியலமைப்புக்கு கொணர்ந்த ஒரு திருத்தத்தின் மூலம் இதற்கு வழிவகுக்கப்பட்டது. 1972 அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் ஜனநாயகம் சதாகாலமும் ஸ்தாபிதம் செய்யப்பட்டுவிட்டதாக கொல்வின். ஆர்.டி. சில்வா கூறிக்கொண்ட பொய் இதன் மூலம் ஆகாயத்தில் வெடித்துச் சிதறியது. 1975/76ல் தோன்றிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தினைப் போலவே யூ.என்.பி.யின் திறந்த பொருளாதாரக் கொள்கையின் தீய விளைவுகளுக்கு எதிராக தவிர்க்க முடியாத விதத்தில் தோன்ற இருந்த ஒரு தொகை வர்க்கப் போராட்டங்களையிட்டு கிலியடைந்து போயிருந்த ஆளும் வர்க்கம், யூ.என்.பி-ஸ்ரீ.ல.சு.க. பிளவுபடாத விதத்தில் சர்வாதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்வதற்காக எந்தளவுக்கு வெறிகொண்டிருந்தனர் என்பது நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஸ்தாபிதம் செய்வதில் காட்டிய கடுகதி வேகத்தின் மூலம் பிரசித்தமாகியது.


தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அரசியலமைப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை பகிஷ்கரிக்கத் தீர்மானம் செய்தனர். எனினும் முதலாளித்துவ அமைப்புடனும் அதன் ஆட்சியுடனுமான பிரிக்க முடியாத உறவை அம்பலமாக்கும் வகையில், அரசிலமைப்பு நிர்ணயம் தொடர்பாக யூ.என்.பி. அரசாங்கம் கூட்டிய ஒரு தொகை மகாநாடுகளிலும் கருத்துரையாடல்களிலும் அவர்கள் பங்கு கொண்டனர். இது 1943ல் சோல்பரி அரசியலமைப்பு நிர்ணயத்தில் கலந்து கொள்வதை பகிரங்கமாக "பகிஷ்கரித்த" ஏகாதிபத்திய சார்பு தேசிய காங்கிரஸ், அதனுடன் தொடர்புடைய ஒரு தொகை கலந்துரையாடல்களை சோல்பரி பிரபுவுடன் அந்தரங்கமாக நடத்திய கோழைத்தனமான மோசடியை ஞாபகத்துக்கு கொணரும். அதிகார முதலாளித்துவ பகுதியினரின் ஆணையை எதிர்க்கும் மோசடியான வாய்வீச்சுக்களுக்கு இடையேயும் ஒடுக்கப்படும் தேசிய இணங்களின் கைக்கூலி முதலாளித்துவ பகுதியினரின் வஞ்சகப் பண்பு பலவீனங்கள் அவர்களின் நிறத்திற்கு இணங்கவோ அவர்கள் பேசும் மொழிக்கு இணங்கவோ மாறுவது கிடையாது. அவ்வாறே ஆளும் முதலாளித்துவ பகுதியினருடன் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் கைக்கூலி முதலாளிகள் நடாத்தும் பேரங்களின் பேரில் கையாள்வது வார்த்தைகளா? ஆயுதமா? என்பதற்கு இணங்க அவர்களின் வர்க்க விதிமுறைகள் மாற்றம் கண்டுவிடாது.


தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியலமைப்புச் சபையின் நடவடிக்கைகளில் பகிரங்கமாகக் கலந்துகொள்ளாதது ஏன்? இதை 1977 அக்டோபர் 5ம் திகதி அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தினார். அது தமிழ் தேசியவாதத்தினதும் அதன் முதலாளித்துவ பிற்போக்கு தன்மைகளையும் அம்பலப்படுத்தியது. "ஜயவர்தன தம்மை ஆட்சி செய்வது பிரதமராகவா அல்லது ஜனாதிபதியாகவா என்பதையிட்டு தமிழ் மக்களுக்கு அக்கறை கிடையாது என அவர் கூறினார். "தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் வடிவங்களில் அர்த்தமில்லை. எமது வீடு தீப்பிடித்துக்கொண்டுள்ள நிலையில், நாம் கதவுச் சீலை நீளமா பச்சையா என்பதையிட்டு அக்கறைப்பட்டுக்கொள்ள முடியுமா? என அவர் அர்த்தமற்ற வகையில் கேள்வி எழுப்புகின்றார்.


பாராளுமன்ற ஆட்சி முறையை நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையாக மாற்றுவது முதலாளித்துவ ஆட்சியிலேயே எற்படுத்தப்பட்ட ஒரு உருவ மாற்றம் மட்டுமே. இந்த அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால் பாராளுமன்ற முறை பாசிச ஆட்சி முறையாக மாற்றம் காண்பது சம்பந்தமாகவும் இது பொதுவில் நியாயமான ஒரு காரணமாக இருக்கும். ஆனால், தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பாக நோக்குமிடத்து இந்த மாற்றம் பிரமாண்டமான அர்த்தம் பெறுகிறது. "பாராளுமன்ற முறையும் முதலாளித்துவமே. அது மக்களை ஒடுக்குகின்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறை அல்லது பாசிச ஆட்சி முறையும் முதலாளித்துவமாகும். அவை மக்களை ஒடுக்குகின்றன. ஆதலால் இந்த ஆட்சிமுறையின் மாற்றங்களையிட்டு பொது மக்கள் அக்கறைபட்டுக்கொள்ள வேண்டியதில்லை." இது தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பற்றி அணுவளவும் அக்கறை இல்லாத முதலாளித்துவ சார்பு பிலிஸ்தீனியர்களின் நோக்கமாகும்.


நிறைவேற்று ஜனாதிபதி அரசியலமைப்பு சட்டம் சிங்கள தமிழ் மொழி பேசும் பொது மக்கள் இருசாராரையும் நசுக்கி ஒடுக்குவதை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், அதைப் பற்றி அமிர்தலிங்கம் தமிழ் மக்களின் "அக்கறையை" பொதுமக்களில் இருந்து வேறுபடுத்தி தனிப்படுத்தி காட்டுகையில் ஒரே சமயத்தில் இரண்டு விடயங்களை வெளிக்காட்டினார். அதாவது, இனவாதத்தை தூண்டி தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை மோத வைத்து சர்வாதிகார ஆட்சியை திணிக்கத் தள்ளப்பட்ட யூ.என்.பி. வழிமுறையைப் போலவே, வளர்ச்சி கண்டுவந்த தமிழ் தேசிய பிரிவினைவாதத்திற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி காட்டிய ஆதரவாகும். இந்த இரண்டு வழிமுறைகளையும் ஒன்றாக உள்ளீர்த்துக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, அந்த இரு வழிமுறைகளதும் கூட்டினதும் பிற்போக்குத் தன்மையை காட்டிக்கொண்டது.


தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத பாகுபாடு காட்டவும் அவர்களுக்கு எதிராக யுத்த நடவடிக்கைகளில் இறங்கவும் 1972 அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்தே நடவடிக்கையை ஆரம்பித்துவைத்த முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு இந்த நிலைமை தெளிவில்லாமல் இருக்கவில்லை. சீர்திருத்தவாதிகளும் வர்க்க சமரசவாதிகளும் இதையிட்டு அக்கறையின்றியும் இணங்கியும் போயிருந்தனர்.


புதிய நிறைவேற்று ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான சிங்கள-தமிழ் மக்களின் கூட்டுப் போராட்டத்தைத் தடுக்கும் பொருட்டு, முதலாளித்துவ சார்பு சமசமாஜ-ஸ்டாலினிஸ்டுகளும் நானவித குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் கொண்டிருந்த முயற்சிகளுக்கு உதவும் வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நடவடிக்கைகளை யூ.என்.பி.யினர் பெரிதும் மதித்தனர். இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்த சலுகைகள் அமிர்தலிங்கத்திற்கு வழங்கப்பட்டதன் மூலம் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் எடுத்துக் காட்டியது. இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவருக்கும் கிடைக்காத ஒரு தொகை சலுகைகள் அவருக்கு வழங்கப்பட்டன. ஜே.ஆர். ஜயவர்தனவிடமிருந்து உத்தியோகபூர்வ வாசஸ்தலம், உத்தியோகபூர்வ வாகனம் அத்தோடு பூரண பாதுகாப்பு படைகளும் அவருக்கு கிடைத்தன.


ஜயவர்தனவின் சலுகைகளுக்குப் பதிலாக பதில் சலுகைகளை வழங்கும் பொறுப்பில் இருந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தப்பித்துக்கொள்ள முடியவில்லை. யூ.என்.பி. அரசாங்கத்தின் அமைச்சர்கள் கலந்துகொண்ட அரசாங்க வைபவங்களை பகிஷ்கரிக்கும்படி தமிழ் குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வந்தன. அங்ஙனம் செய்ய தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வாக்குறுதி வழங்கியிருந்தனர். அப்படியிருந்தும் அமிர்தலிங்கம் தலைமைத்துவம் கொடுத்திருந்த அவ்வாக்குறுதிக்கு காலால் உதைத்து விட்டு 1977 டிசம்பரில் வர்த்தக அமைச்சர் லலித் அத்துலத் முதலி பங்குகொண்டதும் யாழ்ப்பாணக் கச்சேரியில் இடம்பெற்றதுமான ஒரு வைபவத்தில் கலந்துகொண்டார். தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அன்று ஆற்றிய உரையில்: "தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை நீதியாகவும் நியாயமாகவும் தீர்த்து வைப்பதாக பிரதமர் ஜே.ஆர். ஜயவர்தன எமக்கு வாக்குறுதியளித்துள்ளார். அதற்கு அவருக்கு நியாயமான அவகாசம் வழங்க வேண்டும்" என குறிப்பிட்டார். ஜயவர்தனவைப் போலவே சுதந்திரம் என்பதற்கு பின்னே 30 ஆண்டுகளில் முழு முதலாளித்துவ ஆட்சிக் காலத்தில் நீதியையும் நியாயத்தையும் அளவீடு செய்வதற்கு ஒருவருக்கு அனுபவம் இருந்தாலும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் முதலாளி வர்க்கத்தினால் அதனடிப்படையில் நின்றுகொள்வது பெரும் கஸ்டமாக இருந்தது. அது ஏகாதிபத்தியச் சார்பு சகல முதலாளித்துவப் பகுதியினரதும் தன்மையை விளக்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு வழங்கிய "நியாயமான கால அவகாசம்" சிங்கள தமிழ் தேசிய இனங்கள் இரண்டினதும் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களின் மீது காட்டுமிராண்டி ஒடுக்குமுறையை திணிக்க வழங்கிய அவகாசமாக நீரூபிக்கப்படுவதற்கு அதிக காலம் செல்லவில்லை.


தமிழர் விடுலைக் கூட்டணியினர் ஜயவர்தன ஆட்சிக்கு முண்டுகொடுக்கத் தள்ளப்பட்டது. இது அவர்களுக்கு கிடைத்த சலுகைகளின் பேரில் செலுத்தும் ஒரு கப்பத்தை விட அதற்கான காரணி அச்சமயத்தில் யாழ்ப்பாணப் பிராந்தியத்திலும் முதலாளி வர்க்கத்திற்கு எதிராக போராட்டங்கள் தோன்றத் தொடங்கியமையேயாகும். இந்தப் போராட்டங்களில் இன்னமும் உடைந்து போகாது இருந்து வந்த சிங்கள-தமிழ் தொழிலாளர் வர்க்க ஐக்கியம் வெளிப்பாடாகியது. இது ஆளும் வர்க்க பிரதிநிதிகள் என்ற முறையில், ஜயவர்தனவைப் போலவே அமிர்தலிங்கத்தினது நடுக்கத்தையும் வளர்ச்சிகாண வைத்தது.


இத்தகைய ஒரு போராட்டமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாக சிங்கள-தமிழ் மாணவர்கள் ஒன்றிணைந்து தொடுத்த விரிவுரை பகிஷ்கரிப்பு விளங்கியது. யாழ்ப்பாண வளாக மாணவர்கள் முகம் கொடுத்த பிரமாண்டமான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்க 1977 செப்டெம்பர் 14ம் திகதி கல்வி அமைச்சர் அதன் செனட் சபைக்கு வருவதாக வழங்கயிருந்த வாக்குறுதியை மீறியதையிட்டு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிடுவதன் மூலம் போராட்டம் ஆரம்பமாகியது. அந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தின் பேரில் இடம்பெற்ற கூட்டங்களில் கொழும்பு வித்தியோதய பல்கலைக்கழங்களின் மாணவர் சங்க தலைவர்களும் உரை நிகழ்த்தினர்.


அந்த விதத்தில் பார்த்தால் மாணவர் எதிர்ப்புப் பிரச்சாரங்கள் ஏற்படுத்தக்கூடிய சமூக அரசியல் தாக்கங்கள் பிரமாண்டமானதாக இல்லாத போதிலும் பெருமளவு மாணவர் போராட்டங்கள் வளர்ச்சி கண்டுவந்த தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களுக்கான ஒரு முன் அறிகுறியாக விளங்கியது. வளர்ச்சி கண்டுவந்த வர்க்கப் போராட்டங்கள் தொடர்பாக தலைதூக்கி வந்த பீதி, யூ.என்.பி. யின் சர்வாதிகார திட்டங்களைச் சூழ சிங்கள தமிழ் முதலாளிகள் மீண்டும் அணிதிரளுவதற்கான காரணியாகியது.


முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் இந்த சார்பினை விரிவாக விளக்கி தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயக வாழ்க்கை உரிமைகளை காக்கும் பொருட்டான வேலைத்திட்டத்தை முன்வைத்தது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமேயாகும்.


நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஸ்தாபிதம் செய்யும் அரசியல் அமைப்பு சட்ட வரைவு வேலைகள் ஆரம்பித்ததுதான் தாமதம் ஒரு அறிக்கையை வெளியிட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதில் பின்வருமாறு குறிப்பிட்டது:


"ஜே.ஆர். ஜயவர்தன அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பொனபாட்டிச சர்வாதிகாரியாகத் தோன்றி தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக உள்நாட்டு யுத்தத்தினை தொடுக்கும் நிச அதிகாரத்தை தனது கைக்குள் போட்டுக்கொள்ள முயல்கிறார். அத்தகைய சர்வாதிகார அதிகாரங்களை தீட்டிக்கொள்ளாமல் ஏகாதிபத்திய நிபந்தனைகளின் கீழ் வரும் பொருளாதார பேரழிவுகளை பொதுமக்களின் தலையில் கட்டியடிக்க முடியாது என்பதை யூ.என்.பி. காரர்கள் அறிவர்.


"இங்கு தொழிலாளர் வர்க்கமும் விவசாயிகள், இளைஞர்கள், வீட்டுப்பெண்கள் உட்பட சகல ஒடுக்கப்படும் மக்களும் தமது முழு வளத்தையும் கொண்டு இந்த முயற்சியை தோற்கடிக்க இப்போது போராட வேண்டும்.


"முதலாளித்துவ ஜனநாயகம் பற்றி கொண்டிருக்கும் அனுவளவிலான நம்பிக்கை கூட இக்கட்டத்தில் பேராபத்தான விளைவுகளைக் கொணரும். முதலாளித்துவ அமைப்பின் கீழ் அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழ் பெரிதும் சிறந்த ஜனநாயகத்தினை புத்தி சுயாதீனமற்றவர்கள் மட்டுமே எதிர்பார்க்க முடியும்.


"தொழிலாளர் வர்க்கத்தினதும் விவசாயிகளதும் இளைஞர்கள் வீட்டுப் பெண்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினதும் பிரதிநிதிகளைக் கொண்ட அரசியல் அமைப்பு நிர்ணய சபையை கூட்டும் போராட்டத்தின் முன்னணியில் இப்போது தொழிற்சங்கம் நிற்க வேண்டும். ஒடுக்குமுறை சட்டங்களை ஒழிக்கின்றதும் தமிழ் மொழி பேசும் மக்கள் பகுதியினரின் மொழி உரிமை உட்பட அடிப்படை உரிமைகளை ஸ்தாபிதம் செய்கின்றதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்கின்றதும், அந்தவிதத்தில் அடிப்படை உரிமைகளை ஸ்தாபிதம் செய்யும் அரசியல் அமைப்பினை தயார் செய்ய அத்தகைய ஒரு அரசியல் அமைப்பு நிர்ணய சபையினால் மட்டுமே முடியும்.


"சர்வாதிகாரத்திற்கு தயாராகும் யூ.என்.பி. அரசாங்கத்தை உடனடியாக வெளியேற்றவும் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொணரவும் போராடுவதன் மூலம் மட்டுமே இந்த இலக்கினை அடைய முடியும்.


"இது வார்த்தை ஜாலங்களுக்கு ஏமாந்து காலத்தை வீனடிப்பதற்கான காலகட்டம் அல்ல. புரட்சி தலைமையின் கீழ் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்கள் பகுதியினரையும் அணிதிரட்டி, முதலாளித்துவ சர்வாதிகாரத் திட்டங்களை தோற்கடிக்க உடனடி நடவடிக்கைகள் எடுப்பது இன்றுள்ள அவசரத் தேவையாகும்" (கம்கறுமாவத்தை ஆசிரியர் தலையங்கம் 1977 செப்டெம்பர் 06).


யூ.என்.பி. அரசாங்க ஜனாதிபதியின் அரசியலமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமானதும், "முதலாளித்துவ அமைப்பின் கீழ் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மிகவும் சிறந்த ஜனநாயகத்தினை புத்திசுவாதீனமற்றவர்களே எதிர்பார்க்க முடியும்," என புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்து ஒரு சில மாதங்கள் கழிவதற்குள் அது நிரூபிக்கப்பட்டது.


புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் 1978 செப்டம்பர் 7ம் திகதி பாராளுமன்றம் திறந்து வைக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி அதைப் பகிஷ்கரிக்க தீர்மானம் செய்தது. அரசியலமைப்பு மாற்றத்தின் நச்சுத்தன்மையை புரிந்து கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் அதற்கு எதிராகக் கிளர்ந்த பரந்த எதிர்ப்பின் தாக்கத்தின் கீழ் தமிழர் விடுதலைக் கூட்டணி எடுத்த இம்முடிவு இரண்டு வாரங்களே உயிர் நீடித்தது. செப்டம்பர் 21ம் திகதி அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சத்தியப்பிரமாணம் செய்து, பாராளுமன்ற ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர்.


இனவாதத்தைத் தூண்டி தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தவும் தமிழ் ஒடுக்கப்படும் மக்களை இரத்தக் களரியினுள் மூழ்கடிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் ஜே.ஆர். ஜயவர்தன இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமானையும் அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்ளத் தீர்மானம் செய்தார். சமசமாஜ-கம்யூனிஸ்ட் தலைவர்களின் மக்கள் முன்னணிவாத அரசியலின் துணையுடன் தோட்டத் தொழிலாளர்களின் தோளில் ஏறிக்கொண்ட தொண்டமான், தமிழர் ஐக்கிய முன்னணியின் ஆரம்பகாலத் தலைவராகவும் விளங்கியவர். ஆனால், சிங்கள இனவாத முதலாளி வர்க்கத்தினால் தமிழர் விரோத தாக்குதல்கள் உக்கிரமாக்கப்பட்ட நிலைமையில், தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து அகன்று கொண்ட தொண்டமான் அரசாங்கத்தின் பின்னால் அலைந்து அடிவருடும் விதிமுறையைக் கடைப்பிடித்தார். சிறப்பாக 1977ல் ஆட்சிக்கு வந்த யூ.என்.பி. அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் வேலைத்திட்டத்தின் ஒரு பாகமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிசாரையும் குண்டர்களையும் தூண்டி விட்டது. இந்நிலையில் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் சுயகோலத்தை காட்டும் வகையில் தொண்டமான் அரசாங்கத்தில் சேர்ந்துகொள்ள முடிவு செய்தார். 1978 செப்டம்பர் 6ம் திகதி அவர் ஒரு அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து, புதிய பாராளுமன்றத்தில் ஆசனம் பிடித்தார்.


உரிய விதத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அடிபணிவின் மூலம் யூ.என்.பி. அரசாங்கத்திடம் இருந்து கிடைத்தது நிவாரணங்கள் அல்ல. அதற்கு எதிரான விதத்தில் சிறகுகள் வெட்டும் நடவடிக்கையாகும். மாவட்ட அமைச்சர்களை நியமனம் செய்யும் முறையின் கீழ் ஜனாதிபதி ஜயவர்தன முன்னர் ஐந்து அமைச்சர் பதவிகளை வழங்க வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அக்டோபர் 5ம் திகதி இடம்பெற்ற நியமனங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மூன்று பதவிகள் மட்டுமே கிடைத்தன. தமிழர் விடுதலைக் கூட்டணி அதையும் நிராகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.


தமிழ் மக்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் எதிரான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேலும் உக்கிரமாக்கும் விதத்தில் ஜனாதிபதி ஜயவர்தன யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராக யூ.பீ. விஜேகோனை நியமனம் செய்தார். இந்த மாவட்ட அமைச்சரின் செயலாளராக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக இடைத் தேர்தலில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் துரைசாமியை நியமனம் செய்தார்.


தம்மீது திணிக்கப்படும் அடக்குமுறைகளின் சூடு புரியப் புரிய தமிழ் மக்களிடையே பதட்டம் வளர்ச்சி கண்டுவந்தது. இதனை வடக்கின் நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவத் தட்டினர் பெரிதும் வெளிக்காட்டிக் கொண்டனர். அவர்களிடையே இளைஞர்களும் மாணவர்களும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி ஊடாக தமது ஜனநாயக உரிமைகளை மட்டுமன்றி, தமது உயிர்களையும் கூட உத்தரவாதம் செய்துகொள்ள முடியாது என்ற கருத்து அவர்களிடையே பரந்துபட்டு வந்தது.


தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அமைப்பான தமிழ் இளைஞர் பேரவை அக்கட்சியில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்தது. அதில் பதவிகள் வகித்த சகலரும் இராஜினாமாச் செய்ய எடுத்த தீர்மானத்துக்கு இணங்க 40 பேர் ஒரேயடியாக இராஜினாமாச் செய்தனர்.


ஆனால், தீர்க்கமான பிரச்சினை என்ன? இந்த இளைஞர் பகுதியினரும் நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவ பகுதியினரும் என்ன முன்நோக்கினை அடிப்படையாகக் கொண்டிருந்தனர்? இந்தக் கேள்விக்கான பதிலை மார்க்சிஸ இயக்கம் மட்டுமே வழங்கியது.


19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் தோன்றிய ஜனநாயக இயக்கத்தினுள் நகர்ப்புற குட்டி முதலாளித்துவ பகுதியினரதும் விவசாயிகளதும் நடவடிக்கைகளை ட்ரொட்ஸ்கி மிகவும் புகழ்பூத்த முறையில் விளக்கினார்: அவர் அங்ஙனம் செய்தது அம்மக்கட் பகுதியினர் மீது வஞ்சம் தீர்ப்பதற்கு அல்ல, வளர்ச்சி கண்டுவந்த வரலாற்று நிலைமைகளின் கீழ் அவர்கள் சமூக ரீதியில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் நிலைமையை புரிந்துகொண்டு அவர்களுக்கு வழிகாட்டி, புரட்சிகரச் சக்தியான தொழிலாளர் வர்க்கத்தின் துணைப்படைப்பிரிவுகளாக அணிதிரட்டும் அவசியத்தினை வலியுறுத்துவதற்கேயாகும். நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் விவசாயிகளையும் ஒடுக்கப்படும் இனங்களையும் அணிதிரட்டி 1917ல் ரஷ்ய தொழிலாளர் வர்க்கம் அரச அதிகாரத்தினைத் தனது கைக்குள் எடுத்துக் கொள்ள முடிந்ததும், முதலாளித்துவ வர்க்கத்தினால் தீர்க்க முடியாது போன முதலாளித்துவ ஜனநாயக பாத்திரத்தினை சோசலிசப் புரட்சியின் ஒரு பாகமாக தீர்க்க முடிந்ததும் அந்த அடிப்படையில் வழிகாட்டியதன் மூலமே ஆகும்.


நீண்ட காலத்துக்கு முன்பே 1906ல் ட்ரொட்ஸ்கி சிறப்பாக ஜேர்மன் படிப்பினைகளைப் புரிந்து கொண்டு சுட்டிக்காட்டிய உரையின் ஒரு பாகம் வருமாறு:


"1848ல் முதலாளி வர்க்கத்துக்கு தொடர்பற்ற விதத்திலும் அதைக் கணக்கில் கொள்ளாது நிகழ்வுகளை பற்றி பொறுப்புச் சொல்லும் ஒரு வர்க்கம் அவசியமாகியது. தமது நெருக்குவாரத்தினால் முதலாளி வர்க்கத்தினை முன்னே தள்ளுவதற்கு மட்டும் அல்லாது தீர்க்கமான தருணத்தில் முதலாளி வர்க்கத்தின் அரசியல் பிணக்குவியல் பாதையில் இருந்து அதை வெளியே போடவும் தயாரான ஒரு வர்க்கம் அவசியப்பட்டது. நகர்ப்புற குட்டி முதலாளித்துவ வர்க்கமோ அல்லது விவசாயிகளோ அதைச் செய்வதில் வெற்றி பெறவில்லை.


"நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவம் நேற்றைய தினத்தை மட்டும் அல்லது நாளைய தினத்தையும் வெறுத்தது. இன்னமும் மத்திய கால உறவுகளில் மூழ்கிப் போயுள்ள அதே வேளையில் "சுதந்திர" கைத்தொழிலுக்கு எதிராக நின்று கொள்ள முடியாது போயுள்ள நிலையிலும் நகரங்களில் தனது அடையாளத்தை இட்டுக்கொள்வதில் வெற்றி கண்டாலும், மத்திய மற்றும் பெரும் முதலாளிகளின் முன்நிலையில் பின்னடைந்தது. பாரபட்சங்களில் தலைமூழ்கி, நிகழ்வுகளின் ஓசையில் செவிடாகிப் போன, சுரண்டப்படும் இன்னும் சுரண்டும் பேராசையினாலும் மற்றும் அந்தப் பேராசையினால் உதவியற்றுப் போன குட்டி முதலாளித்துவம், அன்று தோன்றிய பாரிய நிகழ்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் திக்கற்றுப் போயிருந்தது.


"விவசாயிகள் சுயாதீனமான அரசியல் ஆரம்பிப்பை அதைக் காட்டிலும் மோசமான முறையில் இழந்து இருந்தது. நூற்றாண்டுகளாக சிறைபட்டுக் கிடந்து வறுமையில் தலைமூழ்கிப் போயும் கோபத்தில் வெந்தும் பழையதும் அவ்வாறே புதியதுமான சுரண்டலின் அனைத்து அடிகளையும் தம்பக்கம் ஈர்த்துக் கொண்ட விவசாயிகள், ஏதேனும் ஒரு கட்டத்தில் புரட்சிகர பலத்தின் பிரமாண்டமான மூலமாக விளங்கினர். ஆனால் அணிதிரளாத, சிதறுண்டு போன, அரசியல் மற்றும் கலாச்சாரத்தின் உயிர்மையமான நகரத்தில் இருந்து தனிமைப்பட்டுவிட்ட, தத்தமது கிராமத்தின் தத்துவ அரங்குடன் அடைப்பட்டுப் போன மற்றும் நகரத்தில் இருந்த சிந்தனை அனைத்தையும் பற்றி அக்கறையற்ற விவசாயிகளுக்கு, தலைமைச் சக்தியாக வருவதற்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இருந்தது கிடையாது. நிலவுடமை சிறைகளின் சுமை தமது தோள்களில் இருந்து அகற்றப்பட்டதுதான் தாமதம் சாந்தமாகிவிடும் விவசாயிகள் தமது உரிமைகளின் பேரில் போராடிய நகரங்களுக்கு வறன்டு போன மகிழ்ச்சியுடன் நஷ்டஈடு வழங்கியது. சுதந்திரம் பெற்ற விவசாயிகள் ஆட்சியாளர்களின் வெறிபிடித்த பாதுகாப்பாளர்களாக மாறினர்." (லியோன் ட்ரொட்ஸ்கி நிரந்தரப் புரட்சி பெறுபேறுகளும் முன்நோக்கும் 188-189)


அன்று போலவே இன்றும் ஜனநாயக உரிமைகளைப் பற்றி வாய்ப்பிளக்கக் கூச்சலிடும் புத்திஜீவிகள் எனப்படுவோரின் இயலளவு பற்றியும் ட்ரொட்ஸ்கி சில வாக்கியங்கள் சேர்க்க மறக்கவில்லை. அவர்களைப் பற்றிக் கூறியது இதுதான்:


"புத்திஜீவி ஜனநாயகவாதிகளுக்கு வர்க்கப் பலம் இருக்கவில்லை. ஒரு தருணத்தில் இந்தக் குழு தமது மூத்த சகோதரியான லிபரல் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் வாலாக அதை பின்பற்றியது. மற்றொரு தீர்க்கமான சமயத்தில் லிபரல் முதலாளித்துவத்தைக் கைவிட்டு இவர்கள் தமது பலவீனங்களை வெளிக்காட்டிக் கொள்ள வழி வகுத்துக் கொண்டனர். தீர்க்கப்படாத பரஸ்பர முரண்பாடுகள் பற்றித் தாமே குழம்பிப் போய்க் கிடந்த இவர்கள் எல்லா இடங்களிலும் அந்தக் குழப்பங்களை பரப்பினர்."


ட்ரொட்ஸ்கி இங்ஙனம் விபரித்தது முதலாளித்துவ அமைப்பு இன்னமும் வளர்ச்சி கண்டு கொண்டிருந்த நிலைமையின் கீழ் புரட்சிகர சமூக சக்தியாக தொழிலாளர் வர்க்கம் எண்ணிக்கை ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் இன்னமும் பலம் கண்டிராத ஒரு காலப்பகுதியில் இருந்த நிலைமையையாகும். இருபதாம் நூற்றாண்டினைப் பற்றி பேசும் போது நாம் எண்ணிக்கை ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் சக்தி வாய்ந்த தொழிலாளர் வர்க்கம் துரோகத் தலைவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட காலப்பகுதிக்குத் திரும்புகின்றோம். இங்கு எமது கவனம் திரும்பும் 1970பதுகளின் இறுதிப் பாகம் அந்தத் துரோகத்தின் உதவியோடு உலகளாவிய ரீதியில் பிற்போக்கு முதலாளி வர்க்கம் தமது கரங்களை பலப்படுத்திக் கொள்ளும் காலப்பகுதிக்காகும்.


தமிழ் குட்டி முதலாளித்துவ அமைப்புக்கள்


தமிழ் ஒடுக்கப்படும் மக்களுக்கு சிறப்பாக அதன் இளைஞர் பகுதியினருக்கு தமது ஜனநாயக உரிமைகளை உத்தரவாதம் செய்வதற்கு எடுக்க வேண்டி இருந்த தொழிலாளர் வர்க்க புரட்சிகர பாதைகள் சமசமாஜ-ஸ்டாலினிச தலைமைகளால் இழுத்து மூடப்பட்டு இருந்தது. அது சிங்கள, தமிழ் தேசிய இனங்கள் இரண்டையும் சேர்ந்த இளைஞர் தலைமுறையினருக்கு இந்தக் கடைகெட்ட தலைமைகள் பெற்றுக் கொடுத்த பேரழிவாகும்.


தமது உரிமைகளை உத்தரவாதம் செய்வதற்கு இயலுமை கொண்ட சமூக சக்தியான தொழிலாளர் வர்க்கம், வர்க்க சமரச சங்கிலியால் பிணைத்துப் போடப்பட்டு இருக்கையில், வழியை தேடிக் கண்டுபிடிக்க முடியாது போன தமிழ் இளைஞர் குழுக்கள் தனிநபர் பயங்கரவாத வழிக்குத் திரும்பினர்.


இந்த வழியில் திரும்பிய பல தமிழ் இளைஞர் அமைப்புக்கள் ஒரு முன்நோக்குப் பாதையை தயார் செய்துகொள்ள குட்டி முதலாளித்துவ இளைஞர்கள் கொண்டிருந்த இயற்கையான இயலாமையை வெளிக்காட்டிக் கொண்டன. பல்வேறு குட்டி முதலாளித்துவ இளைஞர் குழுக்களிடையேயும் விடுதலைப் புலிகள் அமைப்பு தனது உறுதியான கட்டுப்பாடு, அஞ்சாத தியாகம் ஊடாக தனி மனித பயங்கரவாத நடவடிக்கைளில் முன்னணிக்கு வந்திருந்தது இக்கட்டத்திலேயேதான். ஆனால் யூ.என்.பி. அரசாங்கம் ஏகாதிபத்திய சக்திகளின் பக்கபலத்துடன் தயாரித்து வந்த திட்டங்களை தோற்கடிக்க மட்டுமன்றி, அவற்றை ஸ்தம்பிக்கச் செய்வதில் தன்னும் அந்தத் தனி மனித பயங்கரவாத நடவடிக்கைகள் வெற்றி பெறவில்லை.


தமது ஏகாதிபத்திய சார்பு "திறந்த பொருளாதார" வேலைத்திட்டத்தை நடைமுறைக்கிடுவதற்கான நிலைமைகளைத் தாயாரிக்கும் பொருட்டு தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தவும் ஒடுக்கப்படும் மக்களை ஆளுக்காள் மோதிக் கொள்ள வைக்கவும் யூ.என்.பி. அரசாங்கம் தொடுத்த தமிழர் விரோத இனவாதத்தை பாய்ந்து வளர்ச்சி பெறச் செய்வது தமிழ்க் குட்டி முதலாளித்துவக் குழுக்களின் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக வேகமாக முன்னேற்றம் கண்டது.


1978 ஏப்பிரல் 7ம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பினர் பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட நால்வரைக் கொலை செய்ததைத் தொடர்ந்து யூ.என்.பி. அரசாங்கத்தில் சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணி பொத்துவில் எம்.பி. கனகரத்தினத்தை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் படுகொலை செய்ய அது முயற்சித்தது. யூ.என்.பி. அன்று மரணத்தில் இருந்து தப்பிய போதிலும் யூ.என்.பி அரசாங்கம் அந்த முயற்சியை பாவித்து, தமிழ் மக்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் எதிரான ஒடுக்குமுறையை உக்கிரமாக்குவது தவிர்க்கப்பட்டு விடவில்லை.


இதற்கு அவசியமான நச்சுப் பிரச்சாரத்தினை ஆரம்பிக்கும் பொருட்டு யூ.என்.பி. அரசாங்கம் முக்கிய பேர்வழியாக சமரவீர வீரவன்னியைக் கையாண்டது. கனகரத்தினத்தை கொலை செய்யும் முயற்சி, அமிர்தலிங்கம் அவரை இனத்துரோகி எனக் குறிப்பிட்டதைத் தொடர்ந்தே இடம்பெற்றதாக அவர் பாராளுமன்றத்தில் மே 21ம் திகதி குறிப்பிட்டார். ஏகாதிபத்திய கைக்கூலியாக இலங்கையில் ஆட்சி நடத்தி வந்த யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் "தேசத் துரோகம்" பற்றி வாய்திறந்தது வன்மத்துக்கு அறிகுறியாகும். வீரவன்னியின் முயற்சி, தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு தொடர் வன்முறைகளை தூண்டிவிடுவதேயாகும்.


இந்த வீரவன்னிதான் இன்று பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் பிரதித் திட்டமிடல் அமைச்சர். அவரை இடுப்பில் வைத்துக் கொண்டு ஆடும் பொதுஜன முன்னணி அரசாங்கம் தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளைக் காக்கப் போவதாகக் கூச்சலிட்டுக் கொண்டு, அதிகாரப் பரவலாக்கம் பற்றிக் கூப்பாடு போடுகின்றது. அது புதுமையானதாகும். அதைக்காட்டிலும் கடைகெட்ட அலம்பலில் ஈடுபட்டிருப்பது ஜே.வி.பி. யாகும். இனவாதத் தமிழர் எதிர்ப்பு யுத்தத்தினை புதிய மட்டத்திற்கு உயர்த்திய யூ.என்.பி.யின் சகாக்களுடன் ஒன்றாக உறங்கும் பொதுஜன முன்னணி அரசாங்கம் "ஈழம்" வழங்க ஆயத்தமாகி வருவதாக அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். அதன் முதல் நடவடிக்கையே அரசியல் தீர்வுப் "பொதி" என்கிறார்கள். இனவாத யுத்தத்தினதும் பொதுமக்கள் ஒடுக்குமுறையினதும் சுக்கானை பாசிச முறையில் தனது கைக்குள் கொணரத் துடிக்கும் ஜே.வி.பி., மக்களை குழப்பியடிக்கும் பொருட்டு முன்வைக்கும் குத்துக்கரணப் பேச்சுக்கள் அத்தகையதாக உள்ளது. அவற்றினால் ஏமாந்து போவது, அமைப்பு ரீதியில் சிறியதாக இல்லாது போயினும் அரசியல் அறிவு குறைந்தவர்களும் புத்தி சுவாதீனமற்றவர்களும் மட்டுமேயாகும்.


தனி மனித பயங்கரவாத விதிமுறையை அரவணைத்துக் கொண்ட தமிழ்க் குட்டி முதலாளித்துவ அமைப்புக்களின் தடுமாற்றங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் வங்குரோத்தினையும் பயன்படுத்திக் கொண்ட யூ.என்.பி., தமிழ் மக்களுக்கு எதிரான வெறிக்குத் தூபம் போட வீரவன்னியின் பின்னால் மாபெரும் இனவாதியும் காட்டுமிராண்டி சாதிவாதியுமான சிறில் மத்தியூவை முன்னணிக்குத் தள்ளியது.


சிறில் மத்தியூ, 1972ல் முதலாளித்துவ சி.ல.சு.க.-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தினால் தயார் செய்யப்பட்டு, 1983ல் யூ.என்.பி. அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட தமிழர் விரோத இனவாத யுத்தத்திற்கான வேட்டைத் தீர்த்தார்.


சிறில் மத்தியூவின் இனவாதப் பிரச்சாரம் பற்றி தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் ஜனாதிபதி ஜயவர்தனவுக்கு முறைப்பாடு செய்யும் சந்தர்ப்பத்தையும் அதற்கு ஜயவர்தனவின் பிரதிபலிப்புக்களையும் பற்றி பத்திரிகையாளர் டி. சபாரத்தினம் வெளியிட்ட ஜிலீமீ விuக்ஷீபீமீக்ஷீ ஷீயீ ணீ விஷீபீமீக்ஷீணீtமீ (ஒரு மிதவாதியின் கொலை) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது வருமாறு:


"அரசாங்க அமைச்சர் ஒருவர் எம்மைத் தாக்கும் போது நாம் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது எப்படி" என அமிர்தலிங்கம் ஆட்சேபனைத் தொனியில் ஜயவர்தனவிடம் குறிப்பிட்டார்.


"ஜயவர்தன சிரித்தபடி இதற்கு பதில் அளித்தார். அவரைப் பற்றி குழப்பம் அடைய வேண்டாம். உங்களது கட்சியுடன் நாம் கொண்டுள்ள நெருக்கமான தொடர்புகள் பற்றி சிங்களத் தீவிரவாதிகள் இடையே சில வெறுப்புக்கள் உள்ளன. மத்தியூவின் பணி அவர்களை மகிழ்விப்பதே."


இந்தச் சம்பவத்தை டி. சபாரத்தினத்திடம் குறிப்பிட்ட அமிர்தலிங்கம், "இந்த நரிகள் தொழிற்படும் விதத்தைப் பாருங்கள்" எனவும் குறிப்பிட்டதாகவும் இந்நூலாசிரியர் கூறுகின்றார்.


திட்டமிட்டு இனவாதத்தைக் கட்டவிழ்த்துவிட சபதம் செய்திருந்த ஜே.ஆர். ஜயவர்தன இச்சந்தர்ப்பத்தில் செயற்பட்டுவந்தது நரியைப் போல் அல்ல, இரத்த வெறி கொண்ட மிருகம் போலாகும். இதற்கு முரண்பட்ட விதத்தில் ஒடுக்கப்படும் மக்களின் தோளின் மீது ஏறிக்கொண்டிருந்த முதலாளித்துவ தமிழர் விடுதலைக் கூட்டணி, கோழைத்தனமான நரியின் பாத்திரத்தை வகித்துக் கொண்டிருந்தது.


கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர) பரீட்சை விடைத் தாள்களைத் திருத்திய தமிழ் பரீட்சையாளர்கள் தமிழ் மாணவர்களுக்கு கூடிய புள்ளிகளை வழங்கியுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சிறில் மத்தியூ கிளர்ச்சியைத் தொடங்கினார். விசேட பத்திரிகையாளர் மகாநாட்டைக் கூட்டிய சிறில் மத்தியூ, உயிரியல் கேள்வித் தாள்கள் இரண்டெனக் காட்டி, நுளம்பின் வாழ்க்கைச் சுற்றோட்டம் பற்றிய கேள்விக்கு இரண்டு புள்ளிகள் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மிரட்டினார். நுளம்பின் வாழ்க்கைய விட மேலதிகப் பெறுமதி எதுவுமே கிடையாத இப்பிரச்சினை எழுப்பப்பட்டதற்குக் காரணம், மலேரியாக் காய்ச்சல் போன்று இனவாதத்தினையும் பரப்புவதேயாகும்.


ஆனால் வங்குரோத்தடைந்த முதலாளித்துவ தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் சிவசிதம்பரத்தினால், 1978 டிசம்பர் 11ம் திகதி பாராளுமன்றத்தில் இந்த வெட்கக் கேடான அறிக்கைக்கு வழங்க முடிந்த பதில் "எமக்கு எதையும் சகித்துக்கொள்ள முடியும். ஆனால் குள்ளத்தனமான குற்றச்சாட்டுக்களை சகிக்க முடியாது" என்பது மட்டுமே. சிங்கள இனவாதத்தை தூண்டி தமிழ் மக்களுக்கு எதிரான மக்கள் படுகொலைகளுக்கு தயாராகி வந்த யூ.என்.பி. அரசாங்கத்தை எதிர்கொள்கையில், தமக்கு இருந்து வந்த முதலாளித்துவ பலவீனத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி நல்லொழுக்க ஆடையால் இழுத்துப் போர்த்திக்கொள்ள முயன்றது.


இத்தகைய வங்குரோத்து வேண்டுகோள்களுக்கு பதிலளிக்கும் பொருட்டு, முதலாளி வர்க்கம் பிரித்தானிய ஏகாதிபத்திய காலத்தில் இருந்தே தயார் நிலையில் வைத்திருந்து, பால் வார்த்து மீண்டும் மீண்டும் சாயம் தீட்டி வைத்திருந்த பிக்குமார் பரம்பரையையேயாகும்.


தாம் குறைந்தபட்சம் மூன்று மகா சங்கத்தினராக பிளவுபட்டுக் கிடப்பது ஏன் என்பதை பற்றி எந்த ஒரு நிஜமான விளக்கத்தையும் வழங்க இலாயக்கற்று உள்ள மூன்று மகா சங்கத்தினரும், முன்னணியில் பாய்ந்து நாட்டைப் பிளப்பதை எதிர்ப்பதாக கூச்சல் போடத் தொடங்கினார்கள். சாதிவாதத்துக்கு இணங்க பிளவுண்டு போய் தத்தமது உண்டியல்களை வெவ்வேறாக நடத்திவரும் மகா சங்கத்தினரின் கூட்டைக் காட்டிக் கொண்ட ஐக்கிய பௌத்த சபை எனப்படுவதும், தமிழர் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு காவி உடையை வரிந்து கட்டிக்கொண்டு பாய்ந்து விழுந்தது. அந்தக் கூட்டத்தில் அஸ்கிரிய பௌத்த பீடத்தின் தலைமைப் பிக்குவான பலிபானே சந்தானந்தவும் மல்வத்த பௌத்த பீடத்தின் தலைவர் றம்புக்வெல்ல சிறீ சோபித்தவும் கலந்து கொண்டனர். மிருகங்கள் சம்பந்தமாக கொல்லாமையை போதிக்கும் தர்மம், பிற்போக்கு ஆளும் வர்க்கத்தின் அவசியங்களுக்கு இணங்க மனிதர்கள் சம்பந்தமாக இம்சையின் தோற்றுவாயாக இருக்கும் விதத்தை இந்த அபிவிருத்திகள் வெளிப்படுத்தின.


இந்த விஷப் பாம்பை பாவித்துக் கொண்டு இனவாத வாகனத்தின் சுக்கானைப் பிடித்துக் கொண்டிருந்த ஜே.ஆர். ஜயவர்தன, 1979ன் முடிவுக்கு முன்னர் வடக்கு பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவதாக வாயடித்தக் கொண்டு பிரிகேடியர் வீரதுங்கவை வடக்கின் தளபதியாக நியமித்தார். பிரகேடியர் வீரதுங்கவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் கட்டளையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டது:


"தீவிலும் சிறப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலும் சகல வடிவங்களையும் கொண்ட பயங்கரவாத தொற்றுநோயை ஒழித்துக் கட்டுவது உங்களது கடமையாகும். நான் உங்கள் சேவைக்காக அரசின் அனைத்து வளங்களையும் வழங்குகின்றேன். சட்டங்களை மதிக்கும் அனைத்துப் பிரஜைகளையும் உங்களுக்கு அவர்களின் ஒத்துழைப்பை வழங்கும்படி நான் வேண்டுகிறேன். இந்தப் பாத்திரத்தை இட்டு நிரப்பும் நீங்கள் அதை 1979 டிசம்பர் 31க்கு முன்பு நிறைவு செய்ய வேண்டும்." வார்த்தைகள் கண்டிப்பானவை. கட்டளைத் தோரணை இறுக்கமானது. இலக்கோ நிச்சயமானது. ஆனால், அவை எல்லாம் புஷ் வாணமாகின.


தமிழ் மக்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் பொருட்டு பிரிகேடியர் வீரதுங்கவின் இராணுவ நிர்வாகத்தின் கீழ் யாழ்பாண மாவட்டத்தைக் கொணர்த்த ஜயவர்த்தன அரசாங்கம், நாட்டு மக்கள் சகலரையும் வேட்டையாடும் பொருட்டு 1979 ஜூலை 19ம் திகதி "பயங்கரவாத தடைச் சட்டத்தை" பாராளுமன்றத்திற்கு கொணர்ந்தது. அன்றைய தினமே சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி முதலான முதலாளித்துவக் கட்சிகளுக்குக் கடிதம் வரைந்த ஜனாதிபதி ஜயவர்தன, "தமிழ் மக்களின் குறைகளை ஆராய ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க" ஆதரவு கோரினார்.


ஜயவர்த்தனவின் மோசடி யோசனையை சி.ல.சு.க. மௌனத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அங்கீகரித்த அதே வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விருப்பம் தொரிவித்தது.


இதே வேளையில் யூ.என்.பி. அரசாங்கத்தின் மிலேச்ச நோக்கங்களை மூடிமறைக்கும் பொருட்டு பிரதமர் பிரேமதாசவுடன் சேர்ந்து கூட்டறிக்கை விடவும் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வந்தது. பிரேமதாசவினதும் அமிர்தலிங்கத்தினதும் கையப்பங்களைக் கொண்ட இந்த கூட்டறிக்கை, பின்வரும் வாக்கியத்துடன் நிறைவுபெறுகிறது: ''நாகரீகமான மக்கள் என்ற முறையில் நாம் எமது பொதுப் பிரச்சினைகளை சமாதானமான முறையில் தீர்த்துக் கொள்ளவும் எமது மாபெரும் மதங்களின் பாரம்பரியங்களுக்கு இணங்கவும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் வெளியுலகுக்கு காட்டவும் சக்தி உள்ளது.''


இதில் இருந்து ஒரு சில நாட்களுக்குள் 1979 ஜூலை 29 ம் திகதி நச்சுத்தனமான 31 சரத்துக்களை கொண்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை யூ.என்.பி. அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொண்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி செய்தது என்ன? கோழைத்தனமான முறையில் பாராளுமன்றத்தை தவிர்த்துக்கொண்டதே தவிர அதற்கு எதிர்ப்புக் காட்ட முன்வரவில்லை.


தமிழ் மக்களின் பரந்த தரப்பினரின் கடும் எதிர்ப்பு இருந்து வந்த ஒரு நிலையிலும், தமிழர் விடுதலைக் கூட்டணி, யூ.என்.பி. அரசாங்கத்தின் ஒடுக்குமுறை வேலைத்திட்டங்களுடன் ஒத்துழைத்தமை தற்செயலானது அல்ல. தமிழ் முதலாளிகளின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் பொது மக்கள் மீது திணிக்கப்பட்ட கொலைத் தாக்குதலைப் பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. சிங்கள-தமிழ் தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்து முதலாளி வர்க்க ஆட்சிக்கு அச்சமயத்தில் தொடுக்கப்பட்ட அச்சுறுத்தலையே அது கவனத்தில் கொண்டது. பயன்பாட்டில் உள்ள மொழிகளில் வேறுபாட்டைப் பொருட்படுத்தாமல் முதலாளித்துவ ஆட்சியைக் கட்டிக் காக்க அரசாங்கத்தின் உதவிக்கு தாம் அழைக்கப்பட்டுள்ளதையும், அதை இட்டு நிரப்புவது தமது வர்க்கக் கடமை எனவும் அவர்கள் புரிந்து கொண்டிருந்தனர். இத்தருணத்தில் யூ.என்.பி. அரசாங்கம் அரச பயங்கரவாதத்தை பாவித்து கொடூரமான முறையில் நசுக்கி வந்த தமிழ் மக்களின் ஒரு சில ஜனநாயக உரிமைகளையும் வென்றெடுத்ததும் பேணிக் காத்ததும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தின் சக்தி மூலமே, என்பதை கவனத்தில்கொள்ள இடமளிக்க மறுத்தது அந்தக் கட்சியின் முதலாளித்துவ பண்பேயாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இன்றைய எஞ்சியுள்ள தலைவர்கள் பொதுஜன முன்னணி அரசாங்கத்துடன் சேர்ந்து நடாத்திவரும் மோசடி கொடுக்கல் வாங்கல்களின் பிற்போக்கு விளைவுகள் என்பதை புரிந்து கொள்ளாத குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள், இந்த வரலாற்று படிப்பினைகளை அறிந்தவர்களோ அல்லது அதில் கற்றுக்கொண்டவர்களோ அல்ல என்பது தெளிவு. அது முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே தொழிலாளர் வர்க்கத்தைப் பற்றியும் பெரும் துயரத்துள் தள்ளப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் அவர்களுக்கும் எந்தவொரு நேர்மையான அக்கறையும் இல்லாமையினால் தோன்றிய நிலைமையாகும்.


யூ.என்.பி. அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நடைமுறைப்படுத்திய ''திறந்த பொருளாதார'' கொள்கைகளின் கீழ் வாழ்க்கை நிலமைகளை தவிடு பொடியாக்குவதில் இறங்கியது. இதற்கு முகங்கொடுத்த பெருந்தோட்டக் கைத்தொழில் தொழிலாளர்களும் ஏனைய தொழிலாளர்களும் 1979 நடுப்பகுதியில் இருந்து போராடும் அவசியத்தைக் கொண்டிருந்தனர். முதலாளித்துவ சி.ல.சு.க. மட்டுமன்றி சமசமாஜ-ஸ்டாலினிச கம்யூனிஸ்ட்-நவசமசமாஜக் கட்சிகளும் மற்றும் இ.தொ.கா. போன்ற பலவித தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் தொழிலாளர் வர்க்கத்தின் அவசியங்களுக்கு புறமுதுகு காட்டி அணிதிரண்டு இருந்தது, தகர்க்க முடியாத சக்தி என அவர்கள் கருதிக்கொண்டிருந்த யூ.என்.பி. அரசாங்கத்துடனாகும். 1976ல் கூட்டரசாங்க அரசியலுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த தொழிலாளர்களிடம் இருந்து முதலாளி வர்க்க ஆட்சிக்கு எதிராகத் தோன்றக்கூடிய அச்சுறுத்தலைப் பற்றி அவர்கள் கணக்கு போட்டனர். அதனால் இனவாதப் பிளவுகளைப் போலவே ஒடுக்கு முறை ஆயுதத்தையும் தூக்கிக்கொண்டு வேலையில் இறங்கிய யூ.என்.பி. அரசாங்கம், தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் இருந்து வந்த துரோகத் தலைவர்களிலேயே தங்கி இருந்தது.


1980 ஜூலை வேலை நிறுத்தம்


ஆயினும் வர்க்கப் போராட்டத்தின் புறநிலை விதிகள், அதிகாரத்துவத்தின் ஆளுமையைக் காட்டிலும் பலம் வாய்ந்தது என லியன் ட்ரொட்ஸ்கி சுட்டிக் காட்டியதை மீண்டும் வலியுறுத்தும் விதத்தில், அதிகாரத்துவங்களின் கால் விலங்குகளை உடைத்துக்கொண்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டம் 1980 ஜூலையில் அரைகுறை பொது வேலைநிறுத்தமாக வெடித்து.


பயங்கரவாத தடைச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் மிலேச்சத்தனமாக தமது ஒடுக்கு முறை ஆயுதங்களை தரித்துக்கொண்டு வந்த அரசாங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களின் மத்தியில் தலைதூக்கும் வகையில் அவசரகாலச் சட்டத்தை 1979 டிசம்பரில் காலாவதியாகிப் போக இடமளித்தது. எனினும் அந்த தமிழ் முதலாளித்துவக் கட்சியின் எதிர்ப்பு இல்லாமலேயே தொழிலாளர் போராட்டத்துக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்கவும் அமுல் செய்யவும் யூ.என்.பி. அரசாங்கத்துக்கு 1980 ஜூலையில் வாய்ப்பு கிடைத்தது.


ஒரு சாராரின் பொது வேலை நிறுத்தத்தின் மத்தியில், தொழிலாளர் அமைப்புக்களான தொழிற்சங்க அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தொழிலாளர் போராளிகள் கைது செய்யப்பட்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் அவசரகால சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவை பிரகடனம் செய்யப்பட்டு, தொழில்களில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.


இன்நாட்டின் வர்க்கப் போராட்ட வரலாறு பூராவும், 1980ல் போன்று இவ்வளவு மோசமான தோல்வியை தொழிலாளர்கள் இதுவரை காலமும் சந்தித்தது கிடையாது. 1977ல் யூ.என்.பி. ஆட்சிக்கு வந்ததைப் போலவே இந்தப் போராட்டத்தின் தோல்வி சம்பந்தமாகவும் முக்கிய பொறுப்பு, கூட்டரசாங்க அரசியலின் துரோகத்துக்கே செல்கிறது. தொழிலாளர் வர்க்கம் போராட்டத்துக்கு அவசியமான முன்னோக்கினாலும் தலைமையினாலும் ஆயுதபாணியாக்கப்படாமல் இருந்ததோடு மட்டும் அல்லாது அது சமசமாஜ-ஸ்டாலினிச கம்யூனிஸ்ட்-நவசமசமாஜ கட்சிகளாலும் இ.தொ.கா போன்ற தொழிற்சங்க அதிகாரத்துவங்களினாலும் விதைக்கப்பட்ட அரசியல் குழப்ப நிலைகளினுள்ளும் மூழ்கி இருந்தது.


1970-77 கூட்டரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, யூ.என்.பி. ஆட்சிக்காலத்தில் உக்கிரமாக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்ப்பு இனவாதம் அந்த அரசியல் குழப்பத்தின் முக்கிய ஊற்றுவாய் ஆகியது. தமிழ் மக்களின் ஜனநாக உரிமைகளை கட்டிக்காக்கும் பொருட்டு கிளர்ந்து எழுந்து இராத வரையில் தொழிலாளர்களின் போராட்ட பலமும் பலவீனம் அடைந்தது. பாட்டாளி வர்க்கம், பின்தங்கிய நாடுகளில் தீர்க்கப்படாத ஜனநாயக பணிகளை தீர்க்கும் கடமையை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு வெகுஜனங்களின் தலைவனாக எழுச்சிபெறுவதைத் தவிர, தொழிலாளர்களுக்கு தமது கோரிக்கைகளை வெற்றிகொள்வதற்கான வாய்ப்பு இந்த யுகத்தில் கிடையாது. தொழிலாளர் வர்க்கத்தினால் வழங்கப்பட வேண்டிய தலைமையில் இருந்து தனிமைப்படுத்தப்படும் குட்டிமுதலாளித்துவ ஒடுக்கப்படும் மக்கள் குழுக்களின் ஆதரவு, தொழிலாளர் வர்க்கத்துக்கு அதனது போராட்டத்தின் போது இல்லாமல் போவது மட்டும் அல்லாது, இந்த மக்கள் குழுக்கள் பல்வேறு முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ தலைமைகளின் கீழ் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்துக்கு எதிராக ஈடுபடுத்தப்படவும் அதன் மூலம் வழிபிறக்கிறது. 1980 ஜூலை வேலை நிறுத்தத்தில் அப்பட்டமான கருங்காலி வேலையில் யூ.என்.பி.க்கு ஜே.வி.பி.ஆற்றிய பாத்திரம் இதை நன்கு தெளிவு படுத்தியது.


தொழிலாளர் வர்க்கத்துக்கு அவசியமான இந்தப் புரட்சிகர முன்னோக்கு, நிரந்தரப்புரட்சிக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டதும் நான்காம் அகிலத்தால் அதன் பகுதிகள் ஊடாக முன்வைக்கப்படுவதாகும். இந்தப் பணிக்கு அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே தோள் கொடுத்தது. அதனால் தயார் செய்யப்பட்ட வேலைத்திட்டம் விவசாயிகளதும் இளைஞர்களதும் பிரச்சனைகளுக்கும் அவ்வாறே தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கும் தொழிலாளர் வர்க்கத் தீர்வை முன்வைத்தது.


கடைகெட்ட தலைவர்களினால் பலவீனமாக்கப்பட்டு, குழப்பியடிக்கப்பட்டுக் கிடந்த போதிலும் பொதுமக்களுக்கு ஒரு மாற்று புரட்சிகர வேலைத்திட்டத்தின் பேரில் இருந்து வந்த பாரிய அவசியத்தினை புரிந்து கொண்டு போராடிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், 1980 களுக்கு முற்பட்ட காலத்தில் தொழிலாளர் வர்க்கத்திடையேயும் அவ்வாறே ஒடுக்கப்படும் கிராமப்புற மக்களிடையேயும் ஈர்க்கப்பட்டு வந்தது. சிங்களம் பேசும் கிராமப்புற மக்களை வெற்றிகொள்ள வேண்டுமானால் அவர்கள் கொண்டுள்ள அவலங்களுக்கு இயைந்து போவதன் மூலமும், அதன் தர்க்கரீதியான பெறுபேறாக அவர்களிடையே ஆளுமை கொண்டுள்ள முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டுச் சேருவதானதும் அவசியத்தினை வலியுறுத்திய சகல துரோகிகளுக்கும் எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தனது அனைத்துலகவாத சோசலிச விதிமுறைக்காகப் போராடியது. முதலாளித்துவ ஆட்சி முறையுடன் எதுவிதமான சமரசமும் அற்ற நிலைப்பாட்டில் நின்று தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க அது நடத்திய போராட்டத்தின்பால் நனவான தொழிலாளர்களைப் போலவே கிராமப்புற ஏழைகளையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கு இருந்து வந்த ஒரே தடை முதலாளித்துவக் கட்சிகளுடன் சமரசத்துக்குச் செல்லும் அரசியல் கட்சிகள் மட்டுமேயாகும். ஆனால், இந்த வர்க்க சமரச கட்சிகளின் பிற்போக்கு அரசியல் பிடி பொது மக்களிடையே முற்றும் துடைத்துக்கட்டப்பட்டு இருந்தது. இந்த நிலமைகளின் கீழ் துரோகத் தலைவர்கள் முதலாளித்துவ அரச இயந்திரத்துடன் இணைந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகப் போராட்டத்தைத் தாக்க செயற்பட்டனர். நவ சமசமாஜக் கட்சி அனுராதபுர மாவட்டத்தின் தம்புத்தேகமைப் பொலிசாருடன் சேர்ந்து ஆற்றியது சரியாக அத்தகைய ஒரு பாத்திரமேயாகும்.


முன்னைய பந்தியில் நாம் விளக்கிய அனைத்து அரசியல் விடயங்களும் தப்புத்தேகமை பு.க.க. அமைப்பாளராக விளங்கிய தோழர் ஆர்.பி. பியதாசவை, யூ.என்.பி. பொலிசாரின் ஆதரவுடன் கைக்கூலி கொலையாட்களால் 1979 ஜூலை 17ம் திகதி கொலை செய்யப்பட்டதன் மூலம் உச்சக்கட்டத்தை அடைந்தது.


தோழர் ஆர்.பி. பியதாச விவசாய குடிகளின் இளைஞராக வாழ்ந்தவர். சிங்களப் பேரினவாதமானது விவசாயிகளை பழைய நிலமானித்துவ அமைப்பினுள் சிறை வைத்து முதலாளித்துவ ஆட்சியின் சேவகர்களாகவும் ஆக்கும் மரணப் பொறி, என புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் செய்த விளக்கத்தின் அடிப்படையில் அவர் போராடினார். சமசமாஜ தலைவர்களான என்.எம். பெரேராவும் கொல்வின் ஆர்.டி.சில்வாவும் தமது பங்காளியாகக் கருதிய ஜயவர்த்தனவுடன் ஹெலிகொப்டர்களில் ஏறி எப்பாவல மக்களுக்கு மகாவலி மகிமையை புரியவைக்க முயன்றுவந்த அதே வேளையில், ஆர்.பி. பியதாச உலக வங்கி முன்னின்று நடத்திய மகாவலி இயக்கத்தின் நீண்டகால அழிவுகளை மக்களுக்குப் புரியவைக்கப் போராடினார். விவசாயிகளின் விடுதலைக்கு அனைத்துலகவாதத்தின் அடிப்படையிலான சோசலிசத் தீர்வு தொழிலாளர் வர்க்கத் தலைமையின் கீழ் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த அரசியல் சவாலின் ஆபத்தை புரிந்து கொண்ட யூ.என்.பி. அரசாங்கம், நவசமசமாஜக் கட்சியின் அப்பட்டமான ஆதரவுடன் பொலிசாரைக் கொண்டு ஆர்.பி. பியதாசவை படுகொலை செய்தது. தோழர் ஆர்.பி. பியதாச பிரதிநிதித்துவம் செய்த ட்ரொட்ஸ்கிச அரசியல் விதிமுறையை நிராகரித்தவர்களும் அதை எதிர்த்தவர்களும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தை காட்டிக் கொடுப்பது இதன் மூலம் உறுதியாகியது. 1980 ஜூலை வேலை நிறுத்தத்தில் மிகவும் துன்பகரமான முறையில் நிருபிக்கப்பட்டது இந்த தீர்க்கமான உண்மையேயாகும்.


தமிழ் முதலாளித்துவ கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதவியும் அப்போது தோன்றி இருந்த தமிழ்க் குட்டி முதலாளித்துவ அமைப்புக்களின் புறக்கணிப்பும் ஜே.வி.பி.யின் கருங்காலித்தனத்துடன் துரோகத் தலைவர்கள் சுற்றிவளைத்துக் கொடுத்த உதவியுடனும் 1980 ஜூலையில் தொழிலாளர் போராட்டத்தை மிலேச்சத்தனமான முறையில் நசுக்கிய யூ.என்.பி. அரசாங்கம், தமது ஏகாதிபத்திய வேலைத்திட்டத்துக்கு இனிச் சுதந்திரமாக நாடுபுராவும் பரவ இடமளிக்க முடியும் எனத் தீர்மானம் செய்தது.


முற்றிலும் இளைஞர்களைக் கொண்ட தமிழ் குட்டி முதலாளித்துவ அமைப்புக்கள், தொழிலாளர் வர்க்கத்தின் தலைவிதியை கணக்கில் எடுக்காது விட்டாலும், தொழிலாளர்களுக்கு தோல்வியைப் பொற்றுக்கொடுக்க யூ.என்.பி.க்கு வசதியளித்ததன் பொறுபோறாக சிருஷ்டிக்கப்பட்ட விளைவுகளில் இருந்து விடுபட அவற்றுக்கு இடம் கிடைக்கவில்லை. நச்சுத்தனமான விளைவுகளுக்கு முகம் கொடுத்தது அந்த அமைப்புக்கள் மட்டுமன்றி முழுத் தமிழ் மக்களுமேயாகும்.


முக்கிய தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி 1980 ஜூலை வேலை நிறுத்தத்தை உடைத்ததையிட்டு யூ.என்.பி. அரசாங்கத்துக்கு தமது நன்றியை தெரிவித்தது 1980 ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த "மாவட்ட அபிவிருத்தி சபை மசோதாவுக்கு" பூரண ஆதரவு வழங்கியதன் மூலமாகும். திறந்த பொருளாதார கொள்கைக்கு பொருத்தமான விதத்தில் மாகாண ரீதியில் நலன்புரிச் சேவைகளை ஒழித்துக்கட்டும் இலக்குடன் யூ.என்.பி. அரசாங்கம் சமர்ப்பித்த ''மாவட்ட அபிவிருத்தி சபை'' எனப்படும் வேலைத்திட்டத்தை, ''நிர்வாகத்தை பரவலாக்கி அபிவிருத்தி திட்டத்தில் மக்களை இணைத்துக் கொள்ளும் ஒரு நடவடிக்கை'' என தமிழர் விடுதலைக் கூட்டணி அழைத்தது. இந்தக் கேவலமான மசோதாவை ''வரலாற்றுச் சட்ட அகராதி" என அழைத்த அமிர்தலிங்கம், அதை அமுல் செய்ய தமிழர் விடுதலைக் கூட்டணி உதவினால், தமிழ் மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்திக்கு ஆதரவு கிடைக்கும் என விபரித்தார்.


அமிர்தலிங்கத்தின் வார்த்தைகளை அவரே விழுங்கி ஏப்பமிடச் செய்த இந்த நச்சு வேலைத்திட்டத்தின் கசப்பினை அனுபவிப்பதற்கு தமிழ் மக்களுக்கு ஒரு வருடம் தன்னும் செல்லவில்லை.


மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான முதலாவது தேர்தல் 1981 ஜூன் 4ம் திகதி இடம்பெற இருந்தது. மாவட்ட அபிவிருத்திச் சபையை ஆதரிப்பதற்கும் அதன் தேர்தலில் போட்டியிடுவதற்கும் எதிராக, தமிழ் குட்டி முதலாளித்துவ இளைஞர் இயக்கத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான பிரச்சாரம் உச்சக் கட்டத்தை அடைந்து இருந்தது. 1981 மார்ச் 16ம் திகதி மூன்று தமிழ் இளைஞர் போராளிகள் மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். தர்மலிங்கத்தின் ஜீப் வண்டியை தாக்கினர். இச்சம்பவம் தர்மலிங்கம் மற்றும் இராஜலிங்கம் ஆகியோருடன் அமிர்தலிங்கம் வல்வெட்டித்துறையில் இராப்போசன விருந்தில் கலந்து கொண்டிருந்த வேளையில் இடம்பெற்றது. மற்றுமோர் சம்பவத்தில் யாழ்ப்பாணம் அரசடி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இராஜலிங்கத்தின் வாகனம் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டது. மன்னாரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்ந பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் கே. துரைரத்தினம் மற்றுமோர் இடத்தில் தாக்குதலுக்கு உள்ளானார். மாவட்ட சபைத்தேர்தலுக்கு ஒரு கிழைமைக்கு முன்னர் மே 26ம் திகதி யூ.என்.பி. மாவட்ட சபை வேட்பாளர் பட்டியலில் முதன்மை வேட்பாளராக விளங்கிய முன்நாள் வட்டுகோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ஆ. தியாகராசா சுட்டுக் கொல்லப்பட்டார்.


தேர்தல் தினம் நெருங்கியதும் குட்டி முதலாளித்துவ இளைஞர் இயக்கப் போராளிகளின் அவஸ்தை நிலை அதிகரித்த அளவுக்கு அவர்களின் தனிமனித பயங்கரவாத நடவடிக்கையும் அதிகரித்தது. தொழிலாளர் வர்க்கத்தை புரட்சிகரமான முறையில் அணிதிரட்டுவதற்கு விரோதமாகவும் முரணாகவும் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைகள், சாய்மனைக் கதிரைகளில் இருந்து கொண்டு ஆயுதப் போராட்டங்களைப் பற்றி வாயடிக்கும் தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஏற்ப, எப்போதும் இட்டு நிரப்புவது ஆளும் வர்க்கத்தினதும் அதன் அரச இயந்திரத்தினதும் விசக் கொடுக்குகளை கூர்மையாக்குவதேயாகும். யாழ்ப்பாணச் சம்பவங்கள் இட்டுநிரப்புவது இதில் இருந்து மாறுபட்ட பாத்திரம் அல்ல.


தமிழர் விடுதலைக் கூட்டணியினால் ஒழுங்கு செய்யப்பட்டு யாழ்ப்பாண மாநகர முதல்வர் தலைமையில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம், குட்டி முதலாளித்துவ போராளிகளின் தாக்குதலுக்கு இலக்காகியது. கூட்டத்தில் நின்றிருந்ந மூன்று பொலிஸ் அதிகாரிகள் அவர்களால் சுடப்பட்டனர். இதில் இருவர் இறந்ததோடு ஒருவர் படுகாயமடைந்தார்.


படுகொலைகளும் இரத்தக் களரியும்


சில நிமிடங்களுக்குள் கூட்டம் நடைபெற்ற இடத்துக்குள் பாய்ந்து விழுந்த பொலிஸ் படையினர், முன்கூட்டியே தயார் செய்யப்பட்டிருந்த படுகொலை மற்றும் இரத்தக்களரி வேலைத்திட்டத்தினைக் கட்டவிழ்த்து விட்டனர்.


கூட்ட மைதானத்திற்கு அயலில் இருந்த கோவிலுக்கு தீமுட்டிய பொலிசார், அருகில் இருந்த வீடுகளுக்கும் வாகனங்களுக்கும் தீமுட்டியதோடு கடத்திய ஒரு பஸ்சில் யாழ்ப்பாணம் பெரிய கடைவீதியை ஆக்கிரமித்தனர். ஆஸ்பத்திரி வீதியில் கடைகளுக்கு தீவைத்த இவர்கள், அருகில் இருந்த யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டுக்கும் தீ மூட்டியதோடு யோகேஸ்வரனதும் நன்பரதும் வாகனத்துக்கும் தீ வைத்தனர். யோகேஸ்வரனும் மனைவியும் வீட்டின் பின்புறமாக இருந்த மதிலால் பாய்ந்து உயிர்தப்பியதாக சொல்லப்படுகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகத்துக்கு தீ மூட்டியதில் உச்சக்கட்டமடைந்த இரத்த வெறியர்களின் காடைத்தனங்கள் அதைத்தொடர்ந்தும் அரங்கேறின.


அது யாழ்ப்பாணம் பொதுநூல் நிலயத்துக்குத் தீ மூட்டியமையாகும். அது 95,000க்கும் அதிகமான நூல்களும் மிகவும் அரிதான கையேட்டு பிரதிகளும் சேகரித்து வைக்கப்பட்ட ஒரு அறிவுக் களஞ்சியமாக விளங்கியது. அது தாம் சேர்த்து வைத்துள்ள அறிவுக் களஞ்சியத்தின் அளவை வெளியில் காட்டும் ஆடம்பரக் கட்டிடமாகும். ஆளும் வர்க்கம் ஒடுக்கப்படும் பொதுமக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட பிற்போக்கு யுத்தத்தில் அறிவுச் செல்வத்துக்கு எங்கே மதிப்பு? அறிவு மனித முன்னேற்றத்தின் ஆயுதமாகும். பிற்போக்கு அதன் பரம எதிரியாகும். யாழ்ப்பாண நூல்நிலயத்தை தீக்கிரையாக்கியதன் மூலம் ஆகாயத்தில் உயர்ந்து பரந்த புகைமூட்டங்கள் நாடு பூராவும் நச்சுப் புகைமூட்டங்களைக் குறித்துக் காட்டின.


ஜனாதிபதி ஜயவர்த்தன, இந்த துரதிஸ்டவசமான இருளின் ஆரம்ப தூதுவர்களாக கடைகெட்ட பாத்திரங்களான சிறில் மத்யூ, காமினி திசநாயக்க ஆகிய இரு அமைச்சர்களையும் பாவித்தார். யாழ்ப்பாண கடுகதி புகையிரதம் தரித்துச் செல்லும் சகல புகையிரத நிலையங்களிலும் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட குண்டர்களை தமது சகாக்களாக ஏற்றிக் கொண்ட இந்தக் காடையர் கும்பலின் முதல்வர்கள் இருவரும், மாவட்ட சபைத் தேர்தலுக்கு முன்னோடியாக இரத்தக்களரியையும் படுகொலைகளையும் அரங்கேற்றுவதன் பேரில் யாழ்ப்பாணத்தில் இறங்கிக் கொண்டனர். மே 31ம் திகதி ஆரம்பமான கொடிய காடைத்தனங்கள் ஜுன்1 முதல் 3 வரை இடைவிடாமல் தொடர்ந்து நடத்தப்பட்டன.


யாழ்ப்பாண மாவட்ட சபைத் தேர்தலில் யூ.என்.பி. படுதோல்வி அடையும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டிருந்த இக்காடையர்கள், இப்பிராந்திய நிர்வாகத்தை பலாத்காரமான முறையில் தமது கைக்குள் போட்டுக் கொண்டனர். அவர்களின் குண்டர் இயக்கத்துக்கு சட்டரீதியான போர்வையை வழங்கும் பொருட்டு, தேர்தலுக்கு முன்னர் ஜூன் 3ம் திகதி இரவு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அன்று நள்ளிரவு கழித்து 2 மணி 45 நிமிடமும் சென்றிராது. பொலிஸ் சீருடை அணிந்த சுமார் நூறு பேர் அமிர்தலிங்கத்தின் வீட்டைச் சுற்றி வளைத்து, அவரைக் கைது செய்தனர். இதற்கு முன்னைய ஆண்டு 31ம் திகதி யாழ்ப்பாணத்தில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் கொந்தராத்தினை பொறுப்பேற்று நியமனம் பெற்ற பிரிகேடியர் வீரதுங்க, தமது தோல்வியின் அதிருப்தியினால் வெறிபிடித்து இருந்தார். கடைகெட்ட இரண்டு அமைச்சர்களும் அமிர்தலிங்கத்தைக் கைது செய்யும்படி வெளியிட்ட உத்தரவை முழுமனதுடன் ஒப்புக்கொண்டனர். ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாளித்துவ தன்மை மற்றும் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை நசுக்கித் தள்ளுவதற்கு அதன் உதவி மீதும் நம்பிக்கை வைத்திருந்த ஜயவர்த்தன, நல்ல முகத்துடன் ஜூலை 4ம் திகதி சூரியன் உதிக்க முன்னர் அமிர்தலிங்கத்தை விடுதலை செய்யுமாறு கொழும்பிலிருந்து கேட்டுக்கொண்டார்.


இந்த ஒடுக்குமுறையின் மத்தியில் யூ.என்.பி. குண்டர்களின் கள்ள வாக்களிப்பைப் பயன்படுத்திய போதிலும், ஜூலை 4ம் திகதி மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் யூ.என.பி. முழு யாழ்ப்பாணத்திலும் பெற்றது வெறும் 23,302 வாக்குகள் மட்டுமே. தமிழர் விடுதலைக் கூட்டணி இதைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக 263,369 வாக்குகளைப் பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் பத்து ஆசனங்களைக் கைப்பற்றியது.


இதற்கு யூ.என்.பி. அரசாங்கத்திடம் இருந்து வந்த பதில், பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக விளங்கிய அமிர்லிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைப்பதாகும். உலக பாராளுமன்ற வரலாற்றில் எதிர்க் கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும்.


இதன் பின்னர் 1981 ஆகஸ்ட் மாதத்தில் ஆணைக்கோட்டை பொலிஸ் நிலையம் மீது நடத்திய தாக்குதலில் இறந்த ஒரு பொலிஸ்காரரின் சடலத்தை அனைத்துக் கொண்டு, தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு எதிராக கொலைகார இயக்கம் தொடுக்கப்பட்டது. இறக்குவானை, இரத்தினபுரி, பலாங்கொடை, கஹவத்த முதலிய இடங்களில் உள்ள தோட்டங்களுக்குள் குதித்த இனவாத குண்டர்கள் பொலிசாரின் உதவியுடன் தொழிலாளர் வீடுகளுக்கு தீமுட்டினர். சொத்துக்களைக் கொள்ளை அடித்தனர். தொழிலாளர் குடும்பங்களைக் கொலை செய்தனர். இவை எல்லாம் சுதந்திரமாக இடம்பெற்றன. இந்தக் காட்டுமிராண்டி நடவடிக்கைகளுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயமும் எதிர்ப்பும் வளர்ச்சி காண்பதை தவிர்க்கும் பொருட்டு, யூ.என்.பி. அரசாங்கத்துடன் இணைந்து கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ§க்கு கருத்து வெளியிட நேரிட்டது.


குண்டர் கிளர்ச்சிகளின் காரணமாக, இறக்குவான பிரதேசத்தில் 5,000 பேரும் பலாங்கொடையில் 3,000 பேரும் இரத்தினபுரியில 3,000 பேரும் கஹாவத்தையில் 2,000 பேருமாக தோட்டத் தொழிலாளர் குடும்பங்களை அகதி முகாம்களுக்கு கொண்டுசெல்ல நேரிட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்தது.


அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து வந்த சமசமாஜ கட்சியும் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் ஜே.வி.பி.யும், யூ.என்.பி. யின் தமிழர் விரோத தாக்குதலுக்கு தலைப்புக் கொடுத்து அரசாங்கம் விதித்த அவசரகாலச் சட்டத்தையும் பத்திரிகைத் தணிக்கையையும் அங்கிகரித்தன. பாராளுமன்றத்தில் இருந்து கொண்டிருந்த இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர் எனப்பட்ட ஸ்டாலினிச சரத் முத்தெட்டுவேகம இந்த துரோக விதிமுறையின் முக்கிய புள்ளியாக விளங்கினார்.


புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் போராட்டம்


யூ.என்.பி. அரசாங்கத்தினதும் குண்டர்களதும் தாக்குதல்களுக்கும் மற்றும் கடைகெட்ட தலைவர்களின் துரோகங்களுக்கும் எதிராக அறிக்கை வெளியிட்டதோடு தொழிலாளர்களதும் ஒடுக்கப்படும் மக்களதும் பாதுகாப்பின் பேரில் பொது மக்கள் இயக்கத்தை அணிதிரட்ட போராடிய ஒரே அமைப்பு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமேயாகும். தணிக்கை அதிகாரியினால் அறிக்கைகள் வெட்டித் தள்ளப்படும் நிலையில் 1981 ஆகஸ்டு 25ம் திகதிய ''கம்கறு மாவத்தை'' பத்திரிகையில் "அவசரகாலச் சட்டம் தொழிலாளர் வர்க்கத்தை வேட்டையாடவே'' என்ற தலைப்பில் அறிக்கைகள் வெளியிட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) பின்வருமாறு குறிப்பிட்டது;


''இது சாதாரண காலத்து அவசரகாலச் சட்டம் அல்ல. இன்றைய நிலைமையை உருவாக்க யூ.என்.பி. திட்டமிட்டு தொழிற்பட்ட விதத்தை நாம் தொடர்ந்து தொழிலாளர் வர்க்கத்தின் எதிரில் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். தொழிலாளர் வர்க்கத்தின் செயற்பாட்டுக்கு கால்கட்டுப் போடவும் வாய்பூட்டு மாட்டவும் மற்றும் கல்வி வெள்ளை அறிக்கை மூலமும் சுகாதார வெள்ளை அறிக்கை மூலமும் தொடுக்கப்படும் நச்சுத்தனமான தாக்குதலை பொது மக்கள் மீது திணிக்கவும் தமிழ் மக்களை நசுக்கித் தள்ளவும் திட்டவட்டமான முறையில் ஆயுதப்படைகளை வீதிகளில் இறக்கவும் பொலிசாருக்கு அதிகாரம் வழங்குவதும் இந்த அவசரகல சட்டத்தின் அர்த்தமாகும்.


"யூ.என்.பி. அரசாங்கத்துக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் தமிழ் தேசிய இனத்தினரையும் ஒன்று திரட்டி அரசாங்கத்தின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதன் மூலம் தமது பாதுகாப்பினை தமது கரங்களுக்குள் கொணர்வதற்கு பொது மக்களை தயார் செய்ய வேண்டிய காலத்தில், சமசமாஜ-ஸ்டாலினிசத் தலைவர்கள் நேரடியாக யூ.என்.பி. அரசாங்கம் பக்கம் சென்றுள்ளார்கள்.


''கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதியான சரத் முத்தேட்டுவேகமவை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது யூ.என்.பி. அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு அன்றி அதற்கு எதிராக பொது மக்களைத் தயார் செய்வதற்கே. அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவதாக வாக்குறுதியளித்து பாராளுமன்றத்தினுள் நூழைந்துகொண்டதன் பின்னர், ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களின் முழு பக்கபலத்துடன் அவர் இப்போது செய்யும் நடவடிக்கைகளைப் பாருங்கள். அவசரகால சட்ட ஆட்சிக்கு முழு ஆதரவு வழங்கி அவர் கூறியவற்றை ''அத்த'' பத்திரிகை பின்வருமாறு அறிக்கை செய்திருந்தது: 'அரசாங்கம் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக தமது கட்சி எதிர்ப்புக் காட்டாது போனாலும், அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்தத் தாமதித்தது. ஆதலால் அதற்கான காரணத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என கலவானை பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்'.


"பத்திரிகை தணிக்கை, தொழிலாளர் கூட்டத்தடை, இராணுவம் வீடுகளுக்குள் புகுந்து சோதனை நடத்துதல் ஆகியன இதற்கு முன்னர் நடைமுறைபடுத்தப் பட்டிருக்க வேண்டும் என ஸ்டாலினிஸ்டுக்கள் கூறுகின்றார்கள்.


''கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களுக்கு நாம் பின்வருமாறு கூறுவோம்; இந்தத் துரோக விதிமுறை உங்களது அடிப்படை உரிமைகளை அரசாங்கத்துக்கு பலி கொடுப்பதும் இராணுவ சர்வாதிகாரத்துக்கு வழிவகுப்பதுமாகும்.


''யூ.என்.பி. ஆட்சியின் கீழ் அவர்களால் உருவாக்கப்பட்ட கடைகெட்ட நடவடிக்கைகளின் பெறுபேறாக சுமார் 20,000 தோட்டத் தொழிலாளர்கள் அகதிகளாகி உள்ள நிலைமையில், தமிழ் தேசிய இனத்தவர்களின் பல உயிர்கள் பலியெடுக்கப்பட்டுள்ள ஒரு நிலைமையில், தமிழ் தேசிய இனத்தவர்களின் சொத்துக்கள் தவிடுபொடியாக்கப்பட்டுள்ள ஒரு நிலைமையில், ஸ்டலினிஸ்டுகளால் பலவீனமான விதத்தில் கூறக்கூடியதொல்லாம்; ''நாட்டின் பிரிவினையை நாம் எதிர்க்கின்றோம்'' என்பது மட்டுமே.


"முத்தேட்டுவேகமவும் மற்றும் ஏனைய ஸ்டாலினிச, சமசமாஜ தலைவர்களும் ஈழம் பிரச்சாரத்துக்கு எதிரான சிலுவை யுத்தத்தில் இறங்கி இருந்தாலும், இலங்கையின் தொழிலாளர் வர்க்கம் அதில் கலந்து கொள்வதை முழுமனே நிராகரிக்கின்றனர். தாதிமார் போராட்டம், வங்கி ஊழியர் போராட்டம், மாணவர் போராட்டம் போன்றவை சுட்டிக்காட்டியுள்ளது என்னவெனில், யூ.என்.பி. காரர்கள் சிங்கள முதலாளிகளுடன் ஒரே தேசிய இனமாக ஒரே படுக்கையில் படுத்து எழும்ப வேண்டிய அவசியம் தொழிலாளர் வர்க்கத்துக்குக் கிடையாது என்பதேயாகும்.


''நாம் தொழிலாளர் வர்க்கத்துக்கு பின்வருமாறு கூறுவோம்: ஸ்டாலினிஸ்ட்டுகளதும் சமசமாஜிஸ்ட்டுக்களதும் மற்றும் ஜே.வி.பி. காரர்களதும் இனவாதமானது ஆளும் வர்க்கத்துடனும் யூ.என்.பி. அரசாங்கத்துடனும் இத்தலைவர்களுக்கு இருந்து கொண்டுள்ள இறுக்கமான உறவுகளின் வெளிப்பாடாகும்.


''இத்தலைவர்கள் தமிழ் தேசிய இனம் தொடர்பாகக் காட்டும் கடைகெட்ட குரோதத்தை, தொழிலாளர் வர்க்கம் சம்பந்தமாகவும் காட்டுகின்றார்கள். எனவேதான், அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கி, உங்கள் கூட்டங்களை தடைசெய்யவும் உங்களுக்கு அவசியமான செய்திகளைத் தடைசெய்யவும் இத்தலைவர்கள் இப்போது செயற்படுகின்றனர்.


''முதலாளி வர்க்கத்தில் இருந்து பிரிந்து தொழிலாளர் வர்க்கத்தினதும் தமிழ் மக்களதும் அடிப்படை உரிமைகளை காக்கும் பொருட்டு போராடுமாறு இந்தத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக நாம் தொழிலாளர் வர்க்கத்துடன் ஒன்றிணைகின்றோம். ஆனால், இன்று தீர்க்கமான விடயம் இந்தத் தலைவர்களை வெளியேற்றி, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆட்சிக்கான போராட்டத்தை வழிநடத்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை கட்டியெழுப்ப இணைவதேயாகும்.''


நான்காம் அகிலத்தின் இடைமருவு வேலைத்திட்டத்திற்க்கு இணங்க, வேலைத்திட்டத்தை தயார் செய்து கொண்டு, பொதுமக்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டு தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை அணிதிரட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தீர்க்கமானதும் கஷ்டமானதும் ஆபத்தானதுமான போராட்டத்தை முன்னெடுத்த வரலாறு கொண்டது. இந்த வரலாற்று அனுபவங்களுக்கும் படிப்பினைகளுக்கும் புறமுதுகு காட்டி இன்றைய இனவாத யுத்தத்தின் நிலைமைகளின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களினதும் விடுதலைக்கான பாதையை தேடிக் கொள்ள முடியாது. சோசலிச சமத்துவக் கட்சியின் பலமும் அதன் பொருத்தமும் இந்த விடையங்களிலேயே தங்கியுள்ளன.


1881 ஆகஸ்ட் கடைப் பகுதியில் தோட்டப்பகுதி பூராவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குண்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி ஜயவர்த்தன வழக்கம் போல் தமிழர் விடுதலைக் கூட்டணியினருடன் மோசடியும் மலட்டுத்தனமும் கொண்ட ''பேச்சுவார்தைகளை'' மீண்டும் ஆரம்பித்தார். எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மருமகனான ஜெயரத்தினம் வில்சன் கனடாவில் இருந்து வரவழைக்கப்பட்டு தரகர் வேலையில் அமர்த்தப்பட்டார்.


யூ.என்.பி. தமிழர் விடுதலைக் கூட்டணியினருடன் நடத்திய ஓரு தொகை ''பேச்சுவார்த்தைகளின்'' பின்னர் ஆகஸ்ட் 31ம் திகதி அறிக்கை வெளியாகியது. அது இடம்பெற்றுவந்த உயிர், சொத்து சேதங்களையிட்டு முதலைக் கண்ணீர் வடித்து இருந்தது. மூன்று விடயங்களில் உடன்பாட்டுக்கு வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவையாவன;


1. யூ.என்.பி. யினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரதும் உயர்மட்ட தலைவர்களின் கமிட்டி ஒன்றை ஜனாதிபதி தலைமையில் கூட்டவும், சமாதான தீர்வை இலக்காகக் கொண்டு கருத்து வேறுபாடுகளுக்கு உள்ளாகியுள்ள சகல பிரச்சனைகளையிட்டும் அங்கு கலந்துரையாடுவது.


2. நாடு பூராவும் சகல வன்முறை நடவடிக்கைகளையும் நிறுத்தும் பொருட்டு, சகல கட்சிகளதும் ஒத்துழைப்பையும் உடன்பாட்டையும் பெற்றுக் கொள்வது.


3. ஏனைய நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக மாவட்ட அபிவிருத்தி சபைகளை உரிய விதத்திலும் திருப்தியான முறையிலும் செயல்படுத்த முயற்சிப்பது.


இந்த வார்த்தைகள் அழகானவை. அவை குறிப்பிடும் நோக்கங்கள் விவாதத்துக்கு இடமற்றவை. ஆனால், இந்தச் சகாப்தத்தில் முதலாளித்துவக் கட்சிகளும் அவற்றின் ஆட்சியாளர்களும் வரலாற்று ரீதியில் ஜனநாயக உரிமைகளின் எதிரிகளாக இருந்து வந்துள்ளன.


நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர், செப்டம்பர் 13ம் திகதி வெகுஜன தொடர்பு சாதனங்களின் பிரதிநிதிகளின் மத்தியில் பேசிய அமிர்தலிங்கம், சமரசத்தின் பேரில் ''தமிழர் விடுதலைக் கூட்டணி அரைவாசித் தூரம் செல்லத் தயாராக உள்ளது'' எனக் குறிப்பிட்டார். உண்மையில் தமிழ் முதலாளிகளின் கட்சி என்ற முறையில், தமிழர் விடுதலைக் கூட்டணி அங்கு பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொண்ட பொது மக்களின் கீழ் தட்டினரின் அரைப் பங்கினரை, முதலாளித்துவ ஆட்சியின் கீழ் அழிவுக்குள் கை கழுவிவிட தயார் நிலையில் இருந்ததைக் காட்டிக் கொண்டது.


யூ.என்.பி. தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பெறுபேறாக உருவானதாக அமிர்தலிங்கம் அன்று கூறிக் கொண்ட தீர்மானங்களே அந்த முடிவை அம்பலமாக்குகின்றன. (அ). யாழ்ப்பாணச் சம்பவங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் (இந்தத் தீர்மானத்தின் குழப்பத்தின் மூலம் அது இடம்பெறப் போகும் ஒரு விடயம் அல்ல. அதை விட மிகவும் தீர்க்கமானது என்னவெனில், யாழ்ப்பாணத்தின் பெறுமதி வாய்ந்த பொதுஜன நூல் நிலையத்துக்கு தீமூட்டியது உட்பட, இரத்தக் களரிகளுக்கும் படு கொலைகளுக்கும் தலைமை வகித்த சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க உட்பட்ட குண்டர்கள் சகலரும் தூண்டிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டதேயாகும்). (ஆ). பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது (தீக்கிரையான நூலகத்தின் மதிப்பிட முடியாத பெறுமதியை மட்டும் கணக்கில் கொள்ளும் போது இது ஒரு பெரும் கண்துடைப்பு என்பதை புதிதாகக் கூற வேண்டியதில்லை). (இ). வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பது (கிளர்ந்து வந்த தமிழ் மக்களை நசுக்கும் பொலிஸ் வேலையை தமிழர் விடுதலைக் கூட்டணி பொறுப்பேற்பதே இதன் அர்த்தம். நவசமசமாஜக் கட்சி, சிங்கள இனவாத அரச படைகளது மேலதிக தமிழ் படை அணியை ''சங்கிலியன் படை'' என்ற பெயரில் அழைத்தது. இரத்தக்களரி அடக்குமுறைக்காக இடம்பெற்ற படுபிற்போக்கு நடவடிக்கைகளுடன் ஒப்பிடும் போது மட்டுமே இது ''முற்போக்கானதாக'' இருக்க முடியும்). (ஈ). வன்முறைகள் மீண்டும் தலையெடுப்பதை தவிர்க்கும் பொருட்டு ஊர்காவல் படைகளை அமைப்பது என்பனவாகும். (இது முதலாளித்துவ அரசின் வன்முறை கரத்தை பலப்படுத்தும் பொருட்டு குண்டர் பலத்தை சட்டப்பூர்வமாக்கும் தீர்மானமாகும்)


இந்தத் தீர்மானங்கள் அனைத்தும், பொது மக்களின் கிளர்ச்சிகளையிட்டு கிலிபிடித்த ஆளும் வர்க்கத்தின் இரு சாராருக்கும் இடையிலான உடன்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இந்தத் தீர்மானங்களில் முதலாளி வர்க்கம் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக காட்டும் பிற்போக்குத்தனத்துக்கும் மேலாக பாராளுமன்ற ஆட்சி முறையின் கீழ் பொது மக்களின் ஆதரவை திரட்டிக் கொள்வது தொடர்பில் அதனது முழு வேலைத்திட்ட வங்குரோத்தும் அடங்கி இருந்தது.


ஜனநாயக உரிமைகளை வெற்றிகொள்வது மற்றும் அதைப் பாதுகாப்பது சம்பந்தமாக தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர இயலுமையை நிராகரிக்கும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளின் அமைதிவாத நடவடிக்கைகளைப் போலவே பயங்கரவாத நடவடிக்கைகளதும் உதவியை மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்வதன் மூலமே, முதலாளி வர்க்கத்தின் பிற்போக்கையும் வங்குரோத்தையும் தற்காலிகமாகவேனும் மூடி மறைத்துக்கொள்வது சாத்தியமாகும்.


ஒரு புறத்தில் வடக்கில் தமிழ் குட்டி முதலாளித்துவ குழுக்கள் தனியார் பயங்கரவாத நடவடிக்கைகளை உக்கிரமாக்கின. மறுபுறத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த அவர்களின் சகாக்கள் வினோதமான சுதந்திரப் பிரகடனங்களை வெளியிட்டு வந்தனர். 1982 ஜனவரி 14ம் திகதி தைப்பொங்கல் தினத்தில் லண்டனில் அமைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரமுகரான கிருஷ்ணா வைகுந்தவாசனால் பிரகடனம் செய்யப்பட்ட "சுதந¢திர தமிழ¢ ஈழம்", என்ற பிரகடனம் பிறந்த மனையிலேயே மரணத்தைத் தழுவிக் கொண்ட ஒரு பிரகடனமாகும். இவர் ஏகாதிபத்தியக் கள்வர் குகையான ஐக்கிய நாடுகள் சபையின் ஆசீர்வாதத்துடன் சுதந்திர தமிழீழத்துக்கு வேண்டிக் கொண்டிருந்தார். இந்த செயலில் இருந்து வேறுபட்டதாகத் தோன்றினாலும், தொழிலாளர் வர்க்க அனைத்துலகவாதத்தினை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிச வேலைத் திட்டத்தினை பின்பற்றுவதை நிராகரித்து, துப்பாக்கிகளில் நம்பிக்கை வைத்த குட்டி முதலாளித்துவ இயக்கமான பாலஸ்தீன விடுதலை இயக்கம் போலவே, விடுதலைப் புலிகள் அமைப்பும் ஏகாதிபத்திய, ஏகாதிபத்தியச் சார்பு ஆளும் வர்க்கங்களின் எதிரில் அடிபணிவதைத் தவிர வேறு தலைவிதியே அதற்கு இருக்கவில்லை. அது அவர்களினால் வெளியிடப்பட்ட ''எமது மக்களின் விடுதலை'' என்ற பெயரில், பிற்போக்கு ஒடுக்குமுறை கரத்தின் துப்பாக்கி தோட்டாக்களாக தம்மையே மாற்றிக் கொண்டு, தாம் பிரதிநிதித்துவம் செய்த மக்களை சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் இழுத்துத் தள்ளும் திட்டமாகியிருப்பது முன்னரை விட இன்று தெளிவாகியுள்ளது.


இந்த இரு சாரரின் நடவடிக்கைகளும் யூ.என்.பி. அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கும் அவ்வாறே தமிழர் விடுதலைக் கூட்டணியின் அடிபணிவுகளுக்கும் எதிராகப் போராடுவதாகக் காட்டிக்கொண்டாலும் தொழிலாளர் வர்க்க அனைத்துலகவாதத்தை புறக்கணித்து, தேசியவாதத்தின் அடிப்படையில் முன்னெடுத்த அந்த எதிர்ப்புக்களின் மலட்டுத்தன்மையும் அதில் இருந்து தலைநீட்டும் பிற்போக்கின் பக்கம் இழுபட்டுப் போவதும் தவிர்க்க முடியாததாகும். வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தை குவிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்த யூ.என்.பி. அரசாங்கம், குட்டி முதலாளித்துவ தமிழ்க் குழுக்களின் நடவடிக்கைகளை சாட்டாகக் கொண்டு பொது மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை உக்கிரமாக்கியது.


1982ல் ஜனாதிபதி தேர்தல் நெருங்கியதும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சிங்கள இனவாத பிரச்சாரத்திற்கு முகம் கொடுக்கும் பொருட்டு, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் முகஸ்துதிக்கு நடத்தி வந்த பேச்சு வார்த்தைகளையும் யூ.என்.பி. நிறுத்திக் கொண்டது. பேச்சுவார்த்தையை நிறுத்துவதற்கு எடுத்த தீர்மானத்துக்கும் அந்தப் பேச்சு வார்த்தைகளுக்கு ஆரம்பம் தொட்டே எதிர்ப்புக் காட்டி வந்த குட்டி முதலாளித்துவ தமிழ் குழுக்களின் எதிர்ப்புகளுக்கும் இடையே மாட்டிக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது.


தமிழர் விடுதலைக் கூட்டணி, தனது அரசியல் இருப்பை பிடித்து வைக்கும் பொருட்டு ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கக் கோரும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டது. தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் பொருட்டு, அது உள்ளார்ந்த ரீதியில் முரண்பாடான குதர்க்க வாதங்களில் இறங்கியது. அதாவது 1978 அரசியலமைப்பை ஏற்காததினால் பகிஷ்கரிப்பு தீர்மானம் சரியானது என்பது அவர்களின் வாதமாக இருந்தது. ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நடத்தி வந்த பாராளுமன்ற பகிஸ்கரிப்பை கைவிட்டு, அதனுள் பதுங்கிக் கொள்ளத் தொடங்கி நீண்ட காலமாகியிருந்தது மட்டுமன்றி, 1978 அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கான தேர்தலிலும் போட்டியிட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள் இனவாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்கையில் வடக்கு-கிழக்கு மாகாண தமிழ் மக்களில் பெரும்பான்மையினர், ஜயவர்தன ஆட்சியில் இருந்து விடுபடும் எதிர்பார்ப்புக்களுடன் கொப்பகடுவைக்கு வாக்களித்திருந்தனர். எனினும் ஜயவர்தன இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.


சமசமாஜக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம்


இங்கு குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான அரசியல் விடயம் இருந்து கொண்டுள்ளது. அது சமசமாஜ கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா முகம் கொடுத்த மிகவும் தர்மசங்கடமான நிலைமையாகும்.


யூ.என்.பி, சி.ல.சு.க, தமிழ் காங்கிரஸ் ஆகிய முதலாளித்துவக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக, தொழிலாளர் வர்க்க கட்சி வேட்பாளர் என்ற முறையில் சமசமாஜக் கட்சித் தலைவர் போட்டிக்கு நின்றமை, தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஊர்ஜிதம் செய்யக் கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதி, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் சமசமாஜ வேட்பாளருக்கு ஆதரவளித்தது. ஆனால், அது நிபந்தனைக்கு உட்பட்டதாகும். முதலாளித்துவக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டின் அடிப்படையில் பொது மக்களிடையே செல்வது என்பதன் அர்த்தம், முதலாளி வர்க்கத்துக்கு எதிராக உறுதியாக போராடக்கூடிய வர்க்கமான தொழிலாளர் வர்க்கத்தின் வரலாற்றுப் பணிக்குப் பொருத்தமான மாற்று வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பொது மக்களை அணிதிரட்டப் போராடுவதாகும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விடுத்த அந்த யோசனையை நிராகரித்த சமசமாஜ தலைவர், தமது மக்கள் முன்னணிவாத பிற்போக்கிற்குப் பொருத்தமான விதத்தில் இன, மத, சாதி மற்றும் முதலாளித்துவச் சார்பு மேடையிலேயே நின்று கொண்டிருந்தார்.


சமசமாஜக் கட்சி தாம் நின்று கொண்டிருந்த முதலாளித்துவச் சார்பு மக்கள் முன்னணி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு நியமனப் பத்திரம் தாக்கல் செய்ததன் பின்னரும் கூட, எச்சில் இலைகளைக் கிளறி சி.ல.சு.க.விடம் இருந்து தமக்கு ஏதும் நிவாரணம் கிடைக்குமா என மோப்பம் பிடித்து அலைந்தது. இது எந்தளவுக்கு அசிங்கமானதாக விளங்கியது என்றால், 1970களின் ஆரம்ப காலத்தில் பேராதனை பல்கலைக்கழக உதவி விரிவுரையாளராகப் பணியாற்றும் காலத்தில் கூட்டரசாங்கத்தின் உதவியோடு ஐக்கிய நாடுகள் அமைப்பினுள் நுழைந்து கொள்ள வாய்ப்பைப் பெற்றுக்கொண்டு, பெரும் இராஜதந்திரி வேடம் பூண்ட பேர்டி கங்காதார என்பவர் அரை உயிருடன் கொணர்ந்த உசிதமற்ற பிரேரணையைக் கூட சமசமாஜக் கட்சியின் அரசியல் குழு கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொண்டது. இத்தகைய பிரேரணைகளில் சி.ல.சு.க. வேட்பாளர் ஹெக்டர் கொப்பேகடுவ சமசமாஜ தலைவரை ஜனாதிபதியாக்கும் பொருட்டு தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள தீர்மானம் செய்துள்ளார் என்பதும் ஒன்றாகும்.


இது நான் சிருஸ்டித்துக் கூறும் கதை அல்ல. சமசமாஜக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் கோட்பாட்டாளருமான ஒஸ்மண்ட ஜயரத்ன, குடிவெறியில் இடத்துக்கு இடம் பல தருணங்களில், உண்மையை ஊர்ஜிதம் செய்யும் வகையில் தமது சகாவுக்கு கூறியுள்ள கதையாகும். அவரின் படி கங்காதராவின் குற்றுயிர் பற்றி சமசமாஜ தலைவர்கள் புரிந்து கொண்டிருந்தது மணித்தியாலக்கணக்கான கலந்துரையாடலின் பின்னரேயாகும். இந்த நிலைமையின் கீழ் கொல்வின் ஆர்.டி. சில்வாவிற்கு சுமார் 50,000 வாக்குகள் மட்டுமே கிடைப்பது தற்செயலானதா?


குண்டர் பலத்தைப் பாவித்தும் கள்ளவாக்களிப்பின் ஊடாகவும் (எதிர¢ ஜனாதிபதி வேட¢பாளரான கொப்பேகடுவவின் வாக்குகளும் சுருட்டிக் கொள்ளப்பட்டன.) ஜனாதிபதி பதவியில் ஜயவர்தன மீண்டும் வேரூன்றிக் கொண்டதன் பின்னர் 1983 கறுப்பு ஜூலை வரையிலான பகுதி, தமிழர் எதிர்ப்பு வெறி பெரும் பதட்ட நிலைமையுடன் பெருகிச் சென்ற காலப்பகுதியாகும்.


தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாளித்துவத் கன்னையில் இருந்து தோன்றிய அரசியல் வங்குரோத்தினுள் அது தலைமூழ்கிப் போய்க்கிடந்தது. தமிழ் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளைப் பற்றிக் காட்டிய அக்கறையின் அளவுக்கு அவர்களின் எதிரில் கடந்த காலத்தில் சிருஷ¢டித்துக் காட்டப்படக் கூடியதாக இருந்த முதலாளித்துவ ஜனநாயக மோசடிகளின் அளவும் சிதறிப் போயிற்று.


தமக்கு என்னதான் அச்சுறுத்தல் இருந்துகொண்டிருந்த போதிலும் தமிழ் குட்டி முதலாளித்துவ அமைப்புகளின் துணையில்லாமல் வாழ முடியாத அளவுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தள்ளப்பட்டது. அந்தத் "தீர்வு" தமிழ் மக்களின் உரிமைகளைக் காக்கும் அவசியத்தையோ அல்லது வல்லமையையோ அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இது தமது மரணத்தை இன்னும் சொற்ப காலத்துக்கேனும் தள்ளிப்போடும் எதிர்பார்ப்புகளுடன் செய்யப்பட்ட ஒரு ஒத்திகையாகும்.


இந்தச் சமரசத்தின் பேரில் பயன்படுத்தப்பட்டவர் குட்டிமணியாவார். ரெலோ அமைப்பின் ஆரம்பத் தலைவரான யோகச்சந்திரன் செல்வராஜ் அல்லது குட்டிமணி, 1979ல் வல்வெட்டித்துறையில் பொலீஸ்காரர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர். 1982 ஆகஸ்ட் 13ம் திகதி நீதிமன்றத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறையில் தள்ளப்பட்டவர். அந்தத் தீர்ப்புக்கு எதிரான அவரின் மேன்முறையீடு உயர் நீதிமன்றத்தில் இன்னமும் விசாரிக்கப்பட்டு வந்தது.


வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினரின் மரணத்தில் வெற்றிடமாக இருந்த தொகுதிக்கு 1978 யூ.என்.பி அரசியலமைப்பின்படி தமிழர் விடுதலைக் கூட்டணி ஒருவரை நியமனம் செய்ய முடிந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி குட்டிமணியின் பெயரை அதற்குப் பிரேரித்து தேர்தல் ஆணையாளர் அங்கீகரிக்க நேரிட்டது. இதைத் தொடர்ந்து குட்டிமணி பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியபிரமாணம் செய்துகொள்ள, அவரை பாராளுமன்றத்துக்குக் கூட்டிச் செல்லுமாறு சிறை அதிகாரிக்கு உத்தரவிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கேட்டுக் கொண்டார். ஆனால், சிறை ஆணையாளரின் பேரில் ஆஜராகியிருந்த சொலிசிட்டர் ஜெனரல் அந்தக் கோரிக்கையை பற்றித் தீர்ப்பு வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என வாதாடினார். நீதிமன்றம் சொலிசிட்டர் ஜெனரலின் வாதத்தை ஏற்றுக் கொண்டது.


இது முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் சட்டமும் நீதிமன்றமும் செயற்படும் விதத்தைக் காட்டும் மற்றொரு நாடகபாணியிலான உதாரணமாகும். இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தினுள் சிறைப்பட்டுக்கொண்டு, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும் எனக் கதையளப்போர், அந்த நாடகத்தில் நடிப்பது ஆடைகளையும் கலைத்துவிட்டேயாகும்.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானியப் பாராளுமன்றத்துக்கு தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட வில்யம் வில்பர் ஃபோஸ்கேயின் நியமனத்தை பல தடைவைகள் நிராகரித்த பாராளுமன்றம், பின்னர் அக்கருத்தை மாற்றிக் கொண்டு அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அங்கிகரித்தது. அன்று முதலாளித்துவ ஆளும் வர்க்கம் வில்பர் ஃபோஸ்கே தொடர்பாக அந்தளவிற்கு குரோதம் கொண்டிருந்ததற்கு காரணம், அவர் அடிமை வர்த்தகத்தை தடை செய்யும்படி பிரச்சாரம் செய்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாக விளங்கியதேயாகும். அவரது சீர்திருத்த ஜனநாயக கோரிக்கைகள், முதலாளித்துவ அமைப்பின் கீழ் அடிமை முறையின் மூலம் இடம்பெறும் உழைப்புச் சுரண்டலுக்கு ஒரு சவாலாக இல்லாது இருக்கும் வரை, காலங்கடந்து சென்றாலும் சரி அவருடன் சமரசத்துக்கு செல்வதற்கு ஆளும் வர்க்கம் தனது தயார் நிலையை அன்று காட்டிக் கொண்டது. ஆனால், இன்று வெறும் கந்தலாகிப் போய்விட்ட முதலாளித்துவ ஜனநாயகத்தின் வரையறைகளுக்குள், குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளை வழங்கக்கூட முதலாளித்துவ ஆளும் வர்க்கம் காட்டும் கடும் எதிர்ப்பு குட்டிமணி சம்பவத்தின் மூலம் வெளிப்பட்டது. நிலமானித்துவ அமைப்புக்கு எதிராக தாமே ஸ்தாபிதம் செய்த ஜனநாயகம் தொடர்பாக முதலாளி வர்க்கம் அன்று காட்டியதும் இன்று காட்டிக் கொண்டுள்ளதுமான மனோபாவத்தின் வேறுபாட்டை இனங்கண்டு கொள்ள முடியாதவர்கள், முதலாளி வர்க்கத்துடன் இணைந்துகொண்டு ஜனநாயக உரிமைகளை காட்டிக் கொடுப்பவர்களாவர். இதற்கு எதிரான விதிமுறையை லியோன் ட்ரொட்ஸ்கியினால் அபிவிருத்திசெய்யப்பட்ட நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டுக்கு இணங்கவே தயார் செய்ய முடியும். அதாவது முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் அரச அதிகாரத்தை ஸ்தாபிதம் செய்வதன் மூலம் ஜனநாயக உரிமைகளை வெற்றி கொண்டு பாதுகாக்கும் விதிமுறையாகும். அன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் இன்று சோசலிச சமத்துவ கட்சியினதும் விதிமுறை இதுவே.


தமிழ் குட்டி முதலாளித்துவப் போராளிகளுடன் உடன்பாட்டுக்கு செல்லும் அடையாளமாக ஒத்திகை பார்க்கச்சென்ற குட்டிமணியை பாராளுமன்ற உறுப்பினராக்குவது பிழைத்துப் போனதும் தமிழர் விடுதலைக் கூட்டணி தமது கட்சியின் நீலன் திருச்செல்வத்தை அப்பதவிக்கு நியமனம் செய்தது.


1983 உள்ளூராட்சி சபைத் தேர்தல்


தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் குட்டி முதலாளித்துவ போராளிகள் குழுக்களுக்கும் இடையேயான முரண்பாடுகள் 1983 மே மாதத்தில் இடம்பெற்ற மாநகர சபை தேர்தல்களில் போட்டியிட அக்கட்சி தீர்மானம் செய்ததோடு உக்கிரம் கண்டது. மே மாத ஆரம்பத்திலேயே பொது மக்களிடையே துண்டுப் பிரசுரம் ஒன்றை விநியோகித்த தமிழீழ விடுதலைப் புலிகள், தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு கேட்டுக்கொண்டனர். ''ஈழ விடுதலையை" வாக்குகளாகக் கறப்பதற்கான சுலோகங்களாக பயன்படுத்துவோரை அது கடைகெட்டவர்கள் எனக் குறிப்பிட்டது. அது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு என்பதில் சந்தேகம் இல்லை.


இந்த அச்சுறுத்தலைப் பற்றி ஆராய்வதற்கென நல்லூரில் கட்சி அலுவலகத்தில் கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணி செயற்குழு என்ன நிலைமைக்கு முகம் கொடுத்தாலும் தேர்தலில் போட்டியிடுவது எனத் தீர்மானம் செய்தது. சிங்கள இனவாத யூ.என்.பி. ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்து கொண்டு தாம் நடத்தி வந்த பாராளுமன்ற விளையாட்டுக்களினால் தமக்கு குழிபறிக்கப்பட்டுள்ளதையிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சரியான மதிப்பீடு இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட தமிழ் குட்டி முதாலாளித்துவக் குழுக்களுக்கு தமிழ் பொதுமக்களின் நடைமுறை ஆதரவு இல்லாது இருந்து வந்த நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நப்பாசையான எதிர்பார்ப்பின் அடிப்படையில் நின்றுகொள்வதைத் தவிர ஒரு முதலாளித்துவக் கட்சி என்ற முறையில் அது வேறு எதையும் செய்வதில் வெற்றி பெறவில்லை. அது யூ.என்.பி. வெட்டிவைத்திருந்த படுகுழியில் வீழ்ந்து போவது நிச்சயமாகியது.


தேர்தல் தினம் நெருங்கியதும் விடுதலைப் புலிகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் அவ்வாறே யூ.என்.பி. தேர்தல் இயக்கத்துக்கும் எதிரான தாக்குதல்களை தீவிரமாக்கினர். யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி கூட்டத்தில் அத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றது. கூட்டத்தில் உரை நிகழ்த்த வந்த அமிர்தலிங்கம் வாகனத்தில் இருந்து இறங்கி மேடையில் ஏறியதும், அவரின் வாகனத்தை கூட்டம் இடம் பெறும் இடத்தில் இருந்து தள்ளிச் சென்ற விடுதலைப் புலிகள், அதில் ஏறி ஒட்டம் எடுத்தனர். கூட்டத்தில் இருந்தவர்களும் தலைதெறிக்க ஓடினர்.


விடுதலைப் புலிகள் தேர்தலில் போட்டியிட்ட யூ.என்.பி. வேட்பாளர்களையும் கலைத்துக் கலைத்து அடித்தனர். ஒரேநாளில், இரவு பருத்தித்துறையில் யூ.என்.பி. வேட்பாளர் இரத்தினசிங்கமும் சாவகச்சேரி வேட்பாளர் முத்தையாவும் அவரது அந்தரங்கப் பாதுகாப்பாளரும் இரு இடங்களில் கொலை செய்யப்பட்டனர். இதனால் கிலியடைந்த யூ.என்.பி. மற்றும் தமிழ் காங்கிரஸ் வேட்பாளர்கள் சகலரும் உடனடியாக போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுக் கொண்டனர். அவர்களின் பெயர்கள் சீட்டில் இருந்து அகற்றப்படாமல் போனதற்கு காரணம், அவ்வாறு செய்ய தேர்தல் சட்டம் இடம் கொடாது போனதேயாகும். தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களுக்கும் அத்தகைய கொலை பயமுறுத்தல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்ததன் பெறுபேறாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு போட்டியிட்ட அக்கட்சியின் 35 வேட்பாளர்கள் பகிரங்கமாக வாபஸ் பெற்றுக் கொண்டனர்.


தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள் மட்டும் இருக்கையில் வடக்கில் இராணுவமும் பொலிசும் வீதிகளில் குவிக்கப்பட்டிருந்த போதிலும், தேர்தல் தினத்தன்று பல இடங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. அன்று யாழ்ப்பாணத்தில் தேர்தல் சாவடியாக விளங்கிய சிவப்பிரகாச மகாவித்தியாலயத்துக்குள் புகுந்த விடுதலைப் புலிகள், அங்கு காவலில் ஈடுபட்டிருந்த கோர்ப்ரல் ஜயவர்தன மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இரண்டு பொலிசார் காயமடைந்தனர். அவர்கள் ஜயவர்தனவின் டி56 துப்பாக்கியை தூக்கிச் சென்றனர். 'ராஜரட்ட ரைபிள்' படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் வழக்கமாகச் செய்வது போல், பின்னர் வந்திறங்கி அக்கம் பக்கம் இருந்த கடைகளுக்கும் வீடுகளுக்கும் தீமூட்டினர்.


இந்தத் தேர்தலில் வாக்களிப்பில் ஈடுபடாத மக்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கு 86 சதவீதமாகவும், சாவகச்சேரியில் நூற்றுக்கு 85 சதவீதமாகவும், பருத்தித்துறையில் நூற்றுக்கு 99 சதவீதமாகவும் வல்வெட்டித்துறையில் நூற்றுக்கு 98 சதவீதமாகவும் இருந்தது.


இந்தத் தேய்ந்து போன தேர்தலின் பின்னர் சகல மாநகர சபைகளதும் நகரசபைகளதும் ஆரம்பக் கூட்டங்களை 1983 ஜூன் 16ம் திகதி நடத்தும்படி அரசாங்கம் கட்டளையிட்டது. ஆனால், 11 மாநகரசபைகளிலும் 36 நகரசபைகளிலும் பேருக்குத் தன்னும் கூடியது ஒன்றே ஒன்றுதான். அது பருத்தித்துறை நகர சபையாகும்

No comments:

Post a Comment